13 Nov 2019

ஒரு கிளாஸூ டீத்தண்ணி மூணு காசு




செய்யு - 267
            பூந்தோட்டத்துல கருக்கல்ல நாலு மணிக்கு ரயிலைப் பிடிச்சா ஆறு மணிக்கு திருத்துறைப்பூண்டியில போயி எறங்கிடலாம். அங்கேயிருந்து ரயிலு மாறி வேதாரண்யத்துக்குப் போற ரயில்ல பிடிச்சா தோப்புத்துறையுல போயி எறங்கிடலாம். தோப்புத்துறையிலேந்து பத்து நிமிஷ நேர நடை நடந்தா வேதாரண்யத்து வாத்தியாரு பயிற்சிப் பள்ளியோடத்த அடைஞ்சிடலாம்.
            போற வழியெங்கும் மாமரங்களும், தென்னை மரங்களுமா இருக்கும். மணல்சாரி எடம்ங்றதால தென்னை மரங்க எல்லாம் அப்படிக் காய்ச்சித் தொங்கும். மரங்க எல்லாம் சின்னதா அம்மாங் கம்மி ஒயரத்துல, தேங்காய்ங்க அம்மாம் பெரிசா அதெ பாக்குறப்பவே பிரமிப்பா இருக்கும். மாமரங்க காய்ச்ச ஆரம்பிச்சா அந்த மரத்துக்குக் கிறுக்குப் பிடிச்ச கணக்கா ச்சும்மா சடை சடையா காய்ச்சித் தொங்கும். அங்கங்க இருக்குற முருங்க மரங்க காய்ச்சித் தொங்குறதுக்குப் பஞ்சம் இருக்காது. முருங்கக் காய்க ஒவ்வொண்ணும் ரெண்டடி, மூணடி நீளத்துக்கு இருக்கும்.
            டீத்தண்ணி மூணு காசு அப்போ. ஒத்த காசு, ரெண்டு காசு, மூணு காசு, அஞ்சு காசு, பத்து காசு, இருவது காசுன்னு அலுமினிய காசுங்க பொழங்குன காலம் அது. ஒத்த காசு மலுவட்டையான சதுரமா இருக்கும். ரெண்டு காசு பத்து காசு பெத்த புள்ள மாதிரி பத்துக் காசை விட சின்னதா சுத்திலும் நெளி நெளியா இருக்கும். மூணு காசு அறுகோண வடிவத்துல இருவது காசு பெத்த புள்ள மாதிரி சின்னதா இருக்கும். அஞ்சு காசும் மலுவட்டையா சதுரமாத்தாம் இருக்கும். சேங்காலிபுரத்துல அப்போ சைக்கிளு வாடகைக் கடைங்க வந்திடுச்சி. ஒரு மணி நேரத்துக்கு அஞ்சு பைசா சைக்கிளு வாடகை. தச்சு ஆசாரிக்கு, கொத்தனாருக்கு ஒரு நாளு சம்பளம் அஞ்சு ரூவாய்.
            காலக் கணக்கு சொல்லணும்ன்னா ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுவதுல இதுதாங் வெலை நெலவரம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்துல ஒரு பெருங்காத்து புயல்காத்தா அடிச்ச பிற்பாடு ஒரு டீத்தண்ணியோடு விலைய மூணு காசிலேந்து அஞ்சு காசா வெலை ஏத்திப்புட்டாங்க. அடப் பாவிகளா இப்பிடி வெலை ஏத்துனா சனங்க டீத்தண்ணிய குடிக்கிறதயே மறந்து போயிடுமடா பக்கிகளா, டீத்தண்ணியே விக்காதுடா பாவிகளான்னு ஊரு ஒலகம் பேசுன காலகட்டம் அது.
            விகடபிரசண்டரு வாத்தியாரு வூடு கண்டரமாணிக்கத்துல இருந்துச்சி. காலங்காத்தாலே மூணு மணிக்கெல்லாம் போயி அவர்ர வூட்டுல புடிச்சி, அங்கேயிருந்து அவரோட சைக்கிள்ல கெளம்பி, அப்படியே காலங்காத்தால நாலு மணிக்கெல்லாம் பூந்தோட்டத்துக்குப் போயி ரெண்டு பேருமா ரயிலு ஏறி, அங்கேயிருந்து திருத்துறைப்பூண்டிப் போயி, அங்கேயிருந்து தோப்புத்துறைக்கு ரயிலு ஏறிப் போயி சுப்பு வாத்தியாரு வேதாரண்யத்து வாத்தியாரு பயிற்சிப் பள்ளியோடத்துல விண்ணப்பம் வாங்குனாரு. அது அப்போ ஒரு ரூவா. அந்த ஒத்த ரூவாயக் கொடுத்து வாங்கிக் கொடுத்தவரு விகடபிரசன்ட வாத்தியாருதாம்.
            சுப்பு வாத்தியாரு பதினொண்ணாவது படிச்சப்போ அதுதாங் அப்போ எஸ்.எஸ்.எல்.சி. பத்தாவது படிக்கிறப்பவே எலெக்ட்டிவ்ஸ்னு ஒரு மொறையக் கொண்டு வந்து நல்லா படிக்கிறவங்களுக்கு கணக்கு, இயற்பியல்ன்னு பாடங்களையும், சுமாரா படிக்கிறவங்களுக்கு வரலாறு, புவியியல்ன்னு பாடங்கள ஒதுக்கிக் கொடுத்திருக்காங்க. சுப்பு வாத்தியாரு நல்லா படிக்கிறவருங்கிறதால கணக்கு, பிசிக்ஸ்ன்னு கொடுத்துப் படிக்கச் சொல்லியிருக்காங்க. பாடம்லாம் திடீர்ன்னு இங்கிலீஷ்ல எலெக்ட்டிவ்ஸ்னு கொடுத்துப் படிக்கச் சொன்னா படிக்கிறவங்களுக்கு எப்படி இருக்கும்? கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்திருக்கு. அதையும் ராப்பகலா உக்காந்து நல்லாத்தான் படிச்சி மார்க் எடுத்து பாஸ் ஆயிருக்காரு சுப்பு வாத்தியாரு. எல்லா பாடத்திலயும் எண்பது மார்க்குக்கு மேல எடுத்ததால அப்போ இந்த விசயத்த கேள்விப்பட்டு நாகப்பட்டிணத்துல பாலிடெக்னிக் நடத்திட்டு இருந்த நரிவலத்துப் பள்ளியோடத்துக்காரங்க வூடு தேடி வந்து படிக்கக் கேட்டிருக்காங்க. மாசச் செலவுக்கு நூறு ரூவாயிலிருந்து, நூத்து பத்து ரூவாயி செலவாவுமுண்ணும், அது மட்டும் செலவு பண்ணிப் படிச்சா போதுமுண்ணும், வேறொண்ணும் தேவையில்லன்னு சொல்லியிருக்காங்க. அதெ கேட்டதும் சுப்பு வாத்தியாருக்கும், அவரோட அண்ணன் செயராமுவுக்கும் மயக்கமே வந்திடுச்சி.
            செயராமு பெரிப்பா மாசம் முப்பது நாளும் வேலைக்குப் போனா ஒரு நாளைக்கு அஞ்சு ரூவா மேனிக்கு நூத்து அம்பது ரூவாத்தான் கெடைக்கும். அதுவும் வேலை மாசத்துக்கு முப்பது நாளைக்கும் கெடைக்கிறது கஷ்டம். இருவது இருபத்தஞ்சி நாளைக்கு வேல கெடைச்சா பெரிசு. அதுக்கே நாயலைச்சலு, பேயலைச்சலு  அலைஞ்சுத்தாம் வேலைய பிடிக்கணும். அவரோட கூட மாட வேலைக்குப் போற சுப்பு வாத்தியாருக்கு நாலு ரூவோயோ, மூணு ரூவாயோ சம்பளம் கொடுப்பாங்க. இதுல பாலிடெக்னிக் படிக்கிறதுக்கு மசாத்துக்கு நூறு ரூவாயிக்கு மேல ஆகும்ன்னா சம்பாதிக்கிற காசு முழுத்தியும் அவருகிட்டயே கொடுத்துட்டுக் குடும்பத்த எப்படி ஓட்டுறது? அப்படி ஆயிடக் கூடாதுன்னுத்தான் ஒரே வூட்டுல பத்மா பெரிம்மா ரெண்டு குடித்தனம் நடத்துது. இவர்ர பாலிடெக்னிக் பத்து மாசம் படிக்க வைக்கிறதுக்குள்ள இருக்குற எல்லா ஆடுகளையும் வித்துப் போயிடுற மாதிரி ஆயிடும்ன்னு ரத்தினத்து ஆத்தாவுக்கும் யோசனைத்தாம். அதெ நேரத்துல இவம் ஒருத்தன கஷ்டப்பட்டு பாலிடெக்னிக் மட்டும் படிக்க வெச்சிப்புட்டா என்ஜினியரு ஆயிப்புடவாங்றதும் அதுக்குப் புரியுது.
            செயராமு பெரிப்பா திட்டவட்டமா சொல்லிப்புடுச்சி, "இந்தாருடா யம்பீ! காசுப் பணம் செலவு இல்லாத படிப்பா இருந்தா படி. இல்லேன்னா படிக்க வாணாம். நம்ம கூடயே வேலைக்கி வந்துடு. குடும்பத்தப் பாத்தாவணும். நாம்ம ஒரு ஆளே சம்பாதிச்சித் தாங்கிட்டு இருக்க முடியாது!"ன்னு.

            அப்போ பதினொண்ணாவது எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைய எழுதி முடிச்சிட்டு கண்டரமாணிக்கம் விகடபிரசண்டரு வாத்தியாரு வூட்டுலத்தாம் வேலை நடக்குது. விகடபிரசண்டரு வாத்தியாரு மத்தவங்க மாதிரி சுப்பு வாத்தியாருக்கு நாலு ரூவாயோ, மூணு ரூவாயோ கூலி கொடுக்காம அஞ்சு ரூவா கூலியே கொடுத்தாரு. அவரு வூட்டுல அப்படி வேலை நடந்துட்டு இருக்குறப்பத்தாம் சுப்பு வாத்தியாருக்கு பரீட்சை முடிவு தெரிய வந்திச்சி. "இப்பிடி மார்க்க வாங்கித் தொலைச்சிருக்கீயேடா பயலே! ஒன்னய நல்ல படிப்பால்ல படிக்க வைக்கணுமேடா பயலே!"ன்னு விகடபிரசண்டரு வாத்தியாரு சொல்லப் போக, செயராமு பெரிப்பா வழக்கமா சொல்றாப்புல, "காசி செலவு இல்லாம படிப்பா படிக்க முடியும்னு சொல்லுங்க!"ன்னு அது சொல்லப் போக, அடுத்து நாலைஞ்சு நாளைல்ல நரிவலத்துப் பள்ளியோடத்துக்காரங்க பாலிடெக்னிக்ல வந்து சேந்துக்குங்க, மாசா மாசம் நூறு ரூவாயி செலவாகும்னு அவங்க சொல்லப் போக எல்லாமும் அடுத்தடுத்து நடந்துச்சு.
            செயராமு பெரிப்பாவுக்கு இனுமே படிக்க மாசம் நூறு ரூவாயிக்கு மேல செலவாகும்னு சேதி தெரிஞ்ச ஒடனேயே படிக்கவே வாணாம்னு சொல்லி விட்டுடுச்சா. விகடபிரசண்டரு வாத்தியாருத்தாம் செயராமு பெரிப்பாட்ட அடிக்கடி வந்து, "அவ்வேம் பயல்ல, வாத்தியாரு டிரெய்னிங் சேத்து விட்டுப்புடலாம். வேதாராண்யத்துல நமக்குக் கொஞ்சம் ஒறவு மொறைங்க இருக்குதுங்க. அவுங்ககிட்ட சொல்லி வுட்டுப்புட்டா ஒரு ஒத்தாச ஒதவின்னா பண்ணிப்புடுவாங்க. அஞ்ஞ ஒரு வாத்தியாரு பயிற்சிப் பள்ளியோடம் இருக்கு. அங்க எடம் கிடைச்சிட்டா மாசா மாசம் ஸ்டைபண்டுன்னு பதினாறு ரூவா கொடுப்பாங்க. அதெ வெச்சி ஆஸ்டலு செலவு பதினஞ்சி ரூவாயக் கொடுத்துப்புடலாம். வருஷா வருஷம் நானூத்து அம்பது ரூவா ஸ்காலர்சிப்பு வேற கொடுப்பாங்க." அப்பிடின்னு சொன்னதும் பெரிப்பா, வருஷத்தக்கு நானூத்து அம்பது ரூவாவான்னு வாயைப் பொளந்துகிட்டு சரின்னு சொல்லிடுச்சி.
            அப்பிடித்தாம் விகடபிரசண்டரும், சுப்பு வாத்தியாரும் ஒண்ணாப் போயி வேதாரண்யத்துல விண்ணப்பம் வாங்கியாந்து எழுதிப் போட்டாங்க. இப்படி தங்கிட்ட படிக்கிற ஒரு பையனுக்காக வாத்தியாருமாரு கூட மாட வந்து உதவிப் பண்ணத எப்பவும் சுப்பு வாத்தியாரு மனசுல வெச்சித்தாம் அவருக்குப் பொறந்த தலைச்சம் புள்ளைக்கு விகடுன்னு பேர்ர வெச்சாரு. அந்த விகடு பயதாம் இப்ப இதையெல்லாம் உக்காந்து எழுதிட்டு இருக்குங்றதும் ஒங்களுக்கு எல்லாம் தெரிஞ்சதுதாம்.
            வாத்தியாரு பயிற்சிப் பள்ளியோடத்துல சேர்றதுக்கு விண்ணப்பம் வாங்குன பிற்பாடு அதுல ரெவ்னியூ இன்ஸ்பெக்டரோட கையெழுத்து, தாசில்தாரோட கையெழுத்துன்னு வாங்க புதுக்குடி, குடவாசலுன்னு சேங்காலிபுரத்துல வாடகை சைக்கிளு எடுத்து அலைஞ்ச கதையை சுப்பு வாத்தியாரு சொல்றப்ப வேடிக்கையா இருக்கும். காலாங்காத்தால ஆறு மணிக்கெல்லாம் புதுக்குடியில இருந்த ரெவினியூ இன்ஸ்பெக்டர் வூட்டுக்கும், குடவாசல்ல இருந்த தாசில்தாரு வூட்டுக்கும் எலும்பிச்சம் பழம், தேங்காயிப் பழம் சகிதமா போயி அவங்களுக்கு வணக்கம் வெச்சி கையெழுத்து வாங்கியிருக்காரு. அவங்களும் சந்தோஷமா வாத்தியாரு பயிற்சிக்காப் படிக்கப் போறேன்னு கேட்டுட்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்காங்க அவங்க. இவரு எடுத்துட்டப் போன பழங்கள திருப்பிக் கொடுத்திருக்காங்க. இவருதாம மல்லுகட்டி அதைக் கொடுத்துட்டு வந்திருக்காரு. இதைச் சொல்றப்ப, "அதெல்லாம் ஒரு காலம்!"ன்னு சொல்லிட்டே சொல்லுவாரு சுப்பு வாத்தியாரு. அத்தோட அந்த விண்ணப்பத்துல ஒரு ரூவாயிக்கு மனு ஸ்டாம்பு ஒட்ட வேண்டியிருந்திருக்கு. அதுக்காக காலாங்காத்தாலயே சேங்காலிபுரத்துல ஒரு மணி நேரத்துக்கு அஞ்சு காசுன்னு சைக்கிள வாடகைக்கு எடுத்துக்கிட்டு திருவாரூரு தெப்பக் குளத்துக்கு மேலண்டை கரையில இருந்த அக்கிரகாரத்துல இருந்த ஒரு அய்யரு வூட்டுல அந்த மனு ஸ்டாம்ப விக்குறாங்கன்னு கேள்விப்பட்டு அதெ வாங்கியாந்து ஒட்டித்தாம் விண்ணப்பத்த அனுப்பி வைச்சிருக்காரு.
            அந்தக் காலத்துல ஆடுதுறையில ஒண்ணு, குருக்கத்தியில ஒண்ணு, தஞ்சாவூர்ல ஒண்ணு, வேதாரண்யத்துல ஒண்ணுன்னு வாத்தியாரு பயிற்சிப் பள்ளியோடம் இருந்திருக்கு. ஒரு வருஷத்துக்கு நாற்பது பேரைச் சேர்த்தாக்க, மறு வருஷத்துக்கு நூத்து இருவது பேரைச் சேப்பாங்களாம் அந்தப் பயிற்சிப் பள்ளியோடத்துல. இவரு சேர்றப்ப நூத்தி இருவது பேரை சேர்க்குற வருஷம். வாத்தியாரு பயிற்சிப் பள்ளியில சேர்றதுன்னா விண்ணப்த்த அனுப்புன பிற்பாடு அதுக்கு ஒரு நேர்காணலு கடிதம் அனுப்புவாங்க. அன்னிக்குப் போயி நேர்காணலு பண்றவங்க பண்ணச் சொல்றதையெல்லாம் பண்ணி திருப்திபட்டாதாம் அங்க சேத்துப்பாங்க. இவர்ர நேர்காணலு பண்ணவங்க ஒரு சினிமா பாட்ட பாடச் சொல்லியிருக்காங்க. இவரு திருப்புகழ்லேர்ந்து முத்தைத்திரு பாட்டை பாடிக் காட்டியிருக்காரு. இதைப் பாடினதும் அடுத்தபடியா முருகனோட அறுபடை வூடுகள் என்னான்னு கேட்டிருக்காங்க. சுப்பு வாத்தியாரு சரியான பதில அடிச்சி விட்டதும், ஒரு மம்புட்டிய கொடுத்து கொத்து வேலைச் செஞ்சு காட்டுன்னு சொல்லியிருக்காங்க. கிராமத்துல கெடந்து கண்ட வேலையும் பாத்துட்டுக் கெடந்தவருக்கு மம்புட்டிய கொடுத்து கொத்துன்னா இதெல்லாம் ஒரு வேலையான்னு பத்து நிமிஷத்துல அவரு பாட்டுக்கு ரண்டு குழி நெலத்த பரபரன்னு அம்சா கொத்திட்டுப் போயிருக்காரு. அவ்வளவுதாம் சுப்பு வாத்தியாருக்கு வேதாரண்யத்து வாத்தியாரு பயிற்சிப் பள்ளியோடத்துல எடம் கெடைச்சிடுச்சி. அதுக்கும் கூட தொணையா விகடபிரசண்டரு வாத்தியாரு போயிருக்காரு.
            கட்டிடங்கள் ஒவ்வொண்ணும் நீள நீளமான கட்டிடங்கள் பயிற்சிப் பள்ளியோடத்துல.             எல்லாத்துக்கும் தொரட்டு ஓடுங்க. உயரம்னா உயரம் அம்புட்டு உயரம் வெயிலோட காங்கலே உள்ள வராத அளவுக்கு. அதுக்கு மேல வென்டிலேட்டரு சன்னலு. வகுப்பறையில இருக்குற சன்னலுங்களும் அம்புட்டுப் பெரிசா காத்தோட்டத்துக்கு ஏத்தபடி. அந்தக் கட்டிடங்கள் எல்லாம் ஆயிரத்து தொள்ளாயிரத்து அம்பதுலயோ, அறுவதுலயோ கட்டியிருக்கணும்னு சொல்வாரு சுப்பு வாத்தியாரு. மொத்தம் நாலு வகுப்பறைங்க. ஒரே கட்டடத்தை நாலா சுவரு வெச்சி பிரிச்சிக் கட்டியிருக்காங்க. ஒவ்வொரு வகுப்பறையிலயும் நாற்பது பேருங்கன்னு நூத்து அறுவது பேரு படிச்சிருக்காங்க. அது ரெண்டு வருஷத்துப் படிப்பு. அத்தோட அங்கே இருக்குற ஆஸ்டல்ல தங்கித்தாம் படிச்சாவணுங்ற மாதிரியான ஆதாரக் கல்வி படிப்பு முறை. ஆஸ்டல்ல தங்குறதுக்குன்னு எட்டு பேருக்கு ஒரு அறைன்னு மொத்த இருவது அறைங்க. அந்த அறைகளும் அப்படித்தாம் சுவரு தடுப்பு வெச்சி தொரட்டு ஓடுங்க போட்டு நல்ல உயரமா இருக்குற கட்டடங்களாக்கும்.
            அந்த ரெண்டு வருஷமும் நெறைய படிக்கிறதுக்கும், நெறைய விசயங்களைத் தெரிஞ்சிக்கிறதுக்கும் ரொம்ப உதவியா இருந்துச்சு சுப்பு வாத்தியாருக்கு. முக்கியமா நேரம் நெறைய கெடைச்சிருக்கு. அந்த நேரத்துல நூலகத்திலேந்து நிறைய புத்தகங்களை எடுத்துப் படிச்சிருக்காரு. அதை விட முக்கியமா வருஷா வருஷம் கொடுக்குற ஸ்காலர்சிப்பு பணம் நானூத்து ஐம்பதுல கொஞ்சம் கூட கை வைக்காம ஆறு பவுனு வரைக்கும் வாங்கி தங்கச்சி நாகு அத்தைக்காக கொடுத்திருக்காரு சுப்பு வாத்தியாரு. அப்போ ஒரு பவுனு எழுவது ரூவாயோ என்னவோத்தாம் இருந்திருக்கு. இப்படி ரெண்டு வருஷத்துல பன்னெண்டு பவுனு வரைக்கும் தங்கச்சி நாகு அத்தைக் கல்யாணத்துக்கு வாங்கிச் சேத்துக் கொடுத்திருக்காரு அவரு. அந்த வெசயத்துல வாத்தியாரு பயிற்சிப் பள்ளியோடத்துல படிச்சதையும், அதுல கொண்டு போயி சேத்து விட்ட விகடபிரசண்ட வாத்தியாரையும் அடிக்கடிச் சொல்லிக்கிட்டு இருப்பாரு சுப்பு வாத்தியாரு.
 *****


No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...