5 Oct 2019

1.0



தீராப் பேச்சின் பிரியர்கள்
            அபூர்வமாக நண்பர்கள் சந்தித்துக் கொண்டால் அப்படிப் பேசிக் கொள்கிறார்கள். லெளகிக விசயங்களுக்கு அதில் அணு அளவு இடம் உண்டால் என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை. இலக்கியம், எழுத்து, திரையுலகம் என்று அந்தப் பேச்சு சகல திசைக்கும் விரிகிறது. சக்தி, சித்தார்த், விகடு, ஆவணி இவர்கள் எல்லாரும் வில்சன் அண்ணன் வீட்டில் சந்தித்து விட்டால் அந்த இரவுக்கு விடியல் இல்லை. இரவு இவர்களுக்காகவே நீள்வது போல் நீண்டு கொண்டே போகிறது. விடிய விடிய கதைக்காத குறை.
            வில்சன் அண்ணனுக்கு சமீப காலமாக இதில் மனக்குறை வந்து போகிறது. முன்பு போல வந்து பேசுவதில்லை என்பதால் உண்டான வருத்தம் அது.
            எப்போது சந்திக்கப் போகிறோம், பேசப் போகிறோம் என்பது காலம் அறிந்த சூட்சமமாக மாறிக் கொண்டு வருகிறது. அந்தக் குறையைப் போக்க வந்தது போல இருக்கிறது கைபேசி. காசிப் புலவர் பேசும் உரையைக் காஞ்சியில் கேட்க வகை செய்ய வேண்டும் என்று சொன்ன பாரதிதான் நினைவுக்கு வந்து போகிறார்.
            அந்தக் கைபேசிதான் விகடுவையும், சித்தார்த்தத்தையும் சமயத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் இணைத்து விடுகிறது. அறுபது நிமிடங்களை ஆறு நிமிடங்கள் போல பேசி முடித்து விடுகிறார்கள்.
            அன்றும் அப்படித்தான்.
            விகடுவும் சித்தார்த்தும் எப்படியும் ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசியிருப்பார்கள்.
            விகடுவுக்கு இதில் பிரச்சனையில்லை. அவன் ஒரு வகையில் வேலை இல்லாத வெட்டிப்பயல். சித்தார்த்தும் அப்படியா என்றால்... அவர் நிலைமை வேறு. அவர் வேலைகளை வகுத்துக் கொண்டு திட்டமிட்டுச் செய்தாக வேண்டும். அவர் திட்டமிடாமல் செய்கிற வேலை ஒன்று இருக்குமானால் அது விகடுவுடன் பேசுவதாகத்தான் இருக்க வேண்டும். அவனுடன் பேசுவதென்றால் அவரின் நேரம் பறி போகப் போகிறது என்பதை அறியாத அப்பாவியாகத்தான் அவர் இருக்க வேண்டும். அது என்னடா நேரம் போறது தெரியாமலே அப்படிப் பேசிட்டு இருக்கே என்று வீட்டில் சலித்துதான் கொள்கிறார்கள்.
            அப்படி ஒரு மணி நேரத்துக்கு என்னதான் பேசிக் கொள்கிறோம்? இடையில் சின்ன சின்ன இடைவெளிகள் விழத்தான் செய்கிறது. அதுவும் அர்த்தப்பூர்வமான சங்கதியைச் சொல்லாமல் சொல்லி விட்டுப் போகிறது.
            என்னடா பெரிய வட்ட மேசை மாநாடா? அல்லது ஐக்கிய நாடுகள் அவையில் பேசியதா? அதை இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து எழுதுகிறாயே என்று கேட்டு விடாதீர்கள். இந்தப் பூமிப் பந்தில் எந்தப் பேச்சுதான் முக்கியத்துவம் குறைந்ததாக இருக்கிறது. ஏதோ ஒரு பிரபஞ்சத்தின் லயம் அதில் இழையோடி விடத்தான் செய்கிறது.
            விகடுவும், சித்தார்த்தும் எழுத்தையும், எழுத்தாளர்களையும் ஒரு பிடி பிடித்துக் கொண்டார்கள்.
            எழுத்தாளர்களின் ஆரம்ப சில வரிகளில் வேண்டுமானால் எழுத்தாளரின் முயற்சி இருக்கலாமே தவிர, அதற்குப் பின்னான வரிகளுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற கருத்து இருவருக்குமே உவப்பாகவே இருக்கிறது. அந்த வரிகளுக்குச் சுற்றியிருக்கும் ஏதோ ஒன்று காரணமாக இருக்கிறது. அது எழுத்தின் வடிவில் தன்னை சித்திரமாய்த் தீட்டிக் கொள்கிறது. எழுத்தாளரை ஒரு கருவியாய்ப் பயன்படுத்திக் கொள்கிறது. மற்றபடி தான் எழுத்தாளர் என்று பீற்றிக் கொள்வதில் எழுத்தாளருக்கு என்ன பங்கு இருக்கிறது?
            சுற்றியிருக்கும் மனிதர்களே... தப்பு தப்பு... சுற்றியிருக்கும் ஒவ்வொன்றுமே எழுத்தாளர்களை ஏதோ பண்ணி எழுத வைக்கிறார்கள் / வைக்கின்றன. அதில் அஃறிணை என்ன? உயர்திணை என்ன? எல்லாம் உயர்திணைகள்தான்.
            அந்த ஒவ்வொன்றும் எப்படி மனசுக்குள் புகுந்து கொள்கிறார்கள்? எப்படி எழுத்தாய் மாறிப் பிரசவம் ஆகிறார்கள்? அது ஒரு சுகமான அனுபவமாக இருக்கிறது. அந்தச் சுகத்திற்காக ஆசைப்பட்டு சமயத்தில் எழுதாமல் இருக்க முடியவில்லை. அது பிரவாகமாக பெருகிக் கொண்டே போகும் போது குழந்தைகளை வரிசையாகப் பிரசவித்துத் தள்ளுவது போல இருக்கிறது.
            பிரபலமான எழுத்தாளர்களின் எழுத்துகளைப் படிக்கும் போது ஒரு பிரச்சனையைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அது என்னவென்று நாளைப் பார்ப்போமே! ஒரு நேரடியான உரையாடல் நாவலில் சாத்தியமாகாமல் போய் விட கூடாதல்லவா! அதனால் இப்படி!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...