27 Oct 2019

9.0



            எழுத்தாளர் எழுத்தில் கொலை செய்தால், வாசகர்கள் கொலைக்கான சாட்சியா?
            பார்த்தீர்களா? ஓர் எழுத்தாளர் எவ்வளவு சாமர்த்தியமாகச் செயல்படுகிறார்!
            நீங்கள் எழுத்தாளரை என்றைக்காவது கேள்வி கேட்டிருக்கிறீர்களா?
            மைக்கைப் பிடித்து பேசுபவரை மைக்கைப் பிடித்து கேள்வி கேட்டிருக்கிறீர்களா?
            எழுதுபவர்களுக்கு, மைக் பிடிப்பவர்களுக்கு தனி தைரியத்தைக் கொடுக்கிறீர்கள் நீங்கள். அவர்களை நீங்கள் வழிபடுகிறீர்கள். உங்களது வழிபாட்டை அவர்கள் தங்களுக்கான சுதந்திரமாக எடுத்துக் கொள்கிறார்கள்.
            எதை எழுதினாலும் பொழுதுபோக்காக நீங்கள் படிக்க ஆரம்பித்து விடுகிறீர்கள் என்ற குற்றசாட்டை நாவலாசிரியர் வாசகர்கள் மேல் சுமத்த விரும்புகிறார். இதை நீங்கள் ஏற்கலாம். ஏற்க மறுக்கலாம். இதற்காகத்தாம் நாங்கள் படிப்பதேயில்லை என்று நீங்கள் ஜல்லியடிக்கலாம். அப்படியானால் இதைப் படிப்பது யார்?
            இதெல்லாம் எதற்காக? ஒரு நாவல் என்றால் இந்நேரம் கதை தொடங்கியிருக்க வேண்டும். கதையின் முக்கிய முடிச்சுகள் எக்காளமிட்டு ஓடத் துவங்கியிருக்க வேண்டும். ஏதோ பேருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக விட்ட குறை தொட்ட குறையாக மட்டும் கதை தொடங்கியிருக்கிறது. எதற்காக இதெல்லாம்? வாசகர்களை முழுமையான விழிப்புணர்வைப் பெற வைக்காமல இந்த நாவலைத் தொடங்கி விடக் கூடாது என்பதில் நாவலாசிரியர் உறுதியாக இருக்கிறார்.
            ஓர் எழுத்தாளர் என்பவர் சராசரி கிறுக்குக்குச் சற்று மேலே நிற்பவர். ஞானியின் கிறுக்குக்குச் சற்றுக் கீழே நிற்பவர். அவருக்கு எழுத்தின் கவர்ச்சி அப்படித்தான் வந்து சேர்கிறது.
            வாழ்க்கை முழுவதும் கோர்வையாகப் பேசிப் பேசி நாம் கோர்வையற்றுப் பேசும் கிறுக்குகளின் பேச்சை ரசிக்க ஆரம்பிக்கிறோம். அதை நகைச்சுவை எனக் கொண்டாடுகிறோம்.
            அபத்தங்களும், அல்பங்களும் நம்மைச் சூழ சூழ பட்டவர்த்தனமாகப் பேசிப் பேசிப் பழகி ஞானிகளின் சூட்சமமான உளறல்களை ரசிக்க ஆரம்பித்து விடுகிறோம். காலத்தின் ஞானம் பொருந்திய மொழி என அதை வழிபட ஆரம்பிக்கிறோம்.
            எழுத்தாளர் இந்த ரெண்டுக்கும் இடையில் நிற்பவராகிறார். அவரின் எழுத்துக் கிறுக்குகளும், ஞானக் கிறுக்குகளும் இடையில் ஊடாடும் தன்மை மனிதர்களுக்கு நிரம்பப் பிடித்துப் போயி அவரை வாசிக்க ஆரம்பிக்கிறார்கள். நீங்கள் ஒன்றை ஊன்றிக் கவனித்தால் பிறிதொன்று தெளிவாகும். எழுத்தாளர் முழுமையடையாத கிறுக்கு மற்றும் முழுமையடையாத ஞானி. அவர் எழுதி எழுதி வாசகர்களையும் அப்படியே வைக்கிறார். ஓர் உண்மையான எழுத்தாளர் இந்த உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும். அவருக்குச் சாட்சிக் கூண்டும், நீதிபதியும் அவரது எழுத்துதாம்.
            எழுத்தாளரோ எழுத்துப் பைத்தியம் பிடித்தவர். உலகில் பணப் பைத்தியம், புகழ் பைத்தியம், பதவிப் பைத்தியம், காமப் பைத்தியம் என்று பலவித பைத்தியங்கள் இருக்கிறதே அது போல அவரும் ஒரு வகை எழுத்துப் பித்துப் பிடித்த பைத்தியம். உண்மையை உடைத்து விட்டால் ஓர் எழுத்தாளரால் நிரம்ப எழுத முடியாது. அவர் ஞானத்தின் புள்ளியில் அடைபட்டு சூன்யமாகி விடுவார். சூன்யமான பின் அங்கே எழுத்தில்லை. மெளனம்தான். அந்த மெளனத்தை மொழிபெயர்க்க எந்த ஞானியும் விரும்ப மாட்டார். எழுத்தாளர் முயல்வார். மொழியப்படும் எதிலும் மெளனம் இல்லை என்பதை வாசகர்களும் உணர விரும்ப மாட்டார்கள். ஆம் உணர விரும்ப மாட்டார்கள். எப்படி உணர்வார்கள்? எழுத்தாளர் வாசிப்பின் போதையை அல்லவா ஊற்றி வைத்திக்கிறார்?
            போதை எப்படிப்பட்டது என வாசகர்களுக்குத் தெரியாதா? குடலே அழுகித் தொங்கினாலும், இரைப்பை சல்லடையாய் அரித்துக் கிடந்தாலும், கல்லீரல் கச்சடாவாய்ப் போனாலும் குடிக்க விரும்புவதுதானே போதை!
            வாசக வாசிப்புப் போதை பெரும் போதை.
            உலகில் டாஸ்மாக்குகள் அளவுக்குப் புத்தகக் கடைகள் இல்லாமல் இருக்கலாம். உலகில் அத்தனை டாஸ்மாக்குகள் அழிந்தாலும் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு புத்தகக்கடை இருந்தே தீரும்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...