26 Oct 2019

மச்சாங்காரனுக்கு ரெண்டு டீ!



செய்யு - 249
            சுப்பு வாத்தியாரு இருக்கார்ல அவரு, வாத்தியாரு டிரெய்னிங்கிற்குப் படிச்சிட்டு வேலை இல்லாம இருந்த நாட்கள்ல வேலங்குடி சின்னவரோட வேலைக்குப் போயிருக்காரு. வேலங்குடி வந்து தங்குனா அவரோட வேகத்துக்கு ஈடுகொடுத்து காலையில வேலைக்குக் கிளம்பணும். அவரோட வேகத்துக்கு ஈடுகொடுத்து நடக்கணும். அவரோட அப்படி நடந்துப் பழகி சுப்பு வாத்தியாருக்கும் வேக நடை பழக்கமாயிடுச்சு. இப்போ சுப்பு வாத்தியாரு நடக்க ஆரம்பிச்சார்ன்னா அவரோட வேகத்துக்கு ஈடு கொடுத்து நடக்குறது கஷ்டம். அந்த வேகத்துல காத்துல அப்படியே பறக்குற மாதிரி நடப்பாரு. வாகனங்கள வாங்கி வெச்சி அதுல போக முடியாத அந்தக் காலத்துல வேக நடைங்றது அவசியமா இருந்துருக்கணும். வேகமா நடந்தா சீக்கிரம் வேலைக்குப் போகலாம், சீக்கிரம் வீட்டுக்குத் திரும்பலாம், பயண நேரத்தைக் குறைக்கலாங்ற யோசனையில அந்தக் காலத்து மனுஷங்க எல்லாம் வேகநடைக்காரங்களா இருந்திருக்காங்க. அவங்க நடக்குறப்ப நாம்ம அவங்கள இங்க பாத்துகிட்டு இருக்கிறப்பவே அவங்க அங்கப் போயிடுவாங்க. கொஞ்சம் பார்க்க அசந்தா போதும் கண்ணு பார்வையிலேர்ந்து காணாமப் போயிடுவாங்க.
            திருவாரூரு திருத்துறைப்பூண்டி ரூட்டுல பஸ்ஸூ ஓடிட்டு இருந்த கால கட்டத்திலயும் நடந்துப் போறதைத்தாம் இவங்க வழக்கத்துல வெச்சியிருந்தாங்க. பஸ்ஸூல போற காசை மிச்சம் பிடிக்கலாங்றது ஒரு காரணம்னா, நடந்து போறதுல இருக்குற சொகுசு, பஸ்ஸூல போறதுல இல்லேங்ற நெனைப்பும் அவங்களுக்கு இருந்துச்சு. இதென்னடா கூத்தா இருக்குன்னு நெனைக்காதீங்க. அவங்க அப்படித்தாம் நெனைச்சுகிட்டு நடந்து போயிட்டு இருந்திருக்காங்க. வேலங்குடியிலிருந்து திருவாரூரு போயி குடவாசல் நடந்து போறதெல்லாம் அவங்களுக்குச் சர்வ சாதாரணம்னா பாத்துக்கோங்க. திருவாரூர்லேந்து குடவாசலுக்கு அந்த தூரத்துக்குப் பஸ்ஸூ போறதுக்கு முக்காலு மணி நேரம் ஆச்சுன்னா இவங்க ரெண்டு மணி நேரத்துல நடந்தே போயிடுவாங்க. அப்படி விடுவிடுன்னு நடப்பாங்க. ஆனா அவங்க கூட நடக்குறவன் செத்துச் சுண்ணாம்பு ஆயிடுவான்.
            வேலங்குடி சின்னவருக்கு மச்சாங்காரனான சுப்பு வாத்தியார்ர வேலைக்கு அழைச்சிட்டுப் போறதுன்னா தனி சந்தோஷம்தாம். அவரு இழுத்த இழுப்புக்கு வர்ற ஒரே ஆளு சுப்பு வாத்தியார்ங்றதால அந்தச் சந்தோஷம். அவருக்கு வேலை பெரும்பாலும் திருவாரூரு பக்கந்தாம் இருக்கும். திருவாரூரு வேலைன்னா ஏழு மணிக்கெல்லாம் கிளம்பி எட்டு மணிக்கெல்லாம் எடத்துக்குப் போயிடுவாரு. மச்சானையும், ஆட்களையும் அப்படியே கெளப்பிக் கொண்டுகிட்டுப் போயிடுவாரு. இவரு வேலைக்குப் போயி நிக்குற வேகத்துல வூட்டுக்காரங்க அசந்துப் போயிடுவாங்க. வேலை பார்க்க ஆரம்பிச்சார்ன்னா ச்சும்மா மாங்கு மாங்குன்னு பார்ப்பாரு. அப்படியே வூட்டுப் பொண்டுகளுக்கு ஆவ வேண்டிய சின்ன சின்ன வேலைகளையும் செஞ்சிக் கொடுத்து அடுத்து வேலைன்னா கூப்பிடு கிட்டு ஆசாரின்னு ஒரு நெலமைய வேலை பாத்த அத்தனை எடத்துலயும் உண்டு பண்ணி வெச்சிப்புடுவாரு.
            வூட்டுக்கார பொண்டுகளுக்குத் தேவையான சின்ன சின்ன ராக்கைகள அடிச்சிக் கொடுப்பாரு. பலவாக் கட்டையைச் செஞ்சித் தருவாரு. அதுங்க உக்காந்துகிட்டு வேல பாக்க வசதியா சின்ன ஸ்டுலுங்க, திருவைக்கு மரப்புடி போட்டுக் கொடுக்குறது, அங்க இங்க தேவையான எடங்கள்ல ஆணி அடிச்சுக் கொடுக்குறதுன்னு இவரே போயிக் கேட்டுச் செஞ்சிக் கொடுப்பாரு. இப்படி ஒரு மனுஷன் வேலைப் பார்த்தா அவர யாருக்குத்தாம் பிடிக்காது?
            ஒரு தடவ அப்படித்தாம் கருக்கங்குடி பக்கத்துல வேலை நடந்துகிட்டு இருந்தப்போ அந்த வூட்டுக்கார அம்மா, "திருவைக்குப் பிடிப் போயிடுச்சுங்க ஆசாரியய்யா! நல்ல பிடியா போட்டுக் கொடுங்களேம். உளுத்தம் பருப்ப அரைச்சிப் போட்டு நல்ல உளுத்தம் வடையா சுட்டுத் தர்றேம்!" அப்பிடின்னு வந்து நின்னுருக்கு. சின்னவரு அப்போ அந்த நேரத்துல வீட்டுக்கு மேல உத்திரத்தைத் தூக்கி வெச்சி கணக்குப் பண்ணி வேலைய பாத்துட்டு இருக்காரு. கீழே எறங்கி வந்து ஏறணுங்ற யோசனையில, பக்கத்து வேலையில இருக்குற ஆள கூப்புடுறாரு, "யேலே கொட்டாப்புளி! அந்த வேப்ப மரத்துல ஒரு நல்ல கொம்பா பாத்துச் சீவுடா!" அப்பிடிங்றாரு. சீவிட்டு வந்தவனப் பாத்து மேல இருந்தபடியே அவரும் வேலையப் பாத்துகிட்டு, கீழேயும் உத்தரவுகள கொடுத்துகிட்டு இருக்கிறாரு.
            "ந்நல்லா சுத்த பத்தமா உளியால கொம்ப சீவி கைப்புடி அளவுக்கு தயாரு பண்ணிக்கோடா! புடி பிடிக்கிறதுக்குப் பதனமா இருக்கோ         ணும் பாத்துக்கோ!" அப்பிடிங்கிறாரு.
            வேலையாளு கொட்டாப்புளியும், "சரிங்க மாமா!"ன்னு அப்படியே செய்யுறாரு.
            "எஞ்ஞ காட்டு!" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            கொட்டாப்புளித் தூக்கிக் காட்டுறாரு.
            "செரிதாம்! ஓரத்துல லேசா சீவிப்புட்டு, பழந்துணியில கொஞ்சம் சுத்தி திருவை ஓட்டையில வெச்சி சுத்தியால புடி மேல அடிடா!" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            "எத்தனெ அடி மாமா அடிக்கோணும்?" அப்பிடிங்கிறாரு கொட்டாப்புளி.
            "நீயி அடி! நாம்ம சொல்றேம்!" அப்பிடிங்கிறாரு சின்னவரு மேல இருந்துகிட்டு.
            "சரி மாமா!" அப்பிடின்னு நாலு அடி சுத்தியால புடி மேல அடிச்சுப்புட்டு கொட்டாப்புளி, "போதுமா மாமா?" அப்பிடிங்கிறாரு.
            "ம்ஹீம்! ம்! போடு!" அப்பிடிங்கிறாரு சின்னவரு.
            கொட்டாப்புளி ஒரு அடி அடிச்சுப்புட்டு, "போதுமா மாமா?" அப்பிடிங்கிறாரு.
            "நாம்ம ம்ன்னு சொல்ற வரைக்கும் அடிச்சிக்கிட்டே யிருடா கொட்டாப்புளி. எதிரு கேள்விப் போட்டே சுத்தியத் தூக்கி மண்டையில போட்டுடுவேம்!"ங்றாரு சின்னவரு.
            சின்னவரு "ம்!" சொல்றாரு. கொட்டாப்புளி புடி மேல சுத்தியால அடியப் போடுறாரு.
            "போதுமா மாமா? திருவைப் பொளந்துடும் போலருக்கு!"ங்றாரு கொட்டாப்புளி இதுக்கு இடையில.
            "எதிரு கேள்வி போடாதேங்றேம்! ம்!"ங்றாரு சின்னவரு மேல உத்திரத்து வேலைய பாத்துக்கிட்டு.
            கொட்டாப்புளி அடியப் போட போட, சின்னவருகிட்டேயிருந்து "ம்!" வந்துகிட்டே இருக்கு. அவரு "ம்! ம்!"ங்றாரு. கொட்டாப்புளி அடியப் போட்டுக்கிட்டு இருக்காரு. திருவைக் கல்லு என்னா இரும்பா? விழுவுற அத்தனை அடியயும் தாங்கிட்டு இருக்க? அது பாறக்கல்லுதானே! அதுக்கு மேல அடி தாங்க முடியாம திருவ கல்லு ரெண்டா பொளந்துப் போயிக் கெடக்குது.
            "யய்யோ மாமா! திருவக் கல்லு ரெண்டாயிடுத்து!"ங்றாரு கொட்டாப்புளி.
            அப்பவம் அதெ காதுக்குள்ள போட்டுக்காம்மா "ம்!"ங்றாரு சின்னவரு விடாம.
            "அட யேங் கூறுகெட்ட ஆசாரி! திருவக் கல்லுப் போச்சுய்யா! இன்னம் ஏம்யா ம் ம்ங்றே?" அப்பிடின்னு வூட்டுக்காரம்மா அழுவ ஆரம்பிச்ச பின்னாடித்தாம், "ம்!" போடுறத நிறுத்திப்புட்டு கீழே பாக்குறாரு சின்னவரு. உடனே மேல போட்டுகிட்டு இருந்த உத்தரத்த விட்டு எறங்கி வந்து, "அழுவாதீங்க ஆச்சி! இன்னிக்கு ஒரு நாளு பொறுத்துங்க"ன்னு சொன்னவரு, மறுநாளு வேலைக்கு வாரப்ப அழகான பிடியைப் போட்டு புது திருவைக் கல்லா வாங்கியாந்து வூட்டுக்கார அம்மா கையில கொடுத்துப்புட்டாரு.
            அப்போ வீட்டுக்கு நாட்டு ஓடுகளப் போட்டிருந்தவங்க அதைப் பிரிச்சிட்டு பெரிசா இருக்குற ரயிலு ஓடு போடுறதுக்கு மாறிட்டு இருந்தாங்க.         நம்ம வேலங்குடி சின்னவரு ரயிலு ஓடு போடுறதுக்கு ஏற்ப உத்தரமெல்லாம் வெச்சி, ரீப்பேர்களைத் தைக்குறதுல கெட்டிக்கார ஆளு. வெளிரு நீல நிறத்த சட்டையைக் கழட்டி வெச்சார்ன்னா, அரையில இருக்குற வேட்டியை வரிஞ்சிக் கட்டிகிட்டு வெத்து ஒடம்போட ரீப்பரு தைக்கிறதுக்கு குடுகுடுன்னு மேல ஏறிடுவாரு. காதுல சிவப்பு கல்ல வெச்ச கடுக்கன்கள போட்டிருப்பாரு. வெயிலு ஏற ஏற அவரு காதுல போட்டுருக்குற கடுக்கன்ல இருக்கற சிவப்புக் கல்லு மின்னுற மாதிரி வேர்வையில அப்படியே தகதகன்னு மின்னுவாரு. அதெ கீழ நின்னு மேம்பார்வைப் பாத்துகிட்டு இருக்குற வீட்டுக்காரரு பாத்து அப்படியே அசந்துப் போயிடுவாரு.  "யே யப்பாடி இம்மாம் வெயிலுக்கும் அசராம கொள்ளாம எறங்காம கொள்ளாம வேல பாக்குறாரே மனுஷன்! நமக்கு இந்த வெயிலுக்குக் கீழ நிக்கவே அசந்துப் போவுதே!"ன்னேன்னு சொக்கிப் போயிடுவாரு வேலை கொடுக்குற வூட்டுக்காரரு. அவரு போயி அக்கம் பக்கத்துல நாலு எடத்துல சொன்னா என்னாகும்? ரீப்பேர் அடிச்சி ரயிலு ஓடு போடுறதுல எக்ஸ்பர்ட் கிட்டு ஆசாரின்னு பேரு ஆகிப் போச்சு. அப்போ திருவாரூர சுத்தி ரயிலு ஓடு போட்ட ஏகப்பட்ட வூடுக இவரு வேலைப் பார்த்துக் கொடுத்த வூடுகத்தான். வேலையை முடிச்சி வூட்டுக்கு வாரப்ப அவரு வேலைப் பார்த்த வூடுக கண்ணுல தட்டுபடுறப்ப எல்லாம், "இது நாம்ம வேலப் பாத்த வூடு மச்சாம்! அதுவும் நாம்ம வேல பாத்த வூடுதாம் மச்சாம்! இந்த சரணையில எல்லாம் நாம்ம வேல பாத்த வூடுதாம் மச்சாம்!"னு சுப்பு வாத்தியார்கிட்ட சொல்லிட்டே வருவாரு.
            மாங்குடி வர வரைக்கும் அவரும் எல்லாரும் சேர்ந்து வருவாங்க. மாங்குடி வந்ததும் வேலை ஆளுகளப் பார்த்து சின்னவரு சொல்லுவாரு பாருங்க, "எல்லாம் ஊரப் பாத்துக் கெளம்பு. இஞ்ஞ கொஞ்சம் சோலி இருக்கு. அதெ முடிச்சிட்டுத்தாம் வாரணும். நாமளும் மச்சானும் மட்டும் பாத்துட்டு வார்ரேம்! சட்டுபுட்டுன்னு ஊர பாக்கப் போயிச் சேருங்க. சாமானுகள பத்திரமா வூடு போயிச் சேத்துப்புடுங்க! நாளைக்கிக் காலையில பாக்கலாம் வந்துப்புடுங்க!" அப்பிடிம்பாரு. மத்த ஆளுங்க எல்லாம் மாங்குடியிலேந்து அப்படியே வயக்காட்டுல எறங்கி ஊரப் பார்க்க கெளம்பும்.
            சின்னவரு சுப்பு வாத்தியார அழைச்சுகிட்டு மாங்குடி குளத்தடிக்குப் போவாரு. ரெண்டு பேரும் அந்தக் குளத்துல முங்கி நல்லா குளிச்சி முடிப்பாங்க. குளிச்சி முடிச்சி ஒடம்ப நல்லா தொவட்டிக்கிட்டு கடைத்தெருல இருக்குற டீக்கடைக்குப் போயி ஆளுக்கு ரெண்டு பொட்டணம் பட்சணத்த வாங்கி ஆற அமர சாப்புடுவாங்க. சாப்பிட்டுப்புட்டு ஆளுக்கு ரெண்டு டீ அடிப்பாங்க. அடிச்சிப்புட்டு நெதானமா கெளம்பி வூட்டப் பார்க்க நடப்பாங்க. இந்த உபச்சாரம் சுப்பு வாத்தியாருக்கு மட்டும்தான். வேற ஆளுகளுக்குக் கெடையாது. இது என்னடா ஓர வஞ்சனையா இருக்குன்னு நெனைக்குறீங்களா? அங்கத்தாம் விசயமே இருக்கு. அவரோட வேலைப் பாக்குற எல்லாத்துக்கும் அவரு சம்பளத்தக் கொடுத்துடுவாரு. சுப்பு வாத்தியாருக்கு மட்டும் கெடையாது. அவரே வெச்சிப்பாரு. கொடுக்க மாட்டாரு. ஆறெழு மசாத்துக்கு சுப்பு வாத்தியாரு வேலங்குடி பக்கத்துக்கு தலைவெச்சிப் படுக்கலைன்னா சின்னவரே வூட்டுக்காரிகிட்ட கேப்பாரு, "எஞ்ஞ ஒம் தம்பிக்கார்ரேம்? ஆளய காணுமே! வந்தா கொஞ்சம் ஒத்தாசையா உபகாரமா இருக்கும்? ஒம்மட தங்கச்சி வூட்டுக்காரனோட அஞ்ஞ வேலைக்குப் போயிட்டோ?"ன்னு ஆரம்பிச்சிடுவாரு. இப்படிச் சம்பளம் இல்லாம் ஒரு ஆளு கெடைக்குதுன்னா சும்மாவா? அதால சுப்பு வாத்தியாரு எப்ப வருவாருன்னு யோசனையிலயே இருப்பாரு சின்னவரு.
            அக்கா வூட்டுக்காரர்கிட்ட சம்பளத்தக் கேட்டு அதால அக்காவுக்கு எதாச்சிம் எடைஞ்சல் வந்திடுமோன்னு சுப்பு வாத்தியாரும் சின்னவரோட வேலைக்குப் போற நாட்கள்ல சம்பளம் அது இதுன்னு மூச்சு வுட மாட்டாரு. அப்பல்லாம் யாரு சம்பளத்தப் பெரிசா எதிர்பார்த்தா? மூணு வேளைக்கும் நல்லா சாப்பாடு போட்டா அதுவே சம்பளந்தாம். அந்தச் சாப்பாட்டுல மட்டும் எந்தக் கொறையும் இல்லாம பாத்துப்பாரு சின்னவரு. இப்படிச் சம்பளம் கொடுக்காம இருக்குறதப் பத்தி சுப்பு வாத்தியாரு எதுவும் நெனைச்சிக்கக் கூடாதுங்கறதுக்குத்தாம் மாங்குடியில குளிச்சு முடிச்சி பொட்டணமும், டீயும் அடிக்கிற இந்த ஏற்பாடு. சுப்பு வாத்தியாரு இல்லாத மத்த நாட்கள்ல சின்னவரு மட்டும் மாங்குடிக் கடைத்தெருவுல தனியா ரெண்டு பொட்டணமும், ரெண்டு டீயும் அடிப்பாரு. அடிச்சிப்புட்டு தனியாளா வூடு திரும்புவாரு. மத்தபடி வேறெந்த கெட்டப் பழக்கமும் அவருக்கு இருந்ததில்ல, ஒரே ஒரு கெட்டப் பழக்கத்த தவிர. அது முன்னாடி இருந்தது. இப்ப இல்ல. அது என்னான்னா...
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...