8 Oct 2019

2.0



இருமலின் மேடைப் பேச்சு
            ஆவணிக்கு இலக்கியம் பேச வேண்டும் என்பதில் அலாதி ஆர்வம். நேரம் கிடைத்தால் போதும், நேரம் போவது தெரியாமல் பேசுவார். அதைப் பேச வைக்க வேண்டும் என்பதிலும் அலாதி ஆர்வம்.
            ஆவணி தனது மகனின் நான்காவதோ, ஐந்தாவதோ, ஆறாவதோ ஏதோ வரிசைக்கிரமத்தில் வரும் ஆண்டில்... நமக்குதான் கால வரிசைப் பிடிக்க மாட்டேன்கிறதே. அதனால் அதை விட்டு விடலாம். சுருக்கமாக மகனின் ஒரு பிறந்தநாள் விழாவில் விகடுவை அழைத்துப் பேச வைக்கிறார். ஏன் பேச வைக்கிறார் என்றால் நமக்குக் கடந்த காலம் பிடிக்காது. நீங்கள் காரணத்தை எதிர்பார்த்திருப்பீர்கள். காலத்தைச் சொல்லி விடுகிறேன் போலிருக்கிறது. ஆதலால் அதனால் நிகழ்காலம்தான் எல்லாவற்றிற்கும்.
            இப்போது இருப்பது போல அது விகடு ப்ளாக்கில் எழுதாத காலம். அதனால் அப்போது பேசியது காற்றோடு கரைந்து போய் விட்டது. காற்றுக்கு நஷ்டம்.
            ஆவணி அவரது பாட்டியாரின் கருமாதி நாளிலும் விகடுவைப் பேச வைக்க முயற்சிக்கிறார். அன்றைக்குப் பார்த்து அத்தனை ஆண்டுகளாக ஆகாத காரியம் ஒன்று ஆக நேரிடுகிறது. பேச எழுதி வைத்ததை அப்படியே ஆவணியிடம் கொடுத்து விட்டு வந்ததோடு சரி. பிறகு அது ப்ளாக்கில் பிரசுரம் ஆனது. யாரோ ஒருவர் 'வேற லெவல்' என்று கமென்டிட்டிருக்கிறார். யார் அவர் என்று இன்று வரை விகடு தேடிக் கோண்டிருக்கிறார். கிடைத்தபாடில்லை. பாட்டி இறந்த சோகத்தைப் பிழிந்தால் இப்படித்தாம் வேற லெவல் என்று கமெண்ட்டிடுவதா என்பதெல்லாம் இல்லை. இப்படி கமெண்டிடுபவர்கள் லட்சத்தில், கோடியில் ஒருத்தர். மறுபடியும் லட்சம், கோடி என்று எண்கள் வந்து விட்டது பாருங்கள்.
            ஆவணி சளைத்து விடவில்லை. மறுபடியும் ஒரு கூட்டத்தில் பேச வைக்கிறார். பத்து மணி கூட்டத்துக்கு ஒன்பதே முக்காலுக்கே போய் உட்கார்கிறார் விகடு. அதற்குப் பின்தான் ஆவணி வருகிறார். கூட்டம் பதினோரு மணிக்கு மேல் ஆரம்பமாகிறது. கையில் கம்யூட்டரும், கைபேசியும் இருந்ததால் காலம் தப்பிக்கிறது. இந்த இரண்டும் இருந்தால் எப்படி வேண்டுமானாலும் பொழுதை உறிஞ்சித் துப்பலாம். இரண்டுக்கும் மின்சாரம் வேண்டும். இரண்டும் உறிஞ்ச வேண்டும் என்பதற்காக கையில் ஒரு பவர் பேங்க் புட்டியும், ஸ்டெப்னி பேட்டரியும் கைவசம் இருக்கிறது. விகடு பிறந்து வளர்ந்த காலங்களில் அவரது அப்பா அப்படி கையில் புட்டிப் பாலோடு அலைந்திருக்கிறார். அதிகம் பால் குடித்துக் குடித்தே சளி பிடித்து விடுகிறது. அதைச் சிந்தி எறிந்து விடுவோம். இப்போது மின்சாரம் செலவழிந்து கொண்டிருக்கிறது.
            மேடையில் உட்கார்வது ஒரு புது அனுபவம். யோகாசனப் பழக்கம் இருப்பதால் நீண்ட நேரம் உட்கார முடிகிறது. நாற்காலி இல்லாமல் உட்கார்வது உட்கட்டாசனம். இது நாற்காலியில் உட்காரும் உட்கட்டாசனம். யோகாசனப் பயிற்சி இல்லாதிருந்தால் நான்கு முறை சிறுநீருக்காகவும், இரண்டு முறை குடிநீருக்ககாவும் மேடையை விட்டு இறங்க நேர்ந்திருக்கும்.
            பேச ஒலிவாங்கியைப் பிடித்தால்... ஒலிவாங்கி நல்ல சொல் அல்லவா!  கூட்டம் அரண்டு ஓடி விடுமோ என்ற பயம். பாவம் பார்வையாளர்கள். அவர்கள் ஆசனப் பயிற்சி இல்லாமல் அமர்ந்திருக்கிறார்கள். பேசியதை விட இருமியது அதிகம். பாவந்தான் ஒலிவாங்கி. லொக்கு லொக்கை வாங்கிக் கொட்டுகிறது வஞ்சனையில்லாமல். அதாவது லொக் லொக் என்று பேசுவதற்கு பின்னணி இசை கொடுப்பது போல அது வேறு நிமிஷத்துக்கு நான்கு முறை. பின்னணி ‍இசை பட்டையைக் கிளப்புகிறது. பேச்சு குட்டையைக் குழப்புகிறது. கடைசியாக ஆவணிப் பார்த்தார். இருமும் போதெல்லாம் தண்ணீர் கொடுப்பதற்காக தண்ணீர் புட்டியோடு ஓர் ஆளைப் போடுகிறார். மினரல் வாட்டர் பாட்டிலை வெற்றிடம் நிரப்பிக் கொண்டிருக்கிறது.
            யோகாசனப் பயிற்சி உதவாமல் போனதில் தண்ணீருக்கு மட்டுப்பட்டு லொக் லொக்கோடு பேசி முடித்த போது கடிகாரம் இருபது நிமிடத்தைக் கொன்று தீர்த்திருக்கிறது. நல்லவேளை மயக்கம் அடித்து விழவில்லை. விழுந்திருந்தால் தண்ணீர் புட்டியின் நீரை முகத்தில் அடித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஓர் ஆளைப் போட்டிருக்க வேண்டும் ஆவணி.
            இப்படியாக மூன்று இலக்கியப் பேச்சுகளில்,
            1. பேசியது ஞாபகம் இல்லாமல் போகிறது.
            2. பேச வாய்ப்பில்லாமல் போகிறது.
            3. இருமல் அதிகம் பேச ஆசைப்படுகிறது.
இருமல் இல்லாமல் இலக்கியம் பேசுவது எளிதில்லை. இலக்கியத்துக்கும் இருமலுக்கும் தொடர்பு இருக்கிறது. இருமலைக் கொன்றால் நன்றாக இலக்கியம் பேசலாம். எப்படிக் கொல்வது? கொலை செய்வது பாவம் அல்லவா! இலக்கியம் உள்ள வரை இருமலும் இருப்பதாக!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...