பாத்திர வார்ப்புகள்
நாவலுக்கு பாத்திர வார்ப்புகள் முக்கியம்.
பெயர்களை மட்டும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். யாரைப் பற்றியும் - உருவ அருவத்தைப்
பற்றி - எதையும் சொல்லவில்லை. மிகையான பாத்திரச் சித்தரிப்பு இருந்து விடக் கூடாது
பாருங்கள். இந்தப் பாத்திரங்களைப் பார்க்காமல் இருந்திருந்தால் எதையாவது சொல்லி விடுவேன்.
கற்பனை அதற்கு உதவும். எல்லாம் நேரில் பார்த்த பாத்திரங்கள். அதனால் எதுவும் சொல்ல
வரவில்லை.
நீங்கள் மிகப்பெரும் ஓர் உண்மையைப் புரிந்து
கொள்ள வேண்டும். நாம் எதைப் பார்க்கிறோமோ, எதை அனுபவிக்கிறோமோ அதைச் சொல்ல வராது.
சொல்லவும் முடியாது. கற்பனைதான் சொல்ல வைக்கிறது. கற்பனையற்ற ஒருவன் எதையும் சொல்ல
முடியாது.
நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சாட்சிச்
சத்தியமாய்ச் சொன்னாலும் நீங்கள் சொல்வதெல்லாம் கற்பனைதான். கற்பனையில் உண்மை ஏது?
பொய் ஏது? என்று கேட்கலாம். அதுவும் ஒரு கற்பனைதான். ஒரு குறிப்பிட்ட கற்பனைப்படி
சொல்வது உண்மை. ஒரு குறிப்பிட்ட கற்பனைப்படி சொல்வது பொய். ஒருவரின் கற்பனைக்கு
நன்றாகத் தீனி போட முடியுமானால் நீங்கள் உண்மையைச் சொல்கிறீர்கள். தீனி போட முடியாத
கற்பனை பொய்.
நீங்கள் ஒரு சாட்சியம் அளிக்கும் போது
அதில் கொஞ்சம் கலோக்கியல் வேண்டும். தீர்ப்பு சொல்ல இருப்பவரை தடுமாற வைக்கும் இடம்
அதுதாம்.
வில்சன், சக்தி, சித்தார்த், விகடு இவர்கள்
எல்லாம் ஒரு வகை. ஆவணி கொஞ்சம் ஒல்லி. அதனால் முன்னால் சொல்லப்பட்டவர்கள் குண்டா
என்று சொல்லத் தெரியவில்லை. ஆவணிக்குக் கொஞ்சம் சதைப் போட்டால் இந்த இலக்கியவாதிகள்
எல்லாம் ஒன்றாகி விடுவார்கள். இலக்கியவாதிகளுக்குள் வேறுபாடு இருக்கக் கூடாது பாருங்கள்.
இந்த இலக்கியாவதிகளில் தற்போது ஆவணி மட்டும் வேறுபட்டு இருக்கிறார். வருங்காலத்தில்
அந்த வேறுபாட்டை அவர் மாற்றிக் கொண்டு வந்து நிற்கலாம். நாற்பதுக்குப் பின் உடம்பு
எப்படி வேண்டுமானாலும் தொளதொளவென்று ஆகலாம். ஆவணி நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.
கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
ஒரு காலத்தில் விகடு ஆவணியை விட ஒல்லியாக
இருக்கிறார். அப்போது சிறுத்த குட்டியாக இருந்தவர் தற்போது பெருத்த குட்டியாக இருக்கிறார்.
ஆவணியும் அந்த நிலைக்கு வர வேண்டும்.
இந்த இலக்கியவாதிகள் ஒன்றுபடும் நாளில்
பெருத்த இலக்கிய சர்ச்சைகள் ஒரு முடிவுக்கு வரலாம். இப்போதும் பெரிதாக சர்ச்சை ஏதுமில்லை.
உங்களை வைத்துக் கொண்டே உங்களைப் பற்றிக் கேவலமாகப் பேசலாம் என்ற சூழ்நிலை நிகழலாம்
என்பார் ஆவணி. அதை ஏன் நாம் கண்டு கொள்ள வேண்டும் என்பார் விகடு.
*****
No comments:
Post a Comment