13 Nov 2019

14.1




            ஏதோ ஒன்று தடுக்கிறது. அது என்னவென்று புரிகிறதா? வாழ்க்கையில்  யாரையும் எந்தக் குறையும் சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் அவரவர் மனப்போக்கில் இருப்பார்கள். அவர்களைப் போய் எமக்குத் தகுந்தாற் போல் எம்முடைய மனப்போக்கிற்கு ஏற்றாற் போல் இருங்கள் என்று கேட்க முடியாது. அப்படிக் கேட்டுக் கொண்டாலும் எவரும் அப்படி இருக்க துணியவோ, முயற்சிக்கவோ மாட்டார்கள். ஓர் அசாத்தியமான உண்மை என்னவென்றால், ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமான மனப்போக்கில் இருக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். தங்களுக்கு விருப்பமான மனப்போக்கில் இருக்க முடியாமல் சிரமப்படுபவர்கள் பிறிதொரு எதிர்பார்க்கப்படும் மனப்போக்கிற்கு ஏற்ப எப்படி இருக்க பார்ப்பார்கள்?
            ஆக, மனத்தடைகள் அகற்றிக் கொள்ளப்பட வேண்டியது. யாருடைய மனப்போக்கிற்காகவும் யாரும் எதுவும் செய்ய முடியாது. சுற்றி இருப்பவர்கள் தங்களுடைய மனப்போக்கிற்கு ஏற்ப ஒத்துவரவில்லை என்பதற்காக குறை சொல்லவும் செய்வார்கள். அதை குறை சொல்ல முடியுமா? அதுவும் ஒரு வகையான மனப்போக்கே. எந்த மனப்போக்கிற்கு யார் என்ன செய்து விட முடியும்? மனிதன் விதவிதமான மனப்போக்கால் சங்கடப்பட வேண்டும் என்பதற்காகவே பிறந்திருக்கிறான். மனநலம் பிறழ்ந்தோர்கள் இருக்கும் விடுதியைப் போய் பாருங்கள். முடியாவிட்டால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களைப் பாருங்கள். அதுவும் அப்படித்தாம் இருக்கிறது. என்ன ஓரிடத்தில் முகப்புப்பலகை அடையாளம் காட்டித் தொங்குகிறது. பல இடங்களில் அது இல்லை என்ற குறையைத் தவிர வேறொன்றுமில்லை.
            இலக்கியம் எல்லா மனப்போக்கிற்கும் சேர்த்து ஒரு சமாதானத்தைச் செய்ய முயற்சிக்கிறது. ஆனால் இலக்கியவாதிகள் அடித்துக் கொள்வார்கள். அது ஒரு தனித்த மனப்போக்கு. உலகத்தை ஒன்றுபடுத்த வேண்டும் என்று சொல்லும் இரண்டு இலக்கியவாதிகள் எப்போதும் சண்டையிட்டுக் கொள்வார்கள். அவர்கள் உலகின் மனப்போக்கையும், தம்முடைய மனப்போக்கையும் இரண்டாகப் பார்ப்பவர்கள். உலகின் மனப்போக்கில்தான் தன்னுடைய மனப்போக்கும் இருக்கிறது என்பதை மறுப்பவர்கள். அவர்களைப் பொருத்த வரை உலகம் அவர்கள் சொல்கின்ற போக்கில் இருக்க வேண்டும். அவர்களுடைய மனப்போக்கு அவர்களின் இஷ்டம் போல் இருக்க வேண்டும். எந்த இலக்கியவாதியும் இன்னொரு இலக்கியவாதியை இலக்கியவாதியாக பார்க்க மாட்டார். அவருக்கு இன்னொரு இலக்கியவாதி உலகின் ஒரு பகுதி. அவருக்கு உலகம் இரண்டு பகுதியானது. ஒரு பகுதி அவர். மற்றொரு பகுதி ஒட்டுமொத்த உலகம். அந்த ஒட்டுமொத்த உலகில் அவரைத் தவிர மற்ற அனைத்து இலக்கியவாதிகளும் வருவர். அவரைப் பொருத்தவரை அவர் ஒருவர் மட்டுமே இலக்கியவாதி. மற்றவர் யாராகினும் அவர் உலகின் ஒரு பகுதி. இப்படி ஒவ்வொரு இலக்கியவாதியும் நினைத்துக் கொண்டு மரண அடிச் சண்டைகளில் ஈடுபடுவார்கள். காலங் காலமாக இது நடக்கிறது. காலம் அதைக் கண்டு கொள்வதில்லை. அதற்கு அரசியல் சண்டைகளைப் பார்க்கவே நேரம் போதாது.
            இப்படித்தான் உலகம் இருக்க வேண்டும் என்று பார்ப்பது ஒரு வகை எதேச்சதிகாரப் போக்கு. உலகம் எப்படி இருக்கிறதோ அப்படிப் பார்க்க வேண்டும் என்ற எதார்த்தம் எந்த இலக்கியவாதிக்கும் இருக்கப் போவதில்லை. அப்படி இருப்பவர் இலக்கியவாதியாகவும் இருக்க முடியாது. அவர் உலகைப் புதுபார்வை கொண்டு பார்ப்பார். இப்படி ஆளாளுக்கு இலக்கியவாதியாகி புதுப்பார்வை பார்த்தால் உலகம் எத்தனை விதமாகத்தான் இருப்பது? உலகம் குழம்பிப் போய் தன்னைத் தானே சுற்றிக் கொள்வது ஏன் என்று இப்போது விளங்குகிறதா?
            உலகம் எப்போதும் இருப்பது போல இருக்கிறது. மனப்போக்கு அது வெவ்வேறு விதமாக இருப்பதாகப் போக்குக் காட்டுகிறது. அந்தப் போக்குக்கு இலக்கியவாதிகள் பேசுவார்கள், எழுதுவார்கள்.
            உள்ளதை எடுத்துச் சொல்லும் போது மகத்தான மாற்றம் பிறக்கிறது. அந்த உள்ளதைக் காண்பது எளிதானதன்று. அது துணிவின் அடையாளம். துணிவு என்பது வறுமையைக் கொண்டு வருவது, இழப்பைக் கொண்டு தருவது, இருப்பதை இல்லாமல் செய்யக் கூடியது. அதற்குப் பெரும்பாலான இலக்கியவாதிகள் ஏன் தயாராக இருக்க  வேண்டும்? எழுத்தில் இப்படித்தான் ஹாஸ்யம் பிறக்கிறது. சுவாரசியங்கள் சேர்கின்றன. கற்பனை உண்டாகிறது. மாயா ஜாலங்கள் கூடிக் கும்மாளம் இடுகின்றன. எதையாவது போட்டு மூடி மறைக்க வேண்டுமே! அதற்காக இப்படி.
            உண்மையான எழுத்தை ஒருமுறை நீங்கள் தரிசித்து விட்டால் அதன் பின் நீங்கள் படிக்கவோ, வாசிக்கவோ மாட்டீர்கள். அப்படி ஆகி விட்டால் புத்தகங்கள் எப்படிப் பிரசுரிப்பது? அதன் வியாபாரம் என்னாவது? இலக்கியக் கூட்டங்கள் எப்படி நடத்துவது? மேடைப்பேச்சுகள் என்னாவது? கோட்பாடுகளை வைத்து எவரைக் கொல்வது? உலக இயக்கமே ஸ்தம்பித்துப் போய் விடும்.
            ஓர் இலக்கியவாதியால் ஒரு புத்தகம் மட்டும் எழுத முடியும். அடுத்தடுத்தப் புத்தங்கள் அவரது முதல் புத்தகத்தின் வெவ்வெறு விதமான வாந்திகளாக இருக்கும். இரண்டு மூன்று முறை வாந்தி எடுத்துப் பழகி விட்டால் வெவ்வெறு விதமாக வாந்தி எடுக்க ஆசை வந்து விடும். அது கட்டுப்படுத்த முடியாத ஆசை. அந்த ஆசைக்கு வாசகர்கள் பலியாவார்கள். அவர்களுக்கு வெவ்வேறு விதமான வாந்தி நாற்றத்தை நுகர வேண்டும் என்ற ஆசை உண்டாகி விடும். அது வாசகர்களின் கட்டுக்கடங்காத காமம். மேடையில் பேசுவது அதை விட அபாயகரமானது. காமவெறி, போதைவெறியை விட மோசமாக மைக்கைப் பிடித்து விழுங்கும் வெறித்தனம் அது. ஒருமுறை அந்தப் பிசாசின் பற்களில் கடிபட்டவர்கள் மற்றவர்களைக் கடித்துக் கொண்டே இருப்பார்கள். கடிபட்டவர்கள் மாறி மாறி கடிக்கும் செயலில் ஈடுபட ஆரம்பித்து விடுவார்கள். இந்த உலகிற்கு ஏராளமான மேடைகள் இருப்பதற்கான காரணம் இப்போது உங்களுக்குப் புரிகிறதா?
*****


No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...