11 Nov 2019

13.3



            கூட்டம் என்றால் கூட்டத்தைக் கூட்டினால்தானே கூட்டம். யார் யாரைக் கூட்டமாய்க் கூட்டுவது என்ற யோசனையில் தங்கள் தமிழய்யாவை முதலாக இணைத்துக் கொள்கிறார்கள் கூட்டவாதிகள். எப்படியாகினும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தமிழய்யத்தான் இலக்கியத்தின் மேல் ஆர்வத்தை விதைத்து இப்படி ஏதாவது செய்யும்படி செய்து விடுகிறார்கள். ஆக, இலக்கிய கூட்டத்தின் முதல் பலி அவராகத்தான் இருக்க முடியும். அத்துடன் ஊரில் கவிதை எழுதுபவர்கள், கதை எழுதுபவர்கள், பொழுது போகாமல் புத்தகம் வாசிப்பவர்கள், சமூக ஆர்வம் உள்ளவர்கள் என்று கண்டறிய ஊர் சுற்றித் திரிந்ததில் பத்து பேருக்கு மேல் தேறினார்கள். இது போதாதா கூட்டத்துக்கு என்று ஆரம்பமானது அகல் இலக்கியக் கூடல்.
            ஒவ்வொரு கூட்டத்துக்கும் எத்தனை பேர் வந்தார்கள் என்ற எண்ணிக்கை தெரிய வேண்டும் என்பதற்காக ஒரு பதிவேடு போடப்பட்டது. அத்துடன் எத்தனைக் கூட்டம் நடந்தது என்பது தெரிவதற்காகவும். வரலாறு முக்கியம் அல்லவா! அதற்காகவே அத்தகைய அந்தப் பதிவேடு. அந்தப் பதிவேட்டில் கூட்டத்திற்கு வந்தவர்கள் வரிசை எண் எழுதி, பெயர் எழுதி, தொடர்பு எண் எழுதி, கையொப்பம் இட்டார்கள். அந்தப் பெயர்களை எல்லாம் தொகுத்து ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிடலாமா என்றுதான் நாவலாசிரியர் முதலில் யோசிக்கிறார். கவிஞர் என்று பெயர் பெறுவது பிடிக்காமல் நாவலாசிரியர் என்ற பெயர் பெற வேண்டும் என்ற ஆசை உந்தித் தள்ள அவர் இந்த நாவலை ஆரம்பிக்கிறார்.
            வெகு முக்கியமாக இலக்கியக் கூட்டத்துக்கு வருபவர்களிடம் சந்தா வசூலிப்பதில்லை என்று முடிவு செய்யப்படுகிறது. ஏனென்றால் வருகின்ற நான்கு பேரும் வராமல் போய் விட்டால் இலக்கியக் கூட்டம் என்பது இலக்கியத் தனிமை என்று ஆகி விடும் என்ற அச்சம்தான் அந்த முடிவுக்குப் பின்னால் அச்சுறுத்தி நிற்கிறது. இலக்கியக் கூட்டத்துக்கான அத்தனைச் செலவினங்களையும் வில்சன் அண்ணன் பார்த்துக் கொள்வதாகச் சொல்கிறார். செலவு செய்வதற்கு ஆள் இருக்கிறது. கூட்டம் சேர்க்க வேண்டுமே! பத்தை இருபதாக, இருபதை நாற்பதாக, நாற்பதை எண்பதாக ஆக்க வேண்டுமே! அரசியல் கூட்டம் என்றால் தலைக்கு ஒரு விலை வைத்துக் கொண்டு வந்து விடலாம். இலக்கியக் கூட்டத்துக்குச் சாதாரண விலையா கேட்பார்கள்? குறிப்பாக தலை விலையோடு பிரியாணி கேட்டால் என்ன செய்வது? தலைக்கு ஒரு விலை வைத்தால் அதை வில்சன் அண்ணன் தருவாரா? அதை எப்படிக் அவரிடம் கேட்பது என்ற தயக்கம் வேறு கூட்டாவதிகளுக்கு இருந்தது. சரி அதைப் படிப்படியாகப் பார்த்துக் கொள்வோம் என்ற முடிவாகிறது.
            கூட்டம் இரவு எட்டு மணி அளவில் ஆரம்பித்து நடத்துவது என்று முடிவு செய்யப்படுகிறது. யார் எந்த வேலை பார்த்தாலும், எந்த வேலைக்குச் சென்றாலும் அந்த நேரம் வருவதற்கு உகந்தாக இருக்கும் என்பதால் அந்த நேரம் தீர்மானிக்கப்படுகிறது. அதே நேரத்தில் எட்டு என்பது ஒரு ராசியல்லாத எண்ணாக கருதப்படுகிறது. அதனால் அந்த நேரத்தில் எந்த வேலையையும் செய்ய மாட்டார்கள். சரியென்று இது போன்ற உருப்படியல்லாத இலக்கியக் கூட்டத்துக்காவது போய் வருவோம் என்று வருபவர்களுக்கு வர ஒரு வாய்ப்பிருக்கிறது. அத்துடன் உழைக்கும் நேரத்தில் கூட்டத்தைப் போட்டு நாட்டின் மனித உழைப்பு குறைவதற்கு இலக்கியக் கூட்டம் காரணமாகி விடக் கூடாது என்பதும் மிக முக்கியமான காரணம். அப்படியானால் இரவு நேரத்தில் எட்டு மணி வாக்கில் உழைக்கக் கூடாதா என்றால், அந்த நேரத்தில் உழைத்து உடலைக் கெடுத்துக் கூடாது என்றும், அது போன்ற நேரத்தில் இது போன்ற பேசியும், சிந்தித்தும் வாயையும், மூளையையும் மட்டும் இம்சித்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவு எட்டப்படுகிறது. இப்படியாக ஆரம்பித்த கூட்டம் மாதத்திற்கு ஒரு கூட்டம் என்ற கோதாவில் எழுபத்தைந்து கூட்டம் வரை சென்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நடந்த எழுத்தைந்து கூட்டத்துக்கும் நாவலாசிரியர் சென்று வந்தவர் என்ற வகையில் அவரால் ஞாபகம் வைத்து எழுபத்தைந்து கூட்டத்தைப் பற்றி எழுத முடியுமா என்பது சந்தேகத்திற்குட்பட்டது. அவரின் ஞாபக இருட்டறையில் இருக்கும் கூட்டங்களை மட்டும் பகிர்ந்து கொள்வது என்ற மகத்தான முடிவுக்கு வந்து அதை நாவலாசிரியர் தெரிவித்துக் கொள்கிறார். அதென்ன ஞாபக இருட்டறை என்றால் பகலில் கூட்டங்கள் நடந்திருந்தால் அது ஞாபகப் பகலறை. இரவில் நடந்ததால் ஞாபக இருட்டறை.
            ஆகவே வாசகர்களே! இலக்கியக் கூட்டத்துக்கு வாருங்கள்! நாவலாசிரியர் உங்களை இலக்கியக் கூட்டத்துக்கு அழைத்துச் செல்ல இருக்கிறார். இதுவரை எந்த இலக்கியக் கூட்டத்துக்கும் செல்லவில்லையே என்ற ஏக்கம் உங்களுக்கு இருக்கலாம். அந்த ஏக்கம் இன்றோடு ஒரு முடிவுக்கு வரப் போகிறது.
            ஆம்! வாசகர்களே! நாம் இலக்கியக் கூட்டத்துக்குச் செல்லப் போகிறோம். பிரயாணம் இல்லாமல், அதற்கான கட்டணமோ, செலவோ இல்லாமல் போகலாம். கூட்டத்திற்கான சிற்றுண்டியோ, தேநீரோ மட்டும் தர முடியாதது இதன் பெரும் பலவீனம். வாசகர்கள் விருப்பப்பட்டால் அவரவர் இருக்கும் இடத்திலேயே தேநீரையும், சிற்றுண்டியையும் தயாரித்து வைத்துக்கொண்டு இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். கட்டாயம் விருந்து மட்டும் வேண்டாம் என்று எச்சரிக்க நாவலாசிரியர் கடமைப்பட்டு இருக்கிறார். விருந்துக்குப் பின் தூக்கம் என்பதாலும், தூக்கம் இலக்கியக் கூட்டத்துக்கு மாபெரும் எதிரி என்பதாலும் நாவலாசிரியர் அதை விலக்கச் சொல்வதில் காரணம் இருக்கிறது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறார்.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...