3 Oct 2019

நூற்றாண்டுகளின் கனா - காந்தியச் சிந்தனைகள்



            காந்தி பிறந்து நூற்று ஐம்பதாவது ஆண்டில் இருக்கிறோம். அதாவது காந்தியின் பிறப்பு ஒன்றரை நூற்றாண்டைக் கடந்திருக்கிறது. அவர் இன்றும் நினைக்கப்படுகிறார். அவரது இன்றைய பிறந்த நாளை - நூற்று ஐம்பதாவது ஆண்டின் பிறந்த நாளை ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச அகிம்சை தினமாக அறிவித்துள்ளது.
            காந்தியை நாம் மறக்க முடியாது, அவர் ரூபாய் நோட்டுகளில் சிரிக்கிறார் என்பதற்காக அல்ல. ஏன் ரூபாய் நோட்டில் காந்தி சிரிக்கிறார்? என்று கேள்விக் கேட்ட ஒரு சின்ன குழந்தையின் வினாவிலிருந்து அதை ஆரம்பிக்கலாம். ஏன் சிரிக்கிறார்? என்ற கேள்விக் கேட்ட அந்த குழந்தையே அதற்கானப் பதிலையும் சொன்னது, அழுதால் ரூபாய் நோட்டு நனைஞ்சிடுமே என்று.
            அவர் சிரித்துக் கொண்டே இருந்த ஒரு மனிதர். மிகப் பெரிய போராட்டங்களின் போதும், தாங்க முடியா மனச்சுமைகளின் போதும் அவர் தன் சிரிப்பை விட்டுக் கொடுக்கவில்லை. இதை அவரே ஓர் இடத்தில் சுட்டிக் காட்டுகிறார், 'நகைச்சுவை என்ற உணர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் என்றோ நான் தற்கொலை செய்து கொண்டு இறந்திருப்பேன்' என்று. அவரது சிந்தனையை நாம் மிக எளிமையாகத் துவங்குவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் நாம் காந்தியின் தனிநபர் குறித்த சிந்தனை எப்படி இருந்தது என்பதிலிருந்து துவங்குகிறோம்.
            தனிநபர் பிரச்சனை, தனிநபர் சோகம், தனிநபர் சிக்கல் என எல்லாவற்றிற்கும் அவர் சிரிப்பை, நகைச்சுவையை ஒரு வலிய ஆயுதமாய் முன் வைக்கிறார். தற்கொலைக்கான ஒரு மாற்றுத் தீர்வைத் தருகிறார். அவருக்குக் கணிக்கப்பட்ட ஜாதகக் குறிப்புப்படி அவர் இளமையிலே மரணமடைந்திருக்க வேண்டும். ஆனால் அவர் எழுபத்து ஒன்பது ஆண்டுகள் வரை வாழ்ந்தார். சிரிப்பும், நகைச்சுவையும் அவர் ஆயுளை நீட்டிக் கொண்டே இருந்திருக்க வேண்டும்.
            எங்கள் தேசத்தில் சூரியன் மறைவதே இல்லை என்று சொன்ன பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும் அநாயசமாக எதிர்கொண்டு அத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார். சுதந்திரம் கிடைத்தால் பாதுகாப்பு கிடைக்கும், உத்திரவாதங்கள் கிடைக்கும், வளமான வாழ்க்கைக் கிடைக்கும் என்று சொல்லப்பட்ட சுதந்திர இந்தியாவில்தான் ஓராண்டுக்கு மேல் கூட வாழ முடியாமல் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகிப் போனார்.
            காந்தியைக் கொன்ற துப்பாக்கி மாண்டு போனது. அவர் இன்றும் சிரிப்பில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் தன் சிந்தனையில் சிரிப்பையே, நகைச்சுவையையே முதல் சிந்தனையாக இந்த உலகிற்குச் சொல்வதாக நினைக்கிறேன். அவர் தன் வாழ்வு முழுவதும் எந்த அளவுக்குக் கொள்ளைப் பிடிப்பு இறுகிய மனிதராக இருந்தாரோ, அதே அளவுக்க மெல்லிய நகைச்சுவையும், புன் சிரிப்பும் இழையோடிய ஒரு மனிதராக இருந்தார்.
            காந்தி இந்தியாவில் பிறந்தவர். இங்கிலாந்தில் உயர்கல்வி கற்றவர். தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞர் தொழில் செய்தவர். இந்தியாவிற்குத் திரும்பி பின் போராட்ட வாழ்வைத் தொடங்கியவர். அவரது சிந்தனைக் களத்தில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என்ற மூன்று நாடுகளின் நிலவியல் பங்கு இருக்கிறது. அவரது சிந்தனைத் தளத்தில் நிலவியல் களத்தை ஆராயும் போது தமிழகத்திற்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது.
            தென்னாப்பிரிக்காவில் அவரது போராட்ட குணத்தை வலுபடுத்தியவர் தமிழ்நாட்டைச் சார்ந்த தில்லையாடி வள்ளியம்மை. அவரது போராட்டத்துக்கு ஆசிகள் சொன்ன பாரதி தமிழ் மண்ணில் பிறந்தவர். தமிழ் மண்ணில் பிறந்த தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் திருவடியில் அவர் தமிழ் பயில பிரியப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் பிறந்த ஜீவாவை நீங்கள்தான் இந்த நாட்டின் சொத்து என்று அவர் வியந்திருக்கிறார். அவரது வளமையான சிந்தனையில் எப்போதும் தமிழ் மண் தந்த திருக்குறளுக்கு முக்கிய பங்கு இருந்திருக்கிறது. இப்படியாக அவரது ஒட்டுமொத்த இந்திய சிந்தனையில் தமிழ் மண்ணின் சிந்தனைகள் அதிகம் என்பதில் நாம் பெருமைப்பட காரணம் இருக்கிறது.
            இந்தியாவின் சுதந்திர வேட்கையை முதலில் துவங்கியது வட இந்தியாவா? தென்னிந்தியாவா? இது ஒரு கேள்வி.
            1857 இல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போர் வட இந்தியாவில் நடைபெற்றதாகச் சொன்னாலும், தென்னிந்தியாவில் - தமிழகத்தில் வேலூர் புரட்சி நடைபெற்றது 1806 இல். அவ்வகையில் முதல் இந்திய சுதந்திரப் போர் என்பதே வேலூர் புரட்சிதான்.
            நாம் ஊன்றிக் கவனித்தால்...
            முதல் இந்திய சுதந்திரப் போர் என்று 1857 இல் நடைபெறுகிறது. அதைச் சிப்பாய்க் கலகம் என்று ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். வேலூர் கலகம் 1806 இல் நடக்கிறது. முதல் இந்திய சுதந்திரப் போர் என்று குறிப்பிடப்படும் சம்பவத்துக்கு முன்பாக 51 ஆண்டுகள் முன்னதாக நடக்கிறது. அதாவது அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னதாக நடக்கிறது. தமிழகத்தில் நடக்கிறது. அதாவது தென்னிந்தியாவில் நடக்கிறது. சுந்திரப் போராட்டத்தில் இந்தியாவுக்கு வழிகாட்டி தென்னிந்தியா. அதாவது தமிழகம்.
            உலக நாகரிகம் பலவற்றுக்கும் முற்பட்ட நாகரிகம் தமிழர்களுடையது. உலக மாந்தர்களின் உணர்வுகள் பலவற்றுக்கு முற்பட்டது தமிழர்களின் உணர்வு. தமிழும், தமிழர்களும் உலகுக்குக் வழிகாட்டிகள். காந்தியடிகளுக்கும் தமிழகம் வழிகாட்டி. அவரது உடை தமிழகம் தந்த கொடை. அவரது ஆடை குறித்த சிந்தனை உருபெற்றது தமிழகத்தில்தான். மதுரை மண்ணில் நிகழ்ந்த மாற்றம் அது. அதன் பின் அவர் இடுப்புக்கு ஒரு வேட்டியும், தோளுக்கு ஒரு வேட்டியுமாக அணிய ஆரம்பிக்கிறார். கோவணம் கட்டிய ஒரு தமிழக விவசாயி அவரது ஆடை குறித்த சிந்தனையைக் கலைத்துப் போடுகிறார். அடிப்படையான சிந்தனைளுக்கான தோற்றம் தமிழ் மண்ணில் நிகழ்கிறது என்பதற்கு அது சான்று. காந்தியடிகளின் சிந்தனை மாற்றம் உடை மாற்றமாக நிகழ்கிறது. அதற்குப் பின் காந்தியடிகள் தன் உடையை மாற்றிக் கொள்ளவில்லை. நமக்குக் கிடைக்கும் புகைப்படங்களில் எல்லாம் காந்தியடிகள் அந்த உடையைத்தான் அணிந்திருக்கிறார். அதே உடையோடு அவர் இங்கிலாந்துக்கும் செல்கிறார். தன் ஆடைத் தன்மையை மாற்றிக் கொள்ளவில்லை. வின்சென்ட் சர்ச்சில் அவர் அடை நிர்வாண பக்கிரி என்ற போதும் அவரது ஆடை அதுதான். மகாத்மா என்று பலர் போற்றிய போதும் அவரது ஆடை அவர்தான்.
            ஒரு சிறுவன் காந்தியடிகளைப் பார்த்துக் கேட்கிறான். நீங்கள் ஏன் இடுப்பு வேட்டி மட்டும் அணிகிறீர்கள்? மேலுக்கும் ஆடை அணியலாமே! நான் வாங்கித் தரவா என்று. அதற்கு காந்தியடிகளின் பதில் கவனிக்கத்தக்கது. இந்தியாவில் இருக்கும் அத்தனை கோடி மக்களுக்கும் மேலுக்கு ஆடையைத் தர உன்னால் முடியுமானால் நீ எனக்கும் தரலாம் என்று அந்தச் சிறுவனிடம் சொல்கிறார் காந்தியடிகள். ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சிந்தனை அது. எல்லாரும் எல்லாமும் பெற்ற பிறகு அதை ஒரு தலைவர் அனுபவிப்பது சரியாக இருக்கும் அவரது சிந்தனை. இன்றைய சூழ்நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போதும் ஒரு தலைவர்க்கான சிந்தனை அதுதாம். தலைவர் சுருட்டியது போக எஞ்சியதே பிறர்க்கு என்பது போல இன்றைய சிந்தனை இருக்கிறது, இருக்கலாம். எல்லாரும் எல்லாம் பெற்ற பிறகு ஏற்பதே காந்திய சிந்தனை. இதுதான் தலைவர் காண வேண்டிய சமத்துவம், சமதர்மம், பொதுவுடைமை எல்லாம். ஏன் காந்திய சிந்தனையைின் தாக்கம் இன்றளவும் பேசப்படுகிறது என்றால் அதற்கான காரணம் இதுவாகத்தான் இருக்கும்.
            சொத்துகளைச் சேர்த்து வைக்கும் தலைவர்கள் அவர்களின் காலத்துக்குப் பின்பு மறக்கப்படுகிறார்கள். காந்தியடிகள் 150 ஆண்டுகாலம் - ஒன்றரை நூற்றாண்டுக் காலம் கடந்த பிறகும் ஏன் நினைக்கப்படுகிறார் என்றால் அவர் எந்தச் சொத்தையும் சேர்த்து வைக்கவில்லை என்பதால்தான். அவர் தன் பிள்ளைகளுக்கு எந்தச் சொத்தையும் சேர்த்து வைக்கவில்லை. தன் பிள்ளைகளுக்கு எந்தப் பதவியையும் வாங்கித் தர வில்லை. அப்படிப் பிள்ளைகளுக்குச் சொத்து தேவை என்றால் அதை அவர்களாகவே ‍தேடிக் கொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவர்களுக்குப் பதவிகள் தேவையென்றாலும் அதையும் அவர்களாகத்தான் தேடிக் கொள்ள வேண்டும் என்பதிலும் அவர் மிக மிக உறுதியாக இருந்தார். தலைவர்கள் பெற்றோர்களாக இருந்தாலும், தலைவர்கள் அல்லாதவர்கள் பெற்றோர்களாக இருந்தாலும் அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சரியான சிந்தனையை இதன் வழி அவர் சொல்கிறார்.
            ஒரு தலைவர் அல்லது ஒரு தனிமனிதர் என்று எப்படிப் பார்த்தாலும் இரண்டிலும் இருவேறாக பிரிக்க முடியாத முகம் காந்தியடிகளினுடையது. தலைவர்க்கு என்று ஒரு தனிப்பட்ட முகம், தனிநபர்க்கு என்று ஒரு தனிப்பட்ட முகம் அவரிம் கிடையாது. அவரிடம் இருந்தது ஒரே முகம். அதுதான் காந்தி என்ற தலைவரின் முகமும், காந்தி என்ற தனி நபரின் முகம். ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு காந்தியடிகளைப் பார்க்க வேண்டும். இந்தியா முழுவதும் அவரது காலடித் தடங்கள் படாத இடங்கள் கிடையாது. தொடர்வண்டி மூலமாக மூன்றாம் வகுப்பில் அவர் பிரயாணம் செய்து கொண்டே இருக்கிறார். ஓய்வு ஒழிச்சலற்ற பயணங்கள் அவர் இருந்து கொண்டே இருக்கிறார். இது ஒரு தலைவருக்குத் தவிர்க்க முடியாதது என்று நீங்கள் சொல்லாம். காணொலிக் காட்சி மூலம் சந்திக்கக் கூடிய இன்றைய சூழ்நிலையில் காந்தியடிகள் இருந்தாலும் அவர் அதையேத்தான் செய்திருப்பார். அவருக்கு மக்களைச் சந்திப்பது அவ்வளவு பிடித்தமானதாக இருந்தது. அவ்வளவு பயணங்களுக்கு மத்தியிலும் அவர் தன் உடலைச் சரியாக ஓம்பியிருக்கிறார் என்பது அதில் கவனிக்க வேண்டிய அம்சம். நோய் தனது பணிகளைப் பாதித்து விடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்திருக்கிறார்.
            பாரதியார் சொல்வாரே நரைகூடி கிழ பருவம் எய்தி கொடும் கூற்றுக்கு அவர் மாளவில்லை. வயதோ, நோயோ அவரை எதுவும் செய்ய முடியவில்லை. வயதுக்கும் நோய்க்கும் அது தெரிந்தே இருந்தது அவரை எதுவும் செய்ய முடியாது என்று. இது ஒரு துப்பாக்கிக் குண்டுக்குத் தெரியாமல் போனதுதான் ஆச்சரியம். அந்தத் துப்பாக்கிக் குண்டால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதைத்தான் இந்த நாளின் மூலம் காலம் நிரூபிக்கிறது. இன்று காந்தியை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறோம். இந்தியாவுக்கு மட்டும் இல்லாமல் உலகுக்கே தேவை காந்திய சிந்தனைகள்தான் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
            உலக அளவில் அவரது சிந்தனைகள் பெருத்த மாற்றத்தை விளைவித்திருக்கிறது. அமெரிக்காவின் மார்டின் லூதர் கிங் ஜூனியர் அவரது சிந்தனைகளைத் தன் போராட்ட களத்தின் ஆயுதமாகக் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார். தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா இனவெறிக்கு எதிரான போரில் காந்திய சிந்தனைகளின் துணையோடு வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார். உலகெங்கும் இருக்கும் பல தலைவர்களின் ஆயுதமாக காந்திய சிந்தனை மாறிக் கொண்டு இருக்கிறது. அமெரிக்காவின் அதிபராக, உலகின் நாட்டாமைக்காரராக இருந்த பராக் ஒபாமா அவரது சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டிருப்பதைப் பதிவு செய்திருக்கிறார். தான் ஒரு காந்தியவாதியாக இருக்க விரும்புவதை ஒப்புக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு ஓர் உண்மை தெரியுமா? உலகமே அமெரிக்காவைப் பார்க்கலாம். அமெரிக்கா இந்தியாவைத்தான் பார்க்கிறது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிக காந்திய சிலைகள் அமெரிக்காவில்தான் இருக்கிறது. இன்னும் சில வருடங்களில் அந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். ஆக இந்தியாவை விட காந்தியடிகளை அதிகம் பார்க்க அமெரிக்கா விரும்புகிறது. நமக்குக் கூட ஒரு மோசம் இருக்கிறதே. அமெரிக்கா எதைப் பார்க்கிறதோ அதைத்தாம் நாம் பார்க்க வேண்டும் என்று. அமெரிக்கா இன்று காந்தியடிகளைப் பார்க்கிறது.  நாம் எதைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.
            காந்தியடிகளின் வாசிப்பையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. டால்ஸ்டாய், ரஸ்கின் என்று அவர் வாசித்துக் கொண்டே இருந்தார். வாழ்நாள் முழுவதும் எழுதிக் கொண்டே இருந்தார். இரண்டு கண்களால் வாசித்ததைப் போல இரண்டு கைகளாலும் எழுதிக் கொண்டே இருந்தார். கல்விக் குறித்த சிந்தனைகளில் உடல், உள்ள, ஆன்ம வளர்ச்சியை அவர் அதிகம் வலியுறுத்துகிறார். உடல் வளர்ச்சி அம்மனிதருக்கானது என்றால், உள்ள வளர்ச்சி சமூகத்துக்கானதாக, ஆன்ம வளர்ச்சி உண்மைக்கானதாக, இந்த உலககுக்கானதாக அவர் பார்க்கிறார்.
            தனித்தப் பார்வை அல்லாத ஒருமைப்பட்ட பார்வை அவரிடம் இருந்தது.
            கிராமம் - நகரம் என்ற வேறுபாடு வரும் போது அவர் அதிகம் கிராமத்தையே முன் நிறுத்துகிறார். கிராமத் தன்னிறைவு அவரது கனவாக இருக்கிறது. கிராமங்கள் நகரங்களாக ஆக வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. நகரங்கள் கிராமங்களாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஒரு வேடிக்கைக்குச் சொல்வதென்றால் இன்று நாம் உலகை உலக நகரம் என்று சொல்லாமல், உலகக் கிராமம் - குளோபல் வில்லேஜ் என்றுதானே சொல்கிறோம் என்பதைக் குறிப்பிடலாம் என்று கருதுகிறேன்.
            ஆண் - பெண் என்ற பாகுபாடு வரும் போது அவர் அதிகம் பெண்களின் பக்கமே முன்நிற்கிறார். ஆண் - பெண் என்ற பாகுபாட்டையே அவர் ஒருமைப்பட்ட பார்வையாகத்தான் பார்க்கிறார். காந்தியடிகள் சொல்கிறார் - பெண்ணின் அழகை மட்டும் பகுதியாகப் பார்க்காதே என்று. பெண்ணை பிரபஞ்சத்துடன் இணைந்த சக்தியாகப் பார் என்று. அவர் தன் துணை கஸ்தூரி பாயை அப்படித்தான் பார்க்கிறார். அவரது தாயார் புத்திபாலி பாய்க்கு மிகச் சிறந்த சேவகனாக இருக்கிறார். பெண்களைப் போற்றுகிறார். போராட்டத்தில் பெண்களும் அவருக்குத் துணையாக நிற்கிறார்கள். தமிழகத்தில் கடலூர் அஞ்சலையம்மாள் அவரை பர்தா வேடமணிந்து குதிரை வண்டியில் அழைத்துச் செல்கிறார். ஆங்கிலேய அரசு அஞ்சலையம்மாள் காந்தியடிகளைச் சந்திக்கக் கூடாது என்று தடை விதித்திருந்த நிலையில் அவர் செய்த காரியம் அது. பெண்களுக்கான வீரத்தை அவர் தந்திருக்கிறார். கடலூர் அஞ்சலையம்மாள், தில்லையாடி வள்ளியம்மை என்று தமிழகப் பெண்களும் போராட்டத்திற்குத் தேவையான வீரத்தைக் காந்தியடிகளுக்குத் தந்திருக்கிறார்கள் என்று நாம் பெருமையோடு சொல்லலாம்.
            உலகம் எதிர்ப்பு என்றால் யுத்தத்தை முன் வைக்கிறது. காந்தியடிகள் ஆங்கிலேய எதிர்ப்புக்காக யுத்தத்தை முன் வைக்கவில்லை. அதை விட வலிமையான - யுத்தத்தை விட வலிமையான போராட்டத்தை முன் வைக்கிறார். ஒரு புதுமையான யுத்த வியூகத்தை முதல் புரட்சியாளாராக, ஒரு மிகப்பெரும் கலகக்காரராக முன்நின்று காந்தியடிகள் முன் வைக்கிறார். அவர் முன் வைத்த யுத்தம் வியூகம் என்பது யாராலும் வெல்ல முடியாத வியூகம். சர்ச்சில் சொல்கிறார், காந்தியடிகள் கத்தியைத் தூக்கியிருந்தார் துப்பாக்கியைத் தூக்கியிருப்பேன் - அவர் துப்பாக்கியைத் தூக்கியிருந்தால் பீரங்கியைத் தூக்கியிருப்பேன் - அவர் ஒருவேளை பீரங்கியையும் தூக்கியிருந்தால் அதை விட வலிமையான ஆயுதத்தைத் தூக்கியிருப்னே் - அவர் தூக்கியது அகிம்சை எனும் ஆயுதம். அந்த ஆயுதத்துக்கு நிகரான ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று.
            கத்தியில்லாத, ரத்தமில்லாத ஒரு யுத்தம். இரண்டு பக்கமும் வெற்றியைத் தரக் கூடிய யுத்தம். அந்த யுத்தத்தின் முடிவில் வெற்றிக்கான களிப்பு இந்தியர்களுக்கும் இருக்கிறது. அந்த யுத்தத்திற்கான நியாயமான வெற்றியைத் தர வேண்டும் என்ற உணர்வு ஆங்கியேலருக்கும் இருக்கிறது. எதிராளிகள் இரண்டு பேருக்கும் எவ்வித மனக்கசப்புமின்றி முடிந்த உலகின் முதல் யுத்தம். அதுவரை இரண்டு உலகப்போர்களைப் பார்த்திருந்த, இரண்டு உலகப் போர்களிலும் எவ்வளவோ உயிர்களைப் பலி கொடுத்திருந்த உலகத்துக்கு இந்த போர் முறை - யுத்த வியூக முறை அதிசயமாக ஆச்சரியமாகப் படுகிறது. காந்தியடிகள் அன்று கண்ட இப்போர் முறை இன்று உலகின் முறையாக மாறியிருக்கிறது. உலகுக்கான ஓர் இந்திய சிந்தனைச் சீதனம் காந்தியடிகள் மூலமாக சென்றிருக்கிறது.
            அவரது போராட்ட அணுகுமுறையில் அதாவது யுத்த அணுகுமுறையில் யாரையும் உதாசீனப்படுத்தாத, எல்லாரையும் இணைத்துக் கொள்ளும் சூட்சமம் இருக்கிறது. அவரது சிந்தனையின் அடிப்படையும், போராட்டத்தின் வெற்றியும் அதுதான். அந்த வகையில் இந்த நூற்றாண்டுக்கும், எந்த நூற்றாண்டுக்கும் தேவையான கருப்பொருள்கள் காந்திய சிந்தனையில் இருக்கின்றன.
            கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் கொண்டு வந்தவர் என்று நாமக்கல் கவிஞர் காந்தியடிகளைப் போற்றிப் பரவுகிறார்.
            வாழ்விக்க வந்த மகான் என்று பாரதியார் காந்தியடிகளைக் கொண்டாடுகிறார். தமிழகம் தன் பங்கைக் காந்தியடிகளின் சிந்தனைகளுக்கு மிகச் சரியாக செய்திருக்கிறது என்பதற்கு பாரதியும், நாமக்கல் கவிஞரும் தம் கவிதைகளால் நியாயம் செய்திருக்கிறார்கள். தமிழகம் செய்ததை உலகமும் செய்ய வேண்டும்.
            காந்தியடிகளின் வாழ்வும் சிந்தனையும் தமிழ்ச் சிந்தனையிலிருந்து புறப்பட்டதுதான். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ்ச் சிந்தனை மரபு தோன்றிய மண்ணில் பிறந்த திருக்குறளின் சிந்தனை மரபின் பிரதிபலிப்புதான் காந்தியடிகள். திருக்குறளின் 1330 குறட்பாக்களில் அருமையான ஒரு குறட்பாவுக்கு அவர் வாழ்க்கையும், சிந்தனையும் சான்றாகிறது.
            உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
            உள்ளத்துள் எல்லாம் உளன்.
காந்தியடிகளின் பார்வையில் திருக்குறளை அறியாதவர் தமிழரில்லை. தமிழரின் பார்வையில் காந்தியடிகளை அறியாதவர் மனிதரே இல்லை. ஐன்ஸ்டீன் சொல்கிறார், இப்படி ஒரு மனிதர் ரத்தமும், சதையுமாக நடமாடினார் என்பதை வருங்கால தலைமுறை நம்ப மறுக்கும் என்று. அதை அதற்கு முன்பே தமிழர்கள் சொல்லி விட்டார்கள்,
            நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
            வித்தகர்க்கு அல்லால் அரிது
என்று.
            காந்தியடிகளுக்கு ஆகச் சிறந்த நன்றியை, அஞ்சலியை அவரது சிந்தனைகளை விரிவுபடுத்துவன் மூலம் செய்ய இயலும். அதற்கான முன்னெடுப்பில் முக்கியமான பங்கை இந்த அரங்கத்தில் காந்தியச் சிந்தனைகளை முன்னெடுத்ததன் மூலம் நாம் செய்திருக்கிறோம் என்று நம்புகிறேன்.
(02.10.2019 அன்று திரூவாரூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற மாவட்ட பேரவைக் கூட்டத்தில் கட்டுரையாற்றியதன் வடிவம்)
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...