26 Oct 2019

8.001



            ஓர் எழுத்தாளரை நீங்கள் என்னவென்று நினைக்கிறீர்கள்?
            நீங்கள் கதாநாயகரை விரும்புவீர்கள்!
            வில்லன் / வில்லியை வெறுப்பீர்கள்!
            எழுத்தாளரை என்ன செய்வீர்கள்? விரும்புவீர்களா? வெறுப்பீர்களா? எழுத்தாளரை நீங்கள் விரும்பவும் முடியாது. வெறுக்கவும் முடியாது. ஓர் எழுத்தாளர் நாயகராகவோ, வில்லனாகவோ / வில்லியாகவோ இன்னும் பிற குணாதிசயங்கள் கொண்டவராகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
            மற்றவர்களின் குணாதிசயங்களை விளக்க முற்படும் அவர் தன்னுடைய குணாதிசயங்களை மிகச் சாமர்த்தியமாக மறைத்த விடுகிறார். தன்னுடைய குணங்களுக்குச் சாமர்த்தியமான முகமூடிப் போட விரும்பும் ஒருவர் எழுத்தாளராகி விடுவார்.
            எழுத்தாளர் கதாநாயகரை உருவாக்குகிறார். அவர்தான் வில்லன் / வில்லியையும் உருவாக்குகிறார். எழுத்தில் காணப்படும் அனைத்துப் பாத்திரங்களையும் அவர்தாம் உருவாக்குகிறார். அவர் அப்படி உருவாக்கி விட்டு கதாநாயகருக்கு மட்டும் உரிமை கொண்டாட முடியாது. வில்லன் / வில்லியையும் அவர்தாம் உருவாக்குகிறார். அதற்கும் அவர்தாம் பொறுப்பேற்க வேண்டும்.
            உலகில் இருப்பதை, நடந்ததைத்தாம் எழுதுவதாகச் சொல்லி ஓர் எழுத்தாளர் தப்பி விட முடியாது. இருந்ததை அப்படியே, நடந்ததை அப்படியே ஓர் எழுத்தாளரால் எழுதவே முடியாது. அவரது கருத்தை, கற்பனையை, தாக்கத்தை அதில் புகுத்தியே அவர் எழுதுகிறார். அவர் பார்த்த நாயகரோ, வில்லனோ, வில்லியோ வேறு. அவர் எழுதிய நாயகரோ, வில்லனனோ, வில்லியோ நிச்சயம் வேறுதாம். அது அவரின் கலவை அல்லது அவரின் கற்பனைபடுத்தப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட வடிவம். இதை எந்த எழுத்தாளரும் மறுக்க முடியாது.
            எழுத்தில் கொலை நடக்கும் போது அது எழுத்தாளரின் அனுமதி இல்லாமல் நடக்க முடியாது. அவர்தான் அந்தக் கொலையை நிகழ்த்துகிறார். ரத்தத்தைத் தெறிக்க வைக்கிறார். உயிரை உருவ வைக்கிறார். அவர் நினைத்திருந்தால் அந்தக் கொலையை நிகழாமல் வேறு வடிவில் எழுத முடியும். அவருக்குக் கொலையின் மேல் இருக்கும் ஆர்வத்தின் காரணமாக அந்தக் கொலையை நிகழ்த்துகிறார். வாசகருக்கு விசித்திர அனுபவமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டும் அவர் எழுதியிருக்கலாம்.
            இந்த உலகில் இரண்டு விதமான சிரமங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று எழுத்தாளராக இருப்பது. இன்னொன்று கடவுளாக இருப்பது.
            எழுத்தாளராகப்பட்டவர் அவரது எழுத்தின் அனைத்து கமா, புள்ளி உட்பட அனைத்திற்கும் அவர்தாம் பொறுப்பு. கடவுளராகப்பட்டவர் அனைத்துப் படைப்புகளுக்கும், படைப்புகளின் கொலை, கொள்ளை, வன்மம், குரோதம் உட்ப அனைத்துக்கும் அவர்தாம் பொறுப்பேற்றாக வேண்டும். அரிவாளினைச் செய்தவர் அந்த அரிவாளால் நிகழ்ந்த கொலைக்குப் பொறுப்பேற்க முடியாது என நீங்கள் சொல்லலாம். வாஸ்தவம்தான். அது ஏற்கத் தக்கதுதான். அந்த அரிவாள் இல்லையென்றாலும் வேறு ஏதோ ஒன்றாலோ அந்தக் கொலை நிகழ்ந்திருக்கலாம். அப்படி நிகழ்ந்திருந்தால் அரிவாள் செய்தவர் அதிலிருந்து தப்பித்துக் கொள்வார். கொலைக்குக் காரணமான அந்தக் கருவியைச் செய்தவர் அதற்கு பொறுப்பாவார். கொலையை நிகழ்த்தியவருக்கு இதில் பங்கில்லையா என்றால் இருக்கிறது. அந்தக் கொலையை நிகழ்த்திய மனிதரைப் படைத்த தாய், தந்தை, அந்த மனிதரை வளர்த்தெடுத்த குடும்பம், சமூகம், தேசம் என்று நிறைய பங்குப் பரிவர்த்தனைகள் இருக்கின்றன. பின் அந்த மனிதனைப் படைத்ததாகக் கற்பிக்கப்படும் கடவுள் என்று பங்குப் பட்டியல் பெரியது.
            ஒரு கணத்தில் நடந்து விடும் ஒரு சம்பவத்தை அதாவது கொலையை, துர்சந்தர்ப்பத்தை அல்லது நல்தருணத்தை எழுத்தாளர் காலா காலத்துக்கும் எழுத்தாளர் கடத்துகிறார். ஓர் எழுத்தாளர் எழுத்தில் வடிக்கும் சொற்றோடர்களைக் காட்சியில் வடிக்கும் இயக்குநர் அதை விட கொடுமையானவர். அவர் காட்சிப் பிம்பங்களாக மேற்சொன்னவைகளை உறைய வைக்கிறார். அஃது காலத்தின் ஓட்டத்தில் தேங்கி உறைந்து நிற்கிறது. காலமும், சந்ததிகளும் அதிலிருந்து புதிது புதிதாக எதை எதையோ மீட்டுருவாக்கம் செய்து கொள்கின்றன.
            மனிதர்களின் அசலான குணத்தை அறிய நாம் எழுத்தாளர்களைப் பற்றி அறிய வேண்டியிருக்கிறது. அவர்கள்தாம் எதையோ எழுதுவாக நினைத்து மனிதர்களின் அசலான குணத்தைப் புட்டு புட்டு வைத்து விடுகிறார்கள். எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்று அறியப்படும் இவர்களை அறிந்து கொண்டு விட்டால் பல அசலான நாவல்களைப் படித்த அனுபவமும், உலக வரலாற்றை உற்றறியாமலே உற்றறியும் அனுபவமும் ஏற்பட்டு விடும்.
            இந்த நாவல் இப்படி சலிப்பான சில அத்தியாயங்களோடு தொடர்வது இதனால் தவிர்க்க முடியாததாகி விடுகிறது என்பதை வாசகர்களாகிய நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று இதனால் நாவலாசிரியர் நம்புகிறார்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...