0.1
ஒரு நாவல் எழுத வேண்டும் என்பது நீண்ட
நாளைய பிரியம்.
கவிதை, சிறுகதை, பத்தி, கட்டுரை என்ற எழுதிப்
பார்க்கும் ஓர் எழுத்தாளரின் அடுத்தக்கட்ட விளையாட்டுத்தனம் அதுவாக அமைந்து விடுவது
ஒரு வகை இலக்கியக் கொடுமை.
அதுவும் நாவல் என்ற கட்டுக்குள் அடங்காமல்
ஒரு நாவல் எழுத நினைப்பது விபரீதம்.
ஒரு நாவலை ஓர் எழுத்தாளர் எழுதுகிறார்.
ஓர் எழுத்தாளரைப் பற்றிய நாவலை ஏன் எழுதக் கூடாது? இந்த எழுத்தாளர் என்பவர் அலுவலக
எழுத்தர் எனப்படும் எழுத்தாளராகக் கூட இருக்கலாம். அவர் எழுத்தாளர், இவர் எழுத்தர்
என்ற பேதம் இதில் வேண்டாம் என்று நினைக்கிறேன்.
www.vikatabharathi.blogspot.com என்ற
வலைப்பூவிலேயே நாவலைத் தொடராக எழுதி விடலாம் என்று நினைப்பு. இதனால் அச்சடிக்கும்
காகிதங்கள் மிச்சமாகும். காகிதங்களுக்காக மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படும். அவ்வகையில்
உலகின் முதல் சூழலியல் நாவல் என்று இது கொண்டாடப்படும் அபத்தம் நிகழினும் மகிழ்ச்சி.
கொண்டாட்டமே வாழ்க்கை.
வலைப்பூவில் எழுதி வலைப்பூவில் நிறைவு
பெறப் போவதால் அவ்வகையில் உலகில் எழுதப்பட்ட முதல் நாவல் என்ற சிறப்பு இந்நாவலுக்குக்
கிடைக்கக் கூடலாம். அதற்கு முன் இது நாவல் என அங்கீகரிக்கப்பட வேண்டும். குழந்தைப்
பிறந்தால் பெயர் வைத்தாக வேண்டும். இதற்கு ஏதோ ஒரு பெயர் இருந்து விட்டுப் போகட்டும்.
அல்லது இல்லாமல் போகட்டும்.
இப்படியே பேசிக் கொண்டு நாம் நாவலின்
முதல் அத்தியாயத்தைத் தொடங்கி விட்டோம். இந்த நாவலை இந்த அளவில் நிறுத்திக் கொண்டாலும்
அதுவும் ஒரு நாவல்தான். அது எப்படி பத்து வரிகளில் நிறுத்துவது ஒரு நாவலாகும்? இந்த
வலைப்பூவின் பதிவுகளை எடுத்துக் கொண்டு குருட்டாம் போக்கில் உங்களுக்குத் தோன்றியபடி
எண் வரிசை கொடுத்துக் கொண்டால் அதுவும் ஒரு நாவலே. நாவலுக்கான இலக்கணத்தைக் கட்டுடைக்கும்
முயற்சியோ?! யாருக்குத் தெரியும்.
பேராசிரியர் ஜே.பி. இந்த வலைப்பூவை நாட்குறிப்பு
என்பார். அடிப்படையில் நாட்குறிப்பு வேறு. நாவல் வேறு. நீங்கள் பெரிய மனது பண்ணினால்
இது நாட்குறிப்பு நாவல் என்றோ, நாவல் நாட்குறிப்போ என்றோ பெயர் சூட்டி விடலாம்.
பெயரின்று ஒரு நாவலை எப்படித் தொடங்குவது?
இந்த நாவலுக்கு ஒரு பெயர் வைத்தாக வேண்டும். இளைய தளபதி விஜய்யோ, அல்டிமேட் ஸ்டார்
அஜித்தோ தங்கள் படத்தை பெயர் வைத்தா தொடங்குகிறார்கள்? அது ஒரு பின்நவீனத்துவ பாணி.
விஜய் 64 என்றோ, அஜித் 65 என்றோதான் தொடங்குகிறார்கள். எண்கள் முக்கியம். இந்த நாவலுக்குப்
பெயர் ஓர் எண்ணாக இருக்கட்டும். ஏன் ஓர் எண்ணாக இருக்க வேண்டும். பல எண்களாக இருந்தால்
பன்மைத் தன்மை கிடைக்கலாம். ஒற்றை எண்ணாகப் போனால் ஒற்றைத் தன்மை உண்டாகி விடலாம்.
இந்த ஒற்றை எண் என்பது ஒற்றை எண், இரட்டை எண் அல்ல. அது ஓர் ஒற்றைத் தன்மையுள்ள ஒற்றை
எண்.
இன்றைக்கு இந்த நாவலின் பெயர் 0.1. நாளைக்குப்
பெயர் மாற்றி விடலாம். ஒவ்வொரு நாளும் நாவல் ஒவ்வொரு பெயரில் இயங்குவது அலாதியானது
அன்றோ! ஒரே பெயரால் இயங்குவதால் அன்றோ நாம் சலித்துப் போகிறோம். நாவலின் சலிப்பைப்
போக்க தினம் தினம் எண்களால் இந்நாவலுக்குப் பெயர் சூட்டுவோம்.
இந்த நாவலில் எண்களின் தலைப்போடு நீங்கள்
எதைப் பார்த்தாலும் அதை நீங்கள் நாவலாகக் கொள்ள வேண்டும். இந்த நாவலைப் படிப்பதற்கான
ஒரே ஒரு அடிப்படையாக நாம் அதை நிர்மாணித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
நாவல் என்று சொல்லி விட்டதால் இந்த நாவலை
நான் மட்டும் எழுதப் போவதில்லை. நீங்களும் எழுதப் போகிறீர்கள். நாம் கூட்டாகச் சேர்ந்து
எழுதப் போகிறோம். அந்த வகையில் உலகின் முதல் கூட்டு நாவல் என்றோ, கூட்டாஞ்சோறு
நாவல் என்றோ இது பெயர் பெறலாம். உலக வரலாற்றில் நமக்கு ஓர் இடம் இருக்கிறது. மறக்க
வேண்டாம்.
நாவல் என்ற உடன் நீங்கள் கதையை எதிர்பார்க்காதீர்கள்.
இது கதையில்லாத நாவல். நாவலுக்கு எதற்குக் கதை? கதையற்ற நாவலை நீங்கள் படிக்க வேண்டும்.
ஒரு நாவல் கதையற்ற தன்மையில்தான் அழகாக இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் அதை அனுபவித்துப்
பார்த்தால்தான் புரிந்து கொள்வீர்கள்.
இந்த நாவலில் அநேகப் பாத்திரங்கள் இருக்கின்றன.
உலகில் முதன் முதலாக www.vikatabharathi.blogspot.com என்ற இணையதள முகவரி ஒரு பாத்திரம்
ஆகப் போவது இந்த நாவலில்தான். படிக்கும் வாசகர்கள் பாத்திரம் ஆகப் போவதும் இந்த நாவலில்தான்.
எப்போதும் படிக்கும் வாசகர் நாவலின் வெளியே இருக்கிறார். எழுதுபவர் உள்ளே இருக்கிறார்.
என்ன ஒரு தீண்டாமை? இது என்ன கர்ப்பகிரகமா? இன்னார் வரலாம், இன்னார் வரக் கூடாது என்று
சொல்ல.
இங்கு எல்லாரும் சமம். வாசிப்பவருக்கும்
நாவலின் பாத்திரமாகும் சமத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே சோதனை முயற்சியாக
இந்நாவல் படைக்கப்படுகிறது. இதன் மூலம் எழுத்தாளர் - வாசகர் என்ற சொல்லாடல் ஒழியுமானால்
இந்த நாவலை எழுதியதில், மன்னிக்கவும் இந்த நாவலை வாசித்ததில் - எழுத்தாளர் வாசகர் என்ற
வேறுபாடு ஒழிந்த நிலையில் பிறகென்ன எழுதுவது
வாசிப்பது - அந்த பாகுபாடு மறைந்ததில் மகிழ்வேன். பார்க்கலாம் என்ன நடக்கிறது
என்று.
இந்த நாவல் இப்படி இருக்கும் என்ற எதிர்பார்த்தால்
தொலைந்தீர்கள். இந்த நாவல் எப்படி வேண்டுமானாலும் இருக்காலம். நாவல் என்ற சொல்லின்
பொருளே அதுதான். புதுமை. அந்தப் புதுமைக்காக நாம் எந்த எல்லை வரைக்கும் இறங்கத் தயார்.
நமது நாவலில் காலம் ஒரு பொருட்டல்ல. நடைமுறை
வாழ்க்கையில் காலம் வரிசைப்படுத்திக் கொடுமைப்படுத்துகிறது. குழந்தைப் பருவத்திலிருந்து
வாலிப பருவத்துக்கு வந்து முதுமைப் பருவத்தை நோக்கி வரிசையில் நிறுத்தி, சீனியாரிட்டி,
பதவி மூப்பு என்றெல்லாம் சொல்வார்களே அப்படி வைத்துச் செய்கிறது. ஏன் முதுமைப் பருவத்தை
முதலில் அனுபவித்து விட்டு, குழந்தைப் பருவத்தை அடுத்து முடித்துக் கொண்டு, வாலிபப்
பருவத்தைக் கடைசியாக வைத்துக் கொண்டால் என்ன? காலம் அதற்கு ஒத்துக் கொள்ளாது. அது
ஒரு சட்ட நிபுணர் போல் சட்டம் பேசும். அதோடு பேசி மல்லுக்கட்டி ஆகாது. அதனோடு பேசி
நமக்கென்ன?
நாம் காலத்தைப் பழி வாங்குவோம். அதை பழிவாங்கித்தான்
ஆக வேண்டும். அதைக் கலைத்துப் போட்டு முன்னர், பின்னர் என்று வாழ்வோம் Sorry வாசிப்போம்.
இந்த காலமற்ற நாவலை வாசிக்க / படைக்கப்
புகுந்திருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.
காலத்தைக் கட்டுடைக்கும் அதள பாதாளத்தில்
வீழ்த்தும் ஒரு மோசமான புதைக்குழிக்குள் உங்களை வரவேற்பதில் பெருமைபடுகிறேன். வாருங்கள்
இருட்டுப் பிரதேசத்தில் பிரவேசிப்போம்.
நாம் நாவலைத் துவங்கி விட்டோம்.
*****
No comments:
Post a Comment