25 Oct 2019

தேனி சீருடையானின் 'கடை' நாவல் - ஓர் எளிய அறிமுகம்




            கல்வி மாற்றத்தை உண்டு பண்ணுகிறது; வேலைவாய்ப்பினைத் தருகிறது; சமூக மாற்றத்தைத் ஏற்படுத்துகிறது என்று முன்வைக்கப்படும் வாதத்தினைக் கேள்வி கேட்கும் வகையில் விரிகிறது தேனி சீருடையானின் 'கடை' நாவல்.
            படிக்காமல் ஒருவர் இருந்திருந்தால் என்ன வேலையைச் செய்வாரோ, ‍அதே வேலையைத்தான் படித்த பின்னும் செய்வார் என்றால் அவர் கற்ற கல்வி அவருடைய வாழ்வில் என்ன விதமான மாற்றத்தை உண்டு பண்ணுகிறது என்பதைத் தன் நாவலின் வழியே வலுவான வினாவாக முன்வைக்கிறார் தேனி சீருடையான்.
            சந்திரன் நன்றாகப் படிக்கிறான். விளையாட்டிலும் சுட்டியாக இருக்கிறான். சுயமாக சிந்தித்து வினாக்களுக்குப் பதில் அளித்து ஆசிரியரின் பாராட்டைப் பெறுகிறான். படித்து பெரிய வேலைக்குப் போவான் என்று எதிர்பார்க்கப்படும் சந்திரன் படிப்பு முடிந்து பின்பு வேலைக்குப் போவதற்குப் பதிலாக தற்கொலையை நோக்கிப் போகிறான்.
            படித்தால் வேலை கிடைக்கும் என்று கனவு கலையும் போது அது தற்கொலையாக மாற்றம் பெறுகிறது சந்திரனுக்கு. படித்தால் இன்ன வேலையைச் செய்துதான் உயிர் வாழ வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா என்ன? உயிர் வாழ்வதற்கு கிடைத்த எந்த வேலையையும் செய்யலாம் என்று தள்ளுவண்டியில் பழங்களை விற்றுச் சம்பாதிக்க வழிகாட்டுகிறார் பழக்கடை நாகராசு. இப்படியாக பழக்கடை வியாபாரியாக மாறும் சந்திரனின் வாழ்க்கை 'கடை' நாவலாக  தோற்றம் கொள்கிறது.
            பழக்கடை வியாபாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள 'படித்த' சந்திரனுக்குப் 'படிக்காத' தாயின் நெஞ்சுரமே துணை நிற்கிறதேயன்றி படித்தப் படிப்பு துணை நிற்காமல் போகிறது. மனம் தடுமாறும் போதெல்லாம் துணை நிற்க வேண்டிய கல்விக்குப் பதிலாக அவனது தாய் ஒவ்வொரு பொழுதிலும் சந்திரனுக்குத் துணை நிற்கிறாள். அப்படித் துணை நின்ற தாய் ஒரு கட்டத்தில் கணவனின் சுடுசொல் பொறுக்காமல் தற்கொலை செய்து கொள்கிறாள்.
            தற்கொலை செய்து கொள்ள நினைத்த சந்திரன் தாயாலும், பழக்கடை நாகராசுவாலும் உயிர் வாழ்வதாகவும், சந்திரனைத் தலைநிமிர வைத்துத் துணை நின்ற தாய் தற்கொலை செய்து கொள்வதாகவும் நாவல் ஒரு முரணில் முடிகிறது.
            நாவல் சிறு / குறு / தள்ளுவண்டி / நடைபாதை வியாபாரிகள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களை ஒளிவு மறைவின்றி எதார்த்த தொனியில் பேசுகிறது. அவர்களின் எட்டு மணி நேரத்துக்கும் மேலான பனிரெண்டு அல்லது பதினைந்து மணி நேர உழைப்பையும் அதனால் அவர்கள் அடையும் அலுப்பு, சிடுசிடுப்பு, குடும்ப வாழ்வில் எதிர்கொள்ளும் எரிச்சல்கள், ஏமாற்றங்கள் மற்றும் மனச்சோர்வையும் நாவல் பதிவு செய்கிறது.
            சிறு அல்லது குறு வியாபரிகளின் வாழ்வில் அதிகாரமும், பணமும் உண்டு பண்ணும் அழுத்தங்களும், நெருக்கடிகளும் முக்கியமானவை. சந்திரன் வாழ்வில் அப்படிப்பட்ட அழுத்தங்களும் நெருக்கடிகளும் வருகின்றன. போலீஸ்காரர் ஒருவர் தனது அதிகாரத் தோரணையைப் பயன்படுத்திக் குறைந்து விலைக்குப் பழங்களை வாங்கிச் செல்கிறார். அதே போல பணம் படைத்த வியாபாரி ஒருவர் பணத்தின் தோரணையையும், தன் கடையின் அருகே கடை வைத்திருக்கும் அணுக்கத்தையும் பயன்படுத்திப் பழங்களைக் குறைந்த விலைக்கு வாங்கிச் செல்கிறார். சந்திரனின் பழக்கடையை அப்புறப்படுத்த காவல் துறையை ஏவி விடுகிறார் இன்னொரு பெரு வியாபாரி. பெரு வியாபாரி, சிறு வியாபாரி என்று இருவரும் வியாபாரிகள் என்றாலும் ஒரு பெரு வியாபாரி சிறு வியாபாரியைப் பார்க்கும் பார்வையும், சிறு வியாபாரியின் மேல் தனது ஆதிக்க அதிகார வர்க்கத்தின் மூலம் செயல்படுத்தும்  மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் நாவலில் நன்றாகவே பதிவாகியிருக்கிறது.
            மிக நேர்மையாக தேனி சீருடையான் பழ வியாபாரிகள் மாம்பழங்களைப் பழுக்க வைக்கப் பயன்படுத்தும் கார்பைடு கற்களைப் பற்றியும் நாவலில் விட்டு விடாது பதிவு செய்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
            தமிழில் 'கடை' என்பதற்கு வியாபாரம் செய்யும் இடம் என்ற பொருள் மட்டுமல்லாது 'கடை' என்பதற்கு முதல் - இடை - கடை என்று கடைநிலை என்ற பொருள் கொள்வதற்கான இடமும் இருக்கிறது. அவ்வகையில் கடை என்ற வியாபாரத்தின் இடமாக மட்டும் அல்லாமல், கடைநிலை மனிதர்கள் என்ற சொல்லப்படுகின்ற விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் நாவலாகவும் இந்நாவல் அமைகிறது.
            நாவலில் இடம்பெறும் பாத்திரங்களான சந்திரன், சந்திரனின் தாய், சந்திரனின் மனைவி, சந்திரனின் அப்பா, குத்தல் பழங்களை வாங்கிச் சென்று விற்கும் பெண்மணி, கடைக்கு வருபவர்கள், வியாபாரத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் என்று அனைவரும் ஒரு வகையில் கடைநிலை மனிதர்களாகவும், கடையோடு தொடர்புடைய மனிதர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வியலும், உளவியலும் நாவலில் பல இடங்களில் இயல்பாகப் பதிவாகியிருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் தனியொரு நாவலாக விரியத்தக்க கனம் பொருந்தியவையாகவும் இருக்கின்றன.
            நாவலின் வடிவமைப்பைப் பொருத்த வரையில் இந்நாவல் ஒரு சிறுகதையின் நீட்சியோ? அல்லது ஒரு குறுநாவலின் வடிவமோ? என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
            சிறு / குறு / நடைபாதை வியாரிகளின் வாழ்வியலையும், உளவியலையும் படம் பிடித்த வகையில் 'கடை' நாவல் தனித்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
*****



2 comments:

  1. அருமையான கண்ணோட்டம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா தங்களது பார்வைக்கும் கருத்துக்கும்!

      Delete

ரசனையின் சேதாரம்

ரசனையின் சேதாரம் ஒரு லாரி வந்து மோதுகிறது. அது ஒரு காருக்கு எப்படி இருக்கும்? கார் குட்டிக்கரணம் அடிக்கிறது. காரின் சேதாரமே பார்க்க பயங்கர...