10 Nov 2019

குறுக்க வந்துப் பிரிச்ச வேலி!




செய்யு - 264
            மனுஷருக்கு மனுஷன் மனசு விட்டுப் பேசுனா எந்த மனதாபமும் தீர்ந்து போயிடும். மனதாபம் வந்த பின்னாடி எந்த மனுஷரும் மனசு விட்டுப் பேசுறத விரும்ப மாட்டாங்க. யாரு போயி யாருகிட்ட பேசுறதுங்ற அகம்பாவத்தை மனதாபம் வளத்து விட்டுடும்.
            அன்னிக்குக் கொழுப்பெடுத்துப் போயி பேசிட்டுப் பெரியவராத்தான்ன போனாரு. அவரா வந்துப் பேசட்டும்னு நெனைக்குறாரு சின்னவரு. நாம்ம பாத்து வேலைக்குச் சேத்து விட்டப் பயெ. அவனுக்கு வேலைக்கு ஆளு வேணும்ன்னா அவனா வந்து கூப்புடட்டும்னு நெனைக்குறாரு பெரியவரு. இப்படி ஒருத்தருக்கொருத்தரு நெனைச்சா எங்க பேசிக்கிறது?
            அக்கா, தங்கச்சியான அத்தைக ரெண்டு பேருக்கும் அவங்கவங்க வூட்டு வேலையப் பாக்க நேரம் சரியா இருக்குறதுல அவங்க பேசிக்கிறது எப்பவாச்சும்தான். புருஷங்காரங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் மனதாபத்துல இருக்காங்ற சங்கதி தெரிஞ்ச பிற்பாடு அவங்களுக்குள்ளும் பேச்சுக் கொறைஞ்சுப் போச்சு. ரெண்டு குடும்பத்துக்குள்ளயும் பேச்சுங்றது புள்ளைங்களோட மட்டும்ன்னு மாறிப் போச்சு. அதுங்க பெரியவங்க பாட்டுக்குச் சண்டை போட்டுக்கிடட்டும், நாம்ம ஒண்ணா கூடிக்கிறது, பேசிக்கிறது, விளையாண்டுக்கிறதுன்னு இருந்துச்சுங்க.
            மாடு வளர்க்குறவங்களுக்கு ஒரு சங்கடம் எப்பவும் இருக்கும். மாட்டை அவுக்கும் போது கட்டியே கெடக்குற மாடு அந்த அலுப்ப தட்டி வுட்டுக்குற மாதிரி சமயங்கள்ல ஒரு குதி குதிச்சி கயித்தை இழுத்துகிட்டு ஓட்டத்தைப் பிடிக்க ஆரம்பிக்கும். நல்ல அனுபவப்பட்டவங்களும் சமயத்துல கொஞ்சம் கவனக்குறைவா இருந்தா கயித்தோட பிடி மாட்டோட போயிடும். கயித்தோட பிடி மாட்டோட போனா மாடு ஓடுற ஓட்டம்தான், போவுற எடம்தான். அதெ தொரத்திப் பிடிச்சி கயித்தப் பிடிச்சிக் கொண்டாரணும்.
            அப்படி ஒரு தடவெ பெரியவரு மாட்டை அவுக்கும் போது மாடு துள்ளிக்கிட்டு ஒரே ஓட்டமா ஓடி சின்னவரோட வூட்டுப்பக்கம் புகுந்துடுச்சி. புகுந்தது சின்னவரோட மாட்டுக்கோட்டையில கட்டியிருந்த மாடுக ரெண்டையும் போயி முட்டிப்புடிச்சி. சின்னவருக்குத் தனிக்குடித்தனம்னு ஆன பிற்பாடு அவருக்குன்னு ரெண்டு மாட்டையும் ஓட்டி விட்டிருந்தாரு பெரியவரு. அந்த ரெண்டு மாடுகளைத்தான் இப்போ அவித்த போது வெறைச்சுக்கிட்டு ஓடுன மாடு வளைச்சி வளைச்சி முட்டிப்புடுச்சி. கட்டிக் கெடக்குற மாட்ட அவுத்துக்கிட்டு ஓடுன மாடு முட்டுன்னா என்னாவுறது? அதுல ஒரு மாடு கவணைக்குள்ள எகனைக்கு மொகனையா வுழுந்து சிக்கிக்கிடுச்சி. மாடு பிடிய வுட்டு அவுத்துக்கிட்டதுமே பெரியவரும் மாடு பின்னால ஓடுறாரு. அவரு ஓடிப் போயி மாட்டப் பிடிச்சிக் கொண்டாரதுக்குள்ள எல்லாம் கண்ணு இமைக்குற நேரத்துல இவ்வளவும் நடந்துப் போச்சி. கட்டியிருந்து முட்டுப்பட்ட மாட்டுக்குக் கொஞ்சம் காயமாவும் ஆயிப் போச்சி. அதுக்கும் பெரியவரு மஞ்சள அரைச்சிப் போட்டுட்டு, ரசா அத்தையக் கூப்புட்டு சேதிய சொல்லிட்டுத்தாம் வந்தாரு.
            ராத்திரி வேலை வுட்டு வந்த சின்னவரு சேதியக் கேட்டுப் பிடிச்சிக்கிட்டாரு. "ஏத்தோ மாடா இருந்தவாச்சிப் போச்சி. இதெ புள்ளைக, மனுஷங்களா இருந்தா என்னாவுறது? இப்டியா அலட்சியமா மாடப் பிடிச்சிக் கட்டுறது? வேலைன்னா அதுல ஒரு பொறுப்பு வாணாம்? எல்லாத்துலயும் இப்டி மண்ணுமுட்டு மாரி இருந்தா ன்னா பண்றது? யாரு வூட்டுக்குச் சேதாரம்? எம்மட வூட்டுக்குத்தானே. யாரு வூட்டுக் காசு அழியுது? எம்மட வூட்டுக் காசுதானே? அவுத்துட்டுப் போற மாடு யாரு வூட்டு மாடுகள முட்டணும்? அவுக வூட்டு மாட்டத்தானே? இப்டி பெறத்தியா வூட்டு மாட்டப் போயி முட்டுன்னா ன்னா அர்த்தம்? ஒரு மனுஷன் வேலைக்குப் போறான்னா அவ்வேம் வேலைக்குப் போயிருக்குற நேரத்துல, வேல வெட்டி இல்லாத மசுரானுங்க இந்த மாரிப் பண்ணா... வேலைக்கிப் போன எடத்துல எப்டி நிம்மதியா வேல பார்க்க முடியும்?"ன்னு இஷ்டத்துக்கு அவுத்து வுடுறாரு சின்னவரு.
            சின்னவரோட பேச்சக் கேட்டு வெளியில வர்றாரு பெரியவரு. "எத்தப் பேசுறதா இருந்தாலும் நேரடியா பேசணும். சாடை மாடையா பொட்டைத்தனமா பேசப்படாது. மாடு அவுக்குறச்சே பிடி வுட்டுப் போயிடுச்சி. அத்து ன்னா பண்ணும்? அஞ்சறிவு சீவன். தெரியாத்தனமா வெளையாட்டு நெனைப்புல பண்ணிப்புட்டு. அதெ தங்காச்சிக்கிட்ட சொல்லிப்புட்டு மஞ்சள அரைச்சித் தடவி வெளக்கெண்ணெய் பூசிட்டுத்தாம் வந்திருக்கேம். மாடுக கொஞ்சம் முன்ன பின்னத்தாம் இருக்கும். அதுக்கு இப்ப ன்னா பண்ணணுங்றே?" அப்பிடிங்கிறாரு பெரியவரு.

            "மாட்ட மாடு முட்டினிச்சு சரி. மனுஷாளா முட்டியிருந்தா? படுத்துக் கெடக்குறங்களுக்கு யாரு வைத்தியம் பாக்குறது? குறுக்கால வேலிய வெச்சத்தாம் சரிபட்டு வரும். அஞ்ஞயிருந்து ஒண்ணும் இந்தப் பக்கம் வாரக் கூடாது. வந்தா வந்துட்டுப் போறதுக்கு காலு இருக்காது"ங்றாரு சின்னவரு.
            "வேலிதான்னே? நாளைக்கு வெச்சிடலாம்! இனுமே அநாவசியமான பேச்சு இருக்கக் கூடாது. ச்சும்மா கால வெட்டுவேம், கைய வெட்டுவேம்ன்னு பூச்சாண்டிக் காட்டிட்டு இருக்கக் கூடாது. இத்தோட முடிச்சிக்கணும். நாளைக்குப் பொழுது சாயுறதுக்குள்ள வேலி இருக்கும். நல்லா சொல்லிப்புட்டேம், பெரச்சனைய இத்தோட முடிச்சிக்கணும். ஆமா?" அப்பிடிங்கிறாரு பெரியவரு.
            "நடக்குறவங்க சரியா நடந்தா பாக்குறவங்க ஏஞ் சிரிக்கிறாங்க? செய்ய வேண்டியத சரியா செஞ்சுப்புட்டா பெறவு பேச்சென்ன வேண்டிக் கிடக்கு?" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            "எல்லாத்தியும் பிரிச்சாச்சி. இதயும் பிரிச்சிட்டா சோலி முடிஞ்சிடும்ல. அதாங் என்னிக்கு இப்டிப் பண்ணலாம்னு யோஜனைப் பண்ணி வெச்சிருந்து, இன்னிக்கு எதார்த்தமா நடந்தத வெச்சி பதார்த்தமா இழுத்து வுட்டாச்சி. இப்டில்லாம் இருந்தா ன்னா பண்றது?"ங்றாரு பெரியவரு.
            "இத்தினி நாளு இதப் பத்தி நாம்ம பேசியிருப்பமா? இன்னிக்குச் சூழ்நிலெ இப்பிடியாச்சி. சொல்ற மாரி ஆயிடுச்சி. நீத்தாம் பெரிய ரோஷக்கார்ரேம் ஆயிடுச்சே. செஞ்சிட்டு மறுவேல பாரு. ஒன்னய கோயிலு கட்டிக் கும்புடுறேம்!" ங்றாரு சின்னவரு.
            "அண்ணன் என்னிக்குச் சாவான்! திண்ண என்னிக்குக் காலியாவும்ன்னே இருக்குறானுவோ!"ன்னு முணுமுணுத்துகிட்டாரு பெரியவரு. மறுநாளே கிளேரியா போத்துகளை நட்டு வெச்சி, கெடைச்ச மூங்கிலு முள்ளையும், கருவ முள்ளையும் கலந்து வெச்சி வேலியக் கட்டி முடிச்சாங்க பெரியவரும் செயா அத்தையும்.
            வேலை முடிஞ்சி வந்து ராத்திரி நேரத்துல மண்ணெண்ணெய் வெளக்க பிடிச்சி வேலியப் பார்த்த சின்னவரு அதுக்கும் சத்தம் போடுறாரு. "இப்டி வூட்டுச் சுவத்துக்கும், வேலிக்கும் ஒரு அடி கூட இல்லாம வேலிய வெச்சா நாளைக்கு மேலண்டைப் பக்கம் எப்டிப் பொழங்குறது? இப்டிப் பண்ணி புள்ளைங்களுக்குச் சொத்த சேர்த்து ன்னடா அந்தப் புள்ளைங்க அனுபவிக்கும்? போறப்ப மண்ணயா, கல்லயா, நக நெட்டைய்யா, சொத்துப் பத்தயா எதெ அள்ளிட்டுப் போவப் போறே? அட மண்ணாப் போவ்வோ! கொஞ்சம் எடத்தக் கொடுத்துத்தாம் வேலிய அடைச்சான்னா? இப்டியா பிசுனாரிப் பய மவ்வேம் காலரைக்கா எடத்தைக் கூட கொடுக்காம ஆசைப் பிடிச்சி அடைச்சி வெச்சிப்பாம்? எல்லாப் பயலுக்கும் கடைசீயில ஆறடிக் கூட வர்றாது. பொதைச்ச எடத்துலத்தாம் மாறி மாறி பொதைக்கப் போறாங்கோ?"ங்றாரு
            சத்தத்தைக் கேட்டுப் பெரியவரு வெளியில வந்துட்டாரு. "வேலிய தள்ளி வைக்கணும்ன்னா அதெ எம்மாம் தள்ளி வைக்கணும்னு சொல்லு. தள்ளி வெச்சிடறேம். அதெ வுட்டுப்புட்டு பொட்டச்சிக் கணக்கா தெருவுக்கு முன்னாடி அரவம் பண்றது நல்லாயில்ல. ஒண்ணய இஞ்ஞ கொண்டாந்து வெச்சது, குடி குடித்தனம்னு ஆக்குணுது நாம்ம. வரங் கொடுத்தவங் தலையில யில்ல கடசீல்ல கை வைக்கிறே?"
            "வெச்சது வெச்சாச்சி. இதுக்குத்தான்ன யோஜனப் பண்ணிச் செஞ்சது? பெறவு மாத்தி வைக்குறதா நடிக்கல்லாம் கூடாது. இதாங் வேலின்னா இனுமே வேலி ஒரு நூலு அளவு கூட அந்தாண்ட நகரப்படாது. மீறி எதாச்சிம் நடந்துச்சுன்னா கோர்ட்டு, கேஸூன்னு அலய வேண்டி இருக்கும். சாக்கிரதையா இருங்க!"ங்றாரு சின்னவரு.
            "ஒம்மட எடமே நாம்ம போட்டப் பிச்சை. பிச்சைப் போட்டதை நாம்ம ஏம்டா கை வைக்கப் போறேம்?"ங்றாரு பெரியவரு.
            "பிச்சை அது இதுன்னு சொன்னாக மருவாதி கெட்டுடும்! அண்ணம்ன்னு பாக்க மாட்டேம்! செருப்பக் கழட்டித்தாம் அடிப்பேம் பாத்துக்கோ. வயசுக்கேத்த மருவாதியோட இருந்துக்கணும். வயசுல மூத்தவ்வேம்ன்னா அந்த கெளரவத்தோட இருந்துக்கணும். ஆமா!" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            "ஏங்க அவருக்கு மின்னாடி சரி சமமா நின்னுகிட்டு? உள்ள வாஞ்ஞ மொதல்ல. வூட்டுக்குள்ள ஆயிரத்தெட்டு வேல கெடக்கு. மட்டு மருவாதி யில்லாம செருப்பு, வெளக்குமாத்துன்னு பேசுறவங்ககிட்ட நமக்கென்ன பேச்சு வேண்டிக் கெடக்கு?"ன்னு செயா அத்தை பெரியவரோட கையைப் பிடிச்சிக்கிட்டு உள்ள கொண்டு போவுது. பெரியவரும் அதுக்கு மேல ஒண்ணுஞ் சொல்லாம அத்தையோட உள்ள போனாரு. அதுக்குப் பெறவு வருஷா வருஷம் வேலிய வெச்சிப் பெரச்சனைத்தான். வேலி அரைக்கா தள்ளி வந்திருக்கு, ஒரு வெரக்கடை உள்ள வந்திருக்குன்னு வருஷா வருஷம் எதையாச்சிம் சொல்லி சண்டை வளர்க்கிறத ஒரு வேலையாவே வெச்சிருந்தாரு சின்னவரு. பெரியவரும் வுடாம பேசுவாரு. பேச்சுக் கொஞ்சம் தடிக்கும் போது ரெண்டு அத்தைகளும் வந்து ரெண்டு பேரையும் கையப் பிடிச்சிக்கிட்டு உள்ள போகும்ங்க. குறுக்க ஆடு மாடுகப் போகாம இருக்கட்டும்ன்னு வெச்ச வேலி இப்போ ரெண்டு பேரும் ஒருத்தொருக்கொருத்தரு பேசாம இருக்கட்டும்ன்னு வெச்ச வேலியா ஆயிடுச்சி.
            சின்னவரு எங்கேயாவது வேலைக்குப் போற எடத்துல பழைய சாக்குக கெடைச்சாப் போது. அதெ மொத வேலையா வாங்கியாந்து வேலி மேல போட்டுடுவாரு. அந்த வூட்டுப்பக்கம் பார்வை கூட வுழுவ கூடாதுங்றதுல கடைசி வரைக்கும் வைராக்கியமா இருக்க ஆரம்பிச்சாரு சின்னவரு. அவருக்கென்ன பிடிச்ச முசலுக்கு மூணு காலுன்னு எப்பவுமே பிடிவாதமாவும், நொரைநாட்டியுமாவும் இருக்கிறவருதான்னே. எப்படியும் வருஷத்துக்கு ஒரு மொறை அண்ணன், தம்பி ரெண்டு பேருக்கும் இடையில, அண்ணன் என்னடா? தம்பி என்னடா?ன்னு வேலிச் சண்டை மட்டும் நடக்கமா இருக்காது. அந்தச் சண்டையில ஒருத்தர ஒருத்தரு கேவலமா திட்டிக்கிட்டுப் பேசிக்கிறதுதாம். மத்தபடி அண்ணன், தம்பிங்ற மொறையில ரெண்டு பேருமே பேசிக்கிறதில்ல.
*****


No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...