4 Oct 2019

எதுக்குடா பொண்டாட்டிய கட்டுனே?



செய்யு - 227
            வீயெம் மாமாவுக்கு வயசு ஏறிக் கொண்டே இருக்கு. சுப்பு வாத்தியாரு ஆன மட்டும் அதுக்குப் பொண்ணு பார்த்து சோர்ந்து போனதுதாம் மிச்சம். சிப்பூரு பெரியப்பா, சித்தப்பாவும் தங்களோட பங்குக்குப் பார்த்துகிட்டுத்தாம் இருந்தாங்க. பாகூரு சித்தப்பாவும் விடல. எவ்வளவு பார்த்தாலும் வீயெம் மாமாவுக்கு திருப்திபட்டு வரல. எப்படியாவது சின்ன மச்சானுக்குக் கல்யாணத்த பண்ணி விட்டுட்டா தங்களோட தலைக்கு மேல கடமை முடிஞ்சுப் போகும்ங்றது அவங்களோட நெனைப்பு. வைத்தித் தாத்தா போன பிற்பாடு அந்தக் கடமை அவங்களுக்கு இருக்குறதா அவங்க நெனச்சிகிட்டுக் கெடக்காங்க. அதுவும் இல்லாம வடவாதியில குமரு மாமாவோடும், மேகலா மாமியோடும் சாமியாத்தாவுக்கு ஒத்துப் போகவே மாட்டேங்குது. வாடி, போடி என்ற அளவுக்கு சாமியாத்தாவுக்கும், மேகலா மாமிக்கும் பேச்சு ஆகிப் போச்சு. வீயெம் மாமாவுக்காவது மாமியாரோட அனுசரிச்சுப் போறது போல ஒரு பொண்ண பார்த்து கட்டி வெச்சிட்டா தேவலாம்னு அவங்களோட யோஜனை ஓடுது.
            இங்க வடவாதியில ஒவ்வொரு நாளும் சாமியாத்தாவுக்கும், மேகலா மாமிக்கும் நடக்குற வம்பு தும்பு, அமளி துமளி, சண்டெ இருக்கே. அது நெருப்பு மேல நிக்குறத விட கொடுமையா இருக்கு. வைத்தி இருந்த வரைக்கும் நெலம இவ்வளவு மோசமா இல்ல. அப்போ நெலம நல்லா இல்லன்னாலும் இந்த அளவுக்கு மோசமா போயிடல. இது தெனம் தெனம் நடக்குற ஒரு சங்கதியா ஆயிப் போச்சு.
            அன்னைக்கு குமரு மாமா பட்டறையிலேந்து வேலை முடிச்சு மத்தியான சாப்பாட்டுக்குத் திரும்புது. பட்டறைக்கும் வூட்டுக்கும் முப்பது தப்படி வெச்சா வந்துபுடலாம். அவ்வளவுதாம் தூரம். கஷ்டப்பட்டு காலையில போயி உழைச்சிட்டு வர்றவங்களுக்கு வீட்டுக்கு வந்தா சாப்பாடு தயாரா இருந்தா மனசு குளுந்துப் போவும். இங்க குமர மாமா வரப்போ அதுக்கு மனசு குளுந்து போறது போலயா சூழ்நிலை இருக்கான்னா அப்படி இல்ல. ஆத்தாவும், மாமியும் சண்டைக்கு நிக்குதுங்க. சண்டைன்னா சண்டை அது தினுசான சண்டை. சில நாட்கள்ல ரண்டும் முடிய பிச்சிகிட்டு நிக்குற அளவுக்குச் சண்டைக்கு நிக்குதுங்க. சில நாட்கள்ல ரண்டும் அழுகாச்சிப் போட்டி வெச்ச கணக்கா யாரு அதிகமா அழுவுறுங்க மாரி சண்டை வெச்சுக்குதுங்க. சில நாட்கள்ல ரண்டும் ஒண்ணும் பேசாமா முதுகுக்கு முதுகு திரும்பிக்குதுங்க. இந்தச் சண்டை நடக்குற நாட்கள்ல பல நாட்கள் சாமியாத்தா பட்டினியாத்தான் கெடக்குது. அதெ ஏன் என்னான்னு கேட்க அந்த வூட்டுல ஒரு நாதியில்ல.
            ஒவ்வொரு நாளு சண்டையும் ஒவ்வொரு வெதம்ன்னா அன்னைக்கு நடந்த சண்டை வேற லெவல்ங்ற கணக்கா ஆயிப் போச்சு.
            பேச்சுல ஆரம்பிச்ச சண்டை மூச்சே நின்னுப்புடுங்ற நிலைக்கு வந்து நின்னுடுச்சு.
            "ஒங்க யம்மா ன்னா எப்ப பாத்தாலும் தின்னுப்புட்டு ஆவ் ஆவ்ன்னு ஒரு மாரியா ஏப்பம் வுட்டுகிட்டே உக்காந்து இருக்கே! ஆம்புளதான்ன நீஞ்ஞ! எதையும் கேக்க மாட்டீங்களா?" அப்பிடின்னு மாமி மாமாவைப் பார்த்து ஆரம்பிக்குது.
            "ஏண்டியம்மா நாம்ம பாட்டுக்கு ஒரு ஓரத்துல குத்த வெச்சி உக்காந்து இருக்கேம். ஒனக்கென்னடிய்யமா ஆயிப் போச்சு. ஒங்க அம்மாவுக்கு இப்படி இருந்தா இப்படித்தான் பேசுவீயோ?" அப்பிடிங்குது சாமியாத்தா.
            "எங்க யம்மா ஒண்ணும் இப்பிடியில்லாம் பண்ணிட்டு உக்காந்துருக்காது. யம்மான்னா யம்மாதாம். நீயும் அஞ்சு பொண்ண பெத்தவத்தான. இப்பிடியா நடந்துப்பே?" அப்பிடிங்குது மேகலா மாமி.
            "பாருடா! ஒம் முன்னாலயே ன்னா பேச்சுப் பேசுறா? நீயி இல்லாதப்பா இன்னும் மோசமா பேசுறாடாம்பீ. நாம்ம கோனாரு வூட்டுலயே உக்காந்து இருக்க வேண்டியிருக்குடாம்பீ. சோத்துக்குச் சித்த நேரம் வந்து உக்காந்தா அதுக்கும் பாட்டு வுழுதுடாம்பீ!" அப்பிடிங்குது சாமியாத்தா.
            "ன்னாங்க ஒங்க யம்மா இந்தப் பேச்சு பேசுது. ஒண்ணும் பேச மாட்டேங்றீங்களே?" அப்பிடிங்குது மேகலா மாமி.
            "யே யம்மா ஏம் இப்பிடிப் பண்றே? அவ்வே சொல்ற மாரி கேட்டாத்தாம் ன்னா? வயசான காலத்துல ஏம் யம்மா இப்பிடிப் பிரச்சென பண்றே?" அப்பிடிங்குது குமரு மாமா.
            "பொண்டாட்டி வந்த ஒடனே அவ உசந்துட்டா. பெத்தவ நாம்ம மட்டமாயிட்டேம். நீயி ஒண்ணும் கேக்காம போனா கூட சந்தோஷமா இருந்துக்கும்டா, பெத்தவளுக்கும் பொண்டாட்டிக்கும் மல்லுகட்ட முடியாம புழுங்கிப் போறான்னு.  பெத்தப் புள்ளே நீயே இப்பிடிப் பேசுறப்ப யாரோ பெத்த புள்ள நம்மள இப்பிடிப் பேசுறத நெனச்சி கவலப்பட முடியுமா?" அப்பிடிங்குது சாமியாத்தா.
            "ந்த்தா மாமியாக்காரின்னு ஒரு மருவாதிக்குப் பார்த்தா யாரப் பாத்து யாரு பெத்த புள்ளங்றே? நம்மள பெத்த அவங்க ஒனக்கு சம்மந்தித்தான்னே. அவங்க யாரோவா ஒனக்கு? வர வர ஒனக்குக் கொழுப்பு ஏறிட்டே போவுது. ஆக்கிப் போடறேம்ல. அதெ உக்காந்து தின்னுப்புட்டுக் கெடந்தா இப்படித்தாம் ஆகிப் போவும். ரண்டு வேள சோத்த கொறைச்சித் தின்னணும். உக்காந்து கட்டு கட்டுன்னு கட்டிகிட்டா. பேசுது பாரு பேச்ச!" அப்பிடிங்குது மாமி.
            "ஏம்டி இப்பிடிப் பேசுறே? சித்தே வேலையிலேந்து வந்தா மனுசனுக்கு நிம்மதி இருக்கா? அஞ்ஞயே வேலயே பாத்துட்டு இருந்துருக்கலாம். இனுமே பசின்னு வூட்டுப்பக்கம் வாரக் கூடாது. வாராதலாதான இப்படியில்லாம் பண்ணிகிட்டுத் திரியுறீங்க? வூட்டுல இருக்குறது ரண்டு பொண்டுங்க. வூட்டப் போட்டு ரண்டு ரண்டா பண்ணுறீங்களே!" அப்பிடிங்குது குமரு மாமா.
            "யே யப்பா! நீயி நல்லபடியா சாப்பிடுய்யா! நாம்ம ஒம்ம பொண்டாட்டிச் சொல்றபடி கேட்டுக்குறோம்யா! சாப்பிடாம கொள்ளாம போயிடாதய்யா. நம்ம மேலதாம் தப்பாப் போச்சு!" அப்பிடின்னு அழ ஆரம்பிக்குது சாமியாத்தா.
            "நடிக்காதேடி! தேவிடியா முண்டே! இப்பிடி நடிச்சுத்தாம் நடிச்சுத்தாம் ஒம் மவனெ மயக்கி வெச்சிருக்கே! ஏய் நாற முண்டே ஏம்டி இப்ப அழுவுறே?" அப்பிடிங்குது மேகலா மாமி.
            "அய்யோ பாத்தியாடாம்பீ! நம்மள எப்பிடியெல்லாம் பேசுறா? இதெக் கேட்டுட்டு உசுர வெச்சிட்டு இருக்குறபடி வெச்சிட்டான்னே ஆண்டவேம்!" சாமியாத்தாவின் அழுகை அதிகமாகுது.
            "இந்தாரு மேகலா! ன்னாடி பேச்சு இது? நானும் பாத்துட்டு இருக்கேம். வாய்க்கு வந்தபடி பேசிட்டே இருக்கே?" அப்பிடிங்குது குமரு மாமா ஆத்திரமாய்.
            மேகலா மாமிக்குக் கோபம் கோபமாய் வருது. "நீயெல்லாம் எதுக்குடா நம்மள கட்டிகிட்டே? ஒங்க அம்மாவே கட்டிகிக்க வேண்டியத்தானே! ஒங்க அம்மாவயே கட்டிட்டு அழ வேண்டியத்துதானே!" மேகலா மாமியின் குரல் கோபத்தின் உச்சியில் கீச்சுக் குரலாய் வருது.
            "அளந்து பேசு. மருவாதி கெட்டத் தனமா பேசுன்னே... பல்ல தட்டிப்புடுவேம் பாத்துக்க!" என்குது குமரு மாமா.
            "தட்டுவடா தட்டுவே! ஆயியும் மவனும் சேந்து இன்னொரு வூட்டுப் பொண்ணுன்னா ன்னா வாணாலும் பண்ணுவீங்க. கொல கூட பண்ணுவீங்கடா. ஒனக்கு எதுக்குடா பொண்டாட்டி? எதுக்குடா நமக்குத் தாலி கட்டுனே?" என்குது மேகலா மாமி. இவ்வளவு பேசிடுச்சே. அத்தோடு நிறுத்திக் கொள்ளும் என்று நினைத்ததுதான் தப்பாப் போவுது. அடுத்தக்கட்டத்துக்குத் தாவுது மாமி. தாலிக் கயித்த அவுத்து குமரு மாமாவின் மூஞ்சுக்கு நேரா வீசுது.
            "அய்யோ பாதகத்தி. வெள்ளிக் கெழம அதுவுமா? ன்னா காரியம்டி பண்றே மூதி?" அப்பிடிங்குது சாமியாத்தா அடித் தொண்டையில செருமினபடி.
            "கட்டுடா இந்தத் தாலிய! ஒங்கம்மா கழுத்துல கட்டுடா நாடுமாறிப் பயலே. கட்டிட்டு ஒங்க அம்மாவோட குடும்பம் நடத்துடா!" அப்பிடிங்குது மேகலா மாமி.
            "யய்யோ இவ்வே அடங்க மாட்டாடாம்பீ! இவ்வே கொலகாரி. மனசுல நெனச்சதுக்காக ன்னா வாணாலும் பண்ணுவா! நீயி இவ்வே சொல்ற கேட்டபடி நடந்துக்கடாம்பீ! யய்யோ நமக்குன்னு வந்து வாச்சாளே மருமவ. குடும்பத்து குடலறுத்து மாலயா போட்டுக்குவா போலருக்கே!" அப்பிடின்னு தலயில ரண்டு கையாலயும் அடிச்சிகிட்டு அழுவுது.
            "நடிக்காதேடி. ரொம்ப நடிச்சேன்னு வெச்சுக்கே நடுத்தெருவுல நின்னுகிட்டு நீயி ஒம் மவனே வெச்சிருக்கேன்னு நாறடிச்சிப் புடுவேம் பாத்துக்கோ!" அப்பிடிங்குது மாமி.
            சாமியாத்தா அழுவுற வாய கையால பொத்திக்குது.
            குமரு மாமா முகத்துல கிடக்குற தாலிய கையால எடுத்துகிட்டு அப்படியே குந்துது. மூச் மூச்சுன்னு அழ ஆரம்பிக்குது. தலையில அடிச்சுக்குது. அப்புறம் அழுவுது. அழுவுறதும், தலையில அடிச்சிக்கிறதும்மா மாத்தி மாத்திப் பண்ணுது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...