செய்யு - 246
பஞ்சாயத்துக்கு வந்திருந்த பொண்ணுங்க
ஒவ்வொண்ணும் சாமியாத்தாகிட்ட இங்க இருக்க வாணாம்னு எவ்வளவோ மன்றாடிப் பாத்துச்சுங்க.
ஒரே பொண்ணு வூட்டுல இருக்கப் பிடிக்கலன்னாலும் ஒவ்வொரு பொண்ணோட வூட்டுலயும் ஒவ்வொரு
மாசம் இருந்துக்கலாம்னும் சொல்லிப் பாத்துச்சுங்க. இதெல்லாம் முன்னாடியே சொல்லிப்
பாத்ததுதாம். இருந்தாலும் மறுக்கா சொல்லிப் பாக்குதுங்க. சாமியாத்தா கேக்குற பாடாயில்ல.
மவனுங்க இருக்குறப்ப மவளுங்க வூட்டுல வந்து தங்குறது அசிங்கம்டின்னு சொல்லிகிட்டே
இருந்துச்சி. வடவாதிய விட்டு நகர்றது இல்லேங்றதுல சாமியாத்தா உறுதியா இருந்துச்சி.
"ஆனது ஆயிப் போச்சி, இதுக்கு மேல
ன்னா பண்ண முடியும்? கொன்னுத்தாம் போட முடியும். அப்படிப் போட்டா ரொம்ப சந்தோஷங்களடி
பொண்டுகளா! நாமளும் எப்பச் சாவேம்னுதாம் எதிருபாத்துட்டு இருக்கேம். இனுமே இருக்குறதுல
பெரயோசனம் இல்ல. உசுரோட இருக்கவே சுத்தமா பிடிக்கலடி!" அப்பிடினுச்சு. இதுக்கு
மேல சாமியாத்தாவ பேசிக் கரைக்க முடியாதுங்றது பொண்டுகளுக்குப் புரிஞ்சுப் போச்சு.
முன்னமே முடிவு பண்ணபடி வாரா வாரமோ, மாசா மாசமோ முடிஞ்சப்ப எல்லாம் சாமியாத்தவா பாத்துக்கிறதுன்னு
முடிவு பண்ணிக்கிட்டு அப்படியே வந்து பாத்துக்க ஆரம்பிச்சுதுங்க.
இந்தச் சம்பவத்துக்கு அப்புறமா சாமியாத்தா
கொட்டாயை விட்டு வெளியில வர்றத குறைச்சிக்கிடுச்சு. எந்நேரமும் கொட்டாயிலயே முடங்கிக்
கெடக்க ஆரம்பிச்சிடுச்சு. கொட்டாய விட்டு வெளியில வந்தா யாராவது கொட்டாயில புகுந்து
அசிங்கப்படுத்திடுவாங்களோன்னு அதுக்கு ஒரு நெனைப்பு வர ஆரம்பிச்சிடுச்சு. ராத்திரி
பெரும்பாலும் அது தூங்குறதே இல்ல. முழச்சிக்கிட்டே கெடக்கும். ராப்பொழுது கலையாத மூணு
மணி வாக்குல எழுந்திரிச்சி குளிச்சி முடிச்சி நாலு மணிக்கு எல்லாம் மண்ணெண்ணெய் அடுப்புல
உலைய போட்டு அஞ்சு அஞ்சரைக்கெல்லாம் கூட்டோ, கறி காயோ வெச்சு சமையல முடிச்சுக்குது
அது. அதுதாம் நாளு பூராவுக்கும் சாப்பாடு அதுக்கு. அன்னிக்குன்னு அதிர்ஷ்டவசமாக பொண்ணுங்களோ,
சுப்பு வாத்தியாரோ வந்தா அப்பத்தான் அதுக்கு நல்ல சாப்பாடு.
அதுவே சமைச்சி அதுவும் அது ஒத்த ஆளுக்காக
சமைச்சி அதுவே சாப்புடுறது அதுக்கு ஒரு மாதிரியாத்தாம் இருக்கு. யாரு வூட்டுக்கும்
போறதும் இல்ல. அங்க ஒரு வாயி, ரெண்டு வாயி சாப்புடறதும் இல்ல. சமைச்சதை நாலு பேருக்குப்
போட்டுப்புட்டு தானும் சாப்புடுறப்பத்தாம் அதுல ஒரு ருசி தெரியுங்றது அதுக்குப் புரியுது.
ஆனா என்ன பண்றது? தானே சமைச்சி அத தாம் மட்டும் சாப்புடுறது ஒரு கொடுமைன்னு அது புலம்பிக்குது.
வேற ஒண்ணும் அதால பண்ணிக்க முடியல.
பகலு பொழுதுலத்தாம் எப்பயாவது அதுக்குத்
தூக்கம் வருது. ராத்திரியில சுத்தமா தூக்கம் வாரதில்ல. அப்படியே தூக்கம் வந்தாலும்
அதுக்கு கனவு கனவா வர்றதாவும், கனவுல மலத்தைத் தவிர வேற எதுவும் வாரதில்லன்னும் அது
சொல்லுது. அடிக்கடி மூக்கை ஒரு வெதமா இழுத்துக்குது சாமியாத்தா. எந்நேரமும் மலவாடை
அடிக்கிறதா வேற புலம்புது.
கொட்டாயிக்கு யாராவது வந்து பேசிகிட்டு
இருக்குற நேரந்தாம் அதுக்குக் கொஞ்சம் ஆறுதலான நேரம். மத்தபடி நேரம் அதுக்கு இறுக்கமாவும்,
புழுக்கமாவும் போவுது.
இப்படியே ஒரு மனுஷன் பல நாட்களோ, சில
மாசங்களோ இருந்தா என்ன நடக்குங்றது ஒங்களுக்கே தெரியும். அதுதாம் நடந்துச்சி சாமியாத்தாவுக்கு.
நாளுக்கு நாளு அதோட புலம்பல் அதிகமாக ஆரம்பிச்சி. தனக்குள்ளேயே புலம்பிக்க ஆரம்பிச்சிச்சு.
தனக்குத் தானே பேசிக்க ஆரம்பிச்சுச்சு. ஒரு கட்டத்துல வைத்தி தாத்தா எங்கேன்னு கேட்க
ஆரம்பிச்சுச்சு. அவருதாம் செத்துப் போயிட்டாரேன்னு சொன்னதுக்கு அதெ அது நம்ப மாட்டேன்னுச்சு.
பிள்ளைங்க அவரைக் கொண்டு போயி வெச்சிருக்கிறதாவும், அவனுங்ககிட்ட சொல்லி அவரை ஒரே
ஒரு முறை வந்து காட்டிட்டுப் போகச் சொல்லுங்கன்னும், என்னத்தான் இருந்தாலும் கட்டுன
பொண்டாட்டிய ஒரு மனுஷன் பார்க்காம இருப்பாரா? வந்து ஒரு தபா பாத்துட்டு மட்டும் அதுவும்
தூரத்துல எட்ட நின்னுட்டு முகத்த மட்டும் காட்டிட்டுப் போகச் சொல்லுங்கன்னும் சொல்ல
ஆரம்பிச்சுச்சு. இப்படி அது புலம்ப ஆரம்பிச்சதும் அதோட கொட்டாயிக்கு வர்றவங்களுக்கு
தர்ம சங்கடமா ஆக ஆரம்பிச்சிடுச்சு. அதெ வந்துப் பாக்குறவங்களுக்கு அதுக்குப் பதில்
சொல்லி மாள முடியல. எந்தப் பதில சொன்னாலும் அதை அது நம்ப மாட்டேன்னுச்சு. தாம் சொல்றதுதாம்
சரின்னும் அதுப்படி செய்யுங்கன்னும் கேட்க ஆரம்பிச்சிடுச்சு.
நெலமை கொஞ்சம் கொஞ்சமா முத்த ஆரம்பிச்ச
போது கோனாரு தாத்தாவும், சுப்பு வாத்தியாரும் சாமியாத்தாவ டாக்கடருகிட்ட கொண்டுட்டுப்
போவாலாமான்னு ஒரு யோசனையில இருந்தாங்க. அந்த யோசனைத்தாம் சரின்னு அதெ கெளப்பிட்டுப்
போகலாம்முன்னு பார்த்தா அது சத்தம் போட ஆரம்பிச்சிடுச்சு. "யய்யோ! எம் மவனுங்கள
வுட்டு நம்மள கெளப்பிட்டுப் போவப் பாக்குறாங்களே! இந்த அக்கிரமத்த கேக்க ஆளில்லையா!
யய்யோ நம்மட புருஷம் ஒரு வார்த்த சொல்லாம இந்த எடத்த வுட்டு நகர மாட்டேம்! பேயாம
போயிடுங்க. இல்லே வெளக்கமாத்தால அடிப்பேம். செருப்புப் பிய்ஞ்சுப் போயிடும் பாத்துக்கோங்க!"
அப்பிடின்னு வாயில வந்ததையெல்லாம் பேச ஆரம்பிச்சிடுச்சி.
சாமியாத்தாகிட்ட யாரும் புதுசா எதையும்
பேச முடியல. நடப்பைச் சொல்லிப் புரிய வைக்கவும் முடியல. பேச ஆரம்பிச்சா நிறுத்தாம
அது பாட்டுக்கு பேச ஆரம்பிச்சிடுது. இடையில யாரு எதைச் சொன்னாலும் அதை கேட்க மாட்டேங்குது.
அது பேசறத மறுத்துப் பேசுனா, "வெளியில போ! கொட்டாய வுட்டு!"ன்னு சத்தம்
போட ஆரம்பிச்சிடுது. அது பேசுறத கேட்டுகிட்டே இருந்தா எந்தப் பிரச்சனையிமில்ல. பேசுறப்ப
இடையில இடையில அதச் செஞ்சுப்புடு, அவர அழைச்சிட்டு வந்துப்புடு, இவர வந்த பார்க்கச்
சொல்லுன்னு எதையாவது சொல்லிகிட்டே இருக்கும். அது சொல்றதுக்கு எல்லாம் செஞ்சுப்புடுவோம்னு
சொன்னா போதும் வுட்டுப்புடும். இல்லேன்னா, "ஏம் முடியாது? எதுக்கு முடியாது?
இதக் கூட செஞ்சுத் தர மாட்டீயா? பெறவு நீயேம் கொட்டாயில உக்காந்திருக்க. இது நம்மோட
கொட்டாயி. எழுந்திரிச்சு வெளியில போயிடு. இல்ல வெளக்கமாத்துப் பிஞ்சுப் போயிடும்."
அப்பிடின்னு ஆரம்பிச்சிடும்.
இப்படி அதோட நெலமையைப் பார்த்து, அது
பேசுறதைக் கேட்குறப்ப அதெ வந்துப் பார்க்குற பொண்ணுங்களுக்கு கண்ணுல அழுகை அழுகையா
வருது. இப்படிப் பேசிப் பேசியே அது எல்லாத்தையும் மறக்க ஆரம்பிச்சிது. செத்துப் போன
ஒவ்வொருத்தரு பேரா சொல்லி அவங்களை எல்லாம் அழைச்சுகிட்டு வாங்க, அவங்களோட பேசணும்னு
சொல்ல ஆரம்பிச்சிடுச்சு. கட்டில்ல வெத வெதமா உக்கார ஆரம்பிச்சிச்சி. குத்துக்காலு
போட்டு, சம்மணங் கொட்டி, ஒரு கால மடக்கி, ஒரு கால நீட்டிகிட்டு, ரெண்டு காலையும்
மடிச்சிகிட்டுன்னு உட்காந்திருக்கும். படுக்குறதும் அப்படித்தாம். மல்லாக்க படுக்கும்.
குப்புற படுக்கும். ஒருக்களிச்சுப் படுக்கும். சுருட்டிகிட்டுப் படுக்கும். அதால ஒரு
நெலையில இருக்க முடியல. எதையாச்சிம் பேசிகிட்டும், எதையாச்சியும் பண்ணிகிட்டும் இருக்கணும்னு
நெலமை ஆகிப் போயிடுச்சி. கொட்டாயிலேந்து வெளியில பாக்குறப்ப யாராவது தெருவுல போறது
தெரிஞ்சா, "யே யப்பா! யே யம்மாடி!"ன்னு ஒரு குரலு கொடுக்கும். அந்தக் குரலுக்கு
அவங்க வந்துட்டா அது பாட்டுக்கு கொட்டாயிக்குள்ள உக்கார வெச்சி பேசிகிட்டே இருக்கும்.
அது பொறந்தது, வளர்ந்தது, கலியாணம் ஆனது, நரகல்லை அதோட கொட்டாயில போட்டதுன்னு ஒண்ணுக்கொண்ணு
சம்பந்தம் இல்லாம முன்ன பின்ன பேசிகிட்டே இருக்கும்.
ஒருவேளை கூப்பிட்டு வரலைன்னா அவங்க காதுங்களுக்குக்
கேக்குற மாதிரி ஓன்னு சத்தமா அழ ஆரம்பிச்சிடும். "எங் கதெய கேக்க யாரிருக்கா மக்கா!
ஒரு வார்த்த கேட்டுப்புட்டு போயிடு மக்கா! மண்டய வெடிச்சிடும் போலருக்கு மக்கா! நாம்ம
பொறந்த பொறப்பென்ன! வளந்த வளப்பென்ன! கலியாணம் ஆன நெலையென்ன! புள்ளைங்க பொண்டுங்க
பெத்துப் போட்ட வாழ்வென்ன! பேரங்கள பேத்திகள எடுத்துப் போட்ட ராசியென்ன! கடைசிக்
காலத்துல நாம்ம பட்ட கொடும என்ன! அதெ கேக்க ஒரு நாதியில்லாம போனதென்ன! ஒரு வார்த்த
வந்து கேட்டுப்புட்டு போயேம்டா ராசா! ஒரு வார்த்த வந்து கேட்டுப்புட்டு போயேம்டி
எம் ராசாத்தீ! அந்த ஆண்டவங்கிட்ட பிராத போட வேணுமய்யா! வேணுமடி! ஆவன செய்ய வேண்டுமய்யா!
வேண்டுமடி!"ன்னு எட்டுக்கட்டை குரலுல ஒரு இழுப்பு இழுக்க ஆரம்பிச்சிடும்.
சாமியாத்தா இப்படிக் கிடக்குதுன்னு குமரு
மாமாவோ, வீயெம் மாமாவோ ஒரு எட்டு வந்தும் பார்க்கல, எட்டிக் கூடவும் பார்க்கல.
"என்னடா இப்பிடி இருக்கீங்களே?"ன்னு ஊருகார சனங்க கேட்டா, "ஏம் போயி
பாக்கலேம்பீங்க? அதோட கொட்டாயில ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிக் கெடந்தா அதெ நாங்கத்தாம்
பண்ணோம்பீங்க. அதுக்கு ஒரு பஞ்சாயத்த வெச்சி சூடத்தை அணைச்சிச் சத்தியத்தப் பண்ணுங்கடாம்பீங்க.
தேவையா நமக்கு?" அப்பிடின்னு ரெண்டு பேரும் சொல்ல ஆரம்பிச்சதுங்க.
சாமியாத்தா பெத்த பொண்ணுங்க, மருவமவனுங்க,
அதோட தம்பிங்க, உறவு முறைங்க, அதோட பேரப் புள்ளைங்க எல்லாரும் வந்துப் பாக்குதுங்க.
பாத்துப்புட்டு கண்ணு கலங்குதுங்க. பெத்த ஆம்பளப் புள்ளைங்க ரெண்டும் கொட்டாய சித்தே
எட்டிப் பாக்குறத்துக்குக் கூட ம்ஹூம்த்தாம். அது வாங்கி வந்த புள்ளை வரம் அப்படியிருக்கு.
அதோட நெனைவுக்கு ஏதேதோ மறந்து போனாலும் தன்னோட புள்ளைங்கள வுட்டுப்புட்டு அந்தாண்ட
இந்தாண்ட நகந்துடப்புடாதுங்றது மட்டும் அப்படியே இருக்கு.
*****
No comments:
Post a Comment