காலம் வேறு மாதிரியாகச் சிந்திக்கிறது.
வேறு முகத்தைக் காட்டுகிறது. அது தொழில்நுட்ப முகம் ஏந்தி நிற்கிறது. எல்லாரையும்
ஒன்றுபடுத்தி ஓரிடத்தில் சந்திக்க வைத்தது ஒரு காலத்தில் காலத்திற்குப் பிடித்த ஒன்றாக
இருந்திருக்கிறது. காலமே காலத்தைச் சிதைத்துப் போட்ட பின் இந்தக் காலத்தில் அதைக்
காலமே விரும்பாமல் இருக்கிறது.
இந்தக் காலத்தில் இந்தக் காரியத்தில் ஒன்றுபடுத்த
வேண்டும் என்ற அவசியத்தைக் காலம் நொறுக்கி விட்டது. அது தன்னைப் பதிவு செய்ய அனுமதித்து
நாட்களாகி விட்டன. அந்தப் பதிவைப் பிறிதொரு காலத்தில் பிரதியிட்டுக் கொள்வதற்கான
வசதிகளை வழங்க ஆரம்பித்து விட்டது. காலத்தை உறைய செய்த அந்த நொடிப்பொழுதுகளை நீங்கள்
இணைய வெளியில் பதிவேற்றிக் கொள்ளலாம். அது சுற்றிக் கொண்டே இருக்கும். விருப்பப்பட்டவர்கள்
அந்த கால இயந்திரத்தில் ஏறி அந்த நொடிப்பொழுதுகளைத் தரிசித்துக் கொள்ளலாம். இதுதான்
நிஜமான தற்போதைய கால இயந்திரம்.
ஏன் மனிதர்களைக் குறிப்பிட்ட காலத்தில்
ஒன்றுபடுத்த நினைக்கிறீர்கள்? அந்த நொடி ஒரு மனிதருக்குச் சுகமான மல கழித்தலுக்கான
நேரமாக இருக்கலாம். அல்லது சுகமான சிறுநீர்ப் பிரிதலுக்கலான நேரமாகவும் இருக்கலாம்.
இலக்கியக் கூட்டம் என்ற பெயரில் அவரை நாற்காலியில் சிறைபடுத்துவதன் மூலம் எத்தகைய கொடுமை
நிகழ்த்தப்படுகிறது பாருங்கள். நம் இலக்கியவாதிகள் பேச ஆரம்பித்தால் அவர்களை நிமிடங்களுக்குள்
கட்டுப்படுத்துவது சிரமம். மதங் கொண்ட யானைகளைப் போல மணிகளைப் பிடுங்கி அசாத்தியமாக
வீசுகிறார்கள். உட்கார்ந்திருப்பவர்களுக்குப் பின்கடுப்பு தெரிகிறது.
ஒரே ஒருத்தரால் இலக்கியக் கூட்டம் சாத்தியமா?
என்ற கேள்வியை அவசியம் எழுப்பியாக வேண்டும். முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கியமான கேள்வி
அது. ஒரு மனிதர் - ஒரு அலைபேசி - ஒரு முகநூல் கணக்கு - இது போதாதா? ஒரு மனிதர் தன்னையே
அலைபேசியில் பேஸ்புக் லைவில் விட முடியும் எனும் போது ஒரு இலக்கியக் கூட்டத்துக்கு
ஒருவரே போதுமானது. பார்க்க நினைப்பவர்கள் பார்க்கலாம். மலம் கழிக்கவோ, சிறுநீர் கழிக்கவோ
செல்ல நினைப்பவர்கள் அதற்குச் செல்லலாம்.
இனிவரும் காலக் கட்டங்களில் இலக்கிய கூட்டத்தின்
குறைந்தபட்ச எண்ணிக்கையும் ஒன்றுதான். அதிகபட்ச எண்ணிக்கையும் ஒன்றுதான். ஒன்றே உச்சமும்
நீசமும் ஆகும். ஒன்றே சுழியமும், முடிவிலியும் ஆகும். ஒன்றில் தொடங்கி ஒன்றுமில்லாமல்
போய், அதுவே எல்லாமுமாகி முடிவதே வருங்கால இலக்கியக் கூட்டங்களின் புதிய பரிணாமமாக
இருக்கப் போகிறது. வருங்கால இலக்கியக் கூட்டத்துக்கு கூட்டவாதிகள் தங்களைத் தயார்
செய்து கொண்டாக வேண்டும். அதற்கான பாலப் பிணைப்பு நம் நாவலில் இருக்கிறது. நம் நாவல்
இலக்கியக் கூட்டங்களின் புதிய சாத்தியங்களைக் காட்டப் போகிறது. அது கண்ட இலக்கியக்
கூட்டங்கள் அனைத்தும் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்குப் பின்பாக நடக்க வேண்டியவை.
துரதிர்ஷ்ட வசமாக இரண்டாயிரத்து இருபதுக்குள் நடந்து முடிந்து விட்டன. மிக அண்மை காலத்திய
ஒரே நாவல் இந்நாவல் என்பதில் வாசகர்கள் பெருமிதம் கொள்ளலாம். இணைந்தே இன்னும் பல சாதனைகளும்
புரியலாம். அதற்கு வாசகர்களின் ஒத்துழைப்பு அவசியம். வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை
குறைந்தால் இந்த நாவலைக் குழி தோண்டி புதைப்பதைத் தவிர வழியில்லை. வாசகர்களின் எண்ணிக்கைக்
குறையாமல் பார்த்துக் கொள்வது வாசகர்களின் கடமை. நிச்சயம் அந்தக் கடமையை நாவலாசிரியர்
செய்ய முடியாது. அடிப்படையில் ஒரு நாவலாசிரியர் என்பவர் வாசிப்பதில் ஆர்வமற்றவர் என்பதை
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவரது எண்ணமெல்லாம் தான் வாசிக்காமல் இருந்து, தான்
எழுதுவதை மற்றவர்கள் வாசிக்க வைப்பதுதாம்.
அது சரி நாம் கூட்டத்தைத் தொடங்கலாமா?
அல்லது இம்மட்டு இன்னும் சில ஜல்லியடித்து அதன் பின் அதைச் செய்வோமா? காலமே உன்னிடம்
கேள்விகள் ஒப்படைக்கப்படுகின்றன. நீயே பதில்! பதிலுக்குப் பின் நீயே வினா! காலமே எங்களை
மன்னியும்! எங்களால் கேள்விகள் கேட்காமல் இருக்க முடிவதில்லை.
*****
No comments:
Post a Comment