2 Oct 2019

வீட்டை விட்டு வெளியில போ!



செய்யு - 225
            "நல்லாத்தான் இருந்தாரு! திடீர்னு இப்படிக் காய்ச்சல படுத்துக் கெடக்குறாரே!"ன்னு சுப்பு வாத்தியாருக்கு வெங்கு கை வைத்தியமா  என்னென்னமோ பண்ணிப் பாக்குது. பத்து அரைச்சி துணியில போட்டு நெத்தியில வெச்சிப் பார்க்குது. அடிக்கிற காய்ச்சல் அதிகமாவுதே தவிர குறைஞ்ச பாடில்ல. இங்க உள்ளுரூ டாக்கடருகிட்ட கொண்டு போயி ரெண்டு ஊசி குத்தி மாத்திரை மருந்தும் கொடுத்துப் பார்த்தாச்சி. இவருக்கு காய்ச்சல் அடிக்கிற காரணத்தை ஒண்ணு அவரு சொல்லியாகணும். இல்ல விநாயகம் வாத்தியாரு சொல்லியாகணும். ரெண்டு பேரும் அமுக்குனாஞ்சியா இருக்காங்க. இதை எப்படிக் கையாளுறதுன்னு ரெண்டு பேருக்குமே யோசனையா இருக்கு.
            அன்னிக்கு விகடு ஆபீஸ்க்குக் கெளம்பிட்டு இருக்குறப்ப வெங்கு சொல்லுது, "ஏலேம்பீ! இவர்ர திருவாரூக்கு அழச்சிட்டுப் போயிக் காட்டுடா! ஜூரம் நிக்கவே மாட்டேங்குது. மனுஷன் எதப் பார்த்து பயந்தாரோ? சின்ன பிள்ளைன்னா காத்து கருப்புன்னு அடிச்சிட்டுன்னு முடி கயிறு போட்டு மந்திரிச்சி விடலாம். இம்மாம் பெரிய ஆளுக்கு ன்னா பண்றது? டாக்கடருகிட்டே கொண்டு போ! அதாஞ் சரி!" அப்பிடிங்குது.
            "செரி! கெளம்புங்கப்பா!" அப்பிடிங்றான் விகடு.
            "அதெல்லாம் ஒண்ணும் வாணாம். இன்னிக்கு ஆபீஸ்க்கு லீவு போடு!" அப்பிடிங்றார் சுப்பு வாத்தியார்.
            "போடுறேன். நீங்க கிளம்புங்க. பார்த்துட்டு வந்துடலாம்!" அப்பிடிங்றான் விகடு.
            "ஒரண்டியும் போவ வாணாம். செத்த நேரத்துல விநாயகம் வாத்தியாரு வந்துடுவாரு. நீயி வூடு தங்கு!"
            "அய்யாவோட வண்டியில போறீங்களா?"ங்றான் விகடு.
            அதற்கு சுப்பு வாத்தியார் ஒண்ணும் சொல்லாமல் உட்கார்ந்திருக்கார்.
            "அதாங் இருன்னு சொல்றார்ல தம்பீ! கொஞ்சம் பேசா யிரு!" அப்பிடிங்குது வெங்கு.
            ஆபீஸ்க்குக் கிளம்பிய விகடு சட்டையைக் கழட்டி விட்டு பனியனோட உட்கார்ந்திருக்கான். அரை மணி நேரத்துக்கு மேல ஆயிருக்கும். டிவியெஸ் சுசுகியில வண்டிய நிப்பாட்டி இறங்கி வீட்டக்குள்ள வர்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "வாங்க! வாங்க வாத்தியாரே!" அப்பிடிங்றாரு சுருட்டிக் கொண்டு கிடக்கும் போர்வைக்குள்ளே இருந்து சுப்பு வாத்தியாரு.
            "வாங்க! வாங்கய்யா!" அப்பிடிங்றான் விகடு.
            "இப்போ ஒடம்புக்கு எப்படி இருக்கு?" அப்பிடிங்றார் விநாயகம் வாத்தியார்.
            "பரவாயில்ல. நல்லாருக்கு!"ங்றார் சுப்பு வாத்தியார்.
            "எங்க நல்லா இருக்கு? அப்படியேத்தாம் இருக்கு? ன்னான்னே புரியல! இப்டில்லாம் படுக்குற ஆளில்ல." அப்பிடிங்கது வெங்கு.
            விநாயகம் வாத்தியார் பெரு மூச்சு விட்டுக் கொள்கிறார். அவர்தானே இப்போ சங்கதியை ஆரம்பிச்சாகணும்.
            "யப்பா விகடா! நீயி ன்னாடாப்பா வேல பார்க்குறே?" அப்பிடிங்றார்.
            "அதாம் முன்னமே சொல்லியிருக்கேனுங்களே அய்யா!" அப்பிடிங்றான் விகடு.
            "சொல்லியிருக்கிறே! அந்த வேல நல்ல வேலயா படலயே!" அப்பிடிங்றார் விநாயகம் வாத்தியார்.
            "அப்படில்லாம் இல்லீங்கய்யா!" அப்பிடிங்றான் விகடு.
            "அப்பிடின்னு நீயி சொல்றே?"
            "அது நல்ல வேலை இல்லன்னு உங்களுக்கு யாருங்கய்யா சொன்னது?"
            "நேர்ல பாத்தாச்சி விகடு! வேண்டாம் ஒனக்கு அந்த வேலை. ஒனக்கு வேலை வரும். பொறுமையா இரு. இன்னிலேந்து வேலைக்குப் போவ வாணாம்!"
            "அய்யா! எனக்குப் புரியல. ஏன் வேலைக்குப் போக வேணாம்?"
            "முந்தா நேத்தி நீயி வேல பாக்குற ஆபீஸூக்கு வந்திருந்தோம்."
            "நான் பார்க்கவே இல்லையே!"
            "உள்ள வரல. வர விரும்பல. வெளியிலயே நின்னுட்டுப் போய்ட்டேம்!"
            "உள்ள வரலாமேங்கய்யா!"
            "எப்படி உள்ள வர்றது? ஒரு பொம்பள மண்ண வாரி இறைச்சிட்டு இருந்தா! அதெ அட்சதைத் தூவறதா நெனச்சிட்டு உள்ள வர்றச் சொல்றீயா?"ங்றார் விநாயகம் வாத்தியார்.
            விகடுவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் புரிய ஆரம்பிக்குது.
            "அப்பாவை அழைச்சிட்டு வந்தீங்களா?" அப்பிடிங்றான் விகடு.
            "ம்" என்பது போல தலையை ஆட்டுறாரு விநாயகம் வாத்தியார்.
            "நல்லா சாம்பாதிச்சுட்டுப் போய் நகை, நட்டு, துணி, மணின்னு வாங்கிக் கொடுப்பாங்கய்யா. அப்போ யாரு வீட்டுல இருந்தும் வந்து பாராட்ட மாட்டாங்கய்யா. இப்படி ஒண்ணு ரண்டு நடக்கும் போது மட்டும் வந்து மண்ணை வாரி இறைப்பாங்கய்யா!"
            "அதாஞ் சொல்றேம். இந்த வேல வாணாம். ஒரு குடும்பத்தோட வாசாப்பு நமக்கு வாணாம்னு ஒங்க அப்பாரு நெனைக்குறாரு. அதெ நெனச்சி நெனச்சித்தாம் காய்ச்சல்லு விழுந்து கெடக்குறாரு வாத்தியாரு. நீயி புரிஞ்சப்பன்னு நெனைக்கிறேம்."
            "குடும்பம் இப்போ கடன்ல இருக்குங்கய்யா! இப்போ நான் வேலைக்குப் போயி சம்பாதிக்கலன்னா அது நல்லா இருக்காது. யாரையும் ஏமாத்தி, வஞ்சனைப் பண்ணி சம்பாதிக்கலங்கய்யா! நான் என் வேலையைப் பார்க்குறேன். சம்பளம் கொடுக்குறாங்க. அதோட கூடுதல் வருமானமும் வரும். அவ்வளவுதாம்!"
            "அதாங் வாணாம். ஒங்க அப்பாவால சொல்ல முடியல. நம்மால ஒங்க அப்பா இப்பிடிப் படுத்துக் கெடக்குறத பார்க்க முடியல. அப்பா முக்கியமா? வேல முக்கியமா?ன்னு முடிவு பண்ணிக்க!"
            "ரெண்டுமே முக்கியம்தாங்கய்யா! சாராயக் கடையில வேலை பார்க்கிறேன்னா அங்க நான் சாராயம் குடிக்கிறதா நெனைக்கக் கூடாதுங்கய்யா! எம் பொழைப்புக்கு ஒரு வேலையைப் பார்க்குறேன். நான் அந்த வேலையைப் போயி பார்க்கலன்னாலும் இன்னொருத்தன் போயி பார்க்கத்தான் போறான். அதுக்காக அந்த வேல அனாதை ஆயிடாதுங்கய்யா!"
            "ஒனக்கு அந்த வேல வாணாம். அவ்வளவுதாங் சொல்வேம்!"
            "அதுதாம் காரணம்னா அந்த வேலைக்குத்தான் போவேன்!" அழுத்தமாய்ச் சொல்றான் விகடு.
            "யே யம்பீ! வாத்தியாரு சொல்றார்ல. கேளுடாம்பீ. நீயி வேலைக்குப் போவணும்னு அவசியமில்லையா. இதாலதாம் ஒங்க அப்பாரு காய்ச்சல்ல கிடக்கறார்ன்னா அது வாண்டாம்ய்யா. இவங்க சொல்றதப் பார்த்தா நீயி பார்க்குறது ஏதோ தப்பான வேல மேரி படுதுய்யா! அது நம்ம குடும்பத்துக்கு ஆகாதுய்யா. வெலகி வந்துடு." அப்பிடிங்குது வெங்கு.
            "இது தப்பான வேலைன்னா, மெட்ராஸ்ல ஒங்க தம்பிங்க என்ன வேலைங்கய்யா பார்க்குறாங்க?" அப்பிடிங்றான் விகடு விநாயகம் வாத்தியாரைப் பார்த்து.
            "வாயை மூடுடா! ன்னாடா பேசுறே? அடிச்சேன்னா பாத்துக்கோ! பல்லு மொகரப் பேந்துடும்!" என்று போர்வையை உதறி விட்டு எழும்புறாரு சுப்பு வாத்தியார்.
            விநாயகம் வாத்தியாருக்கு கண்ணு கலங்குது. எழுந்து வரும் சுப்பு வாத்தியாரைக் கைத் தாங்கலாய்ப் பிடித்துக் கொள்கிறார். "ஆத்திரப்படாதீங்க வாத்தியாரே! சின்ன புள்ளதானே! தெரியாத்தனமா பேசுறான்!" அப்பிடிங்றார் விநாயகம் வாத்தியார்.
            "ம்! சின்ன புள்ளே! இவனா சின்ன புள்ளே? வூட்டை விட்டு அன்னிக்குச் சொல்லாம கொள்ளாம ஓடுன பயலே மெட்ராஸ்லேந்து புடிச்சுக் கொண்டாந்தது யாரு? வூட்டைச் சுத்திகிட்டுக் கெடந்த கம்முனாட்டிப் பயலே டீச்சர் டிரெய்னிங் கொண்டு போயி சேர்த்து விட்டு படிக்க வெச்சது யாரு? யோஜிச்சுப் பேசணும் வாத்தியார்ரே! வாயில வந்ததையெல்லாம் பேசுறதா?" சுப்பு வாத்தியாருக்கு உடம்பு கொதிக்குற கொதிப்பை விட, அவர்கிட்டேயிருந்து விந்து விழுவுற வார்த்தைங்க ரொம்பவே கொதிக்குது. அவரால் பேசுவதை நிறுத்த முடியல. பேசுறாரு. "நீஞ்ஞ அவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியார்தானே? அந்த மட்டு மருவாதிக் கொஞ்சமாவது இருக்கா? நாக்குல நரம்பு ல்லாம பேசுறாம்! வேலைக்கிப் போவாம வூட்டுல இருக்குறதா இருந்தா இருக்கச் சொல்லுங்க. அந்த வேலைக்குதாம் போவேன்னா வூட்டை விட்டு வெளியில போவச் சொல்லுங்க. அவ்வேம் சம்பாதிச்சுக் கொண்டாந்து கொடுத்த காசை நாளைக்கே நாலு காசு வட்டியாவது வாங்கி அவ்வேம் கையில கொடுக்கிறேம்!" அப்பிடிங்றார் சுப்பு வாத்தியார்.
            "ன்னா வாத்தியார்ரே! ஒலகத்துலயே நெதானமான ஆளுன்னு ஒங்களத்தாம் நாம்ம நெனச்சிகிட்டு இருக்கேம். நீங்கப் போயி இப்பிடியில்லாம் பேசுவீங்கன்னு நாம்ம எதிர்பார்க்கல." விநாயகம் வாத்தியார் சுப்பு வாத்தியாரின் வாயைப் பொத்துகிறார். அவர் குரல் தழுதழுத்து உடைந்து விழுவுது. கண்ணலேந்து அவருக்குத் தண்ணியா கொட்ட ஆரம்பிக்குது.
            "அவ்வேம் யாருக்கு ன்னா கெடுத்தல் பண்ணாம்? அவனெப் போயி இப்படிப் பேசிப்புட்டீங்களே! இன்னிய வரைக்கும் பசிக்குதுன்னு கேட்டுச் சாப்புட மாட்டாம். போட்டாச் சாப்புடுவாம். இல்லன்னா பசியோடயே படுத்துக் கெடப்பாம். சம்பாதிச்சு ஒத்த காசி அவனுக்கா செலவு பண்ணிருப்பானா? இன்னும் ஒங்க ஒடைஞ்சிப் போன ஓட்ட சைக்கிள்லதான போயிட்டு இருக்காம். அப்பங்காரு டிவியெஸ்பிப்டியில போறாரு. மவன் பழைய சைக்கிள்ல போறாம். எந்த ஊர்ல நடக்கது இப்பிடி? ஊர்ல ரண்டாயிரம் சம்பாதிக்கிறவன்லாம் டர்புர்ருன்னு வண்டிய வாங்கி வெச்சிட்டுப் போறப்ப ஐயாயிரம் சம்பாதிக்குறாம் எம் புள்ளே. இவ்வேம் எதுல போறாம்? ஏம் புள்ளயப் போயி இப்பிடிப் பேசிப்புட்டீங்களே? அவ்வேம் வீட்டை விட்டு வெளியில போவணும்ன்னா நானும் போறேம். எம் பொண்ணயும் கூட அழச்சிட்டுப் போறேம். நீஞ்ஞ மட்டும் நீஞ்ஞ கட்டுன வூட்டுல சந்தோஷமா இருங்க! யாருக்கு வேணும் நீ்ஞ்ஞ கட்டுன வீடு?" அப்பிடின்னு ஆக்ரோஷமாய்ச் சொல்லிட்டு அழுவுது வெங்கு.
            "பிரச்சனையைப் பேசி முடிச்சிப்புடலாம்னு பார்த்தேம். புதுப் பிரச்சனையை ஆரம்பிச்சு வெச்சிருக்கீங்களே வத்தியாரே!" விநாயகம் வாத்தியாரின் கண்ணுலேருந்து முன்னைக் காட்டிலும் இப்போ இன்னும் அதிகமா தண்ணி தண்ணியா கொட்டுது.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...