5 Oct 2019

வீட்டுக்குள்ள நடக்குறதைக் கேட்காதீங்க!



செய்யு - 228
            மேகலா மாமியின் கழுத்திலேந்து எத்தனை முறை தாலி அவுந்து காத்துல பறந்துருக்குறங்கறதுக்கு ஒழுங்கான கணக்கு இல்ல. பார்த்தவங்க அதை நாளு, கிழமைப் போட்டு பதிவு பண்ணிருந்தா அது ஒரு கணக்குல வந்திருக்கும். தாலியை அவுத்து வீசுறது அதுக்கு ஒரு பழக்கம போயிடுச்சு. பாக்குறவங்களுக்கு அதப் பார்த்துப் பாத்து அதுவும் ஒரு பழக்கமாப் போச்சு. இது என்னடா தமிழ்நாட்டோட புதுப்பழக்கமா போச்சுன்ன விசயம் தெரிஞ்சவங்களும் இதெப் பத்தி ஆராய்ச்சிப் பண்ணிட்டுத்தாம் இருக்காங்க.
            வீயெம் மாமாவைக் கூப்புட்டுக் கேட்டா, "யம்மா மேலத்தாம் தப்பு இருக்கு! வயசான காலத்துல இது ஏம் ஏவ் ஏவ்ன்னு ஏப்பம் வுட்டுகிட்டு கெடக்குது?" அப்பிடிங்குது. வீயெம் மாமாவுக்கு வயசான காலத்துல எப்படி ஏப்பம் வரப் போவுதுன்னு தெரியல. ஏன் தெரியலன்னா அதுக்குள்ள இதப் பத்தி எழுதிட்டு இருக்கோமே, இது ஒரு முடிவுக்கு வந்துடும்.
            சரின்னு சாமியாத்தாவைக் கூப்பிட்டுக் கேட்டா, "சின்னப் பயலுக்குக் கலியாணத்தக் கட்டி வையுங்க! புதுசா வர்றவ நம்மள நல்லா பாத்துப்பான்னு" சொல்லுது.
            குமரு மாமாவையும் கூப்பிட்டுக் கேட்க வேண்டியிருக்கே. அதைக் கூப்புட்டுக் கேட்டா, "யம்மாவைத் தனிக்குடித்தனம் போவச் சொல்லுங்கோ!" அப்பிடிங்குது. "இவன்லா தனிக்குடித்தனம் போவணும். இவ்வேம் ன்னப்பா ஆயாள தனிக்குடித்தனம் போவச் சொல்றான்னு?" ஊருக்குள்ள முன்னால வாயைப் பொத்திகிட்டு பின்னால எதால சிரிக்கக் கூடாதோ அதால பெரிசுக எல்லாம் சிரிக்குதுங்க.
            மேகலா மாமியைக் கூப்பிட்டுக் கேட்டா, மொறை மொறைக்குது. ஒங்கக் கேள்விக்குல்லாம் ன்னடா பதில் சொல்றது அப்பிடிங்ற கணக்கா இருக்கு அது.
            நிலைமையைக் கேள்விப்பட்டு சுப்பு வாத்தியாரு அவரோடு மவள் செய்யு இருக்காளே அதெ அனுப்பி வெச்சு சாமியாத்தாகிட்ட சொல்லி விட்டு, இஞ்ஞ வரச் சொல்றாரு.
            "மருமவ்வேம் வூட்டுல போயி உக்காந்துட்டா மாமியாக்காரின்னு நாளைக்கு ஊரு காறித் துப்புமே! மூத்தப் புள்ள வூட்டுல பெத்தவ இல்லன்னு பீத்த நாயெல்லாம் நாளைக்குப் பேசித் திரியுமே! ஊரு காணாத அதிசயாமல்லா இருக்குன்னு பேரு கெட்டுப் போவுமே! யாண்டி நம்மளப் பெத்த எம் ஆயாவே இப்படி ஒம்மட ஆத்தாளுக்குப் பேரு வாங்கி வர வைக்கவா ஒன்றட யப்பாரு வரச் சொன்னாரு!"ன்னு அது ஒரு ஒப்பாரியை வைக்குது.
            சிப்பூரு பெரியம்மா, சின்னம்மா, தேன்காடு சித்தி, பாகூரு சித்தி எல்லாரும் வந்துதாம் கூப்புட்டுப் பாக்குறாங்க. "மவ்வேம் இருக்குற வரைக்கும் மருமவ்வேம் வூட்டுல வந்துத் தங்குனா சாவுறப்ப கட்ட வேகாதுடி!" அப்பிடிங்குது சாமியாத்தா.
            "இஞ்ஞயே நீயி உசுரோடக் கெடந்து கட்டையில போ! உசுரோட இருக்குறப்ப வாழ்க்க இல்லையாம். கட்டையில போறத்துக்குத்தாம் வாழ்க்கய தேடுத்தாம்!" அப்பிடின்னு எரிஞ்சி விழுந்துட்டுப் போனுச்சு சாமியாத்தாவைக் கூப்பிட வந்து பாகூரு சித்தி.
            "யா யம்மா! நமக்கொரு தொணையில்லாம ரெட்டைப் புள்ளைங்கள வெச்சிகிட்டு கெடக்குறேம். பேயாம அஞ்ஞ வந்துக் கெடம்மா. ஒன்னய நாம்ம வெச்சிப் பாத்துக்கிறேம்!" அப்பிடிங்கது தேன்காடு சித்தி.
            "ஏம்டி ஒரு பொண்ண பெக்கலை. அதால மருமவ்வேம் வூட்டுல போயித் தங்க வாய்ப்புல்லன்னு நெனச்சிகிட்டுப் பேசுறீயாடி? கொன்னே புடுவேம் கொன்னு. ஓடிப் போயிடு. எம் மருமவ்வே கொன்னே போட்டாலும் இஞ்ஞதாம் சாவ்வேம். பொண்ணு வூட்டுல வந்து சாவ மாட்டேம் பாத்துக்க. சின்னவனுக்கு ஒரு பொண்ண பாத்தா வரப் போறவ்வே நம்மள ராணி மாரில்ல பாத்துப்பா. அதெச் செய்ய வக்கில்லாம ன்னத்தாடி பேச வந்துட்டே!" அப்பிடிங்குது சாமியாத்தா.
            "ஒன்னய ஒம் மருமவ்வே செருப்பால அடிச்சாலும் ஒம் கொழுப்பு ஒன்னய விட்டு எறங்குமா? வான்னு கூப்புடுறவள அசிங்கம் பண்ணியா அனுப்புறே. ன்னம்மமோ ஏதோன்னு சேதி கேள்விப்பட்டு பதட்டப்பட்டு ஓடியாந்தா நீயி இந்தப் பேச்சா பேசுறே? பெத்து வெச்சிருக்கீயே ஒரு புள்ளய. அது யாரு பேச்சக் கேட்குது? கட்டி வெச்சவ்வ ஒருத்தி இருக்காளே! அவ்வே அம்மணமா அலையுன்னா சொன்னா அதெல்ல கேட்குது. மானங்கெட்ட எடத்துல வந்து நாம்ம கேட்டேம் பாரு. ஒம் மருமவ்வளே வுட்டே நம்மள செருப்பால அடிக்கச் சொல்லு. அத்தோட வுட்டுப்புடாதே. கட்ட வெளக்கமாத்து இருந்தா அதயும் எடுத்தாந்து அதாலயும் அடிக்கச் சொல்லு. நம்மள நாலு சாத்துச் சாத்தச் சொல்லு. த்துப்பூ!" அப்பிடின்னு அது காறித் துப்பிட்டு எட்டாம் நம்பர் பஸ்ஸூல ஏறி எட்டு நாளு துக்கத்த சுமந்த கணக்காப் போயிடுச்சு.
            "ஏம்டா எஞ்ஞ அக்காளப் போட்டு இந்த பாடு படுத்துறே? கேக்க நாதியில்லன்னு நெனச்சிப்புட்டீயா?" அப்பிடின்னு முருகு மாமாவும், லாலு மாமாவும் வந்து சண்டைப் பிடிக்குதுங்க.
            "யய்யோ எம்ம குடும்பத்தக் கெடுத்துப்புடாதீங்க. கலைச்சுப்புடாதீங்க. நாம்ம வெச்சிக்கலன்னு சொல்லல. கஞ்சி ஊத்த முடியான்னு சொல்லல. இஞ்ஞயே இருக்கட்டும். அவ்வே சொல்றபடி கேட்டுத்தாம் இருக்கணும்னு சொல்றேம். வூட்டை வுட்டு வெரட்டி வுட்டா வந்துக் கேளுங்க. வூட்டுக்குள்ள நடக்குறதப் பத்தில்லாம் வந்து கேக்காதீங்க மாமா!" அப்பிடிங்குது குமரு மாமா.
            அதுவுஞ் சரிதான்னு அப்படியே ஆப்பாகி போவுதுங்க ரெண்டு மாமாக்களும். எங்க இதப் பத்தி இன்னும் பேசப் போயி, ஒங்க அக்காள தூக்கி ஒங்க வூட்டுல வெச்சிங்கோங்குன்னு குமரு மாமாவோ, மேகலா மாமியோ அனுப்பிச்சிடுமோன்னு நெனச்சி வந்த ரெண்டு ஆப்பையும் கழண்ட ஆப்பையா கழண்டுகிட்டுப் போவுதுங்க.
            ஊரெல்லாம் ஆளாளுக்கு சாமியாத்தாவையும், குமரு மாமாவையும் கேளோ கேளுன்னு கேட்டாச்சி. மேகலா மாமியாத்தாம் யாரும் ஒண்ணும் கேக்க முடியல. அட போங்கடா மசுரு ஒங்களப் பத்தியெல்லாம் தெரியும்ணு அது யாரு வந்தாலும் கதவ அடைச்சிச் சாத்திப்புட்டு உள்ளயே உக்காந்துக்குது.
            "யாரு யாரோ வந்து கேட்டாங்களே! இந்தப் பயெ வெகடு கெடக்குறான்னே. ஒரு வார்த்த வந்துக் கேட்டானா? அவ்வேம் வந்து கேட்டான்னாக்க இந்தப் பயலுக அடங்கிடுவானுங்களே!" அப்பிடின்னு ஒப்பாரி வைக்குது கடைசியா சாமியாத்தா.
            இந்தப் பயலும் ஒரு வார்த்தைப் போயி கேட்டிருந்தாத்தாம் என்ன? கேட்டிருந்தா, "எம் மவ்வேம், மருமவ்வே நம்மள ன்னா வேணாலும் செய்யும். நீயி யாருடா அதெ கேட்குறதுக்கு?" அப்பிடின்னுத்தாம் கடைசியல சாமியாத்தா கேட்கும். ஆனா அதுக்கு அது எதிர்பார்க்குற மாரியும் கேட்கணும், அது கடைசீயா அப்படிக் கேட்குதே அதையும் நின்னுக் கேக்கணும்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...