24 Oct 2019

புலம்பல் நின்னுப் போச்சு!



செய்யு - 247
            இராப்பொழுது ஒவ்வொண்ணும் வெளிச்சப் புலம்பலோடு விடியுது சாமியாத்தாவுக்கு. கொட்டாயில உக்காந்துட்டுப் புலம்பிகிட்டு இருந்த சாமியாத்தா சமயங்கள்ல கொட்டாயிக்கு வெளியில வந்தும் புலம்ப ஆரம்பிச்சுச்சு. எந்த விதமான புலம்பலும் இல்லாம விடிஞ்ச ஒரு நாளுல சாமியாத்தா செத்துப் போயிருந்துச்சு.
            எப்படி செத்துச்சு? எத்தனை மணிக்கு செத்துச்சு? ஒண்ணும் புரிபடல. வழக்கமா காலங்காத்தால கொட்டாயிலேந்தோ, கொட்டாயிக்கு வெளியில வந்தோ புலம்பிக்கிட்டு இருக்குற சாமியாத்தாவோட புலம்பலு அன்னைக்கு அதிசயமா காலையில ஏழெட்டு மணி ஆகியும் வரல. அது தூங்கிட்டு இருக்குமோ என்னவோன்னு தெருவுல போற சனங்க நெனச்சுகிட்டுப் போயிக்கிட்டு இருக்குதுங்க. ஆனா அதுக்குத்தாம் தூக்கம் செத்து நாளாயிடுச்சேங்ற சந்தேகம் சனங்களுக்கு வர்றதுக்கு ரெண்டு மூணு மணி நேர கால அவகாசமாயிப் போச்சு. பத்து பன்னெண்டு மணி வாக்குல கொட்டாயில போயிப் பார்த்தா சாமியாத்தா பேச்சு, மூச்சு இல்லாம சவமா கெடக்கு.
            பெத்த புள்ளைங்க ரெண்டும் பக்கத்துப் பக்கத்துல இருந்தும் அது செத்தத கண்டுபிடிச்சுப் பாத்தது ஊரு சனங்கத்தாம். அதெப் பாத்துப்புட்டு ஊரு சனங்க கதறி அழ ஆரம்பிச்சதும்தான் கோகிலா மாமி வந்துப் பாத்துச்சு. பக்கத்துல இருக்குற கோகிலா மாமி வர்றதுக்கு முன்னாடி நாலைஞ்சு வீடு தள்ளி இருக்குற கோனாரு வூட்டுத் தாத்தாவும், அந்த வூட்டு சனங்களும், "ஆயி! போயிட்டியாடி!"ன்னு விழுந்து பொரண்டுகிட்டு வாரதுங்க. கோகிலா மாமி சேதி சொல்லி விட்டு வீயெம் மாமா வந்துச்சு. மேகலா மாமி கதவத் தொறந்துட்டு சேதி தெரிஞ்சி வர்றதுக்கு சனங்களோட அழுகைச் சத்தம் தொடங்கி அரை மணி நேரத்துக்கு மேலாச்சு. பிற்பாடு பட்டறையிலேந்து குமரு மாமா வந்துச்சு. சாமியாத்தாவோட தம்பி முருகு மாமா வந்துச்சு. முருகு மாமா வந்ததும் குமரு மாமா சொல்லுது, "மாமா! யம்மா செத்துப் போச்சு மாமா! இப்பத்தாம் மாமா! பிடிச்ச பீடையொண்ணு விட்டுச்சு. இனுமேத்தாம் மாமா மனுஷம் நிம்மதியா இருக்கப் போறேம்!" அப்பிடின்னு. அதோட முகத்துல அப்படி ஒரு சந்தோஷம், அப்படி ஒரு குதூகலம். ஒலகத்துலயே அம்மா செத்துப் போயிடுச்சுன்னு சந்தோஷப்பட்டுச் சொன்ன மொத புள்ளையா அநேகமாக குமரு மாமாத்தாம் இருக்கும், இருக்கணும்.
            அப்படியே திட்டைக்குச் சேதி சொல்லி சுப்பு வாத்தியாரு குடும்பத்தோட போயி நிக்குறாரு. சாமியாத்தாவோட பொண்ணுங்க ஒவ்வொண்ணுக்கும் சேதி சொல்லி ஒவ்வொண்ணா பஸ்ஸூ பிடிச்சு வந்துகிட்டு இருக்குதுங்க. தஞ்சாரூல இருக்குற லாலு மாமாவுக்குச் சேதி சொல்லி அது சாயுங்கால வாக்குல வருது. பாக்குக்கோட்டைக்கும் சேதி போயி ராத்திரி ஏழரை மணி வாக்குல அந்தச் சனங்களும் வந்தாச்சு.
            சாமியாத்தாவோட வூட்டுக்காரரான வைத்தி தாத்தா திருத்துறைப்பூண்டிக்காரரு. அங்க சேதி சொல்லி திருத்துறைப்பூண்டியிலேந்து சொந்தக்கார சனங்க எல்லாம் வந்துச் சேருதுங்க. சுத்துப்பட்டுல சாமியாத்தா செத்துப் போச்சிங்கிற சேதி பரவி சனங்களா வந்து குமியுதுங்க. இங்க சுத்துப்பட்டுல எத்தனையோ வூடுகளுக்குப் போயி அது கைவைத்தியம் பண்ணி நெறைய பேரைக் குணப்படுத்தியிருக்கு. அம்மை போட்டா அது யாரு வூடா இருந்தாலும் அங்க போயி உக்காந்து மாரியம்மன் தாலாட்டு பாடி அம்மைய எறங்க வெச்சி தலைக்கு தண்ணி ஊத்தி வுட்டு வந்திருக்கு. அந்த ஞாபகத்துலயும், விசுவாசத்துலயும் சனங்க வாயிலயும், வயித்துலயும் அடிச்சிகிட்டு வந்து சாமியாத்தா மேல விழுந்துப் பொரளுதுங்க.
             சாமியாத்தாவோட பிரேதத்தை குமரு மாமா வீட்டுல வைக்குறதா? வீயெம் மாமா வூட்டுல வைக்கிறதான்னு ஒரு கேள்வி எழும்புது. ரெண்டு பேருகிட்டயும் கேட்டாக்கா, "கொட்டாயிச் சும்மாத்தான்னே கெடக்குது! அதெ ன்னா பண்ணப் போறீங்க? கொட்டாயிக்கு ன்னா கொறைச்சலு?"ங்ற பதிலு வருது.
            அதுவுஞ் சரித்தாம்! இப்படிப்பட்ட மவனுங்க வூட்டுல வைக்கிறதுக்கு கொட்டாயில வெச்சே காரியத்தைச் செய்யலாம்னு ஊரு பெரிசுங்களும், சொந்தபந்தங்களும் ஒரு முடிவுக்கு வருதுங்க.
            இடுகாட்டுல சமாதி வைக்க குழி தோண்ட ஏற்பாடு ஆவுது. பொண்ணுங்க ஒவ்வொண்ணும் சாமியாத்தா ஒடம்பு மேல விழுந்து கதறி அழுவுதுங்க. ஒவ்வொரு பொண்ணும் அழுத கதெ சொன்னா கேக்குற காது அழுதுடும். எழுதுற தாளு நனைஞ்சிடும். அதெ உள்ள வாங்குற மனசு வெடிச்சிடும். மவனுங்க ரெண்டு பேரும், மருமவங்களுங்க ரெண்டு பேரும்  வூட்டக்குள்ள உக்காந்துக்குறதும், அப்பைக்கப்போ பேருக்கு வந்து தலையைக் காட்டிட்டுப் போறதும்மா இருக்குதுங்க. புள்ளைங்களா அதுங்க கடமையெ அதுங்க சரியா செய்யுறதா ஒரு மிதப்பு வேற அதுங்க நடையிலயும், பேச்சுலயும் தெரியுது.
            "யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாம, பெத்தப் புள்ளைங்களுக்குச் சோறு போடுற செரமத்தையும் கொடுக்காம, பொண்ணுங்க வூட்டுல போயி தங்காம வைராக்கியமா இருந்து போயிச் சேந்திடுச்சி சாமியாத்தா"ன்னு ஊரு சனமெல்லாம் பேசிக்குது.
            ராத்திரி ஏழெட்டு மணி வாக்குல எல்லா சனங்களும் கிட்டதட்ட வந்திடுச்சுங்க. மறுநாளு காலங்காத்தாலேயே சவத்த எடுத்துடலாம்னு சொந்தபந்தமும், ஊரு பெரிசுகளும் முடிவு பண்ணுதுங்க.
            "மறுநாளு வரையில்லாம் வெச்சிகிட்டு நாற வுட்டுகிட்டு கெடக்க முடியாது. காரியத்த கச்சிதமா முடிச்சிப் போடுங்க. அவனவனுக்கும் ஆயிரத்தெட்டு வேல கெடக்குது. எடுத்துப் போட்டீங்கன்னா அதுஅதுவும் அதது வேலயப் பாத்துட்டுப் போயிகிட்டே கெடக்குமுங்க!" அப்பிடிங்குது வீயெம் மாமா.
            "இத்து ன்னடா அதிசயமா இருக்கு? எங்கம்மா ஒங்க வூட்டுலயா கெடக்கு? அது பாட்டுக்குக் கொட்டாயில கெடக்கு! ஒனக்கென்னடா? செத்தப் பின்னாடியும் ஒரு ராத்திரி அத்தோட கொட்டாயில அது கெடக்கக் கூடாதாடா கூறு கெட்ட பயலே! உசுரோட இருக்குறப்பத்தாம் ஒரு நாளு நிம்மதியா அதெ வாழ வுட மாட்டேன்னுட்டீங்க. செத்தும் ஒரு ராப்பொழுது அதெ நிம்மதியா வுட மாட்டேங்றீங்களடா! பாவிப் பயலுங்களா?" அப்பிடிங்குது கோவமா வாழ்க்கைப்பட்டு பெரியம்மா.
            "இந்தப் பேச்சுல்லாம் பேசிகிட்டு இருக்காதே! மூத்தப் பொண்ணு பீத்தப் பொண்ணுன்னு நெனச்சிகிட்டு நிக்காதே! காரியத்த நாம்மத்தான் பண்ணும். இப்ப எடுத்தா காரியத்த பண்றேம். இல்லேன்னாக்கா பொண்டுகளே பண்ணிக்குங்க. இதுல பொரட்சி கிரட்சில்லாம் பண்ண முடியாது! பேசுது பாரு பேச்சு?" அப்பிடிங்குது வீயெம் மாமா.
            "எலேய்! ஏம்டா இப்டி செத்தப் பின்னாடியும் அத்தோட பெராணனய எடுக்குறீங்க? இதுக்குத்தாம்டா ஆயி அடிக்கடி எஞ்ஞயாவது கோயிலு கொளமா பாத்து செத்துப் போயிடுறேம்னு அடிக்கடிச் சொல்லிட்டு கெடந்துச்சு! அநாதிப் பொணமா போயிடுவீங்க ஆயி! போவாதீங்கன்னு நாம்மதாம்டா சொல்லி நிப்பாட்டி வெச்சேம். ஒங்க ஆயி சொன்னதுதாம்டா செரி. அனாதிப் பொணமா எஞ்ஞயாவது போயிச் செத்துருக்கணும்டா! ஒங்கக் கூட கெடந்து செத்துச் சுண்ணாம்பாயி அதுக்குப் பிற்பாடும் சாவுன்னு வாருது பாரு அதுக்கு! ஒங்களப் பெத்து பாவஞ் செஞ்ச சென்மமடா ஆயி!" அப்பிடிங்கறாரு கோனாரு தாத்தா.
            பாக்குக்கோட்டை தாத்தா, சரசு ஆத்தா, லாலு மாமா, முருகு மாமான்னு எல்லாரும் முன்னால வந்து, "இப்ப என்னத்தாம்டா சொல்றீங்க? முடிவா ஒண்ண சொல்லுங்கடா! உசுரோட இருந்தப்பததாம் உசுரப் புடுங்கித் தின்னீங்க! செத்த பின்னாடியும் கட்டய வேவ வுட மாட்டீங்க போலருக்கே! நெஞ்சாங்கூடு வேகணும்டா வெங்கம் பயலுகளா!" அப்படிங்குதுங்க ஆளாளுக்கு.
            "எடுத்து காரியத்த முடிச்சிடலாம் மாமா! ஒரு அர மணி நேரம் ஆவுமா? எடுத்துப்புட்டா எல்லாத்துக்கும் நல்லது! தேவையில்லாம பொணத்தப் போட்டு நாறடிக்கிறதுல ன்னா இருக்கு?" அப்பிடிங்குது வீயெம் மாமா.
            "எலே குமரு! நீயி ன்னடா நெனைப்பு நெனைக்குறே?" அப்பிடிங்குது பாக்குக்கோட்டை தாத்தா.         
            "அவ்வேஞ் சொல்றதுதாம் செரி! போட்டுகிட்டு வளத்திக்கிட்டு நாறடிச்சுகிட்டு? சட்டுபுட்டுன்னு முடிச்சுப்புடறதப் பாருங்க! அவங்கவங்களுக்கும் ஆயிரத்தெட்டு சோலிக கெடக்கு. நமக்குல்லாம் பட்டறையில வேலை அப்டியே கெடக்கு. இன்னிக்கு ஒரு நாளு வேல போனதுதாம் மிச்சம்!" அப்பிடிங்குது குமரு மாமா.
            "நல்லப் புள்ளீங்கடா நீங்க! யப்பாடி மருமவனுங்களா நீஞ்ஞ ன்னா நெனப்பு நெனச்சுகிட்டு கெடக்குறீங்க? அதயும் சொல்லிப்புடுங்க! பிற்பாடு எங்ஞல ஒரு வார்த்த கேக்கலன்னு பிராது வந்துப்புட படாது!" அப்பிடிங்குது முருகு மாமா.
            "இப்பிடிப்பட்ட புள்ளீங்க மத்தில இனி ஒரு நிமிஷங் கூட எங்க மாமியா கெடக்குக் கூடாதுங்க! செத்த பின்னாடியும் நிமிஷ நேரம் நிம்மதியா இருக்க வுடுறானுங்களா? அவுங்க இப்ப சாவலீங்க! இந்தப் பயலுகளுக்குக் கலியாணத்த பண்ணி வெச்ச அன்னிக்கே செத்துப் போயிட்டாங்க! நாம்மதாம் வெவரம் புரியாம இன்னிக்குத்தாம் செத்துப் போயிட்டாங்கன்னு காரியத்த பாக்கணும்னு நின்னுபுட்டு இருக்கேம். ஒடனே காரியத்த முடிச்சுப்புட்டு இவனுங்க மூஞ்சுல காறித் துப்புனாத்தாம் எங்களுக்கு வேகம் அடங்கும்!" அப்பிடிங்குது சிப்பூரு பெரியப்பா முன்னாடி வந்து.
            "இந்தாருங்கப்பா! இதெ கருத்துதான மித்தவங்களுக்கும்?" அப்பிடிங்குது லாலு மாமா. யாரும் ஒண்ணுஞ் சொல்லாம மூசு முசுன்னு அழுதுட்டு நிக்க அதுக்கு மேல ஒண்ணும் கேட்கல யாரும்.
            சாமியாத்தாவ வேகம் வேகமா இடுகாட்டுக்குத் தயாரு பண்ணுற வேலை நடக்க ஆரம்பிக்குது. அந்த ராப் பொழுதுலயும் வேலை சரசரன்னு ஆவுது. நல்ல ‍தேரு பாடையா தயாரு ஆவுது. அதுல சாமியாத்தவ குத்த வெச்சித் தூக்கிட்டுப் போறாங்க. செத்தப் பின்னாடியும் அதோட முகத்துல ஒரு மங்களகரமான கலை இருக்கத்தான் செய்யுது.
            மத்தவங்க எல்லாரும் கண்ணீரும் கம்பலையுமா நிக்குறாங்க இடுகாட்டுல. சமாதி வைக்கிறதுக்கு முன்னாடி லாலு மாமா மட்டும் வுழுந்து பொரண்டு அழுவுது. அதோட வெள்ளை வேட்டி, மைனரு கணக்கா போட்டிருக்கிற நீல சட்டையெல்லாம் மண்ணாப் போவுது. திருவாசகத்தப் பாடுது லாலு மாமா. முன்ன மாதிரி அவ்வளவு தப்பும் தவறும் இல்ல அது பாடுறப்ப. நெறைய சாவுல பாடிப் பாடிக் கொஞ்சம் பயிற்சி ஆயிருக்கு. ஆனாலும் கொஞ்சம் தப்பும் தவறும் இருக்கத்தான் செய்யுது. முன்னைக்குப் பரவாயில்ல. இன்னும் நாலைஞ்சு சாவுல பாடுனா சரியா வந்துடும்.
            சாமியாத்தா மண்ணுக்குள்ள அடங்கிப் போச்சுது.
            அதோட கொட்டாயி அப்படியேத்தாம் இருக்குது. அதோட புள்ளைங்க ரெண்டும் அது பங்குக்கு இருக்குற வயலை யாரு எடுத்துக்குறதுன்னு அடிச்சிக்கிறாங்க. ஒருத்தரை ஒருத்தரு ஏசிக்கிறாங்க. காலம் உருண்டு ஓடுது. மழை அடிக்குது. வெயிலு அடிக்குது. குளிரு வீசுது. எல்லாத்திலயும் அந்தக் கொட்டாயி நின்னு மழையைத் தாங்குது, வெயில சமாளிக்குது, குளிருல கெடக்குது. எத்தனை நாளைக்குக் கொட்டாயி அப்படியே இருக்கும், சமாளிக்கும்? கூரைங்கள்ல ஓட்டைங்க விழுவுது. கீத்துங்க பிஞ்சு தொங்கி, மூங்கிங்க கட்டவிஞ்சு விழுந்து கெடக்குது. கொட்டாயி அலங்கோலமா கெடந்து பாழடைஞ்சுப் போவுது. சாமியாத்தாவோட பங்குக்கு இருந்த வயல ரெண்டா பிரிச்சி நடுவுல வரப்பை வெச்சு அது மட்டும் பாக்க பசுமையா இருக்கு. மேக்குப் பக்கம் குமரு மாமாவுக்கும், கெழக்குப் பக்கம் வீயெம் மாமாவுக்கும்னு ரெண்டு பக்கமும் பச்சைக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்ல.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...