11 Nov 2019

மரணம் தரும் பித்து!



செய்யு - 265
            விவரம் தெரியாத வயசுல நடக்குற மரணங்கள்ல ஒரு நல்லது இருக்கு. அது பெரிசா மனசுல பதியுறது இல்ல. பெரிசா மனச பாதிக்குறதும் இல்ல. ஏதோ கொஞ்ச நாளு அழுகை இருக்கும். கொஞ்சம் கொஞ்சமா அது ஞாபகத்துலேந்து நழுவிப் போயிடும். பிற்பாடு விவரம் தெரியுற வயசு வர்றப்ப அந்த மரணத்த நெனைச்சு ஒரு வருத்தம் உண்டாகும். கண்ணுல கொஞ்சம் தண்ணிக் கொட்டும். அவ்வளவுதாம். விவரம் தெரிஞ்ச வயசுல நடக்குற மரணங்கள் இருக்கே. அதெ தாங்க முடியாது. அதாங் விவரம் தெரிஞ்சிடுச்சே! அதால அந்த மரணத்தப் புரிஞ்சிக்க முடியாதான்னா கேட்டாக்கா... அந்த விவரம் தெரிஞ்ச மனசால அதெ அப்போ ஏத்துக்க முடியாது. நம்மள நல்ல விதமா பாத்துக்குற ஒவ்வொருத்தரும் நம்ம கண்ண விட்டுப் போறாங்களேன்னு அது மனசப் போட்டு அரிச்சி எடுத்திடும். அந்த அரிப்புத் தாங்க முடியாம பித்துப் பிடிச்சிப் போனவங்கள்லாம் இருக்காங்க. சுப்பு வாத்தியாருக்கு அப்படி ஒரு நெலைமை விவரம் தெரிஞ்ச பிற்பாடு ரெண்டு முறை உண்டாச்சி.
            சுப்பு வாத்தியாருக்கு படிப்புல நல்ல ஆர்வம் வந்து குடவாசல் பள்ளியோடத்துக்கு நல்ல வெதமா போயிக்கிட்டு வந்து படிச்சிட்டு இருந்தாரு. அவரு எட்டாப்பு முழு பரீட்சையில கடைசி பரீட்சை எழுத போற நேரம் அது. எப்படியும் அவங்க வூட்டு வேலை ஆடுக அது இதுன்னுப் பாத்துட்டு, சாப்பிட்டுட்டுப் படுக்கப் போறப்ப ராத்திரி பத்து மணிக்கு மேல ஆயிடும்.  அன்னிக்கு தையல்நாயகி ஆத்தா, ரத்தினம் ஆத்தா, நாகு அத்தை, சுப்பு வாத்தியாரு எல்லாம் நல்ல வெதமாத்தாம் சாப்பிட்டுப் படுக்குறாங்க. தையல்நாயகி ஆத்தாவும் நாகு அத்தையும் உள்ளார இருக்குற அறைக்குள்ள ஒண்ணா படுத்துக்குறதும், சுப்பு வாத்தியாருக்கும், ரத்தினத்து ஆத்தாவுக்கும் திண்ணைத்தாம் வாசங்றது தெரிஞ்ச சங்கதித்தாம் ஒங்களுக்கு.
            தையல்நாயகி ஆத்தா காலையில அஞ்சு மணி வாக்குல எழுந்திரிக்கும். அது எழுந்திரிச்சித்தும் நாகு அத்தையை எழுப்பி விடும். அது அவ்வளவு சீக்கிரத்துல எழுந்திரிக்காது. தையல்நாயகி ஆத்தா எழுந்திரிச்சி ஒரு தடவ எழுப்பி விட்டுட்டு, வாசல்ல சாணிய தெளிச்சி கோலத்த போட்டு விட்டுட்டுப் போயி மறுதடவ போயி எழுப்புனாலும் எழுந்திரிக்காது. டீத்தண்ணிய போட்டு வெச்சிட்டு இன்னொரு தடவ எழுப்புனாத்தாம் எழுந்திரிக்கும். அதுக்குள்ள காலையில ஆறு மணி ஆயிடும். அதுக்கு மேலயும் எழுந்திரிக்கலன்னா ரத்தினத்து ஆத்தா உள்ள வந்து குடத்து தண்ணிய தூக்கிக் கொண்டு போயி மேல ஊத்திப்புடும். பத்மா பெரிம்மாவும் வூட்டுல உள்ளாரத்தாம் இருந்தாலும் அது காலங்காத்தால எழுந்திரிக்காது. அது எழுந்திரிக்கிறதுக்கு எப்படியும் ஏழு, ஏழரை மணி ஆயிடும். அது வரைக்கும் வூட்டு வாசல் அப்படியே கெடந்தா என்னாவுறது? அதால அந்த வேலை, வூட்ட கூட்டிச் சுத்தம் பண்றது, சமைக்கிறது, ஏனங்கள அலம்புறதுன்னு அந்த வேலையெல்லாம் தையல்நாயகி ஆத்தாவோடதுதாம்.
            ரத்தினத்து ஆத்தா நெலைமை அப்பிடிக் கிடையாது. ராத்திரி வேலைகள முடிச்சிட்டு பத்து மணிக்குப் படுத்துச்சுன்னா காலங்காத்தால மூணு நாலு மணி வரைத்தாம் அதுக்குத் தூக்கம் வரும். அதுக்குப் பிற்பாடு அது எழுந்திரிச்சி உக்காந்து மண்ணெண்ணெய் விளக்க கொளுத்தி வெச்சிக்கிட்டு கொண்டாந்துப் போட்டுருக்குற தென்னை ஓலைகள ஒரு அருவாமனையை வெச்சிக்கிட்டு வெளக்குமாறுகளுக்கு ஈர்க்குச்சிகளா கிழிச்சிக்கிட்டு உக்காந்துக்கும். அந்த வெளக்குமாறுகள வித்து அதுல ஒரு வருமானம் பார்க்கும். அதே நேரத்துல சுப்பு வாத்தியாரும் எழுந்திரிச்சி உக்காந்து சத்தம் போட்டு படிக்க ஆரம்பிச்சிடுவாரு. ரெண்டு விளக்க கொளுத்தி வெச்சிக்கிட்டா மண்ணெண்ணெய் செலவு ஆகும்னு ஒரே வெளக்கயே பக்கத்துல வெச்சிக்கிட்டு ரெண்டு பேரும் அவங்கவங்க வேலையில கண்ணும் கருத்துமா இருப்பாங்க. காலையில எழுந்த பிற்பாடு நாகு அத்தை ஆடுகள ஓட்டிட்டுக் கெளம்பிடும். சுப்பு வாத்தியாரு பள்ளியோடம் கெளம்பிடுவாரு. ரத்தினத்து ஆத்தா வய வேலைக எங்காச்சிம் இருந்தா அங்க போயி எறங்கி வேல பாத்துட்டு சாயுங்காலமா காசோடு வந்துடும். வேலை எதுவும் கெடைக்கலன்னா நாகு அத்தையோட போயி ஆடுகள மேய்ச்சி வுடுறதுக்கு உக்காந்துக்கும்.
            அன்னைக்குக் காலையில ஆறு மணி ஆயிடுச்சு. பொழுது நல்லா புலந்துப் போச்சுது. வெளிச்சம் நல்லா கெளம்புன பிற்பாடு எதுக்கு வெளக்குன்னு அதெ அணைச்சிட்டு அப்பத்தாம் ரத்தினத்து ஆத்தா வாசப் பக்கம் பாக்குது. வாசல்ல சாணி தெளிச்சி கோலம் போட்டுருக்கல. வேலை நெனைப்புல அதெ சரியா கவனிக்கலங்ற நெனைப்பு இப்பத்தாம் அதுக்கு வருது. சுப்பு வாத்தியாரும் அன்னைக்குப் பரீட்சைக்குப் படிச்சிட்டு இருக்குற நெனைப்புல அவரும் அதெ கவனிக்கல. ஒடனே ரத்தினத்து ஆத்தா, உள்ளார குரல் கொடுக்குது, "ஏம்டியம்மா! தூக்கம் பத்தலயோ? ஏ! சின்னபொண்ணு! சின்னம்மைய கெளப்பி வுட்டுட்டுக் கெளம்பு நீயும்." நாகு அத்தைய அவங்க எல்லாரும் சின்ன பொண்ணுன்னுதாம் கூப்புடுவாங்க.
            ரத்தினத்து ஆத்தா குரலு வந்திடுச்சுன்னா அதுக்கு மேல யாரும் தூங்க முடியாது. மீறிட்டுத் தூங்குனா அதுக்குக் கோவம் வந்துடும். "இஞ்ஞ ஒரு மனுஷி ராத்திரி பத்து மணிக்கு மேல படுத்து, காலங்காத்தால மூணு மணிக்கெல்லாம் எழுந்திரிச்சிடுறா. ஆம்பள பயலும் அப்படியே எழுந்திரிச்சிடுறாம். பொட்டச்சிகளுக்கு ன்னாடி தூக்கம்?"ன்னு குடத்துல இருக்குற தண்ணிய தூக்கிக் கொண்டு போயி மேல ஊத்திப்புடும்னு நாகு அத்தை பதறி அடிச்சிக்கிட்டு எழுந்திரிக்கிது. எத்தனையோ சமயத்துல தையல்நாயகி ஆத்தா எழுப்பி விட்டு எழும்பாம படுத்திருக்கப்ப, ரத்தினத்து ஆத்தா பல தடவைக் குடத்துத் தண்ணிய தூக்கிக் கொண்டு போயி அது மேல ஊத்தியிருக்கு. அந்த ஞாபவம்தான் அது பதறி அடிச்சிக்கிட்டு எழும்பிக்க காரணமாவுது. பக்கத்துல படுத்துக் கெடக்குற தையல்நாயகி ஆத்தவ அது ஆச்சரியமாப் பாக்குது. இது மாதிரி அது படுத்துக் கெடந்து பார்த்ததே இல்ல. "யம்மா! எழுந்திரிச்சிப் போடு. பெரிம்மா சத்தம் போடுது. எழுந்திரிச்சி வந்துச்சுன்னா தண்ணியல்ல தூக்கியாந்து ஊத்திப்புடும்!"ன்னு அதோட ஒடம்ப போட்டு உசுப்பி வுடுது. ஆனா ஒரு சின்ன தொடுதலுக்கே சிலுப்பிக்கிட்டு எழுந்திரிக்கிற தையல்நாயகி ஆத்தா அம்மாம் உலுக்கு உலுக்கியும் எழுந்திரிக்க மாட்டேங்குது.
            நாகு அத்தை அதோட ஒடம்பத் தொட்டுப் பாக்குது. உடம்பெல்லாம் சில்லுன்னு இருக்கு. மறுபடியும் போட்டு அதோட ஒடம்பப் போட்டு உலுக்குது. ஒடம்பு சவம் மாதிரி ஆடுதே தவிர எழும்பக் காணும். நாகு அத்தைக்குப் பயமா போவுது. அது பதற்றமா திண்ணைப் பக்கமா ரத்தினத்து ஆத்தாவ நோக்கி ஓடுது. அது அப்படி ஓடியாறதாப் பாத்துட்டு, "ஏஞ் சின்னபொண்ணு என்னாச்சி? இப்படி அடிச்சிப் பிடிச்சிட்டு ஓடியார்றே? காலங்காத்தால எழுந்திரிச்சா ன்னா? நாம்ம தண்ணிய கொண்டாந்துல்ல ஊத்தணும்னு நெனைச்சிட்டு இருந்தேம். தண்ணிய காட்டி நாளாச்சிடுல்ல!" அப்பிடிங்கிது ரத்தினத்து ஆத்தா.
            "சின்னம்மா எழுந்திரிக்க மாட்டேங்குது. உடம்பெல்லாம் சில்லுன்னு இருக்குது. அதுதான்னே மொதல்ல எழுந்திரிச்சி நம்மள எழுப்பிவுடும். இப்போ அது நாம்ம எழுந்திரிச்சி எழுப்பி வுட்டும் கெளம்ப மாட்டேங்குது. வந்து பாரு‍ பெரிம்மா! ஏம் அத்து இப்பிடிப் பண்ணுது?" அப்பிடிங்குது நாகு அத்தை.
            "அடி யேண்டி ஆவுற வேலைய ஆவ வுடாம பண்றே? இன்னும் ரண்டு வெளக்கமாத்துக்கு ஈர்க்குச்சிகள கிழிச்சிப்புடுவேம். ஒடம்புக்கு முடியாம கெடப்பா. செத்த நேரங் கழிச்சி எழுந்திரிச்சிடுவா. போயி ஆவ வேண்டிய வேலயப் பாரு! நீந்தாம் ஒரு நாளு வாசல்ல தெளிச்சி கோலத்தப் போடேம்!" அப்பிடிங்குது ரத்தினத்து ஆத்தா, இனுமே அதுதாம் வாசல்ல தெளிச்சிக் கோலம் போடணுங்ற நெல வந்தது புரியாம.
            "யய்யோ நமக்குப் பயமா இருக்கு பெரிம்மா! யம்மா தொட்டால எழுந்திரிச்சிடும். ஒடம்ப உலுக்கி வுட்டும் கெளம்ப மாட்டேங்குது. வந்து பார்ரேம் சித்தே!" அப்பிடிங்கிது நாகு அத்தை. ரத்தினத்து ஆத்தா ஆவுற வேலை ஆவாமப் போவுதேன்னு கொஞ்சம் சலிப்போடத்தாம் எழுந்திரிச்சி உள்ள போனுச்சி. போறப்பவே, "ஏம்டி அவ்வதோம் உசுப்புறால்ல. எழுந்திரிக்க வேண்டியத்தான்னே. அது செரி இப்டி படுக்குற ஆளில்லயே நீயி. ஒடம்புக்கு ன்னா பண்ணுதோ தெரியலயே!" அப்பிடின்னு ஒரு யோசனை வந்து பேசிக்கிட்டேதாம் கிட்டக்கப் போவுது. கிட்டக்கப் போயி ஒடம்புல கைய வெச்சா, ஒடம்பு சில்லிட்டுப் போயிக் கெடக்குது. மூக்குல கைய வெச்சுப் பார்த்தா மூச்சு ஓடமாட்டேங்குது. ரத்தினத்து ஆத்தாவுக்குப் புரிஞ்சிப் போயிடுச்சி. "அடிப் பாவி மவளே! நமக்குப் பின்னாடித்தானே வந்தே! முன்னாடிப் போயிச் சேந்திட்டீயேடி!"ன்னு வாயிலயும் வயித்துலயும் அடிச்சிக்கிட்டு அழ ஆரம்பிச்சிடுச்சு.
            தையல்நாயகி ஆத்தா செத்துப் போச்சுங்ற வெசயம் தெரிஞ்சதும் உள்ளார படுத்துத் தூங்கிட்டு இருந்த பத்மா பெரிம்மா, செயராமு பெரிப்பா, அதுகளோட புள்ளைங்க எல்லாரும் அழுதுகிட்டு வந்திடுச்சுங்க. அப்போ பெரிப்பாவுக்கு ரெண்டு பொம்பளைப் புள்ளைங்க பிறந்திருச்சுங்க. பிற்பாடு அதைத் தொடர்ந்து மூணு ஆம்பளைப் புள்ளைங்களும், ஒரு பொம்பளைப் புள்ளைங்களும் பொறந்திச்சுங்க.
            ஏதோ வியாதியில கெடந்து இழுத்துக்கிட்டுக் கெடந்து செத்துப் போனா அதுல பெரிய வருத்தம் தெரியாது. ராத்திரி நல்ல வெதமா சாப்பிட்டுப் படுத்தது காலையில எழுந்து பாக்குறப்ப ஆளு எழுந்திரிக்காம ஒடம்பு சில்லிட்டுப் போயிக் கெடந்தா எப்படி இருக்கும்? சுப்பு வாத்தியாரு குடும்பத்துல இப்படிச் சாவுக திடீர்னு திடீர்னு நடக்கும். யாரும் இழுத்துகிட்டுக் கெடந்தெல்லாம் சாவ மாட்டாங்க. பொட்டுன்னுப் போயிச் சேந்துடுவாங்க.
            சுப்பு வாத்தியாருக்கு அன்னிக்கு கடைசி நாளு எட்டாப்பு பரீட்சை வேறயா? அம்மா செத்ததால அன்னிக்கு அவரு பரீட்சை எழுதப் போவல. இனுமே அவருக்குத் தொணைன்னா அவரோட பெரியம்மாவான ரத்தினத்து ஆத்தாவும், அவரோட தங்கச்சி நாகுவும்தான்னு நெனைக்குறப்பவே அவருக்கு அழுகை அழுகையா வருது. கட்டுப்படுத்த முடியாம அழுது பொலம்புறாரு. அவரு மனசொடிஞ்சுப் போயிட்டாரு. மூணு வயசுல பெத்த அப்பாவ பறிகொடுத்தவரு, எட்டாப்பு படிச்சு கடைசி பரீட்சை எழுதுறதுக்குள்ள பெத்த அம்மாவ பறிகொடுத்திட்டாரு. வீட்டுல எல்லாருக்கும் சோகந்தாம். இவருக்கு அந்தச் சோகம் ரொம்பவே அதிகமா போயிடுச்சு. அவரு பொறந்து வளர்ந்து அதிகமா பேசுனதெல்லாம் பெரிம்மாவான ரத்தினத்து ஆத்தாவோடத்தாம். சின்னம்மாவோட அதிகம் பேசுனது கூட கெடையாது. இருந்தாலும் அவரால அந்தச் சோகத்த தாங்க முடியல. அந்தச் சோகத்துலயே ரொம்ப நாளு பித்து பிடிச்சாப்புல உக்காந்துட்டாரு. சொந்த பந்தங்க எல்லாரும் வந்து தேத்திப் பாக்குறாங்க. முடியல. கூடப் பொறந்த தங்கச்சிப் போயிச் சேந்தத விட இப்படி சுப்பு வாத்தியாரு பித்துப் பிடிச்சாப்புல உக்காந்து இருக்குறத பாக்குறதுக்கு ரொம்ப வேதனையா இருக்கு ரத்தினத்து ஆத்தாவுக்கு.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...