செய்யு - 266
அந்தக் காலத்து வாத்தியார்மார்களுக்கு
ஒரு பழக்கம். தங்கிட்ட படிக்கிறப் புள்ளங்கள்ல யாரு அன்னிக்குப் பள்ளியோடம் வந்திருக்கா?
வரலங்றத பள்ளியோடத்துல நுழையுறப்பவே மோப்பம் புடிச்சிடுவாங்க. வகுப்புல நொழையுறதுக்கு
முன்னாடியே, "இன்னிக்கு ஏம்டா அந்தப் பயெ வரலே?"ன்னோ, "இன்னிக்கு ஏம்டா
அந்தப் பொண்ணு வரலே?"ன்னோ குரல கொடுத்துட்டுதாம் உள்ளார நொழையுவாங்க. இதுல
சின்னப் பள்ளியோடம்னு சொல்ற ஆரம்பப்பள்ளியில வேல பாக்குற வாத்தியாருமாருக வராத பயபுள்ளைகளப்
பிடிச்சாந்து கொண்டாறதுக்கு சைக்கிள கெளப்பிக்கிட்டு தெருக்குள்ளயே நொழைஞ்சு புள்ளைப்
பிடிக்குறவங்க கணக்கா தூக்கிட்டே வந்திடுவாங்க. ஹை ஸ்கூல்னு சொல்ற பெரிய பள்ளியோடத்துல
அப்படி முடியாட்டியும் வாத்தியாருமாருக வர்ற புள்ளைங்க, வராத புள்ளைங்கப் பத்தின விசயத்துல
ஒரு கண்ணாவே இருப்பாங்க. ஏம் வரலேங்ற விசயத்த உளவு பாத்து தெரிஞ்சு வெச்சுக்கிட்டதாங்
அவங்களுக்கு தூக்கமே வரும். இதுக்காகவே அந்தந்த ஊர்ல இருக்குற முக்கியமான ஆட்களோட
ஒரு தொடர்ப வெச்சிப்பாங்க. அந்தந்த ஊரு பக்கமா ஏதோ ஒரு வேலையா போறப்ப, அந்தந்த ஆளுகளப்
பாக்குறப்ப எதார்த்தமா கேக்குற மாதிரி அவங்ககிட்ட படிக்கிற புள்ளைங்க பத்தின செய்திகள
போட்டு வாங்கித் தெரிஞ்சுக்குவாங்க. இதுல படிக்க வசதியில்லாத புள்ளைங்களப் பத்தின
விவரங்கள தெரிஞ்சு வெச்சுகிட்டு அவங்களால உதவிகளையும் சக வாத்தியாருமாருகளோட சேர்ந்து
செஞ்சுக் கொடுக்குறதும் உண்டு. அப்படித்தாம் சுப்பு வாத்தியாரு பரீட்சைக்கு வரலேங்ற
விசயத்த அவருக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்குற எட்டாப்பு வாத்தியாரு விகடபிரசண்டங்றவரு
பரீட்சை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே தெரிஞ்சுக்கிட்டாரு. வரலேங்ற விசயம் தெரிஞ்ச
ஒடனேயே அவருக்குக் அதுக்கான காரணத்தையும் சுப்பு வாத்தியாரோட கூட வர்ற பசங்கள வெச்சித்
தெரிஞ்சிக்கிட்டாரு.
அன்னிக்குச் சாயுங்காலமே பரீட்சைகள்லாம்
முடிஞ்சதும் துக்கம் விசாரிக்க வந்துட்டாரு விகடபிரசண்டரு வாத்தியாரு. அந்த நேரத்துலயும்
ரத்தினத்து ஆத்தா, "போனவ போயிச் சேந்துட்டா. இனுமே வான்னாலும் அவ்வே வரப் போறதில்ல.
அவ்வே பெத்துப் போட்ட இதுங்கள எதாச்சிம் பண்ணி முன்னுக்குக் கொண்டாந்திடணும் வாத்தியாரய்யா.
அதாங் அவளுக்குப் பண்ற மருவாதின்னு நெனைக்குறேம். அவ்வே போயிச் சேந்ததால அவ்வேம் பள்ளியோடத்துக்கு
வார முடியல. பரீட்சையும் எழுத முடியாமப் போயிடுச்சி. அதுக்கு நீங்கதாம் எதாச்சிம்
வழி பண்ணணும்!" அப்பிடின்னு கண்ணீரு வுடுது.
"சுப்பு நல்லா படிக்கிறப் பயெ. அதாங்
வூடு தேடி வந்து விசாரிக்க வந்திருக்கேம். எப்டியாவது பெரிய வாத்தியார்ட்ட சொல்லிப்
பரீட்சை எழுத வைக்கிறது நம்மோட வேல. நாளிக்கு ஒரு நாளு பாலு தெளிய போவட்டு. நாம்ம
பெரிய வாத்தியார்ட்டே பேசி வைக்கிறோம். நீங்க நாளாநாளைக்கு மொத வேலையா இவ்வனெ குடவாசலு
பள்ளியோடத்துக்குக் கொண்டாந்திடுங்க. காலங்காத்தால எட்டரைக்கெல்லாம் கொண்டாந்துடுங்க.
மிச்சத்த நாம்ம பாத்துக்கிறேம்!"ன்னு சொல்லிட்டு விகடபிரசண்டரு வாத்தியாரு சைக்கிள
மிதிச்சிட்டுக் கெளம்பினவரு ஒரு நாளு கழிச்சி மறுநாளு சுப்பு வாத்தியார்ர எதிர்பார்த்துகிட்டு
பள்ளியோடத்துல இருக்காரு. அப்போல்லாம் ஹெட் மாஸ்டர்ர பெரிய வாத்தியாருன்னு அப்பிடித்தாம்
சொல்லுவாங்க.
பெரிய வாத்தியார்கிட்ட முன்கூட்டியே எல்லா
விசயத்தையும் பேசி வெச்சிட்டாலும் அவரு காலங்காத்தால எட்டு மணிக்கெல்லாம் வந்து பள்ளியோடத்துல
காத்துக் கெடக்குறாரு. ஒருவேள பரீட்சை எழுதணுமேங்ற பயத்துல எட்டரைக்கு வரச் சொன்ன
சுப்பு வாத்தியாரு எட்டு மணிக்கெல்லாம் வந்துக் காத்துக் கெடந்தா என்னா பண்றதுன்னு
அவரு சீக்கிரமா வந்து கெடந்தாரு. மணி பத்து ஆன பின்னும் சுப்பு வாத்தியாரு வாரக் காணும்.
என்ன ஏதுன்னு அவருக்குக் கொழப்பமா போனதும், பெரிய வாத்தியார்கிட்ட ஒரு வார்த்தைச்
சொல்லிப்புட்டு குடவாசல்லேர்ந்து விருத்தியூரு நோக்கி சைக்கிள போட்டு மிதின்னு மிதிச்சிட்டு
வாராரு. குடவாசலு பள்ளியோடத்துல ஆரம்பிச்ச மிதியலுதான். இடையில கொஞ்சம் கூட எங்கயும்
மிதிக்கிறத நிறுத்தல. நேரா வண்டி வந்து விருத்தியூரு சுப்பு வாத்தியாரு வூட்டுல நிக்குது.
வாத்தியாரு சைக்கிள்ல வந்து இறங்குனதும்
ரத்தினத்து ஆத்தாவுக்கு ஒரு மாதிரியா போவுது. அவரு சைக்கிள வுட்டு எறங்கி வூட்டுக்குள்ள
நொழையங்காட்டியும், "வாங்கய்யா! வாத்தியாராய்யா! ஒங்கள மோசம் பண்ணிப்புட்டேம்னு
நெனைக்காதீங்க! மூணு நாளாச்சி அவ்வேம் சாப்பிட்டு. சொட்டுத் தண்ணி கூட உள்ள எறங்கல.
பித்துப் பிடிச்சவேம் மாதிரி உக்காந்திருக்காம். ஊர்லயும் ஆளாளுக்குச் சொல்லிப் பாத்தாச்சி.
நாலு அடி, நாலு ஒத வெச்சும் சொல்லிப் பாத்துட்டேம். ஒண்ணும் தேறுறதா தெரியல. ஒண்ணுஞ
சாப்புடாமா சவம்மா கெடக்குறவனெ எப்டிக் கொண்டாறதுன்னு ஒண்ணும் புரியல. அதாங் அப்படியே
வுட்டுப்புட்டோம். அவ்வேம் சொல்றத கேக்குற நெலமையில இல்ல. எந்நேரமும் யம்மா யம்மான்னு
பொலம்பிக்கிட்டே இருக்காம். அவ்வே போனது கூட நமக்குப் பெரிசா தெரியல. இவ்வேம் பண்ற
அழிச்சாட்டியத்த நெனைக்குறப்ப பயமா இருக்குது வாத்தியார்ரே. நல்ல நேரத்துல தெய்வம்
மாதிரி வந்திருக்கீங்க. நீங்கத்தாம் அவனெ எப்டியாவது சரி பெண்ணித் தாரணும்"ங்குது
ரத்தினத்து ஆத்தா.
"எங்கே பயே அவ்வேம்?"ன்னு உள்ள
வந்த விகடபிரசண்டரு வாத்தியாரு உள்ளார இருக்குற அறைக்குள்ள போறாரு. அங்க செத்துப்
போன தையல்நாயகி ஆத்தாவுக்காக ஏத்தி வெச்சிருக்கற வெளக்கடிப் பக்கத்துலயே, "யம்மா!
யம்மா!"ன்னு மொனகிக்கிட்டு உக்காந்த வாக்குல குப்புற கவுந்து கெடக்குறாரு சுப்பு
வாத்தியாரு.
கிட்டக்கப் போன விகடபிரசண்டரு வாத்தியாரு,
சுப்பு வாத்தியார பிடிச்சு மொகத்த மேல தூக்குறாரு. வாத்தியார்ர பார்த்ததும் நெனைப்பு
கொஞ்சம் மாறி அதுக்கு மேல பிடிக்க தேவையில்லாம எழுந்திரிச்சி நிக்குறாரு சுப்பு வாத்தியாரு.
மூணு நாளு சாப்பிடாம கொள்ளாம கெடந்ததுதல கையி, காலெல்லாம் குச்சிக் குச்சியா இருக்குது.
விகடபிரசண்டரு வாத்தியாரு வேறொன்னும் சொல்லல. "கெளம்புடா பயலே!" அப்பிடின்னு
ரெண்டு வார்த்தைதாம். அந்த வார்த்தைக்குத்தாம் சுப்பு வாத்தியாரோட மூளை வேலை செய்யுது.
அது வரைக்கும் எத்தனையோ பேரு சொல்லியும் சாவண்டி அடிச்சிட்டுக் கெடந்த அவரு நிக்க
முடியாத நெலையிலயும் வாத்தியாரு போற போக்குல தடுமாறிட்டே போறாரு. அதெப் பாக்குற
ரத்தினத்து ஆத்தாவுக்கும், நாகு அத்தைக்கும், பத்மா பெரிம்மா உட்பட எல்லாத்துக்கும்
நடக்குறது நெசமா? கனவான்னு ஆச்சரியமாத்தான் இருக்குது. யாரு சொல்லியும் காதுல வாங்கிக்காத
சுப்பு பயெ வாத்தியாரு வந்ததும் இப்டி சொன்னதெ கேட்குற கிளிப்புள்ள மாதிரில்ல கெளம்பிட்டான்னு
ஊர்ல எல்லா சனமும் பேசிக்கிது.
நடக்குற நடப்புல சுப்பு வாத்தியாரு மயக்கம் அடிச்சி
வுழுந்துடுவாரு போலருக்கு. "வாத்தியாரே! ஒரு வாயி டீத்தண்ணிப் போட்டுத் தர்றவா?"ங்குது
ரத்தினத்து ஆத்தா. விகடபிரசண்டரு வாத்தியாரு வேண்டாங்ற மாதிரி தலையை ஆட்டிக்கிட்டு
சைக்கிள்ல ஏறி உக்காந்துகிட்டு சுப்பு வாத்தியார்ர சைக்கிளு கேரியர்ல ஏறி உக்காரச்
சொல்லி நல்லா பிடிச்சுக்கச் சொல்றாரு. அங்க கெளம்புன அவரோட சைக்கிளு குடவாசல்ல இருக்குற
இட்லிக் கடையில போயித்தாம் நிக்குது. அங்க சைக்கிள நிறுத்துனவரு சுப்பு வாத்தியாருக்கு
நாலு இட்டிலிய வாங்கிக் கொடுத்து, பக்கத்துக் கடையில அவரே போயி ஒரு டீயையும் வாங்கியாந்துக்
கொடுத்துட்டு, அவரும் ஒரு டீயை வாங்கி உள்ள வுட்டுக்கிறாரு. அதெ சாப்பிட்டதும்தான்
கொஞ்சம் தெம்பா இருக்கு சுப்பு வாத்தியாருக்கு.
சாப்பிட்டு முடிச்சதும் கெளம்புன விகடபிரசண்டரு
வாத்தியாரோட சைக்கிளு பள்ளியோடத்துல பெரிய வாத்தியாரோட அறைக்கு முன்னாடி போயித்தாம்
அடுத்ததா நிக்குது. பெரிய வாத்தியாரு பாத்தவுடனே நெலமையைப் புரிஞ்சிக்கிறாரு. தனக்கு
முன்னாடி உக்காரச் சொல்லி பரீட்சையை எழுதச் சொல்றாரு. ஒடனே விகடபிரசண்டரு வாத்தியாரு
வாத்தியாருமாருக உக்காந்திருக்கிற அறைக்கு ஓடிப் போயி ஒரு பரீட்சை அட்டைய எடுத்தாந்து,
சட்டைப்பையில இருக்குற தன்னோட பேனாவைக் கொடுத்து எழுதச் சொல்லிட்டு பெரிய வாத்தியாரோட
அறைக்கு வெளியில ஒரு மரத்தடியில போயி நின்னுக்கிறாரு. அதெ பாக்குறப்ப சுப்பு வாத்தியாரோட
கண்ணு கலங்குது. பரீட்சைக்கு மொத நாளு தையல்நாயகி ஆத்தா செத்தப்ப படிச்சதுதாம். அதுக்குப்
பெறவு புத்தகத்த பொரட்டிப் பாக்கல சுப்பு வாத்தியாரு. ஆனாலும் கேள்வித்தாள வாங்கி
எழுத கைய வெச்சதும் பதிலுக ஒவ்வொண்ணும் மணி மணியா ஞாபவத்துக்கு வருது. ரெண்டரை மணி
நேரத்துப் பரீட்சையை அப்படியே மணி மணியா ஒரு மணி நேரத்துல எழுதிக் கொடுத்துட்டு எழுந்திருக்கிறாரு.
அதெப் பாத்துப்புட்டு பெரிய வாத்தியாரு வெளியில நிக்குற விகடபிரசண்டரு வாத்தியார்ர,
"யாங்காணும் கொஞ்சம் உள்ள வாரும்யா! பயெ ஒரு மணி நேரத்துல முடிச்சிட்டு பேப்பரோட
நிக்குறாம்யா! எதாச்சிம் தேறுதான்னு பாத்துச் சொல்லுங்காணும்!" அப்பிடிங்கிறாரு.
விகடபிரசண்டரு வாத்தியாருக்கு தர்மசங்கடமாப் போயி சுப்பு வாத்தியாரு எழுதுன பேப்பர
வாங்கிப் பாக்குறாரு. பதிலுக ஒவ்வொண்ணும் அவ்வளவு அம்சமா அச்சடிச்சி எழுதுனாப்புல
இருக்கு. அசந்து போன விகடபிரசண்டரு வாத்தியாரு, "எம்பதுக்கு மேல போடலாங்கய்யா!"ன்னு
தெனாவெட்டா பதிலு சொல்றாரு. பெரிய வாத்தியாருக்கும் உள்ளுக்குள்ள சந்தோசந்தாம். இருந்தாலும்
அதெ வெளிக்காட்டிக்காம, "இந்தாருங்காணும்! இதாங் கடைசியா இருக்கணும். மறுக்கா
இது போல நடக்கக் கூடாது ஆமாங்காணும்! இப்படி ஆளாளுக்கு பரீட்சைய ஒரு நாளு விட்டுப்புட்டு
இன்னொரு நாளுக்கு வந்து எழுதுனா நல்லாருக்காது. பள்ளியோடத்துப் பேரு கெட்டுப் போயிடுங்காணும்!"
அப்பிடிங்கிறாரு.
"அப்டில்லாம் நடக்காதுங்கய்யா! அப்பம்
இல்லாத புள்ளே. பெத்தவகளும் போயிச் சேந்துட்டா புள்ளயோட நெலமைய நெனைச்சிப் பாருங்க.
அத்தோட புள்ளையாண்டானுக்கு ஒரு தங்காச்சி வேற. இவ்வேம்ந்தாம் கர சேத்தாவணும். அதாங்
புண்ணியமா போவுமுன்னு..." அப்பிடின்னு விகடபிரசண்டரு வாத்தியாரு இழுக்குறதப்
பாத்து, பெரிய வாத்தியாரு, "செரி! கெளம்புங்க! பெறகு பேசிக்கலாம்!" அப்பிடிங்றாரு.
"ரொம்ப நன்றிங்கய்யா!"ன்னு சொல்லிட்டு விகடபிரசண்டரு வாத்தியாரும் வெளிய
சுப்பு வாத்தியார கெளப்பிக்கிட்டு வாறாரு.
"இந்தாருடா பயலே! நல்ல வெதமா படிச்சி
ஒரு வேலைக்கிப் போயிடணும். நாம்மல்லாம் பொறக்கிறப்பவே அம்மா, அப்பா இல்லாம பொறந்து,
பாட்டன் பாட்டிகிட்ட வளந்து இந்த அளவுக்கு வந்து நிக்கிறேம். ஒனக்குத்தாம் ஒரு அம்மா
போனாலும் இன்னொரு அம்மா இருக்கே. நீதாம்டா பயலே அதுக்கு தொணையா நின்னு ஒந் தங்காச்சிய
கரை சேத்தாவணும். இப்டி ஒடைஞ்சிப் போயி உக்காந்து அவுங்களயெல்லாம் சோந்து போயிடச்
செய்திடக் கூடாது. ஏறி உக்காருடா பயலே கேரியர்ல. வூட்டுல கொண்டாந்து வுடறேம்."
அப்பிடிங்கிறாரு விகடபிரசண்டரு வாத்தியாரு.
"வேண்டாங்கய்யா! ஒடம்புலயும், மனசுலேயும்
தெம்பு வந்துடிச்சுங்கய்யா! நாம்ம நடந்தே போயிருக்கிறேம்யா! இனுமே அந்த மாரி இருக்க
மாட்டேம்யா!" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
"அதல்லாம் வாணாம்! ஒன்னய சாப்புடாம
கொள்ளாம வேற அழச்சிட்டு வந்திட்டேம்மா! வூட்டுல அதெ நெனைப்பா இருப்பாங்க. ஏறி உக்காரு
அழிச்சாட்டியம் பண்ணாம. ஒன்னய ஒங்க வூட்டுல கொண்டாந்து வுட்டத்தாம் நமக்கும் ஒரு திருப்தியா
இருக்கும்"ன்னு பிடிவாதமா சுப்பு வாத்தியார பிடிச்சி சைக்கிள்ல உக்கார வெச்சி
குடவாசல்லேந்து திரும்ப மிதி மிதின்னு மிதிச்சு விருத்தியூர்ல கொண்டாந்து விட்டுட்டுப்
போனாரு விகடபிரசண்டரு வாத்தியாரு. கொண்டாந்து வுட்ட வாத்தியார்ர ரத்தினத்து ஆத்தா
தெய்வமா கும்புடாத கொறைதாம். அதுக்குப்பின்னாடி சுப்பு வாத்தியாரு ரொம்ப தெளிவா இருக்க
ஆரம்பிச்சாரு. வூடு வுட்டா பள்ளியோடம், பள்ளியோடம் வுட்டா வூடுன்னு எந்நேரமும் படிப்பும்,
வூட்டு வேலைகள்ன்னும் இருக்க ஆரம்பிச்சாரு.
அந்தக் கடைசி பரீட்சையை விகடபிரசண்டரு
வாத்தியாரால எழுதுன பிற்பாடு அவரோட மனசுல ஒரு மாற்றம் உண்டாச்சு. படிச்சு முன்னுக்கு
வர்றதுதாம் செத்துப் போன அம்மாவுக்குப் பண்ண வேண்டிய கைங்கர்யம்னு ஒரு வைராக்கியம்
அவரோட மனசுக்குள்ள உண்டாச்சி. அதுக்கு ஏத்த மாதிரி நல்ல வெதமா படிப்புல கவனத்த வெச்சு
படிக்க ஆரம்பிச்சாரு.
இவரு படிக்கக் கொள்ள ரத்தினத்து ஆத்தாதாம் துணையா இருந்துச்சு. நாகு அத்தை
அஞ்சாவது படிச்சதோட சரி. அதுக்கு மேல அதுப் படிக்க முடியான்னுடுச்சு. ரத்தினத்து ஆத்தாவுக்கும்,
நாகு அத்தைக்கும் பொழுதேனைக்கும் ஆடுகள பாக்குறதுதாம் வேல. அத்தோட சமைச்சிப் போடறதும்,
வூடு வாசல்ல கூட்டிப் பெருக்குறதும் நாகு அத்தைத்தாம். ரத்தினத்து ஆத்தா ஆம்பள கணக்கா
வேல பாக்கறதோட சரி. இருந்த நெல புலன்கள அது செயராமு பெரிப்பாவுக்குக் கல்யாணம் ஆயிடுச்சேன்னு
அது கிட்ட கொடுத்திடுச்சு. அதால ஆடுகளப் பாத்து அதெ வித்துத்தாம் தேவைகள சமாளிச்சுதுங்க.
சுப்பு வாத்தியாரும் பள்ளியோடம் கிளம்புறப்பவும் சரி, விட்டு வந்த ஒடனேயும் சும்மா
இருக்க மாட்டாரு, ஒரு கட்டு புல்ல அறுத்துக் கொண்டாந்து போட்டுட்டுத்தாம் படிப்புல
இறங்குவாரு. பள்ளியோடம் இல்லாத நாளுல்ல அண்ணங்காரரோட வேலைக்குக் கெளம்பிடுவாரு. நாம்ம கொஞ்சம் சம்பாதிச்சுக் கொண்டு போயிக் கொடுத்தா
அது ரத்தினத்து ஆத்தாவோட சொமையக் கொஞ்சம் கொறைக்கும்னு அவருக்கு ஒரு நெனைப்பு.
*****
No comments:
Post a Comment