9 Oct 2019

மொத நாளு! மொத சண்டெ!



செய்யு - 232
            சீக்கிரமா வீயெம் மாமாவுக்குக் கல்யாணம் ஆவணும்னு எல்லாரும் நெனைச்சதென்னவோ உண்மைதாம். சாமியாத்தாவும் ரெண்டாவது ஒரு மருமவ வந்தாவது நல்ல காலம் பொறக்கணும்னு நெனைச்சதும் உண்மைதாம்.
            ஒரு குடும்பத்துல ரெண்டு மருமவக வரும் போது ரெண்டும் ஒரே விதமா இருந்திடறதும் உண்டும். ரெண்டும் ரெண்டு விதமா இருந்திடறதும் உண்டு. அந்த ஒண்ணுக்கு இந்த ஒண்ணு பரவாயில்லேன்னோ, இந்த ஒண்ணுக்கு அந்த ஒண்ணு பரவாயில்லேன்னோ ஆயிடறதும் உண்டு. ஒரு கையில இருக்குற அஞ்சு வெரலும் ஒண்ணா இல்லாதப்போ, மனுஷங்கள்ல ரெண்டு பேரு ஒண்ணா எப்படி இருப்பாங்க? அஞ்சு வெரலும் அஞ்சு விதமா இருந்தாலும் அஞ்சும் ஒரு கையிலதாம் இருக்கு. மனுஷங்க விசயத்துல அப்படி எதிர்பார்க்க முடியுமா? ரெண்டு மனுஷங்கள ஒரு வீட்டுல ஒண்ணா ஒத்து போக வைக்கிறதுங்றது சாதாரணமில்ல. குடும்ப விசயத்த பொருத்த வரையில ஒரு கையே ரெண்டு வெரலுக்காக ரெண்டா பிரிஞ்சிப் போறதும் உண்டு.
            வீயெம் மாமாவோட மாமனாரு பொண்ணு குடியிருக்கப் போற வீட்டைப் பார்க்குறாரு. குமரு மாமா கட்டுன வூடு. வீடெல்லாம் நல்லாத்தாம் இருக்கு. ஒரு வூட்டுக்குள்ள ரெண்டு மருமவக இருக்கப் போறாக. பக்கத்துலயே இன்னொரு வூடு. கட்டியும் கட்டாமலும் கெடக்கு. ரூப் காங்கிரட்டெல்லாம் போட்டு வேலை ஆயிருக்கு. பூச்சு சுத்தமா இல்ல. சன்னலு நெலைகள் வைக்காம அந்த இடமெல்லாம் பாக்குறதுக்கு பெரும் பெரும் ஓட்டையா தெரியுது. அது வீயெம் மாமாவுக்காகக் கட்ட ஆரம்பிச்ச வீடு. இந்த வீட்டை முடிச்சிட்டு வீயெம் மாமாவுக்கு கல்யாணத்தப் பண்ணி வைக்கலாம்னுதாம் குமரு மாமாவுக்கு ஆரம்பத்துல யோஜனை ஓடுச்சு. நடந்த சம்பவங்கள பார்த்த பெறவு கல்யாணத்து மொதல்ல பண்ணி வெச்சி, சாமியாத்தாவை ஜாகையா அங்க அனுப்பி வெச்சிட்டு வீட்டை வேக வேகமா தயாரு பண்ணிக் கொடுத்திடறது நல்லதுன்னு முடிவு மாறிப் போச்சு.
            வந்த மொத நாளே கோகிலா மாமிக்கும், மேகலா மாமிக்கும் முட்டிக்கிச்சு. வந்தவங்களுக்கு காபித் தண்ணி கொடுத்து கொஞ்சம் உபசரிக்கிற வரைக்கும் வூட்டுக்குள்ள எந்தக் காத்தழுத்த தாழ்வு மண்டலமும் உருவாகல. ரெண்டு மாமிகளும் அப்பிடி இப்பிடின்னு கொஞ்சிகிட்டுத்தாம் பேச ஆரம்பிச்சதுங்க. ரெண்டும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆயிடுமோன்னு அப்படின்னு நெனைக்க தோணுச்சு. அதுக்காக எப்போதும் அப்படியே இருந்துடுமா மனக்கடல்லு. கொஞ்சம் கொஞ்சமா உருவாக ஆரம்பிக்குது.
            "வூடு தயாரு ஆவுற வரைக்கும் ரூமெ எஞ்ஞகிட்ட கொடுங்க. நீஞ்ஞ ஹாலுல்ல படுங்க." அப்பிடிங்குது கோகிலா மாமி.
            "எஞ்ஞ ரூமை நாங்க யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேம். வேணும்னா ஒம்மட வூட்டுல ஒம்மட வூட்டு ஹாலுல்ல போயிப்படுத்துக்குங்க!" அப்பிடிங்குது மேகலா மாமி.
            "ஏம் நடு ரோட்டுல படுத்துக்கிறோமே!" அப்பிடிங்குது கோகிலா மாமி.
            "அது ஒங்க விருப்பம்! எங்களுக்கென்ன? ஒண்ட வந்து பிடாரி ஊரு பிடாரிய வெரட்டுதாக்கும்!" அப்பிடிங்குது மேகலா மாமி.
            "இந்தப் பாரு பிடாரி அது இதுன்னு சொன்னீன்னா வெச்சுக்க. நெசமா பிடாரியாயிடுவேம் பாத்துக்க!" அப்பிடிங்குது கோகிலா மாமி. கோகிலா மாமியோட உருவத்துக்கு அது சொல்றதப் பாக்குறப்ப மேகலா மாமிக்கு பயமாத்தாம் இருக்கு. அவ்வே ஒரு தடவே கீழே தள்ளி மேல படுத்து உருண்டா சட்டினித்தான்னு ஒரு வெடவெடப்பு அதோட மனசுக்குள்ள ஓடுது. "எத்தா இருந்தாலும் எம்மட வூட்டுக்காரர கேட்டுகிட்டு செஞ்சுக்குங்க!" அப்பிடின்னு சொல்லிபுட்டு மூஞ்சை திருப்பிகிட்டு முறுவலிச்சிட்டுப் போவுது மேகலா மாமி. அதுக்குத் தெரியாதா? அதோட வீட்டுக்காரரான குமரு மாமாவைக் கேட்டா, அது வந்து அதுகிட்டத்தாம் கேட்கும்னு. "ன்னா ஒரு வில்லத்தனம்!" அப்பிடின்னு இது இப்போ தனக்குத் தானே சொல்லிக்குது.
            அன்னைக்கே சண்டை பலவிதமா ரெண்டு மருமவளுக்கும் ஆரம்பிச்சிடுச்சு. காப்பியல உப்பு பத்தலன்னு, சோத்துல சீனி பத்தலன்னு, ஜாங்கிரியல காரம் பத்தலன்னு, மிக்சர்ல இனிப்பு பத்தலன்னு சண்டை ஒவ்வொண்ணும் எகனைக்கு மொகனையா எகுறுது.
            "சரியான அண்ணங்காரனா இருப்பாம் போலருக்கே! பசு மாட்டோட முன்னாடிய நம்மகிட்ட கொடுத்துப்புட்டு, பின்னாடியே அவ்வேம் பிடிச்சுகிட்டு பாலு கறந்து குடிக்குற ஏமாத்துக்கார பயலா இருப்பாம் போலருக்கே. போர்வைய ராத்திரியில அவ்வேம் தேவிடியாவோட போத்திகிட்டு, பகல்ல நம்மகிட்ட தள்ளி வுடுற சண்டாளப் பயலா இருப்பாம் போலருக்கே. வெளையுறதுல மேலல்லாம் தனக்கு, கீழேல்லாம் தம்பிக்குன்னு தள்ளி வுடுற மோசக்கார பயலா இருப்பாம் போலருக்கே! எந்தநேரத்துல எம் பொண்ண இஞ்ஞ கொண்டாந்து கொடுத்தேன்னோ? இஞ்ஞ ஒரு பிசாசு இருக்க எம் பொண்ணோட பொழப்பு தமாசா போவுதே! இத்தே கேக்க ஒரு நாதியில்லயே! பேதியில போறவ்வோ! கட்டையில போறவ்வோ! இஞ்ஞ வந்து குடும்பம் நடத்த எம் பொண்ணு தெகைச்சுப் போயி நிக்குறாளே!" அப்பிடின்னு ஆரம்பிக்குது கோகிலா மாமியோட அம்மா. அதாவது வீயெம் மாமாவோட மாமியாக்காரி.
            "இத்தென்னடா கூத்தா இருக்கு? அண்ணங்காரம் தாங் குடியிருக்க மாளிக வூடு கட்டிக்கிறாம். தம்பிய ஏமாளிக கணக்கா வுடுறாம்? இத்து தெரியாம பாரீன்லயே இருந்துபுட்டேன்னே! இப்போ ன்னா மோசமாயிடுச்சு? ஏந் தம்பி குமரு! நீயி அந்த வூட்டக்குப் போயிக்கோ. பூச்செல்லாம் பூசிக்கோ. மகராசனா குடியிருந்துக்கோ. இந்த வூட்ட எம்மட மாப்பிள்ளைக்கு கொடுத்துக்கோ!" அப்பிடின்னு பேச ஆரம்பிக்கிறாரு கோகிலா மாமியோட அப்பங்காரரு. அதாவது வீயெம் மாமாவோட மாமனாரு.
            கோகிலா மாமி புகுந்து வீட்டுக்கு வந்த மொத நாளே அமர்க்களமா இருக்கு.
            "அடி செருப்பாலே! யாரு வூட்டுக்கு வந்து யார ன்னா பேசுறே? யாருடி தேவிடியா? யாருடி மோசக்கார பயலுக. எம்மட அப்பா அம்மா அண்ணம் தம்பிக்குத் தெரிஞ்சதுன்னு வெச்சுக்கோ உடம்புல உசுரு தங்காது பாத்துக்குங்க. நாமளும் ச்சும்மா ஆச்சா பாச்சா கெடயாது. கண்டபடி பேசுற நாக்கை கண்டந்துண்டமா வெச்சி அருவாமனையில அரிஞ்சுப்புடுவேம். இஷ்டத்துக்கு ஆடுற கொழுப்பயெல்லாம் அருவாளால சீவி எறிஞ்சிப்புடுவேம்!" அப்பிடிங்குது மேகலா மாமி.
            "ஏம்ங்க இப்பிடி? வந்ததும் வாரதுமா சண்டெய கெளப்பிகிட்டு இருக்கீங்க! நாம்ம ன்னா வூட்ட முடிச்சித் தார மாட்டேம்ன்னா சொன்னேம். கால அவகாசம் யில்லே. நல்ல காரியம் வெரசா நடந்து முடிஞ்சா நல்லதுன்னு பண்ணிருக்கேம். இத்து எஞ்ஞ அப்பங் கட்டுன வூடுல்ல ஆளாளுக்கு பங்கு போட. நாம்ம வெளிநாடு போயி கஷ்டப்பட்டு கட்டுன வூடு. இதுல யாருக்கும் பங்கு கெடயாது. அதாம் அவ்வேம் வூடு. பேசுறத ஒழுங்கா பேசணும். இல்லேன்னா தகராறா போவும் ஆம்மா!" அப்பிடிங்குது குமரு மாமா.
            "யோவ்! ன்னம்மோ பெரிசா பீத்திக்குற கணக்கா பேசுறே? வார மொத நாளே சண்டெ ஆவுதுன்னா மித்த நாளுகள்ல எம் பொண்ணு எப்பிடிய்யா இந்த வூட்டுல இருப்பா? மருவாதியா ஒரு வழியச் சொல்லுய்யா!" அப்பிடிங்கிறாரு வீயெம் மாமாவோட மாமானாரு.
            "வெவகாரம் பண்றதுக்குன்னே பேசப் புடாது. இஷ்டம் இருந்தா இஞ்ஞ இருங்க. இல்லே அஞ்ஞ போங்க. அதெல்லாம் ஒங்க இஷ்டந்தாம். எல்லாத்துக்கும் நம்மள போட்டுப் படுத்தக் கூடாது. இந்த ஊருல நாஞ்ஞ கெளரவமான குடும்பம்!" அப்பிடிங்குது குமரு மாமா.
            இதையெல்லாம் கேட்டுப்புட்டு இப்பத்தாம் வீயெம் மாமா பேச ஆரம்பிக்குது. "இந்தாருடா அண்ணம்னுலாம் பாக்க மாட்டேம். ரண்டு பேருக்கும் சொத்துல சம பங்கு இருக்கு. இஞ்ஞ ஒனக்கு ஒரு வூடுன்னா, அஞ்ஞ நமக்கு ஒரு வூடு. அதெ நீயி முன்னமே கட்டி முடிச்சிருக்கணும். ஒம் பொண்டாட்டி ஒண்ணு கேட்டாக்க வுழுந்து அடிச்சு ஓடுறே. நமக்குன்னா பம்முறீயே. நாமளும் பாத்துகிட்டுத்தாம்டா இருக்கேம்." அப்பிடிங்குது வீயெம் மாமா.
            இப்போ அம்மாபட்டினத்துல வந்த சனங்க ஆளாளுக்கு பிடிச்சிக்கிறாங்க. "இந்தாருப்பா! அண்ணங்காரனா மருவாதியா நடந்துக்கப்பா! இல்லே நாறிப் போயிடுவே. ன்னம்மோ பெருசா பேசுறீயே? மொய்யி பணத்தயெல்லாம் எடுத்து வையி. ஆவுற பேச்சப் பாப்பேம்." அப்பிடின்னு ஆரம்பிக்கிறாங்க.
            "கலியாணத்துக்கு ஆன செலவுக்கு ஆரு கணக்குக் காட்டுறது? லட்ச ரூவாயிக்கு மேல செலவு ஆயிருக்கு. மொய்யிப் பணம் இருபதினாயிரம் கூட தேறாது. ஒம்மட பாக்கெட்டுகள்ல பணம் இருந்தா எடுத்து வையுங்கோ. செலவு பண்ண லட்ச ரூவாய்ய ஆரு தருவா? ன்னம்மோ இத்தனோண்டு இருபதினாயிரத்துக்கு இப்பிடிப் பேசுறீயேளே ஆளாளுக்கு. எம்மட வூட்டுலயே இருந்துகிட்டு எம்மடயே இஷ்டத்துக்குப் பேசுவீயோளோ?" அப்பிடிங்குது குமரு மாமா.
            "இதுககிட்டே ன்னா பேச்சு? இந்த நாதாரிகளோட நாம்ம இருக்க முடியாது. நம்மள கொண்டு போயி அருவாமணியில வுடுங்க. ரூமு பக்கம் ஆரும் போவக் கூடாது. ரூமைப் பூட்டிச் சாவிய கொண்டாங்க. ந்த்தா அல்லாமும் கவெனி. ரண்டு நாளிக்கு இந்த ஹாலுல தங்கித் தொலைச்சுக்குங்க. ரண்டு நாளு கழிச்சு நாம்ம வாரப்ப ஒண்ணும் இஞ்ஞ இருக்கக் கூடாது. அததும் எடத்த காலி பண்ணிட்டு பக்கத்தால இருக்குற வூட்டுக்குப் போயிடணும். இல்லேன்னா நடக்குறதே வேற ஆமா!" அப்பிடிங்குது மேகலா மாமி.
            ரெண்டாவது மருமவ வந்த மொத நாள்லேயே ரெண்டு பேரும் ரெண்டு பக்கமா நிக்க சாமியாத்தாவுக்குக் கொஞ்சம் ஆசுவாசமா இருக்கு. அது எப்படின்னா? பஸ்லேந்து எறங்கி வந்த அது இந்தக் கூத்தையெல்லாம் பாத்துட்டு அப்படியே பாஞ்சாலம்மன் கோயிலு வாசல்லயே உக்காந்துட்டுது. இன்னும் கொஞ்ச நாளைக்கு மேகலா மாமி கோகிலா மாமியோட சண்டைக்கு நிக்க வேண்டி இருக்குறதால, அது சாமியாத்தாவோட சண்டைக்கு நிக்க வாய்ப்பில்ல. அதால உண்டாவுற ஆசுவாசம்னு அதெ சொல்லிக்க வேண்டியிருக்கு.
            "ன்னா மசமசன்னு நின்னுகிட்டு ரூமையெல்லாம் பூட்டிச் சாவிய கொண்டாங்க!" அப்படின்னு கனைக்குது மேகலா மாமி.
            குமரு மாமா பவ்வியமாய் பயந்துட்ட கணக்கா ஓடிப் போயி ரூமுக சாவியெல்லாம் பூட்டிட்டு அதெ கொண்டாந்து மேகலா மாமி கையில கொடுக்குது. அது அதெ வாங்கி இடுப்புல செருவிக்குது.
            "வண்டிய எடுங்க. கெளம்புவ்வேம்." அப்பிடிங்குது மேகலா மாமி.
            மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட மனுஷங் கணக்கா, அடிமை மாதிரி குமரு மாமா வெளியில ஓடியாந்து டிவியெஸ் சாம்ப் வண்டிய எடுக்குது. மேகலா மாமி அவங்களுக்கு மத்தியில தோரணையா நடந்து வந்து வண்டியில ஏறுது. அப்போதாம் அது பாஞ்சாலம்மன் கோயிலு வாசல்ல உக்காந்துருக்குற சாமியாத்தாவ பாக்குது.
            "வெளிலதாம் இத்து உக்காந்துருக்கா? போயி சண்டெய கெளப்பி அவளெ வெளியே கெளப்புங்குன்னு கெளப்பி வுட்டுகிட்டு கெழவி வெளியில உக்காந்து ன்னம்மா வேடிக்கே பாக்குது பாருங்க! ஒங்க ஆயிதான்னே! வேற எப்டி இருக்கும்?" அப்படின்னு ஒரு வார்த்தையிலயே ஒரு குத்து குத்தி விட்டுகிட்டு அது கெளம்புது.
            சாமியாத்தா வண்டி போற தெசைக்கும், வூட்டுக்குள்ளேயும் ஆக ரெண்டுக்கும் சேர்த்து ரெண்டு கண்ணால மாத்தி மாத்திப் பாக்குது.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...