7 Oct 2019

பையன் பார்த்த பொண்ணு!



செய்யு - 230
            சிப்பூரு பெரியப்பா சொன்னதன் பேர்ல வீயெம் மாமா அம்மாபட்டினம் போயி வருது. அங்க ஒரு பொண்ணு. பார்க்க தாட்டிகமா அப்படியே வீயெம் மாமாவ கொழந்தையப் போல இடுப்புல தூக்கி வெச்சுக்குற கணக்கா.
            பொதுவா பொண்ணு பாக்குற சம்பவம் ஒரு வைபவம் மாதிரி. சொந்தக்கார சனங்கள கட்டிகிட்டுக் கொண்டு போயி பொண்ண பாத்துட்டு வரது ஒரு நடமுறைன்னு வெச்சிக்கலாம். அதுக்குப் பிற்பாடு மாப்பிள்ள பையன அழச்சிட்டுப் போயி பொண்ண காட்டுவாங்க. பையனுக்கும் பிடிச்சிருந்தா கல்யாணம். பொதுவா சொந்தக்கார சனங்க பாத்து அதுங்களுக்குப் பிடிச்சிருந்ததாம் மாப்பிள்ள பையன கொண்டுட்டுப் போவாங்க. இல்லாட்டியும் இல்ல. அப்படிக் கொண்ட்டுட்டு போறப்பவே பொண்ண பத்தி அப்படியும், இப்படியுமா சொல்லி, பொண்ணு ரம்பையாக்கும், ஊர்வசியாக்கும், ஸ்ரீதேவியாக்கும்னு கதையளந்து போற வழியில மாப்பிள்ள பையனுக்குப் பொண்ண பிடிக்க வெச்சிருவாங்க. அதால போற வழியில பொண்ண பாக்குறதுக்கு முன்னாடியே மாப்பிள்ள பையன் பொண்ண பிடிச்சிருக்குன்னு சொன்ன கதையெல்லாம் நடந்திருக்கு.
            சமயத்துல இதைத் தாண்டிப் பொண்ண பாத்துட்டு மாப்பிள்ள பையன் பொண்ண பிடிக்கலேன்னு சொன்னாக்கா போதும், "இதெ விடவா ஒனக்குப் பொண்ணு கெடச்சிடப் போவுது ஒம் மூஞ்சிக்கு? இதெ வுட்டின்னாக்கா ஒனக்கு ஆயிரம் பொண்ணு பாத்தாலும் அமையாது, ஆயுசுக்கும் கல்யாணம் ஆவாது பாத்துக்கோ. சாதகம் ந்நல்லா பொருந்தி வருது. சொத்து பத்தும் ஒண்ணுக்குப் பத்தா இருக்கு. ஒத்தப் பொண்ணுடா. மச்சாங்காரனுங்க இருக்காங்க. மலையேணும்னாலும் மச்சான் தயவு தேவ இல்லியா. பொண்ணு ரொம்ப அழகா இருந்தாலும் சுத்திலும் உள்ள பயலெல்லாம் இவ்வே மேலத்தாம் ஒரு கண்ணா இருப்பானுங்க. இப்படி கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருந்தாத்தாம் நல்லது"ன்னு நம்ம சனங்க அப்பிடி இப்படின்னு கலந்து கட்டி அடிச்சி விடுவாங்க பாருங்க. அதுல மாப்பிள்ள பையன் கரெக்ட் ஆயி ஆப் ஆயிடுவான். கல்யாணத்துக்கு ஜூட் சொல்லிடுவான்.
            பொண்ணப் பத்தி ரம்பை, ஊர்வசி, ஸ்ரீதேவின்னு சொல்லி அழச்சிட்டு வந்து, இப்போ இங்க அழகு கொஞ்சம் முன்ன, பின்ன இருக்குறதுதாம் நல்லதுன்னு சொல்றீங்களேன்னு லாஜிக்கால்லாம் கேள்வி கேக்குற மனசு அப்போ இருக்காது. ஓகோ பொண்ணுன்னா இவங்க பாக்குற மாதிரிதாம் இருக்கணும் போலருக்குன்னு மாப்பிள்ள பையன் அவனா மனசுல ஒரு கற்பனையை உருவாக்கிகிட்டு அந்தப் பொண்ண தனக்குப் பிடிச்ச பொண்ண மனசுக்குள்ள உரு போட்டுக்குவான். அப்படி வீயெம் மாமாவ கருக்கங்குடி, ராதாநரசிம்மபுரம், கொள்ளிக்காடு, செந்தட்டியூர்ன்னு நாலஞ்சு ஊருக்கு பொண்ணு பார்க்க கொண்டு போயிப் பார்த்தாச்சி. சொல்ல வேண்டியதயும் சொந்தக்கார சனங்க பதமாவும் சொல்லிப் பார்த்தாச்சி, வெவகாரமாவும் சொல்லிப் பார்த்தாச்சி, அதட்டி உருட்டி மிரட்டியும் சொல்லிப் பார்த்தாச்சி. வீயெம் மாமா கேட்குறதா இல்ல.
            "நமக்கு இந்தப் பொண்ண பிடிக்கலேன்னா பிடிக்கலதாம்! ஒங்கள பாக்கச் சொன்னாக்கா இப்படித்தாம் பாப்பீங்க! பொண்ணா பாக்குறீங்க பொண்ணு வத்தலுக்கும், தொத்தலுக்கும், வாடுனதுக்கும், வதங்குனதுக்கும் பாக்குற மேரி. நாமளே பாத்துக்கிறேம் நமக்கான பொண்ணை!" அப்பிடின்னு கெளம்பிடுச்சு வீயெம் மாமா. அப்படிக் கெளம்புன வீயெம் மாமாவுக்கு அம்மாபட்டினம் பொண்ணப் பத்தி சிப்பூரு பெரியப்பா சொன்னது ரொம்பவே வசதியாப் போயிடுச்சி. இந்தச் சேதி சிப்பூரு பெரியப்பா மரச்சட்டம் வாங்குறதுக்காக இங்க வடவாதி வந்தப்போ காத்து வாக்குல எடுத்து விட்டது. அது இப்படி காத்துல தீப்பிடிச்ச மாதிரி ஆகும்னு சிப்பூரு பெரியப்பாவே எதிர்பார்த்திருக்காது.
            இப்படி வீயெம் மாமாவே சொன்னதுக்கு அப்புறம் இந்தச் சம்பவத்துல இனியும் எறங்கி சின்னாபின்ன பட்டு சித்திரவதைக்கு ஆகக்கூடாதுன்னு சனங்களும் ஒதுங்க ஆரம்பிச்சிடுச்சுங்க.
            இந்தச் சொந்தக்கார சனங்களையெல்லாம் பொண்ணு பாத்துட்டு வரச் சொல்லிப் பாத்துகிட்டு இருந்தா நாற்பது வயசுக்குள்ள கல்யாணம் பண்ண முடியாதுன்னு நெனச்சதோ என்னவோ வீயெம் மாமா. அதுவே இந்த வகையறாவின் வரலாற்றுல மொதல் முறையா பொண்ணப் பத்தின சேதி தெரிஞ்சதும் நேரடியா போயி பாத்து வந்துச்சு. வீயெம் மாமாவுக்கு அப்போ முப்பத்தைஞ்சோ, முப்பத்தாறோ வயசு நடந்துகிட்டு இருந்துச்சு. ஆகையால மாப்பிள்ள பையனே பொண்ணப் போயி பார்த்து அதுக்குப் பின்னாடி சொந்தக்கார சனங்கள கூட்டி வெச்சி எல்லாரும் போயிப் பார்க்குற மாதிரி நெலமை ஆகிப் போச்சு. அங்கப் போயி பார்த்தாக்க வீடு பெரிய கூரை வீடு. எடம் சொந்த இடம். அம்மாபட்டினம் டவுன்ல முக்கியமான எடந்தாம். வித்தாக்க லட்சக் கணக்குல வெல போகும்னு பேசிக்கிறாங்க. அந்த லட்சத்துலதாம் வீயெம் மாமா தடுமாறி விழுந்திருக்கணும். பொண்ண ஏன் வீயெம் மாமாவுக்குப் பிடிச்சிருக்குங்ற விசயம் அப்போத்தாம் வெளங்குது. பொண்ண பார்த்தாக்கா, மூணு பொண்ண ஒண்ணா பிடிச்சா வெச்சா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு பொண்ணு. பொண்ணுக்கு எட்டு வயசுல ஒரு தம்பி இருக்காம்.
            பொண்ணோட அம்மா ஒத்த ஆளா நாட்டாமை பண்ணிகிட்டு இருக்கு. நாட்டாமை தீர்ப்பை மாத்துன்னு ஒரு சனத்துக்கும் சொல்ல முடியாத அளவுக்கு அந்தம்மா அழிச்சாட்டியும் பண்ணுது. பொண்ணோட அப்பங்காரரு வெளிநாட்டுல இருக்காராம். கல்யாணம் நிச்சயம் ஆனா வெளிநாட்டுலேர்ந்து வருவாராம்.  இதையெல்லாம் கேட்டு, கேள்விப்பட்டு சொந்தக்கார சனங்க ஒண்ணுத்துக்கும் பொண்ணையோ, பொண்ணு வீட்டுக்காரங்களையோ சுத்தமா அறவே பிடிக்கல. பொண்ண பிடிக்கலன்னு சொல்லக் கூடாதுங்றதுக்காக வேணாங்றதை நாசுக்கா எல்லாரும் வீயெம் மாமாகிட்ட சொல்லிப் பாக்குறாங்க.
            கட்டுனா அந்தப் பொண்ணுதான்னு வீயெம் மாமா ஒத்தக் காலுல்ல நிக்குது. இன்னொரு காலால்ல பிடிக்கலேன்னு சொல்றவங்களையெல்லாம் எட்டி ஒதைச்சிடும் போலருக்கு. அதெ கருத்துல வெச்சிகிட்டு நமக்கு எதுக்குடா ஒதையும் வலியும்னு சொந்தக்கார சனங்க யோசன பண்ணிப் பார்த்துட்டு, எதையோ பண்ணித் தொலைன்னு விட்டுடுச்சுங்க.
            குமரு மாமாவுக்கும் வீயெம் மாமாவுக்குக் கல்யாணத்தப் பண்ணி விட்டுட்டு கெழவியை அதுகிட்ட தொலைச்சிக் கட்டிட்டா போதும்னு நெனச்சதால அதுவுங் கண்டுக்காம கல்யாணத்த போர்க்கால அடிப்படையில நடத்தி முடிக்கணும்னு காத்துகிட்டு இருந்துச்சு.
            மனசு ஒத்துப் போனதுக்குப் பெறவு கல்யாணத்துல வேற என்ன இருக்கு? பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் உருவப் பொருத்தம் இல்லாட்டியும் மனப்பொருந்தம் இருந்து ஒத்துப் போயிட்டா பெறவு என்ன வேண்டிக் கிடக்குன்னு சுப்பு வாத்தியாரும் மத்தவங்களும் நெனச்சாங்க. அத்தோட வர்ற பொண்ணு புருஷனையும், மாமியாரையும் நல்லா பாத்துகிட்டா போதும்னு எல்லாரும் நெனைச்சாங்க.
            சாமியாத்தாகிட்ட கேட்டதுக்கு, "கட்டிகிட்டு வாழப் போறவேம் அவம்தானே. அவனுக்குப் பிடிச்சிருந்தா கட்டி வெச்சிடுங்க! ஏத்தோ வர்றப் போற பொண்ணு நமக்கு ரண்டு வேள கஞ்சி ஊத்துனா போதும். அதுக்கு மேல வேற நாம்ம ன்னா நெனைக்கப் போறேம்! சீக்கிரமாவே கல்யாணத்த முடிச்சிப்புடுங்க. பெரியப் பய பெறவு மனசு மாறிட்டாம்ன்னா ஆவ வேண்டிய காரியம் சீரழிஞ்சிப் போயிடும்!" அப்பிடிங்குது அது.
            இப்படி ஆளாளுக்கு நெனைச்சதுக்குப் பெறவு சீப்பை எங்க எடுத்து ஒளிச்சி வைக்கிறது? ஆப்பை எங்க செருவி வைக்கிறது? கல்யாணத்தை எப்படி நிறுத்தி வைக்கிறது? தட்றா மேளத்தை, கட்டுறா தாலிங்ற நெலமையா ஆயிப் போயிடுச்சி.
            ஒரு வழியா வீயெம் மாமாவுக்கும் அம்மாபட்டினம் பொண்ணான கோகிலா மாமிக்கும் கல்யாணம் ஜப்பாரு தியேட்டரு கல்யாண மண்டத்துல நடந்துச்சு. முன்னாடி ஒரு காலத்துல அது சினிமா கொட்டகை. இப்போ கல்யாண மண்டபம். வீயெம் மாமாவோட கல்யாணத்த சினிமா கொட்டகையில சினிமா பார்க்குற கணக்கா எல்லாரும் பார்த்து சந்தோஷப்பட்டாங்க. அப்படித்தான் சொல்லணும். மனசுக்குள்ள கொஞ்சம் தாங்கல் இருந்தாலும் கல்யாணம் வரை வந்ததுக்கு அப்புறம் அதையெல்லாம் காட்டிகிட்டு இருக்க முடியாதுல்ல.
            வீயெம் மாமாவோட மாமியாரு பொண்ணு பார்க்கப் போனப்ப பண்ணுன அழிச்சாட்டியத்துல கொஞ்சம் கூட கொறை வைக்க முடியாத அளவுக்கு கல்யாணத்துலயும் நடந்துகிட்டாங்க. "அது ன்னா தூர தேசத்துலேந்து வர்ற பொண்ணு வூட்டுக்காரங்க சாப்புட்டு முடிக்கிறதுக்கு மின்னாடியே இஞ்ஞ இருக்குற மாப்பிள்ள வீட்டுக்காரங்க பந்தியில உட்கார்றது? எல்லாத்தியும் ஒங்க சனங்கள அள்ளி முக்கிகிட்டா அஞ்ஞயிருந்து வர்ற எங்க சனங்க பட்டினியா போறதா? ஒண்ணாவது கல்யாணத்தப் பார்க்க மேடைக்கு மின்னாடி உட்காருதா? எல்லாம் பந்தியில உக்காந்து கெடக்குதுங்க." அப்பிடின்னு அந்தம்மா அவுத்து விடுறாங்க. பந்தியில கை நனைச்சு உட்காந்த எல்லாத்துக்கும் ஏம்டா உக்காந்தோம்னு ஆகிப் போவுது. வழக்கமா இது போல அழிச்சாட்டியங்கள கொறை வைக்காம மாப்பிள்ள வூட்டுக்காரங்க செய்வாங்க. இங்க எல்லாம் உல்ட்டாவா நடக்கது. எல்லாம் வீயெம் மாமா கொடுக்கற எடம்னு ஆளாளுக்குப் பேசிக்கிறாங்க. அம்மாபட்டினப் பொண்ண பத்தின சேதியைச் சொன்ன சிப்பூரு பெரியப்பவாப் பத்தி கன்னாபின்னான்னு பேசிக்கிறாங்க.
            இப்போ வீயெம் மாமாவோட மச்சாங்காரன் இருக்கானே. அதாங் கோகிலா மாமியோட எட்டு வயசு தம்பி. அவன்தான் வீயெம் மாமாவோட கையைப் பிடிச்சிகிட்டு அக்கினி வலம் வரது, குடையைப் பிடிச்சிகிட்டு வெளியில அழைச்சுகிட்டுப் போயிட்டு வரதுன்னு ரொம்ப சிரமப்பட்டுப் போனான். அவன் முகத்தப் பாக்கிறப்ப அவனுக்கு அவன மாதிரி மண்டபத்துல விளையாடுற பையன்களோட விளையாடணும்னு ஆசையா இருக்குறது போல இருந்துச்சு. அவனெ தூக்கி வீயெம் மாமாவோட கல்யாண மேடையில போட்டதுல ரொம்பவே நொந்து போறான். இங்க கல்யாணம் காலையில ஆரம்பிச்சா மதியானத்த நெருங்குற வரைக்கும் கல்யாண முகூர்த்தம், நாகவல்லி முகூர்த்தம்னு அது பாட்டுக்கு நடந்துகிட்டேல்ல இருக்கும். அதுல மச்சாங்காரன் வதங்கிப் போறான்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...