25 Oct 2019

வேலங்குடி சின்னவரு




செய்யு - 248
            வேலங்குடி பெரியவருன்னு ஒருத்தரு இருந்தா வேலங்குடி சின்னவருன்னு ஒருத்தரு இருப்பார்னு ரொம்ப முன்னாடியே நாம்ம பேசியிருந்தோம்ல. ஒரு வீட்டுலு ரெண்டு பிள்ளைக இருந்து அதுகளுக்குப் பேரு இருந்தாலும் மூத்தவன பெரியவனேன்னும், இளையவன சின்னவனேன்னும் கூப்புடுறது கிராமங்கள்ல வழக்கமா போச்சு.
            வேலங்குடியில இருக்குற பெரியவரு, சின்னவரு ரெண்டு பேருமே சுப்பு வாத்தியாருக்கு அத்தான் முறை வேணும், விகடுவுக்கும், செய்யுவுக்கும் மாமா முறை வேணும். சுப்பு வாத்தியாரோட ரெண்டு அக்காமார்களையும் ஆளுக்கொண்ணா கட்டிக்கிட்டவங்க ரெண்டு பேரும். பெரியவரு சுப்பு வாத்தியாரோட மூத்த அக்காவையும், சின்னவரு ரெண்டாவது அக்காவையும் கட்டிக்கிட்டாங்க.
            வேலங்குடி பெரியவரு நல்ல நெடுநெடுன்னு உசந்த செவப்பு நெறம்னா, சின்னவரு அதுக்கு நேர்மாறா கட்டையா கருப்பா இருப்பாரு. நடைன்னு ஆரம்பிச்சா விடுவிடுன்னு அவரு நடக்குற வேகத்துக்கு ஓடத்தான் வேணும். அரையில நாலு முழ வேட்டி வெள்ளே வேளேர்னு இருக்கும். மேலுக்கு வான நீல நிறத்துல அரைக்கை சட்டை. உள்ளுக்குள்ள பனியன் போடுற வழக்கமெல்லாம் கிடையாது.
            காலையில அஞ்சரை ஆறு மணிக்கெல்லாம் எழுந்திரிச்சார்னு குளிச்சு முடிச்சுட்டு ஏழு ஏழரை மணிக்கெல்லாம் வேலைக்குக் கிளம்பிடுவாரு. அதுக்குள்ள அவருக்குச் சாப்பாட்டை தயாரு பண்ணிக் கொடுத்தாகணும். அதுல பிசகுனா கெட்டக் கோவம் வந்துடும் மனுஷனுக்கு. வூட்டை ரெண்டு பண்ணி ரணகளம் ஆக்கிடுவாரு. காலையில ஏழு மணிக்கெல்லாம் காலைச் சாப்பாட்டைப் போட்டு அவரு சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள மதியான சாப்பாட்டைப் பொட்டணம் கட்டிக் கொடுத்தாகணும். அதை வாங்கிக்கிட்டு தன்னோட ஆளுங்களோட ஏழரை மணிக்கெல்லாம் நடையைக் கட்டுனார்னா மனுஷன் வேலையை முடிச்சிட்டு வீட்டுக்கு வாரப்ப ஏழு, எட்டு மணியாயிடும்.
            இதுக்கு இடையில ஒரு விசயத்தைச் சொல்ல மறந்துட்டேன் பாருங்க. சோத்தை வடிச்சதும் அந்தக் கஞ்சியை வடிச்சு, அதுல கொஞ்சம் தயிரை விட்டு, அத்தோட தேங்காயைத் திருவிப் போட்டு அவரு எங்க இருந்தாலும் தேடிப் போயி அவரு கையில கொடுத்தாகணும். அதுக்கு அவரு வெச்சிருக்கிறப் பேரு அன்னப்பால். அன்னப்பால் அவரு கைக்கு வரலன்னா, "என்ன வேலைப் பாக்குதுங்க பொண்டுக? அன்னப்பால் என்னாச்சுங்களா பொண்டுகளா?" அப்பிடின்னு ஆரம்பிச்சா வண்டை வண்டையா காது கூசுற அளவுக்குக் காதால கேட்க முடியாத அளவுக்குப் பேசுவாரு. அன்னப்பால் கையில வந்துட்டா சாந்த சொரூபியா மாறிடுவாரு. புத்தர விட ஒரு பங்கு மேல பேச ஆரம்பிச்சிடுவாரு.
            குளிக்காம சாப்பிட மாட்டாரு. அதுல ஏகப்பட்ட ஆச்சார அனுஷ்டானங்கள வெச்சிருப்பாரு. சாப்புடுறப்ப மேலுக்குச் சட்டைப் போட மாட்டாரு. சாப்பிட்டு முடிச்சதும்தாம் போடுவாரு. அவரு சாப்புட வர்றார்ன்னா பலவாக் கட்டைய எடுத்துப் போட்டு தட்டையோ, வழை இலையையோ போட்டு தயாரா வெச்சிருக்கணும். வெறுந்தரையில உக்கார மாட்டாரு. அதுக்குன்னே ஒரு பலவாகக் கட்டையை ரெண்டு ஆளு உக்கார அளவுக்கு தயாரு பண்ணி வெச்சிருக்காரு.
            குளிச்சி முடிச்சிட்டுத் தலையைத் தொவட்டிட்டு அதுக்கு தேங்கா எண்ணெயை ஒடனே வைப்பாரு. தலைக்குத் தடவிட்டு கை, காலு முழுக்க லேசா தேங்காய் எண்ணெயை வுட்டு தேயி தேயின்னு தேய்ச்சி அவருக்கு அவரே நீவி வுட்டுப்பாரு. அவேராட கருத்த தேகத்துல மாருக்குக் குறுக்கா ஒரு பூணுலு கயிறு போட்டுருப்பாரு. பார்க்க அழுக்குப் பிடிச்ச நெறத்துல மஞ்சளாவோ, பழப்பாவோ அது தெரியும். அதெ ஒரு இழுப்பு இழுப்பு வுட்டுப்பாரு. அதுல ஒரு பெரிய மெதப்பு, கெளவரம் அவருக்கு. கண்ணாடியைப் பார்த்து தலையைச் சீவுவாரு. நம்மள மாதிரி ப்ளாஸ்டிக் சீப்புல சீவ மாட்டாரு. இரும்புல செஞ்ச சீப்பு ஒண்ணு வெச்சிருக்காரு. அதுலதாம் சீவுவாரு. அவரோட இரும்பு சீப்பை யாரும் எடுக்க வுட மாட்டாரு. அதுக்குன்னே ஒரு சின்ன பொட்டி வெச்சிருக்காரு. அந்தப் பெட்டிக்கு மைக்காவை ஒட்டிப் பார்க்க பளபளப்பா வெச்சிருப்பாரு. இங்க செய்யுற வேலைக்கெல்லாம் மைக்காவை ஒட்டி பாக்குற எல்லாத்தையும் பளபளன்னு பண்ண காரியத்தை ஏரியாவுக்கு மொதல்ல ஆரம்பிச்சு வைச்சது அவருதாம். அதால அவர மைக்கா ஆசாரின்னும் சில பேரு சொல்லுவாங்க.

            தலையைச் சீவி முடிச்சதும் இரும்பு சீப்ப அதுல வெச்சுப் பூட்டிடுவாரு. அந்தப் பொட்டியிலத்தாம் ஒரு சந்தனக் கட்டை, துரு பிடிக்காத ஆணி ஒண்ணையும் வெச்சிருக்காரு. தலையைச் சீவி முடிச்சதும் சந்தனக் கட்டையை எடுத்துப் பக்கத்துல வெச்சிருக்கிற அரைப்புக் கல்லுல நாலு சொட்டு தண்ணியை விட்டு அரைப்பாரு அரைப்பாரு அப்படி அரைப்பாரு. சந்தனம் தேய்ஞ்சு வந்ததும் அதெ அப்படியே ஒரு வெரலால லேசா வழிச்சு துரு பிடிக்காத ஆணி வெச்சிருக்கார்ல அதோட கொண்டையில கொத்தா வெச்சி நெத்திக்கு நேரா கொண்டு போயி சந்தனப் பொட்டு வெச்சிப்பாரு. சந்தனப் பொட்ட வெச்சிட்டார்ன்னா மைக்கா ஆசாரி சாப்புட தயார் ஆயிட்டார்னு அர்த்தம்.
            அவரு வந்து உட்கார்ற வரைக்கும் சோத்தையோ, பலகாரத்தையோ தட்டுலையோ, இலையிலையோ வெச்சிடக் கூடாது. வந்து உட்கார்ந்த பின்னாடி, "இன்னிக்கு ன்னா சாப்பாடுங்கடி ஆயி?" அப்பிடின்னு ஒரு குரல கொடுப்பாரு. அன்னிக்கு என்ன சமைக்கிருங்கறதைச் சுருக்கமா பட்டியலு வாசிச்சுச் சொல்லணும். அதைக் கேட்டுப்பாரு. கேட்டுட்டு போடும்பாரு. அப்பத்தாம் சாப்பாட்டைக் கொஞ்சமா போட ஆரம்பிக்கணும். சோத்தைப் போட்டதும் குனிஞ்சுப் பார்த்தார்ன்னா ரசத்தை ஊத்தணும். ரசத்தை வுட்டு சோத்தை நல்லா பெசைன்னு பேசைஞ்சு கூழு கணக்கா ஆக்கிடுவாரு. அது கையில ஒழுக ஒழுக உர் உர்ருன்னு இழுத்துகிட்டே சாப்பாடுவாரு. பெறவுதாம் கறிகாயை வெச்சு மறுசோறு போட்டு சம்பாரோ, குழம்போ வெச்சிருக்கதை ஊத்தணும். ரசம் வைக்காம சோறு போட்டாக்கா அன்னைக்கு தட்டோ இலையோ பறந்துடும். இப்படி பலநாளு அவரு வூட்டுல பறக்கும் தட்டையோ, பறக்கும் இலையையோ அடிக்கடிப் பார்க்கலாம். இதுக்குப் பயந்துகிட்டே பொண்டுக ரசம் இல்லாம சமைக்காது. உலையை வைக்கிறதுக்கு முன்னாடியே ஒரு சட்டியில ரசத்தைக் கொதிக்க வெச்சிடும்ங்க. கிட்டு ஆசாரி வூட்டுல ரசத்துக்குப் பஞ்சம் இருக்காதுன்னு வேலங்குடியில ஒரு பேச்சு பேசிப்பாங்க. அவர எல்லாரும் கிட்டு ஆசாரின்னுத்தாம் கூப்புடுவாங்க. மைக்கா ஆசாரிங்கறதும் இவரா உருவாக்கிக்கிட்ட பேருதாம். ரெண்டு பேருலயும் கூப்புடுவாங்க இந்த ஒத்தை ஆசாரியை.
            சாம்பாரோ, குழம்போ சாப்பிட்டு முடிச்சார்ன்னா மறுசோறு போட்டு மோரை ஊத்தணும். அதைப் பெசைஞ்சு முடிக்கிறதுக்குள்ள ஒரு துண்டு நாரத்தங்காயி ஊறுக்கா இருக்கணும். இல்லேன்னா அதுக்கும் தேளு கொட்டுற கணக்கா வார்த்தையால ஒரு கொட்டுக் கொட்டிப்புடுவாரு, "ஒண்ணுக்கும் லாயக்கில்லாத பொண்டுகளா!"ன்னு. காலையிலயே நல்லா சாப்பிட்டுட்டுத்தாம் அதுவும் ஏழரைக்குள்ள சாப்பிட்டுட்டுதாம் வேலைக்குக் கிளம்புவாரு. எங்காவது பக்கத்துல ரெண்டு மூணு மைலுக்குள்ள வேலைன்னத்தாம் இந்த ஏழரை மணிக் கணக்கு. அஞ்சாறு மைலுக்கு அப்பால வேலைன்னா காலையில ஆறு மணிக்கெல்லாம் சாப்பாடு தயாரு ஆயி போஜனம் முடிஞ்சிடணும் அவருக்கு. இப்பவாவது கரண்டு வந்திருக்கு. வெளிச்சத்துக்குப் பஞ்சமில்ல. கரண்டு வர்றாத அந்த நாட்டுகள்ல வூட்டுல இருக்குற பொண்டுக வெளக்கைக் கொளுத்தி வெச்சிகிட்டு தடுமாறி தடுமாறி அஞ்சு அஞ்சரைக்கெல்லாம் சாப்பாட்ட முடிச்சி இவர்ர ஆறு மணிக்கெல்லாம் கிளப்பி வுடுறதுக்குள்ள படாத பாடு பட்டுடுங்க.
            அப்பல்லாம் எங்க போனாலும் நடைதானே. நடந்தேத்தாம் கிளம்புவாரு. அவரு கிளம்பி வெளியில வந்து நிக்குறதுக்குள்ள தொடுப்பு ஆளுங்க வந்து நிக்கணும். திண்ணையிலேந்து ரெண்டு வெள்ளை சாக்குல கட்டி வெச்சிருக்கிற சாமான் கட்டுகள தூக்கி நிக்குற ரெண்டு ஆளுங்ககிட்டயும் கொடுப்பாரு. மேலுக்குச் சட்டையைப் போட்டு, பெரிய தேங்காப்பூ துண்டு ஒண்ணு வெச்சிருப்பாரு. அதை நாலா மடிச்சி தோளுல போட்டுகிட்டு இறங்குவாரு. ஆளுங்க அவரு எடுத்துக் கொடுத்த சாமான் கட்டுகள தூக்கிக்கிட்டு இவரு பின்னாலயே வரணும். இவரு ராசா மாதிரி கம்பீரமா முன்னால நடந்து போவாரு. காலுல செருப்புப் போடுற பழக்கமெல்லாம் ரொம்ப காலத்துக்கு அவருகிட்ட இல்ல. இவரு நடக்குற வேகத்துக்கு ஆளுங்க பாவம் தூக்க முடியாம தூக்கிக்கிட்டு ஓடும்ங்க.
            சாமான் கட்டுகள தூக்கிகிட்டு வர்ற ஆளுங்க, "நேத்தி வேலைக்குப் போற எடத்துக்குத்தான்ன இன்னிக்கும் போறேம். சாமானுங்களே நேத்தியே அஞ்ஞயே வெச்சிட்டு வந்திருக்கலாம்ல. இப்படி நெதமும் தூக்கிக்கிட்டுச் செரமப்பட வேண்டிருக்கே மாமா!" அப்பிடின்னா போதும் பொங்கி எழுந்திடுவாரு மைக்கா ஆசாரி என்கிற கிட்டு ஆசாரி, "இன்னிக்கு எஞ்ஞ வேலைன்னு விடிஞ்சாத்தாம் தெரியும். இன்னிக்கு எஞ்ஞ சோலின்னு ஆண்டவேம் எழுதியாருக்கார்னு நமக்கு எப்டித் தெரியும்? எஞ்ஞ வேலைன்னாலும் அஞ்ஞ போக சாமானுங்களோட தயாரா இருக்கணும். திடீர்னு ஒரு அவசர வேலைன்னா சாமானுங்க அஞ்ஞ இருக்கு இன்னொரு நாளைக்குப் பாக்கணும்பீகளடா? அன்னன்னிக்கு வேலை முடிஞ்சா சாமானுங்கள கட்டி வூட்டுக்குக் கொண்டாந்துடணும். புரிஞ்சுதா?" அப்பிடிம்பாரு.
            "இன்னியோட அஞ்ஞ வேலைக்குப் போயி பாஞ்சு நாளுக்கு மேல ஆவப் போவுது. தெனமும் அதே எடத்துக்கு தூக்கிட்டுப் போயி, தூக்கிட்டு வந்து... யய்யோ முடியலடா சாமி இந்த மனுஷனோட!"ன்னு ஆளுங்க அவரு காதுக்குக் கேட்காத கணக்குல புலம்பிகிட்டே நடக்கும்ங்க.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...