2 Oct 2019

எல்லா பிள்ளைகளையும் படிப்பாளிகள் ஆக்க... - முதல் கட்ட யோசனை!



            "ஐம்பத்தெட்டு எப்போ ஆவும்? ரிட்டயர் ஆவோம்ன்னு இருக்குடா எம்.கே!" என்கிறார் எஸ்.கே. அவர் ஓர் ஆசிரியர். பிள்ளைகள் போட்டு அவரைப் படுத்துவது சமீப காலங்களில் அவரால் தாங்க முடியவில்லை. ரிசல்ட் குறைந்ததற்காக இரண்டு முறை அவர் விளக்கம் கொடுக்க வேண்டியதாகி விட்டது.
            "ஒனக்குதாம் ஐம்பத்தெட்டு ஆயிடுச்சே! ரிட்டயர்டு ஆவுடா!" என்கிறார் எம்.கே.
            "நாப்பத்து ரெண்டு முடியலடா படுபாவி! அதுக்குள்ள ரிட்டையர்டு வாங்கிட்டுப் போனா வூட்டுல ஒண்ணு மதிக்காது!" என்கிறார் எஸ்.கே.
            "பெறவு நீதாம்ட்டா சொன்னே ரிட்டையர்டு ஆவணும்னு, ஐம்பத்தெட்டு வரணும்னு!"
            "முடியலடா எம்.கே. முடியலடா!"
            "வயச ஏம்டா ஏத்திக்கிறே? வயச குறைச்சுக்கடா. அப்பதாம் வேலை பார்க்குறோங்றது தெரியாது. இப்போ என்னோட வயசு என்னா தெரியுமா? பதினாலு இல்ல பதினாஞ்சு. அவ்வளவுதாம்!"
            "மண்டை பார்க்க பஞ்சு பஞ்சா. பாதி மண்டையில அதுவும் இல்லாம பளபளன்னு மின்னல் வெட்டுது. ஒனக்கு வயசு பதினாலு இல்ல பதினாஞ்சு!"
            "பிள்ளைங்களோட உணர்வுகள பிள்ளைங்களா இருந்தாத்தாம்டா புரிஞ்சுக்க முடியும்!"
            "நீயி ரொம்பப் புரிஞ்சிக்கிட்டீயோ!"
            "அப்டில்லாம் சொல்ல முடியாது. இன்னும் புரிஞ்சுக்கணும். அது வேற. ஏதோ கொஞ்சம் புரிஞ்சுக்கிறேம்!"
            "சொல்லு! சொல்லித் தொலை! சேட்டை மூட்டை செவ்வாயக் கெழமைகளை எப்படிச் சமாளிக்கிறேன்னு சொல்லித் தொலைடா!"
            "ஒம் வயசுலேந்து அப்படியே அதுங்க வயசுக்கு எறங்கிப் பாரு. புள்ளைகள ரசிடா. அந்த வயசுக்கு அப்பிடித்தாம். நீயும் நானும் பண்ணாத சேட்டை மூட்டைங்களா! நம்ம காலத்துக்கு நாம்ம அதிகம்தாம்டா. ரொம்பவும் அதிகம். அதுங்க இந்தக் காலத்துக்குப் பண்ணுதுங்க. கம்மிதாம். நம்மோட ஒப்பு வெச்சின்னா அது கம்மிதாம். அதுதாம்டா உசுரோட துடிப்பு. அதாம்டா அதுங்களோட சக்தி. நீயி பத்து நிமிஷத்துக்கு கத்திகிட்டே இருக்கணும்னு பிள்ளைகள்ட்ட சொல்லிப்பாரு. அதுங்களால முடியாது. ஆனா அதுங்களால அரை மணி நேரம் வேணாலும் கத்திகிட்டே இருக்க முடியும். அது எப்படி? அதுங்களா செஞ்சா செய்ய முடியும். செய்யணும்னு சொன்னா முடியாது. அத கவனிச்சியா?"
            "ஏம்டா ஏற்கனவே ரிசல்ட் அந்தர் பல்டியா ஆயிக் கெடக்கு. அதுங்களா டிவி பார்க்கும். பாட்டு பாடும். டான்ஸ் ஆடும். கூத்தடிக்கும். சேட்டைப் பண்ணும். காமெடி பண்ணும். அதத்தாம்டா செய்யும். பாடத்த மட்டும் படிக்காதுடா கோமுட்டிப் பயலே!"
            "அதை்தாம்டா நாமளும் சொல்றேம். இனுமே பாடத்தை நடத்தாதே. பாட்டுப் பாடு. டான்ஸ் ஆடு. காமெடி பண்ணு. சேட்டை பண்ணுடா நீயும். டிவில பண்றது போல காம்பயரிங் பண்ணுடா. ஆமாம்டா. பாடத்தைப் பாட்டா பாடுடா. பாடத்தை டான்ஸா ஆடுடா. பாடத்தைக் காமெடியா சொல்லுடா. பாடத்துல சேட்டை பண்ணுடா. பாடத்துல காம்பயரிங் பண்ணுடா. பெறவு பாருடா!"
            "வெளங்கிடும்!"
            "இதெ புள்ளைங்களுக்காக சொல்லல. ஒனக்காகச் சொல்றேம்!"
            "ன்னா எனக்காகச் சொல்றீயா?"
            "ஆமாம்டா வெங்காயம்! நீயி இப்படி இருந்தீன்னா பிரசர்ரு, சுகரு, பி.பி., அட்டாக்னு ஏதோ ஒண்ணு ஒன்னய காலி பண்ணிடும்!"
            "நீ சொன்ன கணக்கா மாறிட்டா..."
            "நீயும் நல்லா இருப்பே. புள்ளைங்களும் நல்லா இருக்கும்!"
            "பெறவு படுத்தி எடுக்க மாட்டானுங்களா?"
            "நீ புரோகிராம் பண்ணி வெச்சிருக்குற ரோபோட்டுங்க போல ஆயிடும்ங்டா!"
            "இப்ப ன்னா பண்ணச் சொல்றே?"
            "போடா அதுங்ககிட்ட பேசுடா! ஒம் பிரச்சனையைப் பத்தி நீயி மனச விட்டுப் பேசு. அதுங்க பிரச்சனை பத்தி அதுங்களும் மனசு விட்டுப் பேசும். ஒரு ரெண்டு நாளைக்கு இப்படி ஓடட்டும். கலந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்க. இனிமேலாவது முடிவுக்கு வந்துட்டு அதுக்குத் தகுந்த மாதிரி பேசாதே. கலந்து பேசிட்டு ஒரு முடிவுக்கு வந்து அப்புறம் பேசு. கொஞ்சம் பேசுனா முடிஞ்சுப் போற விசயம்டா இது. அதுக்கத்தான் ஒம் வயச குறைச்சுக்கோங்றேம். ஒம்ம வயசுதாம் இப்பப் பிரச்சனையே. இப்போ நீயி எங்கிட்ட மட்டும் எப்படி இப்படிப் பேசுறே? நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே வயசு. அதால ப்ரீயா பேசுறே. அதாம்டா விசயம். நீயி அவங்க வயசுக்குப் போயிட்டேன்னு வெச்சுக்கோ அதுங்களோட அதுவா பேச ஆரம்பிச்சிடுவே. அப்படி பேச ஆரம்பிச்சிட்டீன்னா எல்லாம் தீர்ந்துப் போச்சி. புள்ளைங்களுக்கும் நம்மளுக்கும் இருக்குற வயசு இடைவெளி அவங்களுக்குப் பிடிக்கல. அந்த இடைவெளியை நிரப்பப் பார்க்குறாங்க. அவங்களால நம்ம வயசுக்கு இப்போ ஏறி வர முடியாது. நாம்ம அவங்களோட வயசுக்கு இறங்கிப் போக முடியும்தானே. இறங்கிப் போயிப் பாரு. ஒனக்கும் ஆயுசு நீடிக்கும். புள்ளைங்களும் ஆயுசுக்கும் மறக்காது."
            "அப்படிங்றே?"
            "அப்படிதாங்றேன்!"
            எஸ்.கே.வுக்கு இப்போ குதூகலமாய் இருக்கு. அவர் இந்த யோசனையைப் பிடித்து பண்ணிக் கொண்டிருக்கும் ரவுசுகளைக் குதூகலங்களை அப்பைக்கப்போ பார்ப்போம்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...