27 Oct 2019

புகழூரு மைனர்வாள்!



செய்யு - 250
            வேலங்குடி சின்னவருக்குச் சொந்த ஊருன்னு பார்த்தா வேலங்குடி கிடையாது. அவங்க சொந்த ஊரு புகழூரு. அவரோட பொறந்தவங்க மொத்தம் நாலு பேரு. இவரு கடைகுட்டி. மூத்தவருதாம் வேலங்குடி பெரியவரு. மித்த ரெண்டு பேரும் கல்யாணத்த கட்டிகிட்டு பொண்ணு வூட்டுப் பக்கமா அப்படியே திருச்சி பக்கத்துல போயிட்டாங்க. புகழூருல இருந்த அவங்களுக்குக் கொஞ்சம் நெலபுலங்க வேலங்குடியில இருந்துச்சு. அது ஒண்ணுதாம் வேலங்குடிக்கும் அவங்களுக்கும் இருந்த தொடர்பு. வேலங்குடி பெரியவரு சுப்பு வாத்தியாரோட மூத்த அக்காவைக் கட்டிக்கிட்டு வேலங்குடியில இருந்த நெலபுலத்த பாத்துகிட்டுக் குடும்பத்த ஓட்டிக்கிடலாம்னு புகழூர்லேந்து இங்க வேலங்குடிக்கு வந்துட்டாரு.
            சின்னவரு கடைகுட்டிங்றதல செல்லம் வேற அதிகம். புகழூர்ல அவரு மைனரு கணக்கா ரொம்ப நாளா ஊருல திரிஞ்சுகிட்டுக் கெடந்தாரு. நம்ம கிராமத்துலதாம் மைனருன்னா அதுக்கு ஒரு தனி அர்த்தம் இருக்குல்ல. அந்த அர்த்ததுக்கு எந்தவித கொறைவும், பங்கமும் வராம திரிஞ்சாரு. பொண்ணுங்களா பார்த்த விட மாட்டாரு. ஆளு பார்க்க அந்த வயசுல அப்படியே கரிச்சான்குஞ்சு மாதிரித்தாம் இருந்திருக்காரு. அதிலேயும் ஒரு கவர்ச்சியும், வசியமும் அவருக்கு இருந்திருக்கு. அத்தோட பேச்சு அப்படியே மை வெச்சதது போல பேசுவாப்புல. பத்தாதா சின்னவருக்கு? பத்திக்கிட்டுத் திரிஞ்சாரு. ஊர்ல இவரோட அட்டகாசம் தாங்க முடியாம பொம்பளப் பொறுக்கின்னே பேரு ஆகிப் பேச்சு. பேர்ல என்ன பெரிசா இருக்குன்னு அதையும் பொருட்படுத்தாமத்தாம் சின்னவரு அழிச்சாட்டியமா இருந்தாரு.
            இவரு வயசுக்கு அப்ப ஒரு பொண்ணு. கிட்டதட்ட அப்படி இப்படி சுத்தி வளைச்சுப் பார்த்தா இவருக்கு அத்தை மொறை வரும். அது பார்க்க கரிச்சட்டி கணக்கா இவர மாதிரி குட்டையாத்தாம் இருந்திருக்கு. கருப்புன்னாலும் அதுல ஒரு கவர்ச்சியும், வசியமும் இவர மாதிரி அந்தப் பொண்ணுக்கும் இருந்திருக்கு. அதுக்குக் கல்யாணம் ஆயி கொழந்த குட்டிக இல்லாம நாலைஞ்சு வருஷமா கெடந்திருக்கு. ஊருல எந்தெந்த பொண்ணையே பாத்துகிட்டுத் திரிஞ்சுகிட்டுக் கெடந்த சின்னவருக்கு ஒரு நாளு கல்யாணத்துல அத்தை மொறை வர்ற அந்தப் பொண்ண பாக்குற சந்தர்ப்பம் அமைஞ்சுப் போச்சு. பார்த்த அன்னிக்கே அந்தப் பொண்ணோட உருவம் அவரு மனசுல கல்வெட்டா பதிஞ்சுப் போச்சு. பிறவு என்ன படுத்தா, எழுந்திரிச்சா அந்தப் பொண்ணு ஞாபகமாவே போயிடுச்சு.
            இந்த ஊர்லயே இப்படி ஒரு பொண்ணு சொந்தத்துல இருந்திருக்கு? இத்தன நாளு பாக்காம விட்டுட்டுமேன்னு ரொம்ப நொந்துப் போயிட்டாரு சின்னவரு. அன்னிலேந்து அந்தப் பொண்ண குறி வெச்சு ரூட்டு விட ஆரம்பிச்சாரு சின்னவரு. அது தண்ணி தூக்கப் போனா, கொளத்துப் பக்கம் குளிக்கப் போனா கணக்குப் பண்ணி சுத்த ஆரம்பிச்சாரு. ஆளு ரொம்ப லாவகமான ஆளுங்றதால இவரு எந்தப் பொண்ணு கணக்குப் பண்ணி சுத்திகிட்டு இருக்காருன்னு ஊருல யாராலயும் கண்டுக்க முடியல. பொண்ணும் அத்தை மொறை வர்ற பொண்ணு இல்லையா. அதால ஊருலயும் பெரிசா யாருக்கும் எந்தச் சந்தேகமும் வரல.
            இப்படி நாளுங்க போயிட்ட இருந்தப்பத்தாம் ஆவணி அவிட்டம் வருது. இந்த வகையறாவுல அன்னிக்கு ஜாகையா எல்லாரும் ஊரு பொதுத்துறையிலயோ, கோயில்லயோ ஒண்ணா கூடி பூணூலு போட்டுகிட்டு அது ஒரு விஷேஷமா கொண்டாடுவாங்க. அன்னிக்கு நம்ம ஆளும் பூணூலெல்லாம் போட்டுகிட்டு ஜம்முன்னு உக்காந்திருக்காரு. அவரு நேரம் பாருங்க, அன்னிக்கு அத்தை மொறை வர்ற பொண்ணு ஒண்ணு பின்னாடி இவரு சுத்திகிட்டு இருந்தார்ல, அதோட புருஷங்காரம் இவர்ர பாத்துப்புட்டு, "என்னய்யா செளரியமா இருக்கீயா? ஒண்ணத்தாம் பார்ககணும்னு நெனச்சிட்டே இருந்தேம்யா! இன்னிக்குத்தாம் அந்த வரம் ஆண்டவம் மூலமா கெடச்சிருக்கு. வூட்டுப்பக்கம் வந்து ஒரு வாயி சாப்புட்டுப் போவணும்யா!" அப்பிடின்னிருக்காரு அவரு.
            "ஒரு நல்ல நாளா பாத்து வர்றேனுங்க மாமா!" அப்பிடின்னிருக்காரு நம்ம சின்னவரு.
            "அப்ப இன்னிக்கு நல்ல நாளு இல்லையா? இன்னிக்கே வாம்யா!" அப்பிடின்னிருக்காரு அவரு.
            சின்னவருக்குக் குஷியா போயிடுச்சு. மருந்துக்குக் கூட இன்னிக்கு ஆவணி அவிட்டமா இருக்கே, வூட்டுலத்தாம் சாப்பிடணும்ங்றதால இன்னொரு நாளைக்கு வர்றேம் மாமான்னு சொல்லாம, "நீஞ்ஞ சொன்னா சரித்தாம் மாமா!"ன்னு கெளம்பிட்டாரு. இத்தன நாளு எட்ட எட்ட வூட்டுக்கு வெளியிலயே பாத்துட்டு இருந்த பொண்ண கிட்டத்துல அதுலயும் அதோட வூட்டுல வெச்சிப் பாக்குற சந்தோஷம் அவருக்கு. அது மட்டுமா அந்தப் பொண்ணு கையால வேற சாப்புட போறோங்ற ஆனந்தத்துல எட்டுக்காலு நட வெச்சுப் போறாரு. அங்க அவரோட வூட்டுல, "ஒரு நல்ல நாளு அதுவுமா இன்னிக்காவது வூட்ல சாப்புடுறான்னா பாரு!"ன்னு அவருக்குத் திட்டு விழுந்துகிட்டு இருக்கு.
            அத்தை மொறை வர்ற பொண்ணோட வூடு நாட்டு ஓடு போட்டுருக்குற சுத்துக்கட்டு வூடு. அங்கங்க உத்திரமெல்லாம் வெச்சு பிரமாண்டமான வேலையில கட்டியிருக்கிற வூடு. அம்மாம் பெரிய வூட்டுல இந்த ரெண்டு பேருதாம் இருக்காங்கன்னு நெனைக்குறப்பவே சின்னவருக்கு அதிசய ஆச்சரியமா போவுது.
            வீட்டுக்குள்ள நுழைஞ்சு முத்ததுக்குப் போனதுமே அந்தப் பொண்ணு ஓடியாந்து பித்தாளை ஆனைக்கா குவளையில பிடிச்சு வெச்சிருக்கிற தண்ணிய ஒரு செம்புல மொண்டாந்து, "இந்தாங்க அத்தாம்!"னு அவரோட வூட்டுக்காரர்கிட்ட கொடுக்குது. அவரு வாங்கி கை, காலு அலம்பிக்கிட்டு கொடியில தொங்குற துண்ட எடுத்து தொடைக்கப் போறாரு. அப்பத்தாம் தயங்கி நிக்குற பொண்டாட்டிகிட்ட, "தம்பி! நம்ம தம்பித்தாம் ஆயி! தண்ணி மோண்டு கொடு!" அப்பிடிங்கிறாரு அவரு. அந்தப் பொண்ணும் அவரு வெச்சிட்டுப் போயிருக்கிற செம்புல தண்ணிய மொண்டு சின்னவருகிட்ட கொடுக்குது. சின்னவரு ரொம்ப பவ்வியமா, மருவாதியா வாங்கி கை, கால அலம்பிக்கிறாரு. ரொம்ப நாசுக்கா அலம்புற மாதிரி அலம்பிக்கிட்டே அந்தப் பொண்ண நல்லா நோட்டம் வுடுறாரு.
            அவரு அலம்பி முடிச்சதும் அந்தப் பொண்ணோட புருஷங்காரரு அதாவது நம்ம சின்னவருக்கு மாமாங்காரரு துண்ட கொடுத்து தொடைச்சிக்கச் சொல்றாரு. இவரு தொடைச்சி முடிச்சதும் சுத்துக்கட்டு கூடத்துல மேற்குப் பக்கமா ரெண்டு தடுக்குப் பாய போட்டு அந்தப் பொண்ணு அதாவது நம்ம சின்னவருக்கு அத்தைக்காரி தலைப்புள்ள வாழை இலையப் போட்டு கறி, காய்கள வெச்சு இலைக்கு நடுவுல கொண்டைக்கடல சுண்டல வைக்குது.
            "வாம்யா! வந்து உட்காரும்யா!"ன்னு மாமாங்காரரு சின்னவரு கையப் பிடிச்சி கொண்டாந்து உக்கார வெச்சி அவரும் உக்காந்துக்கிறாரு. இவுக ரண்டு பேரும் சுண்டல தின்னு முடிச்சதும் அத்தைக்காரிப் பொண்ணு சோத்தை வெச்சி சாம்பார்ர ஊத்த வருது. நம்ம சின்னவரு, "ரசம் இல்லையா?"ங்றாரு.
            "அட என்னம்யா நீயி ஒரு ஆளு? சாம்பார்ர ஊத்தறதுக்கு மின்னாடி ரசம்னா வெத்து ரசத்துல ஒடம்புக்கு என்னம்யா சேரும்? சாம்பாருல பருப்பும், கறி காயும் ஒடம்புல சேந்தாத்தாம்யா ஒடம்பு புஷ்டியா இருக்கும்யா!" அப்பிடிங்கிறாரு மாமாங்காரரு.
            "அத்தில்லீங்க மாமா! ரசத்த ஊத்தித் தின்னுபுட்டு பிற்பாடு சாம்பார்ர ஊத்தித் தின்னா நல்லா செரிமானத்துக்கு வவுறு தயாரா இருக்கும். ரசத்த ஊத்தித் தின்னு சாம்பார்ர ஊத்தித் தின்னு பாருங்க! சாம்பாருல எல்லா சங்கதியும் அப்படியே சேதார இல்லாம ஒடம்புல ஒட்டும். செரிமான கோளாறே வாராது பாருங்க மாமா!" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            "அடேங்கப்பா! என்னம்யா தம்பி நீயி! ஆஷ்ட்டார அனுஷ்டானத்துல நம்மள மிஞ்சுன ஆளா இருப்பே போலருக்கேய்யா! ஒங்கிட்டயிருந்து இத்த இன்னிக்கு நாம்ம கத்துகிட்டேம். நெறைய விசயம்லய்யா தெரிஞ்சிருக்கு ஒனக்கு. இனுமே ஊரச் சுத்திட்டுத் திரியாம வேல வெத்துக்குப் போயி நல்ல வெதமா மின்னேறம்னுய்யா! ஒங்க ஆயி அடிக்கடி நம்மகிட்ட சொல்லி ஒன்னயப் பத்தி வருத்தப்படும்யா! ஒமக்குப் புத்திச் சொல்லணும்னு கேட்டுக்கும்யா! அதாங் இன்னிக்குப் பாத்து நைசா ஒன்னய வூட்டுப்பக்கம் கொண்டாந்திட்டேம். இது மாதிரி சங்கதிகள பொது எடத்துல வெச்சிப் பேச முடியா பாரு. அதாங் வூட்டுல அழச்சாந்து பக்குவமா சொல்லணும்னு நெனைச்சிட்டு இருந்தேம். ஆனா ஆளு நீயி நமக்கே புத்திச் சொல்ற ஆளால்ல இருக்கேய்யா! வூட்டுப்பக்கம் அடிக்கடி நீயி வரணும்யா! வந்து ரண்டு வாயி சாப்பிட்டுப் போய்யா அடிக்கடி!" அப்பிடிங்கிறாரு மாமங்காரரு.
            "சரிங்க மாமா! நீஞ்ஞ சொல்ல வர்றத எம்மாம் பக்குவமா சொல்லிப்புட்டீங்க! ஒங்கள மாதிரி எல்லாரும் இருந்துப்புட்டா எளஞ்செட்டுங்க நாஞ்ஞ ஏம் மாமா கேக்காம போறேம்?" அப்பிடிங்கிறாரு மாமா.
            ரசத்த முடிச்சு, சாம்பார்ர முடிச்சா, "பெறவு என்னய்யா எப்டிய்யா சாப்பிடணும்?"ங்றாரு மாமாங்காரரு.
            "பாயாசந்தாம்! அப்பளத்த ஒண்ணுக்கு ரெண்டா வெச்சி அது மேல பாயாசத்தை ஊத்தி ரண்டு உளுத்தம் வடையையும் வெச்சி அப்டியே பெசைஞ்சி மாமா உள்ளுக்குள்ள வுட்டா மாமா ஒடம்பு ச்சும்மா முறுக்கிக்கிட்டு இறுக்கிக்கும் மாமா!" அப்பிடிங்கிறாரு சின்னவரு அத்ததைக்காரிய ஒரு விஷமப் பார்வை பாத்துக்கிட்டே.
            ஒரு தடவெ வெச்சி ரெண்டு அப்பளத்தையும், நாலு கரண்டி பாயாசத்தையும், ரெண்டு உளுத்த வடையையும் பெசஞ்சு சாப்பிட்டாலே அது தெவட்டும். நம்ம சின்னவரு நாலு தடவெ அப்படிச் சாப்பிடுறாரு. தெவட்டல அவருக்கு. மாமாங்காரரு ஒது தடவெ சாப்பிட்டுட்டு இதுக்கு மேல சாப்புட முடியாதுன்னு தயிர ஊத்திச் சாப்பிடாமலயே எழுந்திரிச்சிடாரு.
            "சாப்புட்டு வாம்யா! கூச்சப்படாம சாப்புடும்யா! நாம்ம திண்ணையில உக்காந்து தாம்பூலம் தரிச்சிட்டு இருக்கேம்யா!" அப்பிடின்னு வெளிக்குக் கிளம்பிப் போறாரு மாமாங்காரரு.
            நாலு தடவ அப்பளம், பாயாசத்த வெச்சி அத்தைக்காரிப் பொண்ணுக்கே அலுத்துப் போவுது. "போதுமா! இன்னும் வைக்கணும்மா?"ன்னு அது எளக்காரமாவே கேட்குது.
            "இருந்தா இன்னங் கொஞ்சம் வைக்கிறது?" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            "வெறுங் குண்டாத்தாம் இருக்கு!"ன்னு அத்தைக்காரிப் பொண்ணு வெத்துக் குண்டான்ன தூக்கிக் காட்டுது.
            "அய்யோ! இன்னுஞ் சாப்புடணும் போலல்ல இருக்கு! இந்த மாதிரி பாயாசத்த ஆயூசுக்குச் சாப்பிட்டதில்ல! அமிர்தம் மாதிரில்லா இருக்கு! ன்னா அமிர்தம் மாதிரி? அமிர்தாம்மல இருக்கு! அமிர்தம்லாம் ரொம்பக் கெடைக்காதும்பாங்க! அத்து சரியால்ல இருக்கு! நாம்ம கொடுத்து வெச்சது அவ்வளவுதாங்!" அப்பிடின்னு எழும்ப நெனைக்கிறாரு சின்னவரு.
            "தயிரு ஊத்திச் சாப்புடாம விருந்து நெறையாதுங்களே!" அப்பிடிங்குது அத்தைக்காரிப் பொண்ணு.
            "ஆமே! தயிர ஊத்துன்னா ஒங்களுக்கு மிச்சமில்லாமல்ல யத்தே தின்னுப்புடுவேம். அதாங் பாக்குறேம். இன்னொரு நாளிக்குப் பாக்கலாம்!" அப்பிடின்னு மறுபடியும் எழும்புறாப்புல போக்குக் காட்டுறாரு சின்னவரு.
            "விருந்தாளிய அர வயிறும் கொற வயிறும்மா அனுப்புவாங்க? அதுவும் அவிட்டத்து அன்னிக்கு? உக்காந்துத் தின்னுப்போட்டுப் போங்க!"ன்னு அரைக்குண்டாஞ் சோத்தை அப்படியே எலையில கவுத்து தயிரை ஊத்துது அத்தைக்காரிப் பொண்ணு. 
            "ஒங்க கைச்சமையல குண்டாம் குண்டமாம்மா தின்னாலும் ஆசெ தீராது போலருக்கே!" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            "நெசமாவா சொல்லுதீங்க?" அப்பிடிங்குது அத்தைக்காரிப் பொண்ணு.
            "பின்ன பொய்யா சொல்லுவேம்?" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            "நம்மள கட்டிக்கிட்டவரு ஒரு நாளு இப்பிடிச் சொன்னதேயில்ல!"ன்னு அதோட கண்ணுக்குள்ள கண்ணுத்தண்ணிக் கட்டிக்கிது.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...