24 Oct 2019

8.0



ஒரு மிகப்பெரிய தலைப்பு :
பின்னாட்களில் வில்சன், சக்தி, சித்தார்த், ஆவணி, விகடு இவர்கள் ஆரம்பித்த  இலக்கிய மன்ற அரங்கில் திருவாளர் கடவுள் - எஸ் அவர்கள் பேசியதிலிருந்து... முன்கூட்டியே நமது வாசகர்களுக்காக...
            "... ... ... மனிதர்கள் அவரவர் இஷ்டத்துக்கு இருக்கப் பிறந்தவர்கள். அவர்களை எதுவும் செய்ய முடியாது. அவரவர்க்கு என்று இருக்கிற மனநிலையைக் கடவுள் ஆகிய என்னாலும் எதுவும் செய்ய முடியாது. அவர்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டால்தான் கடவுள் ஆகிய என்னால் ஏதாவது செய்ய முடியும். துரதிர்ஷ்ட வசமாக மனிதர்கள் தங்கள் மனதை இறுக்கப் பூட்டிக் கொள்ள பழக்கப்பட்டவர்கள். அந்தப் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே செல்வது கடவுளுக்கும் சாத்தியம் இல்லாதது. மனித மனது ஆழங் காண முடியாதது. அதன் ஆழம் அந்தந்த சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கே அறிய இயலுவது. அந்த ஆழத்தை அறிந்தவர்கள் கடவுள் ஆகி விடுகிறார்கள். மனதின் ஆழத்தைக் கடந்தவர்கள் கடவுளர்கள். அதாவது கடந்தவர்கள் கடவுளர்கள்.
            "... ... ... மதர்கள் மகா சோம்பேறிகள். அவர்களிடம் வேலை வாங்கி விட முடியாது. அவர்களை ஆசையும், கோபமும், பயமும்தான் இயக்குகின்றன. இந்த இயக்கத்தை அவர்கள் எப்போது மாற்றுகிறார்களோ அப்போதுதாம் அவர்கள் தன்னிலையோடு இயங்குகிறார்கள். ஆசையோடும், கோபத்தோடும், பயத்தோடும் இயங்கிக் கொண்டு அவர்கள் தன்னிலையோடு இயங்குவதாக கர்வம் கொள்கிறார்கள். அது அவர்களின் இயக்கமே அன்று. அது ஆசையின் இயக்கம். கோபத்தின் இயக்கம். பயத்தின் இயக்கம். இதை மனிதர்களிடம் புரிய வைக்க முடியாது. அவர்கள் ஆசையாகவே இருக்கிறார்கள். கோபமாகவே இருக்கிறார்கள். பயமாகவே இருக்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் வெளியே வந்துப் பார்த்தால்தான் அவர்கள் அப்படி இருப்பதை உணர முடியும். மனிதர்கள் யாரும் அந்தக் கட்டிலிருந்து வெளியே வர பிரியப்பட மாட்டார்கள். அவர்கள் அந்தக் கட்டைத்தான் பாதுகாப்பாக உணர்வார்கள். பிறகு நான் எங்கே உள்ளே சென்று பார்ப்பது?
            "... ... ... அவர்களிடம் என்ன இருக்கிறதோ, அது அவர்களுக்குப் போதுமென்று நினைக்கிறார்கள். அவர்களிடம் இருப்பது அவர்களுடையது அன்று. அது அவர்களின் சுயம் கிடையாது. அவர்கள் யாரையோ பிரதிபலிக்கிறார்கள். உங்கள் பாஷையில் சொல்வதானால் காப்பி அடிக்கிறார்கள். அதுதாம் அவர்களிடம் இருக்கிறது. அதை அவர்கள் தூக்கி எறிய வேண்டும். அவர்கள் அவர்களாக வெளிப்பட வேண்டும். கல்வி முறை அவர்களைக் காப்பி அடிக்கத் தூண்டுகிறது. தேர்வில் அடிக்கப்படும் காப்பியைச் சொல்லவில்லை நான். புத்தகத்தை அப்படியே பிரதியெடுத்து தேர்வுத் தாளில் துப்பச் சொல்கிறதே இந்த கல்வி முறை. அதைச் சொல்கிறேன். இந்தப் பழக்கம் அப்படியே அவர்கள் மனதில் பதிந்து விடுகிறது. எதையாவது ஒன்றைப் பார்த்து அதை அப்படியே பிரதியெடுத்துத் துப்ப வேண்டும் என்ற உணர்வு அவர்களுக்குத் தோன்றி விடுகிறது. உண்ணுவது, வாந்தியெடுப்பது என்ற உணர்வுக்கு அவர்கள் ஆட்பட்டு விடுகிறார்கள். அவர்கள் அவர்களாக வெளிப்பட்டாலன்றி அவர்களின் தோற்ற நோக்கம் நிறைபெறாது. அதற்கு உணர்தல் மிகப் பெரிய கருவி. யாரும் இந்த உணர்தலை பொருட்படுத்துவது கிடையாது. அவர்களுக்கு எதுவாக இருந்தாலும் மிக விரைவாகப் புரிய வேண்டும். புரிந்து கொள்ளுதல் உணர்தலின் பாதைதான். புரிந்து கொள்ளுதலைத் தாண்டி கடக்க வேண்டும். புரிந்து கொள்ளுதல் என்பது பாதி வழி. மீதி வழியையும் கடக்கும் போது பயணம் நிறைவு பெறுகிறது. புரிதல் என்பது புறப் புரிதல் மட்டுமே. உணர்தல் என்பது அகப் புரிதல். முழுமையானப் புரிதல். அதற்குப் பின் உங்கள் மனம் அலைபாயாது."
            கடவுள் - எஸ் அவர்கள் ஆற்றிய நெடும் உரையிலிருந்து சிறு பகுதி மட்டுமே இங்கே வாசகர்களின் நலன் கருதிக் கொடுக்கப்படுகிறது. இதன் விரிவானப் பகுதி நாவலின் பிற்பகுதியில் இடம்பெறும்.
            முன்கூட்டியே நாவலின் பிற்பகுதி ஒன்றை முற்பகுதியாகக் கொடுப்பதில் நாவலாசிரியர் பெருமிதம் அடைகிறார். வாசகர்கள் ஆகிய நீங்களும் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று நாவலாசிரியர் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறார். தாங்கள் பெருமிதம் கொண்ட தருணங்களை எழுதி அனுப்பவும். அது நாவலில் இணைத்துக் கொள்ளப்படும் என்பதை இதன் மூலம் நாவலாசிரியர் பிரகடனம் செய்து கொள்ள விழைகிறார்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...