செய்யு - 231
வீயெம் மாமாவோட மாமனாரு பாரீன் போய்ட்டு
வர்றவரு. பாரீன்லயே இருப்பவரு. இப்போ பொண்ணு கல்யாணத்துக்காக வந்திருக்காரு இல்லையா.
அவரு என்னவோ அதிசயமா வானத்துலேந்து குதிச்சி வந்தரு மாதிரி கல்யாணத்துல நடந்துக்கிறாரு.
என்னவோ இவரு ஒருத்தர்தாம் ஒலகத்துலயே பொண்ண பெத்து கல்யாணத்த கட்டி வைச்சிருக்காருங்ற
கணக்கா உதாரு வுடுறாரு. தலையில சொட்டையும், உடம்புல பட்டுச் சட்டையும், பட்டு வேட்டியும்மா
கோதாவா அங்க இங்க அலைஞ்சிகிட்டு கல்யாணத்துல பம்பரமாக சொழன்றுகிட்டு அதகளம் பண்ணிகிட்டு
இருக்காரு.
தாலி கட்டி முடிஞ்சி பொண்ணையும், மாப்பிள்ளையையும்
பால் காய்ச்ச வீட்டுக்கு அனுப்பணும் இல்லையா! அதுக்குக் காரைப் பார்த்தா காரு வரலே.
கொஞ்சம் தாமதம் ஆவுது. வேற ஒண்ணும் அதுல விபரீதம் இல்ல.
வீயெம் மாமாவோட மாமனாரு கொந்தளிச்சுப்
போய்ட்டாரு. "காரு மட்டும் வரலேன்னா இப்போ நாம்ம கொலகாரனா மாறிடுவேம்! என்ன
என்னய்யா நெனச்சீங்க? பொண்ண கட்டிக் கொடுத்துட்டு எல்லாத்தியும் பொண்ணு வீட்டுலயே
செய்வாங்கன்னு நெனச்சிட்டீங்களோ? நம்மளப் பாத்தா இளிச்சவாயன்னு மூஞ்சுல எழுதி ஒட்டியிருக்கா?
நானும் பாக்குறேம். கல்யாணத்துல ஒண்ணயாவது ஒழுங்கா செஞ்சிருக்கீங்களா? போக்கத்த முண்டங்களா!"
அப்பிடிங்கிறாரு திடீர்னு.
"காருக்குச் சொல்லியாச்சு. வாரதுக்குக்
கொஞ்சம் தாமசம் ஆவுது. கொஞ்சம் பொறுமையா இருங்க. காருக்கு நாம்ம கேரண்டி! எள்ள கொட்டுனா
அள்ளிப்புடலாம். சொல்ல கொட்டுன்னா அள்ள முடியாது! பாத்துப் பேசுங்க. அதுதாங் நல்லது."
அப்பிடின்னு சொல்லுது குமரு மாமா. அதோட கை கக்கத்துல வெச்சிருக்கிற ஹேண்ட பேக்குல
இருக்கு. அந்த ஹேண்ட் பேக்குல மொய்ல வுழுந்த பணமெல்லாம் இருக்கு.
"எங்க எள்ள கொட்டு! அள்ள முடியாதுன்னுப்
பாக்குறேம். அதெ வாங்கிக் கொட்டுறதுக்காவது காசி இருக்கா. யில்ல அதயும் நாமளே வாங்கித்
தரவா? என்னம்மோ எள்ளக் கொட்டுறாராம்ல எள்ள! ந்நல்லா வாயால வடை சுடுற பயலுகளா இருப்பாய்ங்க
போலருக்கே. இவனுங்க குடும்பத்துல கொண்டாந்து எம் பொண்ண கொடுக்கணும்னு தலயெழுத்து!"
என்ற சொட்டைத் தலையிலேயே அடித்துக் கொள்ளுறாரு வீயெம் மாமாவோட மாமனாரு.
குமரு மாமாவுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு
வந்து விட்டது. அதே நேரத்துல அது பாவம் குடும்பத்துல ஒத்த ஆளா நிக்குது. மேகலா மாமி
கல்யாணத்துக்கு வர முடியாதுன்னு சொல்லிப்புடுச்சாம். அவங்க குடும்பத்திலேந்து யாரும்
கல்யாணத்துக்கு வர முடியாதுன்னு வேற அடிச்சிச் சொல்லிப்புடுச்சாம். என்ன இருந்தாலும்
அண்ணங்காரனும், அண்ணிகாரியும் சேர்ந்து பண்ணி வைக்க வேண்டிய கல்யாணம் இப்படி அண்ணங்காரன்
மட்டும் நின்னு பண்ணி வைக்கிறாப்புல ஆயிப் போயிடுச்சுன்னு சனங்க பேசுறதோட விடல.
அதுகிட்டேயும் போயி, "எங்கடா ஒம்மட வூட்டுக்காரி? ஒம்மட மாமானாரு குடும்பம்லாம்
எங்கடா?" அப்பிடின்னு கேட்டுத் தொலைக்குதுங்க. அதுல தொலைஞ்சி நொந்து நூலாகி
நின்னா இவ்வேம் வேற இப்படிப் பேசுறான்னேன்னு அதால ரோஷப்பட்டு பேசவும் முடியல, பேசாம
இருக்கவும் முடியல. ரண்டுக்கும் மத்தியில நின்னு அல்லாடுது.
"காரு வருமாய்யா ன்னா? ல்லே நாமளே
ஒரு காரப் பாத்து அழச்சிட்டுப் போறேம். அந்தக் காருல ஒரு பய ஏறக் கூடாது. ஏறுன்னா
கையி கால வெட்டிப் புடுவேம்!" அப்படின்னு இப்போ இன்னும் குரலை உசத்திப் பேசுறாரு
வீயெம் மாமாவோட மாமானாருகாரு.
இவ்வேன் என்னடா ஒண்ணு கொலகாரனா மாறிப்புடுவேன்னு
மெரட்டுறான், இல்லே கையை வெட்டிப்புடுவேன், கால வெட்டிப்புடுவேன்னு மெரட்டுறான்னு சனங்க
மூக்கு முழி மேல போயிடுற அளவுக்கு பார்க்குதுங்க. இவன் என்ன பாரீன்ல வேல பார்க்கப்
போனானா? இல்லே கூலிப்படையில இருக்கப் போனான்னு அத வேற சில சனங்க குசுகுசுன்னு பேசிக்குதுங்க.
மண்டபத்து உள்ளே கல்யாண மேடைக்கு எதுத்தாப்புல
ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலியைப் போட்டு சாமியாத்தவை உக்கார வெச்சதுதாம். கடல் நீல நெறத்துல
பளபளன்னு பட்டுப்புடவையைக் கட்டிகிட்டு அது கண்குளிர கல்யாணத்தப் பாத்து கண்ணால ஆனந்த
கண்ணீர வுட்டுகிட்டே இருந்துச்சு. அது கால சாப்பாட்டையும் சாப்புடல. மவன் கல்யாணத்த
ஆச தீர பார்த்துட்டுத்தாம் சாப்புடுவேன்னு உக்காந்ததுதாம். உக்காந்தே கிடக்கு. வெளியில
பேசுற சத்தம் அதோட காதுக்குக் கேட்குது. இப்போயும் அதோட கண்ணுல தண்ணி வந்துட்டுத்தாம்
இருக்கு. அது என்ன வகை கண்ணீருன்னுதாம் தெரியல.
வைத்தி தாத்தா குடும்பத்தோட கடைசி கல்யாணம்
இதுதாம். அவரு உசுரோட இருந்து பாக்க முடியாம போன ஒரே கல்யாணம். அவரு காலத்துலயே நடந்திருக்க
வேண்டிய கல்யாணம்ந்தாம். அவருக்கு ஏனோ வீயெம் மாமாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்குறது
பிடிக்காமலே போயிட்டு. ஆறு பொண்ணுங்களுக்கும், ஒரு மவனுக்கும் கல்யாணம் பண்ணி பார்த்தவருக்கு
இன்னொரு மவனுக்கா கல்யாணம் பண்ணிப் பாத்திருக்க முடியாது? இவனுக்குல்லாம் நாம்ம என்ன
கல்யாணம் பண்ணி பார்க்குறதுன்ன அவரு நெனச்சிருக்கணும். அவரு இருந்த வரைக்கும் கல்யாணம்
பண்ணக் கூடாதுங்றதுல ஒரு வித உறுதியோட இருந்துட்டாரு. கல்யாணம் பண்ணி வைக்க முயற்சி
பண்ணவங்களயும் நீங்களா பாத்து பண்ணி வெச்சா நாம்ம ஒண்ணும் தலயிட மாட்டேம்னு குத்து
மதிப்பா போட்டு குழப்பி அடிச்சிட்டாரு.
அது போவட்டும். இப்போ...
மண்டபத்து வாசல்ல காப்பிக் கொட்டை நெறத்துல
ஒரு டாடா சுமோ வந்து நிக்குது. "வண்டி வந்துடுச்சு. ஏறுங்க!" அப்பிடிங்குது
இப்போ ஒரு மாதிரியாய் கெத்தாகி விட்ட கோதாவில் குமரு மாமா.
பொண்ணு மாப்பிள்ளையும் அதுல ஏறுனவுடனே,
முன்னாடி பின்னாடின்னு பொண்ணு வீட்டுச் சனங்க மட்டும் சில பேரு அதுல ஏறிக்கிறாங்க.
மாப்பிள்ள வீட்டு சனங்கள்ல ஒண்ணாவது ஏற இடம் கொடுக்க மாட்டேங்றாங்க. எப்படியும் அதுக்குள்ள
முண்டி அடிச்சி ஏறுன சனம் பதினைஞ்சாவது இருக்கும்.
"வாங்க! வந்து நீங்களும் ஏறிக்குங்க!"
அப்பிடிங்றாரு வீயெம் மாமாவோட மாமானாரு இப்போ கோபமெல்லாம் தணிஞ்சுப் போன ஆளு மாதிரி.
இனுமே அதுல எங்கப் போயி ஏறுறது? இடம் இருந்தாத்தானே.
"வாணாம்! வண்டி கெடக்கு அதுல வந்திருக்கிறேம்!"
அப்பிடிங்குது குமரு மாமா கித்தாப்பாய்.
"ஒங்க இஷ்டம்!" அப்பிடிங்கிறாரு
அந்த மாமானார்காரரு. "செரி! நல்ல நேரம் முடியறதுக்குள்ள வண்டிப் பொறப்படட்டும்!"
அப்பிடிங்றாரு அவரு. வண்டி புறப்படுது.
கல்யாணம் முடிஞ்சதுல வந்த சனங்க ஒவ்வொண்ணும்
அதது திசையைப் பார்த்து கிளம்பிகிட்டு இருக்கு. குமரு மாமா அங்க நிக்குற ஒரு ஆளைப்
பார்த்து "வண்டிய எடுத்துட்டு வந்து வீட்டுல போட்டுடு", அப்பிடின்னு சொல்லுது.
"நீஞ்ஞ எப்பிடிண்ணே வருவீங்க?"
அப்பிடின்னு கேக்குறாரு அந்த ஆளு.
"போறப்ப ஒரு கார வரச் சொல்லிட்டுப்
போடா!" அப்பிடிங்குது குமரு மாமா.
அந்த ஆளு வண்டிய எடுத்துட்டுப் போன கொஞ்ச
நேரத்துல வெள்ளை நிறத்துல ஒரு அம்பாசிடரு காரு வந்து நிக்குது. அதுல ஏறிப் போவுது
குமரு மாமா தெனவெட்டா. அதோட முகத்துல இப்பதாம் ஒரு கெத்தும், சந்தோஷமும் வந்த கணக்கா
இருக்கு. "யப்பா டிரைவரு! வேகமா போனீன்னா முன்னாடி காப்பி கொட்டை நெறத்துல ஒரு
டாட்டா சுமோ போவும். அது போயி எறங்குற நேரத்துல சரியாக நாமளும் போயி எறங்கணும்!"
அப்பிடிங்கது குமரு மாமா டிரைவரிடம்.
இங்க மண்டபத்துல பார்த்தா சுப்பு வாத்தியாரு
குடும்பம், பாகூர் சித்தி குடும்பம், சிப்பூரு பெரியம்மா, சின்னம்மா குடும்பம், தேன்காடு
சித்தியோட குடும்பம் இதுகளோட சாமியாத்தா இருக்குது. யாருக்கு எங்க போறதுன்னு ஒரு
கொழப்பம் சுத்திச் சுழண்டு அடிச்சதுல எல்லாரும் அவங்கவங்க இதுக்கு மேல அங்க இங்க நிக்காம
அவங்கவங்க ஊருக்குக் கிளம்புறதுன்னு முடிவாவுது.
சாமியாத்தவ என்ன பண்றதுங்ற யோஜனையில அதெ
ஜப்பாரு தியேட்டரு பஸ் ஸ்டாப்புல கொண்டு போயி நிறுத்தி வெச்சி, வடவாதி பஸ்ஸூ வர்ற
நேரத்துல அதெ ஏத்தி விட்டுக் கொண்டு போயி பத்திரமா அங்க வூட்டுல வுட்டு வந்தாச்சி.
"ரெண்டு பேரும் காருலத்தாம் போறானுவோ.
ஒருத்தனுக்காவது கூடவா யம்மா என்ன பண்ணும்ங்ற
யோஜன வராமப் போயிடுச்சி. நல்ல வேள கல்யாணத்துக்காவது அழச்சிட்டு வந்தானுவோளே, வுட்டுட்டு
வாராம. நாமல்லாம் வந்தப் போறது போலயா குடும்பம் அஞ்ஞ நடக்குது. ஏதோ தேவ திங்கன்னா
இப்பிடி மண்டபத்துல சந்திச்சுக்குற மாரில்ல இருக்கு நெலமெ. இப்படி நட்டாத்துல விட்டுப்புட்டுப்
போறானுங்களே! யம்மாவும் சும்மா கெடயாது. செத்தாலும் மவ்வேம் வூட்டுல சாவேம்ங்குதே
தவுர மவ வூட்டுக்கு ஒண்ணுக்காவது வர்றேங்குதா?" அப்பிடின்னு மூசு மூசுன்னு அழுதுகிட்டே
தேன்காடு சித்தி அது ஊரு பஸ்ஸூக்கு பஸ்ஸூ ஏறிப் போவுது. ஒவ்வொரு சனமா இப்படியா கலைஞ்சா
அதுக்குப் பெறவு ஜப்பாரு தியேட்டரு மண்டபம் ஆளில்லாம வெறுமையா ஆவுது. இனுமே சனங்க கூட
அங்க இன்னொரு கல்யாணம் நடக்கணும்.
*****
No comments:
Post a Comment