7 Oct 2019

1.1



கட்டுடைக்கும் எழுத்து
            எழுத்தாளர்களில் பிரபலமான எழுத்தாளர்கள், பிரபலமில்லாத எழுத்தாளர்கள் என்று பேதம் பிரிக்க வேண்டியதில்லைதான். ஒரு புரிதலுக்காக, அடையாளத்துக்காக அதைச் செய்ய வேண்டியிருக்கிறது. இப்படி நிறைய அடையாளங்களை, புரிதல்களை உருவாக்கி நாம் குழம்பிப் போக வேண்டி இருக்கிறது.
            பிரபலம் என்பது வெகுஜனத் தன்மையோடு தொடர்புடையதாக இருக்கிறது. எல்லாரும் வாசிக்கும்படி எழுதுவது ஒரு சவால். அதில் சுவாரசியங்கள் அதிகம் தேவைப்படுகிறது. சுவாரசியங்களை வலிந்து கட்டித் திணிக்க வேண்டியிருக்கிறது. வாழ்க்கையின் எல்லா கணங்களுமா சுவாரசியமாக இருக்கிறது? இருக்காது.
            தமிழ் எழுத்துலகில், பேச்சு உலகில் சுவாரசியத் தன்மை என்பது பெரிதாக வியப்படையச் செய்தலும், நகைக்சுவையும்தான். நமது சிற்றிலக்கியங்கள் நமக்குத் தந்த கொடை அது. அந்த மரபின் தொடர்ச்சியாக எழுத்தாளர்களில் பிரபலமானவர்கள் அதைச் செய்கிறார்கள். அது ஒருவகை மசாலாத்தனம். மசாலாக்கள் சேர்க்கும் போது மணக்கும் சாப்பாட்டைப் போல. அந்த மசாலாத்தனங்களைச் சேர்க்கத் தெரியாதவர் எழுத்தாளராகி விட மாட்டார். பிரபல்யம் கொள்ள மாட்டார். பிரபல்யத்தோடு டிவோர்ஸ் ஆகி விடுவார். அநேகமாக இந்த மசாலாத்தன்மை பிரபல்யத்தைத் தீர்மானிக்கிறது. சரியான மசாலாத் தன்மையின் கலவையை அறிந்தால் பிரபல்யம் சாத்தியமாகிறது.
            மசாலாத்தன்மை தீர்க்கமான ஒரு பார்வையைத் தந்து விடுகிறது. அப்படித் தீர்க்கமான தன்மையோடு நீங்கள் நகரலாம். வாழ்க்கை நகராது. தீர்க்கத்தை உடைத்துப் போடும் விளையாட்டுப் பிள்ளை வாழ்க்கை. நிச்சயமானத் தன்மையை விட நிச்சயமற்ற தன்மையை நோக்கி அதிகம் நகரும் சுட்டித் தன்மையுடைய பிள்ளையாகவும் வாழ்க்கை இருக்கிறது. நீங்கள் அடுக்கி வைக்க அதைக் கலைத்துப் போடுவதில் அந்தப் பிள்ளைக்கு அலாதிப் பிரியம். இதற்காக அந்தப் பிள்ளையிடம் கோபப்பட்டு விட முடியாது. அது அப்படித்தான். நீங்கள் சந்தோஷமாக இருக்கும் தருணத்தில் சோகத்தையும், சோகமே நிச்சயம் என்று நினைத்திருக்கும் தருணத்தில் சந்தோஷத்தையும் கொண்டு வந்து கொட்ட அதுக்குத் தெரியும். இரண்டையும் நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்? நிச்சயமற்றத் தன்மையுடன்தானே! அதை ஒரு தீவிர எழுத்துப் பதிவு செய்யும். பிரபல்யத்தை நோக்கிய எழுத்து அதைக் கண்டு கொள்ளாது. அது ஒரு எதேச்சதிகாரவாதி. அதைப் பொருத்தவரை வாழ்க்கை என்பது இப்படித்தான். சோகம் என்பது இப்படித்தான். சந்தோஷம் என்பது இப்படித்தான். அப்படித்தான் நீங்கள் சோகப்படவோ, சந்தோஷப்படவோ வேண்டும் என்ற எதிர்பார்க்கும். அதை மீறினால் உங்கள் ஒழுக்கத்தை அது சந்தேகப்படும். கேள்விக்கு உள்ளாக்கும். உண்மையில் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டியது அந்த எழுத்தைத்தானே தவிர உங்களையல்ல. உங்களை ஒரு குற்ற உணர்வில் ஆளாக்கி விட்டு, அதன் தலையில் அது உட்கார்ந்து கொள்ளும். நீங்கள் ஒரு கலாச்சார காவலர் ஆகி விட்டாலும் ஆச்சரியம் கொள்வதற்கில்லை. கலாச்சார காவலர் ஆகா விட்டால் இனத்தின் காவலர் ஆகலாம். அது உங்களை வடிவமைக்கிறது. நீங்கள் அதன் வாயிலாக உங்களை வடிவமைத்துக் கொள்வீர்கள். அப்படி வடிவமைத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்? உங்களுக்குள் இருக்கும் உங்களைக் காணாமல் நீங்கள் வடிவமைத்துக் கொள்வது எப்படிச் சரியாக இருக்க முடியும்?
            நீங்கள் உங்களை ஒரு மருத்துவராக்கிக் கொள்வது உங்களது விருப்பம். உங்களுக்குள் இருக்கும் பொறியாளரைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் அதைச் செய்வதன் மூலம் நீங்கள் அடைவது பணம் ஒன்றாகத்தான் இருக்கலாம். வாழ்வின் அசாதாரணமான நிம்மதியை, அமைதியைத் தரிசிக்கும் வாய்ப்பை அதற்குப் பின் நீங்கள் இழந்து விடுகிறீர்கள். நீங்கள் அதை வாழ்க்கையின் பிற்பாட்டில் எப்படி எதிர்கொள்வீர்கள் தெரியுமா? உங்கள் இலக்கை, நோக்கை, லட்சியவாதத்தை மற்றவர்கள் மேல் திணித்து அவர்கள் அடையும் அசெளகரியத்தை ரசிக்க ஆரம்பித்து விடகிறீர்கள். பிரபல்யமான எழுத்தின் நோக்கமும் பணந்தானே. பிரபல்யம் இல்லாத ஓர் எழுத்தை எழுதி நீங்கள் பணத்தைத் திரட்டி விட முடியாது. அதைப் பிரபல்யமான எழுத்து ஒத்துக் கொள்ளாது. அது சாமர்த்தியமான ஒரு பாதையில் நகரவே எத்தனிக்கும்.
            எழுத்தின் நோக்கம் வேறு, அது எழுதப்படுவதன் நோக்கம் வேறு என்று அது இரண்டாகப் பிரியும். பிரபல்யமான எழுத்துகள் சஞ்சலத்தை உருவாக்குவதன் பின்னணி இதுதான். எழுத்தின் சஞ்சலமற்றத் தன்மை அது என்ன பார்க்கிறதோ அதை சமரசமின்றிச் சொல்வதில், பதிவதில் இருக்கிறது. அந்த சமரசத்துக்குப் பிரபல்யம் எப்போதும் ஒரு குறுக்கீடு.
            எழுத்துகளைப் பின்தொடரும் ஆரம்பநிலை வாசகனுக்கு அது கொஞ்சம் வசதியாக இருக்கலாம். வெறுமனே  அது கொஞ்சம் வசதிதான். அந்த வசதியிலேயே தேங்கி விடும் அபாயத்தைத் தவிர்ப்பது சாதாரணமில்லை. அதைக் கடக்க சரியான வாசிப்பை நோக்கி நகர்வதற்கான சூழல்கள் அமையாமல் போய் விட்டால் நிலைமைச் சிக்கலாகி விடும். மனிதர் உள்ளார்ந்துப் பார்க்கும் திறனை அதன் காரணமாகவே இழந்து விடுவார். உண்மையான படைப்பாற்றல் என்பது அழிந்து போய் விடும்.
            ஒரு சரியான எழுத்து பன்மைத் தன்மைக்கு ஆதரவானது. அது ஒற்றைத் தன்மையை உருவாக்காது. ஓ மனிதா! ஏ தமிழா! என்றெல்லாம் அது சத்தமிடாது. அது ஓர் ஆத்ம தரிசனத்தை உண்டாக்குவது. உங்களது தரிசனம் உங்களால் தரிசிக்கப்படுவது, உங்களது தேடல் உங்களால் தேடப்படுவது என்று உங்களது தனித்தன்மையை அது ஆதரிப்பது.
            இந்தப் பூமியில் நீங்கள் பிறந்தது உங்கள் வாழ்க்கையை வாழ. நீங்கள் ஏன் இன்னொரு வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருக்க வேண்டும்? பிரபல்யமான எழுத்து என்ற மசாலாத்தனமான எழுத்து அப்படி ஒரு டெம்ளேட்டை உங்கள் முன்னால் வைக்கலாம்.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...