1 Nov 2019

படிக்கட்டுச் சத்தியம்!




செய்யு - 255
            சந்தர்ப்ப சூழ்நிலை சரியில்லங்றது வேலங்குடி பெரிய மாமாங்ற பெரியவருக்குத் தெரியுது. சின்னவர்ர தூக்கி நிமுத்தி அப்படியே குந்த வைக்கிறாரு. அதுக்குள்ள செயா அத்தை லோட்டாவுல தண்ணிய கொண்டாந்து நீட்டிட்டு அடுப்படிப் பக்கமா போவுது டீத்தண்ணிய போட.
            "ஏம்யா இப்டி நெலகொலைஞ்சி போயிருக்கே? இந்நேரத்துக்கு வந்திருக்கீயே! யம்மாவுக்கோ வூட்டுல யாருக்கோ ஒடம்பு கிடம்பு முடியலயாய்யா? என்னடாம்பீ வெசயம்?" அப்பிடிங்கிறாரு பெரியவரு.
            சின்னவரு முழச்சிகிட்டே சுத்திலும் பாக்குறாரு. செயா அத்தை அடுப்படியில டீத்தண்ணிப் போடுறதுல மும்மரமா இருக்கு. மத்தபடி இருக்கிறது கைக்குழந்தைங்கதானே. சின்னவரு முழிய கீழே அமுக்கிகிட்டு, "தப்புப் பண்ணிட்டேம்ண்ணே! வெவகரமா போயிடுமேன்னு பயமா இருக்குண்ணே!"ன்னு பெரியவரு காதுக்கு மட்டும் கேக்கற வெதத்துல குரலு பிசிற சொல்றாரு.
            பெரியவரு ஒரு மாதிரியா அனுமானிச்சிகிட்டு, "இஞ்ஞ பேச வாணாம். டீத்தண்ணி வாரட்டும். குடிச்சிட்டு கொளத்துப் பக்கமா போவேம். சித்தே பொறு!"ன்னு அசமடக்குறாரு தம்பிய.
            சித்த நேரத்துல குருவி இரைப் பொறுக்கிட்டுப் போற வேகத்துல டீத்தண்ணிய சுடச்சுட போட்டு ரெண்டு லோட்டாவுல ஆவி பறக்க ஒண்ண சின்னவரு பக்கத்திலயும், இன்னொண்ண பெரியவரு பக்கத்திலயும் வெச்சுப்புட்டு செயா அத்தை, "ஏம்பீ ஒரு மாரியா இருக்கீங்களே! ஒடம்பெல்லாம் சொகந்தானுங்களா?" அப்பிடிங்குது. செயா அத்தை அப்படிக் கேட்டதும் பெரியவரு எதையும் கேக்க வாணாங்ற மாதிரி கண்ண காட்டுறாரு. செயா அத்தைப் புரிஞ்சிகிட்டு, "டீத்தண்ணிய குடிங்கம்பீ!"ன்னு சொல்லிட்டு பழையபடியே பயித்துல கல்லு பாத்து உருட்டப் போவுது.
            பெரியவரும், சின்னவரும் டீத்தண்ணிய உர் உர்ருன்னு உறிஞ்சிக் குடிக்கிறாங்க. அந்தச் சத்தத்தக் கேட்டு கேட்டு கீழே எறக்கி உக்கார வெச்ச பாப்பா சிரிக்குது. அதெப் பாத்து பெரியவரு, "குறும்பு ன்னா சிரிப்புச் சிரிக்குறா?" அப்பிடிங்கிறாரு. சின்னவருக்கு காலையிலேந்து வயித்துக்குள்ள ஏதுவும் போகாம வேறும் வயித்தோட நடந்த நடையோட களைப்புல டீத்தண்ணி தேவாமிர்தமா எறங்குது. அதுவும் வூட்டுல கறந்த பாலுல கொஞ்சம் பேருக்கு தண்ணி கலந்த பாலுல்ல போட்ட டீத்தண்ணி எப்டி இருக்கும்? ச்சும்மா கொழகொழன்னு அதெ குடிச்சால ரெண்டு நாளைக்குச் சாப்பிட வேணாம் போலல்லா இருக்கும். "ய்ப்பா மவராசி நல்ல நேரத்துல சட்டுபுட்டுன்ன டீத்தண்ணிய போட்டுக் கொடுத்தா!"ன்னு மனசுக்குள்ள அண்ணிக்காரிய கும்புட்டுக்குறாரு சின்னவரு.
            "புள்ளீவோ இருக்கு. திங்குறதுக்கு ஒண்ணு கூட வாங்கியாராம வந்துட்டேம் பாருண்ணே!" அப்பிடிங்கிறாரு சின்னவரு. பெரியவரு அதுக்குப் பதிலு ஒண்ணும் சொல்லல. டீத்தண்ணிய குடிச்சி முடிச்சதும், "இந்தாரு! புள்ளீங்கள பாத்துக்கோ. தம்பிய அழச்சிட்டு கொளத்தாங்கர கோயிலுப் பக்கமா போயிட்டு வர்றேம்! வாம்பீ! எழும்பு. சித்தே கெளம்பி காத்தாட போயிட்டு வாரலாம்!" அப்பிடின்னு கெளம்புறாரு. செயா அத்தை பயித்துல கல்லு பாக்குற அப்படியே போட்டுட்டு, எழும்பி வந்து பாப்பாவ தூக்கி மடியில வெச்சிகிட்டு தொட்டில்ல கெடக்குற கொழந்தைய ஆட்ட ஆரம்பிக்குது.

            பெரியவரும், சின்னவரும் எழும்பி படல தொறந்துகிட்டு மேற்கால கொளத்துப் பக்கத்த நோக்கிப் போறாங்க. போற வழியிலத்தாம் காக்காப்புள்ள வூடு இருக்கு. அவரு பாத்துட்டு, "ன்னா யத்தாம்! யாரு விருந்தாடியா? கொளத்துப் பக்கந்தானே! வாரட்டா! பேசி நாளாச்சே!" அப்பிடிங்கிறாரு.
            பெரியவரு இதென்னடா வம்பாப் போச்சுன்னு சடார்னு சுதாரிச்சிகிட்டு, "காட்டுப்பக்கம் ஒதுங்கப் போறேம்! வாண்டாம். காரியத்த முடிச்சிட்டு ஒங்க வூட்டுத் திண்ணைக்கு வந்துப்புடுறோம்!" அப்பிடிங்கிறாரு.
            "செரித்தாம்! பொழுது மசங்கிட்டு. சூதானமா போயிட்டு சுருக்குன்னு வாங்க! கதெ நெறைய கெடக்கு." அப்பிடிங்கிறாரு.
            "ரொம்பத்தாம் காய்ஞ்சுப் போயி கெடக்குறீயே! வந்துப் பேசுவேம் வாங்க!" அப்பிடின்னு பெரியவரு சின்னவரோட வேக வேகமா நடையைக் கட்டுறாரு. அதெ கேட்டுப்புட்டு காக்காப்புள்ள, "ஆவட்டும் அத்தாம்!"ன்னு ஒரு சிரிப்பு சிரிச்சுக்குறாரு. நல்ல வேளையா காக்காப்புள்ள நானும் வர்றேன்னு கெளம்புலையேங்றது பெரியவருக்குக் கொஞ்சம் ஆசுவாசமா இருக்கு. கொளத்தாங்கரை வந்ததும் பக்கத்துல இருக்குற கோயிலக் காட்டி, "அஞ்ஞ போயிடுவாமாடாம்பீ!" அப்பிடிங்கிறாரு பெரியவரு.
            "வாண்டாண்ணே! இப்டியே கொளத்துப் படிகட்டுலயே குந்திக்கலாம்!"ங்றாரு சின்னவரு.
            கொளத்துல அல்லி எலையும், மொட்டுகளுமா, கொஞ்சம் மலர்ந்த பூவுகளுமா இருக்கு. அதைப் பாக்கறப்பவே மனசுக்கு இதமா இருக்குற மாதிரி இருக்கு. அத்தோட கொளத்து தண்ணீரோட பூக்கள தழுவிகிட்டு வீசுற காத்து உடம்புக்கும், மனசுக்கும் ஒரு குளுமைய கொண்டாந்துச் சேக்குது.
            ரெண்டு பேரும் பேசாம கொஞ்ச நேரத்துக்கு அப்படியே உக்காந்திருக்காங்க. சடார்னு சின்னவரு வேட்டி சட்டையை அவுத்து படிகட்டுல ஒரு ஓரமா வெச்சுப்புட்டு துண்ட தூக்கி அது மேல போட்டுட்டு, கோவணத்த ஒரு இறுக்கு இறுக்கிக்கிட்டு, தோளுல கெடக்குற பூணூல ஒரு இழுப்பு இழுப்பு விட்டுக்கிட்டு கொளத்துல குளிக்க எறங்குறாரு. பெரியவரு பாத்துகிட்டேத்தாம் இருக்காரு. "ரொம்ப தூரத்துக்குப் போவாதே. கொளம் ஆழம். அப்டியே முங்கி எழுந்திரிச்சிட்டு வாம்பீ!"ங்றாரு. சின்னவரு கொளத்துல முங்கி முங்கி எழும்புறாரு. முப்பது தடவைக்கு மேல முங்கி எழுந்திரிச்சப்பாரு. முங்கி எழும்புறதுல உள்ள வேகமோ, ஆசையோ கொறையல. "போதுடாம்பீ முங்குனது. வெரசா வா! நேரமாயிட்டுக் கெடக்கு!"ங்றாரு பெரியவரு. அதெக் கேட்டதும் சின்னவரு அவசர அவசரமா கையால தலை, முகம், கைகள தேய்ச்சுக்கிறாரு. தேய்ச்சு முடிச்சி மறுபடி ஒரு முங்கு முங்குறாரு. முங்கிட்டு படிகட்டுக்க மேல வந்து துண்டை எடுத்து தண்ணியில நனைச்சு கசக்கு கசக்கிட்டு நல்லா தொவட்டிக்கிறாரு. நல்லா உடம்பு தலை எல்லாத்தையும் தொவட்டி முடிச்சதும் வேட்டியைக் கட்டிகிட்டு கோவணத்த அவித்து கோவணத்தையும், துண்டையும் மறுக்கா ஒரு அலசு அலசி கசக்கிப் புழிஞ்சி ஓர் ஓரமா வைக்குறாரு. வைச்சவரு அண்ணங்கார்ரேம் பக்கம் வந்து கட்டிப்புடிச்சுகிட்டு, "யண்ணே!"ன்னு வெடிச்சி அழுவ ஆரம்பிக்கிறாரு.
            கொஞ்ச நேரம் அழவுட்டுட்டுப் பெரியவரு, "என்னடாம்பீ! என்னாச்சுன்னு சொன்னாத்தானே தெரியுங்!"றாரு.
            சின்னவரு நடந்த கதையையெல்லாம் மனப்பாடம் பண்ணி ஒப்புவிக்குற குழந்தைய மாதிரி ஒண்ணு விடாம சொல்லிட்டு, "தப்புப் பண்ணிட்டேம்ண்ணே! தப்புப் பண்ணிட்டேம்ண்ணே!" அப்பிடின்னு மறுபடியும் வெடிச்சு வெடிச்சு அழுவுறாரு.
            "என்னடாம்பீ! உண்ட வூட்டுல ரெண்டகம் பண்ணலாமாடா? அதுங் கழுத்துல தாலியேறுன பொண்ணுகிட்ட வெச்சிக்கலாமாடா? ஒன்னயப் பத்தி அப்பிடி இப்பிடின்னு சங்கதிங்க கேள்விபட்டுகிட்டுதாம்டா இருந்தேம். ஏதோ வயசுல அப்பிடித்தாம் இருப்பே. ஒரு கலியாணத்த பண்ணி வெச்சிட்டா திருந்திடப் போறேம்னு நெனைச்சுபுட்டு இருந்துட்டேம். இஞ்ஞ இருக்குற வேல சோலியில நம்மாளயும் வந்து பாக்க முடியாம போச்சுடா! தெய்வமே! இந்தக் கதிக்குப் பண்ணிட்டு வந்து நிக்குறானே! நீதாங் இவனுக்கு ஒரு நல்ல கெதிய காட்டணும்!" அப்பிடிங்கிறாரு.
            "யிப்போ ன்னாண்ணே பண்றது?" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            "பண்றதயல்லாம் பண்ணிட்டு யிப்போ ன்னா பண்றதுன்னா ன்னடாம்பீ பண்றது? ஒம் மேல ஊருக்குள்ள ஏதும் சந்தேகம் உண்டாயிருக்கா?" அப்பிடிங்கிறாரு.
            "பெரிசா இல்லேங்ற மாதிரித்தாம் தெரியுதுண்ணே!"ங்றாரு சின்னவரு.
            "அப்போ பேயாம வுடு. இனும இந்த மாரி பழக்கமல்லாம் வெச்சிக்க மாட்டேம்னு இஞ்ஞ படிகட்டு மேலாப்புல, எதுத்தாப்புல கோயிலு அம்மன சாட்சிய வெச்சா சத்தியம் பண்ணிக் கொடு."ங்றாரு பெரியவரு.
            "சத்தியம்ண்ணே! அம்மனு சாட்சியா இனுமே எந்தத் தப்புக்கும் இனுமே போக மாட்டேம்ண்ணே! இதுலேந்து நம்மள காப்பாத்தி வுட்டீன்னா நல்ல வெதமா நீயி சொல்றபடி கேட்டுகிட்டு ஒங் காலடியிலயே சேவகம் பண்ணிட்டுக் கெடப்பேம்ண்ணே!" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            "கொஞ்ச நாளாவட்டும். இஞ்ஞயே கெட. நாம ஒமக்கு ஒரு வழியப் பண்றேம்!" அப்பிடிங்கிறாரு பெரியவரு.
            வீடு திரும்புறப்போ வேக வேகமா போற பெரியவரயும், சின்னவரயும் காக்காப்புள்ள பிடிச்சிக்கிறாரு. "பாத்தீங்களா அத்தாம்! வார்ரேன்னு சொல்லிட்டு வெரசா வூட்டுக்குப் போறத?" அப்பிடிங்கிறாரு.
            "புகழூர்லேந்து தம்பி வந்திருக்காம்ல. அதாங் காலா காலத்துல ராச்சாப்பாட்ட பண்ணிப்புடலாமுன்னு அந்த ஞாவத்துல..."ன்னு இழுக்குறாரு பெரியவரு.
            "ஏம் நம்ம வூட்டீல பண்ணக் கூடாதா ராச்சாப்பாட்ட! வாங்க! வாங்கம்பீ! சித்த குந்துங்க. நாலு கதையையாவது பேசி முடிச்சிப்புடணும். ரொம்ப கதைங்க கெடக்கு அப்பிடியே. இப்பிடி நாளுக்கு நாலு நாலு கதையா பேசி முடிச்சாத்தாம் புதுப்புது கதைங்க வந்து தேங்காமயிருக்கும்!"ன்னு அந்த வூட்டுக் கதை, இந்த வூட்டக் கதைன்னு ஒவ்வொரு கதையா அவிழ்த்து விடுறாரு காக்காப்புள்ள. காக்கப்புள்ளயோட கதை ஆரம்பிச்சி கொஞ்ச நேரம் வரைக்கும் உம்முன்னுதாம் உக்காந்திருந்தாரு சின்னவரு. அது கொஞ்ச நேரந்தாம். காக்காப்புள்ளயோட கதை வளக்குற நேக்குல சொக்கிப் போயி அவரு சொல்ல சொல்ல ரசிச்சிச் சிரிச்சி கேட்க ஆரம்பிக்குறாரு சின்னவரு. வழக்கமா இது போல கதை வளர்க்க ஆரம்பிச்சா பெரியவரும் தம் பங்குக்கு சிரிக்க சிரிக்க விகடமா அவித்து வுடுவாரு. இன்னிக்கு ஒண்ணும் அவுத்து வுடாம சிரிச்சிக் கேக்கற தம்பியோட முகத்த மட்டும் பாக்குறாரு. அதைப் பார்த்ததும் பெரியவரு, இதுவும் ஒரு விதத்துல நல்லதுதாம், தம்பி சகசமான நெலைக்குத் திரும்புறாம்னு நெனைச்சுக்கிறாரு.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...