28 Oct 2019

9.123



            பிரதியின் நிழலை, பிரதியின் பிரதிப்பிம்பத்தைத்தாம் நீங்கள் சந்திக்கிறீர்கள். அதற்கே ஆகா, ஓகோ என்கிறீர்கள். நிஜம் உங்களுக்குப் பிடிக்காது என்பது எழுத்தாளர்களுக்குத் தெரியும், நாடகம் நடிப்பவர்களுக்கும் தெரியும், கலையை உருவாக்கும் கலைஞர்களுக்கும் தெரியும், திரைத்துறையில் இருப்பவர்களுக்கும் தெரியும், அரசியல் துறையில் இருக்கும் அன்பர்களுக்கு நன்றாகவே தெரியும்.
            எப்போதும் எழுத்து, எப்போதும் காட்சி ஊடகம் என்றிருந்தால் நிஜத்தை நீங்கள் எப்போது தரிசிக்கப் போகிறீர்கள்?
            எழுத்து உங்களைத் துண்டாடுகிறது. உங்கள் முழுமையைச் சீர்குலைக்கிறது. இப்படித்தான் என்ற ஓர் ஒற்றைப் புரிதலைத் தருகிறது. பலகோடி சாத்தியப்பாடுகளில் ஏதோ ஒன்றைத்தானே இந்த எழுத்துச் சொல்கிறது. அந்த ஒன்றையே உண்மை என்று நம்பி, அந்த ஒன்றின்படித்தான் எல்லாம் நடக்கும் என்று நம்பி நீங்கள் ஏமாறுகிறீர்கள். ஒரே எழுத்தை இருவர் எழுதினால் அது இரண்டும் இரண்டு வேறு விதமாகும். நீங்கள் ஒரே மாதிரியாக அல்லவா படிப்பீர்கள். அதுதாம் இங்கே பிரச்சனை.
            எழுத்துக்குத்தாம் பொது வடிவம் இருக்கிறது. அது சொல்லும் சங்கதிகள் ஒவ்வொன்றிற்கும் விதவிதமான வடிவங்கள். அதைத் தாண்டிய வடிவமும் இருக்கிறது என்பதை எழுத்துச் சொல்லாது. அது எழுத்தின் போதாமையன்று. அதைச் சொல்லி விட்டால் நீங்கள் எழுத்தை நெருங்க மாட்டீர்கள் என்பதன் அச்சம். எழுத்தாளரின் பேரச்சத்தை நீங்கள் அந்த இடத்தில் தரிசிக்கலாம். மேம்போக்கான படிப்புக்கு அந்தத் தரிசனம் வாய்க்காது. ஆழ்ந்தப் படிப்புக்கு அது வாய்க்கும் வாய்ப்பு இருக்கிறது.
            பாடப்புத்தகங்களின் படிப்பையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். வாந்தியெடுப்பதை விருப்பமுடன் உண்பது அது. பசித்த மானுடம் அதைத்தாம் செய்யும். அது மானுடத்தின் பிழையாகாது. மானுடத்தைப் பசியோடு வைத்திருப்பதன் பிழையாகும். இந்த மானுடம் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் எனும் பசியால் ரொம்பவே அவதிப்படுகிறது. அந்த அவதிக்கு வாந்தியின் சுவை பெரும் ருசியாக இருக்கிறது. வாந்தியெடுத்து வாந்தியெடுத்து அதைப் பருகுவது பெரு விருப்பமாக இருக்கிறது. சுய வாந்தியை விடவும் பிறரது வாந்தி அதுக்கு நாக்கை விட்டு அகலாக ருசியாக மாறிக் கொண்டிருக்கிறது.
            நீங்கள் சுயமாக சிந்திப்பவர்கள் என்பதை மறுக்கிறீர்கள். நேற்றுப் பார்த்தோமே அந்த டாஸ்மாக்குதான் அதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறது. குடிக்கும் போது உங்களை அறியாமல் சுயமாகப் பேசுகிறீர்கள். உங்களால் வெளிக் கொண்டு வர முடியாத உங்கள் சுயத்தைப் போதை வெளிக்கொண்டு வருகிறது. நீங்கள் டாஸ்மாக்கை விரும்புவதற்கு அது ஒரு முக்கியமான காரணம். டாஸ்மாக்கில் நீங்கள் எவ்வளவு சுய சிந்தனையையும், உண்மைகளையும் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைக்கலாம். அது ஏற்கப்படும் குடிகாரரின் உளறல்கள் என. அந்தப் போதை இல்லாமல் போட்டு உடைத்தால் நீங்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்வீர்கள். துப்பாக்கிக் குண்டு உங்கள் ரத்தத்தை ருசி பார்க்கலாம், உங்கள் எலும்பைக் கடித்து மென்று துப்பலாம். போதைக்கு எப்போதும் சுதந்திரம் உண்டு. சுயசிந்தனைக்கு எப்போதும் சுதந்திரம் இல்லை. உங்களுக்குப் புரிகிறதா?
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...