3 Oct 2019

ஒரு வீட்டுக்காரங்க பேசிக்க மாட்டாங்க!



செய்யு - 226
            "இப்ப இனுமே ஒண்ணும் பேச வாணாம். நீங்க திருவாரூக்குக் கெளம்புங்க! டாக்கடர்ர போயி மொதல்ல பார்ப்பேம்!"ங்றார் விநாயகம் வாத்தியார் சுப்பு வாத்தியார்கிட்டே.
            "நானும் வர்றேங்கய்யா!" அப்பிடிங்றான் விகடு.
            "அவ்வேம் வரக் கூடாது. அவ்வேம் வந்தான்னா நாம்ம வர மாட்டேம்!" அப்பிடின்னு முரண்டு பிடிக்கிறாரு சுப்பு வாத்தியார்.
            "விகடா நீயி வீட்டுல இரு. நாம்ம பாத்துக்கிறேம். ஒண்ணும் மனசுல வெச்சுக்காதே. சொல்றதக் கேளு! மொதல்ல வாத்தியார்ர கொணம் பண்ணுவேம். பெறவு பேசிக்கலாம் எதா இருந்தாலும்." அப்பிடிங்றார் விநாயகம் வாத்தியார்.
            சுப்பு வாத்தியார் விகடுவை முறைத்த படி அவ்வளவு காய்ச்சலிலும் உடம்பை விறைத்துக் கொண்டு நடந்து போயி விநாயகம் வாத்தியாரின் வண்டிக்குப் பக்கத்தில் போயி நிக்குறார்.
            விநாயகம் வாத்தியார் தலையை ரண்டு முறைக்கு மேல தலைய கீழே குனிஞ்சபடி அமைதியா இருக்கும்படி சைகையைக் கொடுத்து விட்டு வண்டியை எடுத்து ஸ்டார்ட் பண்றார். சுப்பு வாத்தியார் என்னவோ ரதத்துல கம்பீரமா ஏறி உட்கார்றது போல ஏறி உட்கார்றார்.
            விகடு வெளியே வந்து பார்க்குறான். வண்டிக் கிளம்பிப் போவுது. சுப்பு வாத்தியார் மூஞ்சியைத் திருப்பிக்கிறார். அந்த வண்டி கண்ணிலேந்து போயி மறையும் வரை பார்த்துகிட்டு நிக்குறாங் ...
*****
            ... வண்டி கொஞ்சம் வேகம் எடுக்குது.
            அப்போ வீசுற குளுந்த காத்த தாங்கிக்க முடியல சுப்பு வாத்தியாரால. ஒடம்பு லேசா நடுங்குது.
            "வாத்தியாரே! அவனுக்கு எப்பிடியும் ஒரு வருஷத்துல இல்ல ரண்டு வருஷத்துல வேலைக் கெடைச்சிடும். நெறைய பேரு வாத்தியாரு வேலையிலேந்து ரிட்டையர்டு ஆயிட்டு இருக்காங்க. வீ.ஆர்.எஸ். வேற நெறைய பேரு கொடுத்துட்டு இருக்காங்க. அதால வாத்தியாரு வேலையில நெறைய ஆளுங்க தேவைப்படும். எப்படியும் அவ்வேம் வேலைக்கிப் போயிடுவாம். அப்படி வேலைக் கெடைச்சிடுச்சுன்னா இத்தே விட்டுடுவாம். இப்போ அவ்வேம் நிக்குற நெலையைப் பார்த்தா அவனுக்கு இந்த வேலைப் பிடிச்சிருக்குப் போலருக்கு. நீங்க கடன்ல கஷ்டப்பட்டு நிக்குறதப் பார்த்து நெறயா சம்பாதிக்கணும்னு நெனைக்கிறாம். சின்னப் பயதான்னே. நீங்க ன்னம்மோ நம்மள ஒரு கேள்வி கேட்டுபுட்டாங்றதுக்காக இப்படிப் பாயுறீங்களே? அவ்வேம் எனக்கும் புள்ள மாதிரிதாம். அவ்வேம் போக்குல போகட்டும். அவனெ நல்லபடியா வாத்தியாரு வேலயில கொண்டாந்து வைக்கிறது நம்ம கடமெ. அத நாம்ம பாத்துக்கிறேம். நீஞ்ஞ கொஞ்ச நாளைக்கு இந்த விசயத்தைக் கண்டுக்காதீங்க." அப்பிடிங்றார் விநாயகம் வாத்தியார் வண்டியில் போயிட்டு இருக்கும் போதே.
            "ஒங்கள அவ்வேம் அப்படிக் கேட்டிருக்கக் கூடாது வாத்தியாரே!" குரல் தழுதழுத்துச் சொல்றாரு சுப்பு வாத்தியாரு.
            "நாம்ம இன்னும் கொஞ்சம் பதமான அணுகியிருக்கணும். ரண்டு மூணு நாளு யோஜிச்சுத்தாம் பண்ணேம். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் பதனமா பண்ணிருக்கணும்!"
            "அவ்வேம் அந்த வேலைக்கிப் போறது நமக்குச் சுத்தமாவே பிடிக்கல. ஏம் நாம்ம நெனைச்சா வட்டிக்கு விட்டுச் சம்பாதிக்க முடியாதா? அந்த வாசாப்பல்லாம் வாணாம்னுதான்னே கஷ்டத்தோட கஷ்டமா இன்னும் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேம். அதெ ஏம் அந்தப் பயெ புரிஞ்சிக்க மாட்டேங்றாம்?"
            "கொஞ்ச நாளைக்குப் பொறுமையா இருங்க வாத்தியாரே! எதையும் யோஜனைப் பண்ணாதீங்க. எல்லாம் தன்னால சரியாவும். அவ்வேம் கெட்டவம் கெடையாது. நாம்ம ஒண்ணு கெடக்க ஒண்ணு பேசி கெட்டவனாக்கிடக் கூடாது!"
            "நாம்ம அடிக்கடிச் சொல்றதையே நமக்கே சொல்றீங்களே வாத்தியாரே!"
            "அதாங் காலங்றது! நாமளே ரண்டு வார்த்தை அதட்டிப் பேசுனா அடங்கிப் போற பயதாம். ரொம்ப நெரங்கிப் போயிடுவாம். அதால விட்டுட்டேம். சித்தே ஆறப் போடுங்க. தன்னால சரியாயிடும் எல்லாம்."
            "நம்மள ன்னத்தாம் பண்ணச் சொல்றீங்க?"
            "ஒண்ணும் பண்ண வாணாம்னு சொல்றேம். நீஞ்ஞ ரொம்ப கஷ்டப்படுறதா அவ்வேம் நெனைக்கிறாம். அவ்வேம் இந்த வேலைப் பார்த்தா பல பேரோட வாசாப்பை வாங்கிப் பின்னாடிக் கஷ்டப்படுவாம்னு நீங்க நெனைக்குறீங்க. அதாங் இஞ்ஞ பெரச்சனை. எல்லாத்தயும் யோஜனைப் பண்ணிப் பாக்கற பயதாம் அவ்வேம். சரியாயிடுவாம். இந்த வயசுல நீஞ்ஞ எதிர்பார்க்குற அளவுக்கு அவனுக்குப் புரியாது. பொறுத்துக்க வேணும்."
            "அவ்வேன வேலைக்குப் போவலாம்ங்றீங்களா?"
            "போவட்டும். போவ விட்டு நிப்பாட்டுவேம்! பொறுங்க. அவசரப்பட்டா காரியம் ஆவாது. நம்மகிட்ட படிச்சப் பயதானே. எப்பிடி அவனுக்குக் கிடுக்கிப்பிடி போடணுங்றது நமக்குத் தெரியும்! போட வேண்டிய நேரத்துல, போட வேண்டிய எடத்துல போடுறேம். பய அப்பதாம் வசமா மாட்டிப்பாம்!" அப்பிடிங்றார் விநாயகம் வாத்தியார்.
            விநாயகம் வாத்தியாரு யாருக்கும் உடம்பு சரியில்லைன்னாலும் வடக்குவீதி முக்குல இருக்குற ஸ்ரீதரன் டாக்கடருகிட்டதாம் அழச்சிட்டுப் போவாரு. இப்போ அவர்கிட்டதாம் சுப்பு வாத்தியாரையும் அழச்சிட்டுப் போறாரு. அவரு சுப்பு வாத்தியார நல்லா பார்த்துப்புட்டு ஊசி போட்டு மருந்து மாத்திரை கொடுக்காட்டியும் காய்ச்சலு நின்னுடும் அப்பிடிங்றாரு.
            "வந்ததுக்கு ஒரு ஊசிய குத்தி விட்டீங்கன்னா திருப்தியா போவேம்!" அப்பிடிங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "நாளைக்கு நிக்கப் போற காய்ச்சல்ல இன்னிக்கே நிறுத்தணும்ங்றீங்க!" அப்பிடின்னு சொல்லிட்டே ஊசியக் குத்தி, மாத்திரை மருந்தெல்லாம் வாங்க வாணாம்னு சொல்லி டேபிள்ல கெடக்குற மாத்திரைகளில்லேந்து ரண்டு மூணை எடுத்துக் போட்டு இதை வேளைக்கு ஒண்ணு போடுங்கன்னு கொடுத்து அனுப்புறார்.
            விநாயகம் வாத்தியார் சுப்பு வாத்தியாரை வீட்டுக்கு கொண்டாந்து விட்டுட்டு, சுப்பு வாத்தியாரு மேல கைய வெச்சிப் பார்த்தா காய்ச்சல் போன இடம் தெரியல. அவரு சுப்பு வாத்தியார கூடத்துல படுக்க வெச்சிட்டு...
*****
            ... கூடத்துல உட்கார்ந்திருந்த விகடுவைத் தனியா கெளப்பிகிட்டு மாடிக்குப் போறார்.
            "யப்பாடி வெகடு! நாம்ம ஒங்கிட்ட தனியா பேசிருக்கணும். தப்பாப் போச்சி! எதயும் மனசுல வெச்சுக்காதே!" அப்பிடிங்றார்.
            விகடு பய ஒண்ணும் பேசாம அப்படியே நிக்குறான்.
            "நாம்ம அப்பாட்ட பேசிட்டேம். நீயி வேலைக்குப் போவலாம். ஒண்ணும் பெரச்சனையில்ல. ஒரு விசயத்தப் புரிஞ்சுக்க. இந்த ஒங்க அப்பாவுக்குப் பிடிக்கல. வேற வேல மாத்திக்க முடியுமான்னு பாரு. ஒனக்கு எப்படியும் வாத்தியாரு வேல கிடைச்சிடும். அதால இப்போ வேலைக்குப் போவணும்னு கூட அவசியமில்ல. நாங்க கட்டாயம் பண்றதா நெனச்சிக்காத. ஒம் விருப்பம்தாம்!" அப்பிடிங்றார் விநாயகம் வாத்தியார்.
            "அய்யா! மன்னிச்சுகுங்க. அதிகமா பேசிட்டேன்னு நினைக்கிறேன். தப்பாயிடுச்சு. எனக்குப் புரியுதுங்கய்யா!" அப்பிடிங்றான் விகடு.
            "எந்த முடிவா இருந்தாலும் அது ஒம் முடிவாவே இருக்கட்டும். நாளைக்கு விநாயகம் வாத்தின்னு ஒருத்தம் வந்தாம். நல்லா பாத்துட்டு இருந்த வேலய பாக்க வுடாம பண்ணிப்புட்டாம், அப்பிடின்னு இருக்கக் கூடாது பாரு. நாம்ம ஒம்ம நல்லதுக்குத்தாம் சொல்லுவேம்!" அப்பிடிங்றார் விநாயகம் வாத்தியார்.
            விநாயகம் வாத்தியார் நல்லதுக்குத்தான் சொல்றார் என்பது விகடுவுக்குப் புரியுது. சினிமாவுக்குப் பாட்டெழுதுறேன்னு மெட்ராஸூக்குப் போயிட்டு வந்து வீட்டுல கிடந்தவனை அவர்தான் கொண்டு போய் டீச்சர் டிரெயினிங்குல சேர்த்து விட்டவரு. திருவாரூரு மாவட்டம் பிரிச்சி ரொம்ப வருஷத்துக்கு இந்த மாவட்டத்துக்குன்னு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உருவாக்கப்படாம இருந்துச்சு. அது ஆரம்பிச்ச ரண்டாவது வருஷத்துல விகடுவுக்காகப் போயி அங்க விண்ணப்பம் வாங்கி வந்து அதை நிரப்பிக் கொடுத்து, அங்கப் படிக்கிறதுக்கு அவனைக் கொண்டு போயி விட்டுட்டு வந்ததே அவருதாம். சுப்பு வாத்தியாரு கூட மாட துணைக்கப் போனதோட சரி. அதையெல்லாம் இப்ப நினைச்சுப் பார்க்கிறப்போ அவனுக்கு இப்போ கண்ணு கலங்குது. ஏதோ தப்பு பண்ணிட்டது போல மனசு ரொம்ப உறுத்துது.
            இந்த வேலைக்குப் போவாம இருந்தாத்தான் என்ன? அப்பிடின்னு யோஜிக்கிறான் விகடு. போனாதான் என்ன? அப்படின்னும் யோஜிக்கிறான். ரெண்டு பக்கமும் இப்படியும் அப்படியுமா யோஜிச்சு மறுநாள் காலையில வேலைக்குக் கிளம்புறான் விகடு.
            அன்னியிலேர்ந்து மவனோட பேசுறதை விட்டுட்டார் சுப்பு வாத்தியார். அவன் அப்பான்னு கூப்பிட்டாலும் அவரு திரும்பிப் பார்க்குறது கிடையாது. அவன் வாசல்ல நின்னான்னா, அவரு கொல்லையில நிப்பாரு. அவன் கொல்லையில நின்னான்னா, அவரு வாசல்ல போயி நிப்பாரு. அவன் சாப்பிடுற நேரத்துல அவரு சாப்பிட வர மாட்டாரு. அவன் வீட்டுக்குள்ள வந்தா அவரு வெளியில போயிடுவாரு. அவன் வெளியில போனாக்கா அவரு வீட்டுக்குள்ள வருவாரு. ஒரே வீட்டுக்குள்ள ரெண்டு பேரும் ரெண்டு துருவம் கணக்கா ஆனாங்க. ஒரு வீட்டுக்காரங்கத்தாம். அப்பனும் மவனும்தாம். ரண்டு பேருக்கும் பேச்சு வார்த்தை, ஒருத்தரை ஒருத்தரு பார்க்குறது கூட இல்லாம போயிடுச்சு.
            விகடு மாசச் சம்பளம் கொண்டாந்து கொடுத்தாலும் சுப்பு வாத்தியாரு அதைக் கையால தொட்டுப் பார்க்குறது கூட கெடையாது. வெங்குதான் ஓடி வந்து கையில எடுத்துகிட்டு, "மனசுல ஒண்ணும் வெச்சிக்காம போடாம்பீ! அந்த மனுஷன் அப்படித்தான்! கொஞ்ச நாள்ல எல்லாஞ் சரியாயிடும்!" அப்பிடிங்கும்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...