6 Oct 2019

ஏப்பம் பிறந்த கதை



செய்யு - 229
            சாமியாத்தாவுக்குப் பிள்ளைகளுக்குக் குறைச்சலில்லை. பொம்பளைப் பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் கொட்டிக் கிடந்தன அதுக்குங்றத சொல்ல வேண்டியதில்ல. பேரப் பிள்ளைகளிலும் பொம்பளைப் பிள்ளைகளின் எண்ணிக்கை கணிசம்.
            ஆறு பொம்பளைப் பிள்ளைகளையும், ரெண்டு ஆம்பிளைப் பிள்ளைகளையும் பெத்த மவராசியான சாமியாத்தா கடைகள்ல மட்டும் நிக்காது. தெருவுல வளையல்காரரோ, மிட்டாய்காரரோ போனாக்கா அந்தத் திசையில தலை வெச்சுப் படுக்காது. அங்கப் போயி தலைவெச்சு, புள்ளைங்க வந்து கொய்ங்ன்னு வந்து மொச்சுட்டா என்னா பண்றதுங்ற பயம். ஒண்ணா, ரெண்டா வாங்கிக் கொடுக்க. ஆறும் ரண்டும் கூட்டுப்புள்ளிக்கு எட்டு. ஒவ்வொண்ணுக்கும் வாங்கிக் கொடுக்க அதுகிட்ட ஏது தம்புடி?
            வளையல்காரனோ, மிட்டாய்காரனோ தெருவுல போனா போதும், "ஏட்டி தங்காச்சிகளா அஞ்ஞ பாத்திரம் அலம்பாம கெடக்குப் பாரு. இஞ்ஞ மாட்டுக்குத் தண்ணி காட்டாம கெடக்குப் பாரு. கொல்ல கூட்டாம கெடக்குப் பாரு. துணி மணியல்லாம் தொவைக்காம கெடக்குப் பாரு. என்னாங்கடி வூட்ட இப்பிடி போட்டு வெச்சிருக்கீங்க. கூட்டித் தொலைங்கடி மொதல்ல. நெல்லு அவிக்கணுமே குதிருலேந்து நெல்லெடுத்துப் போட்டீங்களாடி? சாணியள்ளிப் போட வேண்டியவே எஞ்ஞ போனா? ஏங்கடி இப்படி மசமசன்னு நின்னுகிட்டு இருக்கீங்க? ஆவ வேண்டிய வேலயப் பாருங்கடி!"ன்னு விரட்ட ஆரம்பிச்சிடும். இப்படிச் சாமியாத்தா பேச ஆரம்பிச்சுன்னாவே புரிஞ்சுக்கலாம், தெருவுல யாரோ யேவாரி எதையோ வித்துகிட்டுப் போறான்னு. வாங்கிக் கொடுக்க வக்கில்லாமத்தான் யம்மா இப்பிடித் திட்டுதுன்னு பொண்ணுங்களுக்கும் புரிஞ்சிப் போயிடும். இந்தப் பேச்செல்லாம் அது பேசி, அதெ கேட்டு முப்பது நாப்பது வருஷத்துக்கு மேல இருக்கும்.
            புள்ளைங்களப் பெத்து, அதெ தூக்கி வளர்த்து சாமியாத்தாவுக்கு வெறுத்துப் போச்சுன்னு கூட சொல்லலாம். அது பெத்தெடுத்து அது தூக்குனது மொதல்ல பொறந்த ரண்டு பொம்பளைப் புள்ளைகளும், ஆம்பிளைப் புள்ளைகளா பொறந்த ரெண்டு புள்ளைகளும்தாம். மத்ததையெல்லாம் அதுகளுக்கு முன்னாடி பொறந்ததுதாம் தூக்கி வளர்த்துச்சுங்க. அதுக்குப் பேரப் புள்ளைக வருஷத்துக்கு ஒண்ணு பொறந்து தொலைச்சுகிட்டே இருந்துச்சு. அதுகள தூக்கித் தூக்கி வேற அதுக்கு அலுத்துப் போச்சு. எதுவா இருந்தாலும் ஒண்ணோ, ரெண்டோ, மூணோ, நாலோன்னா ஒரு ஆசெ இருக்கும். அதுக்கு மேலன்னா சலிப்புதாம் மிஞ்சுமில்ல. ஏம் அந்த சலிப்புன்னா... எல்லாம் பொம்பளப் புள்ளைகளுக்குப் பொறந்த பேரப் புள்ளைக இல்லையா! அதால கூட இருக்கலாம். சாமியாத்தாவுக்கு அதால எல்லாம் பேரப் புள்ளை மேல மொத்த சலிப்பும் வந்துட்டதா சொல்லிட முடியாது. அதுக்கு அதோட ஆம்பள புள்ளையான குமரு மாமாவோட புள்ளையத் தூக்கிக் கொஞ்சி வளர்க்கணும்னு அம்புட்டு ஆசை. பேரப் புள்ளைங்கள்லயும் ஆம்பளைப் புள்ளைக்குப் பொறக்குறது ஒசத்தி, பொம்பளைப் புள்ளைங்களுக்குப் பொறக்குறது கொஞ்சம் ஒசத்தி கம்மி இல்லையா! அப்பிடித்தான் சாமியாத்தாவுக்கும் இருந்துச்சு. அது எங்கயாவது ஒரு நல்லது கெட்டதுக்குப் போயி நின்னா போதும் பொம்பளப் புள்ளைங்க பெத்தெடுத்த பேரப் புள்ளைங்க மிட்டாயை மொய்க்குற ஈ கணக்கா வந்து மொய்ச்சுக்கும்ங்க. அம்புட்டுப் பேரப் புள்ளைகளுக்கும் அது மேல அம்புட்டு ஆசை.
            குமரு மாமாவுக்கு மொத புள்ளை ஆம்பள புள்ள. அப்படியே வைத்தி தாத்தாவ உரிச்ச வெச்ச மாதிரி முகம். செவப்புன்னா செவப்பு அப்படி ஒரு செவப்பு. புள்ளையும் ஆம்பள புள்ள, நெறமும் செவப்புன்னா அந்தப் புள்ளைக்கு வர்ற மெளசு இருக்கே. அத சொல்லணுமா என்ன? தலையில என்னா தலைக்கு மேல வானத்தைத் தாண்டித் தூக்கி வெச்சு ஆளாளுக்குக் கொண்டாடுறாங்க. சாமியாத்தாவும் என்னவோ இப்பதாம் மொத மொதல்லா பேரப் புள்ளைய தூக்கி வெச்சு கொண்டாடுறது போல கொண்டாடுது. "நம்ம புள்ளைங்கள்ல ஒண்ணுத்தியாவது இப்பிடி இத்து தூக்கி வெச்சி கொஞ்சிருக்குமா?"ன்னு அதெப் பாத்த அதோட பெண் மக்களுக்குக் கொஞ்சம் மனவருத்தம்தான். இருந்தாலும் அதெ யாரும் வெளிக்காட்டிக்கல்ல.
            நம்மூரு கிராமங்கள்ல மொத புள்ளய ஆம்பள புள்ளையா பெத்துட்டா அந்தப் பொண்ணுக்கு ஏறுற கிறுக்கு இருக்கே! ச்சும்மா ராக்கெட்டுல ஏறிப் போவுற சேட்டிலைட்டு கணக்கா ஜிவ்வுன்னு ஏறும். மேகலா மாமிக்கு அப்படித்தாம் ஒரு ஜிவ்வு ஏறிப் போச்சு. பிரசவத்துக்குப் பொறந்த வூடு போயி மறு வீடு திரும்பி ஒரு ரெண்டு மாசமோ, மூணு மாசமோ புள்ளைய வெச்சிருந்திருக்கும். அதுக்கு மேல புள்ளைய இங்க வெச்சிருந்தா கெட்டுப் போயிடும்னு அருவாமணியில இருக்குற அப்பன் வீட்டுல கொண்டு போயி விட்டுட்டு வந்துடுச்சி. ஆம்பள புள்ளைக்குப் பொறந்த ஆம்பள பேரப் புள்ளைய ஆசை தீர கொஞ்சலாமுன்னு நெனைச்ச சாமியாத்தாவுக்கு தலையில, மாருல, வயித்துல, கையில, காலுலன்னு எல்லா எடத்துலயும் இடி வுழுந்தது போலாச்சி.
            மேகலா மாமிகிட்ட கேட்க முடியாம, குமரு மாமாகிட்ட சாமியாத்தா கேட்குது, "ஏம்டா நாங்கள்லாம் புள்ளய பெத்தா வளக்கல? நீயென்னடான்னு பெத்தெடுத்த பச்ச மண்ண பாலு குடி மறக்குறதுக்கு மின்னாடியே மாமானாரு வூட்டுல கொண்டு போயி வுட்டுட்டு வந்திருக்கீயே? அடுக்குமாடா இது? எந்த ஊருல நடக்குதுடா இந்தச் சங்கதி?"
            "அஞ்ஞ அவுங்க அப்பம் ஆயி நல்ல வெதமா வளப்பாங்கன்னு ஒம் மருமவ்வே நெனைக்குது. அதுக்கு யாரு ன்னா பண்றது?" அப்பிடிங்குது குமரு மாமா.
            "நாங்கள்லாம் நல்லா வளக்க மாட்டோமா? இதென்னடா அதிசய கூத்தால்ல இருக்கு!" அப்பிடிங்குது சாமியாத்தா.
            "ன்னா எளவோ! அது பிரியப்பட்டுச்சு. செஞ்சாச்சி. அவ்வளவுதாம்!"
            "எப்பிடிடா ஒனக்கெல்லாம் பெத்த புள்ளய வுட்டுட்டு இருக்க முடியுது? ஒனக்கு ன்னா கல்லு மனசா? நீங்கள்லாம் மனுஷங்களே இல்லங்கடா! ஒன்னய வுடு. அதெ பெத்தெடுத்தவ்வே எப்பிடி இருக்கான்னு தெரியலயே. அதுங்கள்லாம் பொண்ணுங்களா? பெசாசுங்களா?" அப்பிடிங்குது சாமியாத்தா.
            அந்த எடத்திலேந்துதாம் இதெயெல்லாம் கேட்டுகிட்டு இருந்த மேகலா மாமி பிடிச்சிகிட்டு.
            "இந்தாரு எத்தா இருந்தாலும் நேரடியா பேசு. மாமியாக்காரின்னு பாக்க மாட்டேம். மருவாதிக் கெட்டுடும். எங்களப் பாத்தால்லாம் பொண்ணா தெரியலீயா? நீயி பெத்தது மட்டுந்தாம் பொண்ணுங்களா தெரியுதா? இஞ்ஞ வளத்து கிழிச்ச லட்சணந்தாம் ந்நல்லா தெரியுதே! ஒண்ணாவது படிச்சிருக்கா? ஒண்ணாவது வெளங்கியிருக்கா? இந்தா இருக்கே... இத்த பத்தாவது படிச்சதுன்னு கட்டி வெச்சீங்க! மூணாவது படிக்கிறப்பவே அன்ட்ராயர கழட்டிகிட்டு கருவக் காட்டுல போயி ஒக்கார வெச்சவங்கதான நீங்க. இத்து வேலைக்குப் போனான்னாதாம் குடும்பத்துல சோறு வேவும்னு வேலைக்கி அப்பவே அனுப்புன ஆளுங்கதான நீஞ்ஞ?" அப்பிடிங்கது மேகலா மாமி.
            "ஏம்டாம்பீ! ஒம் பொண்டாட்டிய அடக்கிப் பேச சொல்லுடாம்பீ! ஏத்தோ எங்க காலத்துல எங்களால முடிஞ்சத செஞ்சோம். ஒன்னய படிக்க வைக்கிறதுக்கு ஒங்கப்பாரு ரொம்பவே செரமப்பட்டாரு. நீயி படிக்காததுக்கு ஆருடா ன்னா பண்றது? எல்லாஞ் தெரிஞ்ச மாரில்லாம் பேசப்புடாது. யோஜிச்சுப் பேசணும்!" அப்பிடிங்கது அதுக்கு சாமியாத்தா.
            "அதத்தாம் நாமளும் சொல்றேம். யோஜிச்சுப் பேசணும். இஞ்ஞ எம் புள்ள கெடந்தா இஞ்ஞ கெடந்ததுங்க கணக்கா படிக்காத தற்குறியாத்தாம் கெடக்கணும். படிப்போட அருமெ தெரியாத பட்டிக்காட்டு சனங்க. அஞ்ஞ இருந்தாத்தாம் சின்ன புள்ளையிலிருந்து படிப்போட வாசனைய எம் புள்ளைக்கு எஞ்ஞ அப்பாவும், அம்மாவும் ஊட்டி வளர்க்கும்ங்க. இஞ்ஞ இருந்தா மாடு மேய்குறதுக்கும், மம்புட்டிப் புடிக்கிறதுக்கும், கட்டை அடிக்கிறதுக்கும் எம் புள்ளே போவும். படிச்சி கவருமெண்டு வேலைக்கிப் போவாது. ஒம் பொண்ணு பெத்த புள்ளைங்க எல்லாம் படிச்சி முடிச்சி கவருமெண்டு வேலைக்கிப் போவணும். ஒம் மவம் பெத்த புள்ள மட்டும் ஒண்ணுக்கு ஆகாம இஞ்ஞயே கெடந்து சாவணும். அதுக்குத்தான நீயி பேசுறே?" அப்பிடின்னு மூச்சு விடாம பேசுது மேகலா மாமி.
            இதெ கேட்க யாருக்கு எந்தப் பக்கம் பேசுறதுன்னு கொழப்பமா இருக்கு குமரு மாமாவுக்கு.
            "நாயீ கூட தங் குட்டிய இந்த மாரி விடாதுடாம்பீ!" அப்பிடிங்குது சாமியாத்தா.
            "அப்பிடின்னா நம்மள நாயீங்றீயா? பாத்தீங்களா ஒங்கட யம்மாவ! நாம்ம நாயாம்! அதாம் நாம்ம நாயீதான்னாக்கா பெறவு ஏம் நாயீ பெத்த கொழந்தய பாக்கணுங்றே. இஞ்ஞ வெச்சிக்கணும் நெனைக்குறே?" அப்பிடிங்குது மேகலா மாமி.
            "ஏலேம்பீ! ஒம் பொண்டாட்டி பேசுற பேச்சு சரியில்லடாம்பீ!" அப்பிடிங்குது சாமியாத்தா.
            "சரியா பேச வேண்டியவங்க சரியா பேசுனா எல்லாம் சரியாத்தாம் இருக்கும். எகுடுதகுடா பேசுனா பெறவு எல்லாமும் அப்படித்தாம் இருக்கும். புத்துல கைய வுட்டுப்புட்டு கடிக்குதே, குத்துதேன்னா ஆரு ன்னா பண்றது?" அப்பிடிங்குற மேகலா மாமி, "இந்த வூட்டுல இருந்தாவே பெரச்சனதாம். நம்மள கொண்டு போயி அஞ்ஞ விட்டுப்புடுங்க. நீஞ்ஞலும் ஒங்க யம்மாவும் இஞ்ஞ இருந்துக்குங்க. இஞ்ஞ இருந்து ஒங்க யம்மா பேச்சக் கேட்டுகிட்டு கெடக்கணும்னு நமக்கு ஒண்ணும் தலயெழுத்து இல்ல!"ன்னு சொல்லிட்டு ரூமுக்குள்ளப் புகுந்து வேக வேகமா துணி மணிகள ஒரு கம்பு பையில அள்ளிப் போட்டுகிட்டு கெளம்புறதுக்குத் தயாரா வெளியில வருது மேகலா மாமி.
            "யய்யோ! நம்மாள ஆரும் வூட்ட வுட்டுப் போவ வாணாம். நாம்ம போறேம்." அப்பிடின்னு சாமியாத்தா வெளியில கெளம்ப எத்தனிக்குது.
            "ரண்டு பேரும் சித்தே சும்மா இருக்கீங்களா?" அப்பிடின்னு சத்தம் போடுது குமரு மாமா.
            "ரண்டுல ஒண்ணு முடிவு பண்ணுங்க. பேயாம இஞ்ஞ இருக்கறதுன்னா ஒங்க யம்மா இஞ்ஞ இருக்கட்டும். இல்லேன்னா ஒங்க யம்மாவே இஞ்ஞ இருக்கட்டும். நம்மள கொண்டு போயி அருவாமணியில வுட்டுப்புடுங்க! நடக்குறது நல்லாயில்ல ஆமா!" அப்பிடிங்குது மேகலா மாமி.
            "நாம்ம என்னத்த பேசிப்புட்டோம்டா! பேரப் புள்ளய தூக்கிக் கொஞ்சணும்னு நமக்குக் கொஞ்சம் ஆசெ இருக்கக் கூடாதா? அதெக் கூட கேக்கக் கூடாதா?" அப்பிடின்னு அழ ஆரம்பிக்குது சாமியாத்தா.
            "இஞ்ஞ வளத்து கெடுத்த புள்ளைங்க போதும். எதயும் கேக்கக் கூடாது. புள்ளைங்க வளத்த லட்சணம் ஒலகத்துக்கே தெரியுதே!"
            "பாருடாம்பீ! நாம்ம ன்னத்தடா தப்பா பேசிப்புட்டேம்?" அப்பிடிங்குது சாமியாத்தா.
            "பேசக் கூடாதுன்னா பேசக் கூடாது. இத்து செரிபட்டு வாராது. கெளம்புங்க. வண்டிய எடுங்க. கொண்டு போயி விடுங்க!" அப்பிடிங்குது மேகலா மாமி.
            "சொன்னா கேளுடி. ஏம்டி இப்படிப் பண்றே?" அப்பிடிங்குது குமரு மாமா.
            "இனுமே எதுவும் பேச மாட்டேன்னு சொல்லச் சொல்லுங்க. ஒரு முடிவு தெரியாம இந்த வூட்டுல இருக்க மாட்டேம்!" அப்பிடிங்குது மேகலா மாமி.
            சாமியாத்தா மூசுமுசுன்னு அழுவுது.
            "இப்பிடி அழுதே காரியஞ் சாதிச்சா எப்பிடி? நமக்கு மட்டும் ன்னா காரியம் பண்ணத் தெரியாதா? யாரும் நம்மள கொண்டு போயி வுட வாணாம். நடந்தே போயிக்கிறேம்!" அப்பிடின்னு மேகலா மாமி நடுக்கூடத்தை விட்டு படிக்கட்டைத் தாண்டுது. குமரு மாமா மாமியின் கையைப் பிடிச்சு உள்ள இழுத்துக் கதவைச் சாத்துது. மேகலா மாமி கையை உதறி விட்டு விட்டு சாத்திய கதவைத் திறக்கப் போவுது. மறுபடியும் குமரு மாமா மாமியின் கையைக் கெட்டியாகப் பிடித்துப் பார்க்குது. மறுபடியும் அதே உதறல், பிடித்தல் என்று ஒரே போராட்டமா இருக்கு. குமரு மாமா பச்சக்குன்னு அப்படியே மேகலா மாமியின் கால்ல வுழுவுது.
            சாமியாத்தா பதறிப் போயிப் பாக்குது. "யய்யோ எங் குலசாமி வுழுந்துடுச்சே!" அப்பிடின்னு ஒப்பாரி வைக்குது. மேகலா மாமி அப்பிடியே குந்துது. அதோட காலடியைக் கெட்டியா பிடிச்சுகிட்டு குமரு மாமா நெடுஞ்சாண் கிடையா கெடக்கு.
            இத்து எல்லாத்தையும் கேட்டுகிட்டு வைத்தி தாத்தா திண்ணையில கட்டுல்ல படுத்துகிட்டுத்தாம் இருக்காரு. ஒரு வார்த்தைப் பேசல. அது வைத்தி தாத்தா உசுரோட இருந்தப்ப அப்போ நடந்த சம்பவம்.
            இந்தச் சம்பவத்துக்குப் பெறவு சாமியத்தாவுக்கும், மேகலா மாமிக்கும் ஒண்ணுக்கொண்ணு சுத்தமா பிடிக்காம போயிடுச்சு. சாமியாத்தா நின்னா குத்தம், நடந்தா குத்தம், பேசுனா குத்தம், ஏப்பம் வுட்டா குத்தம்னு ஆயிப் போச்சு. தெனம் தெனம் சண்டைங்றது மூச்சு வுடுறது போல ஆச்சு.
            "என்னெம்மோ படிக்க வைக்கணும், படிக்க வைக்கணுங்றாளே! இவ்வே ன்னா படிச்சுக் கிழிச்சுருக்கா? இவ்வே தங்காச்சிங்க ன்னா படிச்சுக் கிழிச்சிருக்காளுவோ. அவ்வே வூட்டுல ஒரு பையந்தாம் படிச்சிருக்காம். மிச்சது எல்லாம் ஏழாங் கிளாஸூல பெயிலு. எட்டாங் கிளாஸூல பெயிலு. பத்தாங் கிளாஸூல பெயிலு. பெறவு ன்னவோ பெருசா அஞ்ஞதாம் படிக்க வைக்கப் போறதா பேசுறாளே!" அப்பிடின்னு சாமியாத்தா வூடு வூடா போயிப் பேசிட்டு வர்றதுல ஆறுதலு பார்க்க ஆரம்பிச்சுச்சு.
            குமரு மாமாவும், மேகலா மாமியும் வெள்ளிக் கெழம ஆனாக்க போதும் அருவாமணிக்குப் போயி புள்ளய பார்த்துட்டு, தங்கிட்டு ஞாயித்துக் கெழம சாயுங்காலந்தாம் திரும்ப வரும்ங்க. அதுங்க ரண்டும் வெள்ளிக் கெழம டிவியெஸ் சாம்ப் வண்டிய எடுத்துட்டுப் போற ஒவ்வொரு முறையும் பேரப் புள்ளைய பார்க்க முடியாததும் தூக்க முடியாததுமான விரக்தியோட சாமியாத்தா பாத்துகிட்டே இருக்கும். ஆவ் ஆவ்ன்னு அதுகிட்டேயிருந்து ஏப்பம் வந்துகிட்டே இருக்கும். அதிலேந்து அதோட ஏப்பம் அதிகமா ஆவ ஆரம்பிச்சுச்சு.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...