23 Oct 2019

6.201



            வில்சன் பி.எஸ்.ஸி. மேதமடிக்ஸ் படித்தவர். விகடுவும் பி.எஸ்.ஸி. மேதமடிக்ஸ் படித்தவன். இரண்டு பேரும் மேதமடிக்ஸூக்குத் துரோகம் செய்தவர்கள். கணிதத்தைக் கைவிட்டு கதை, கவிதைகள் என்று எழுத ஆரம்பித்தவர்கள். ஏதே ஒரு சட்டப்பிரிவின் படி இது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். படித்தது ஒன்று, எழுதுவது ஒன்று என்றால் அது படிப்பிற்குச் செய்யும் பழிவாங்கல் ஆகாதா?
            மேதமடிக்ஸூம் அழகான கவிதைத்தான். அதை எழுதுவது சுலபமில்லை. கும்பகோணத்து இராமானுஜம், ஆர்யபட்டர், பாஸ்கரர், கப்ருக்கர் என்று சிலர் எழுதியிருக்கிறார்கள்.
            கவிதை அழகான மேதமடிக்ஸ். அதை கணியன் பூங்குன்றனார், வள்ளுவர், கம்பர், இளங்கோ, பாரதி என்று பலர் எழுதியிருக்கிறார்கள். ஊரோடு ஒத்துப் போ என்பது ஒரு பொதுவான பழமொழி. ஏன் மாறுபட வேண்டும்? எல்லோரையும் போல கவிஞர்களைப் போல, எழுத்தாளர்களைப் போல இருந்து விடுவோம் என்ற முடிவில் கவிதை, கதை என்று எழுத ஆரம்பித்தவர்கள் இவர்கள்.
            கணிதம் என்று எழுத ஆரம்பித்திருந்தால் வாசகர்கள் வெகுவாக குறைந்திருப்பார்கள். கவிதைகளுக்கும், கதைகளுக்கும் பெரிதாக வாசகர்கள் இல்லைதான். என்றாலும் கணிதம் என்றால் நிலைமை படுமோசமாக இருந்திருக்கும். வாசகர்களுக்காகவே இங்கிலாந்தோ, அமெரிக்காவோ சென்றிருக்க வேண்டியிருந்திருக்கும். கும்பகோணத்து இராமானுஜத்துக்கு அதுதானே நேர்ந்தது. அப்படி ஒரு நிர்கதி, துர்கதி நேர்ந்து விடக் கூடாது என்பதற்காகவே இரண்டு பேரும் கணிதத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள். சொல்லிக் கொள்ளட்டும். அப்படி ஒரு பெருமையும் தேவையாகத்தானே இருக்கிறது.
            வில்சன் ஒரு முறை எழுதினார் :
            சொர்க்கம் மிக மோசமான இடம் என்று.
            அங்கு ஓர் எழுத்தாளர் இருக்க முடியாது. அங்கே எழுதுவதற்கு என்ன இருக்கிறது? எல்லாம் சரியாக இருக்கும் ஓர் இடத்தில் எல்லாம் சரியாக இருக்கிறது என்று எழுதுவது ஓர் எழுத்தா?
            நீங்களே எழுதிப் பாருங்கள்! வைத்த பொருட்கள் வைத்த இடத்தில் இருக்கிறது. யாருக்கும் பசியில்லை. எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். யாருக்கும் எந்த குறையுமில்லை. வேறென்ன எழுதுவீர்கள் சொர்க்கத்தைப் பற்றி?
            சொர்க்கத்தில் கொலையில்லை. சொர்க்கத்தில் விபச்சாரம் இல்லை. சொர்க்கத்தில் சீட்டுக் கம்பெனி இல்லை. சொர்க்கத்தில் பித்தலாட்டங்கள் இல்லை. சொர்க்கத்தில் திவால்கள் இல்லை. சொர்க்கத்தில் பங்குச் சந்தைச் சரிவுகள் இல்லை. சொர்க்கத்தில் சிக்னல் பிரச்சனை இல்லை. சொர்க்கத்தில் கடன் பிரச்சனை இல்லை. சொர்க்கத்தில் பருவமழைப் பொய்ப்பதில்லை. சொர்க்கத்தில் யாரும் தற்கொலைகள் செய்து கொள்வதில்லை. சொர்க்கத்தில் லஞ்ச லாவண்யங்கள் ஊழல்கள் இல்லை. சொர்க்கத்தில் கல்வித் தந்தைகள் இல்லை. சொர்க்கத்தில் ஓட்டுக்கு நோட்டு வழங்கப்படுவதில்லை. சொர்க்கத்தில் இடைத்தேர்தல்கள் இல்லை. இப்படியா எழுதுவீர்கள்?
            எழுதுவதற்கு அருமையான நாடு தமிழ்நாடுதாம். இங்கே டாஸ்மாக் இருக்கிறது. குற்றங்கள் இருக்கின்றன. குற்றங்களுக்கென்றே புலனாய்வு பத்திரிகைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள், புலனாய்வு ஊடகங்களும் இருக்கின்றன. லஞ்சம் எல்லாம் பெரிய பிரச்சனையில்லை. ஊழல்கள் இருக்கின்றன.
            தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். இங்கே டாஸ்மாக் இருந்து கொண்டே இருக்கும். டாஸ்மாக் இல்லையென்றால் தமிழ்நாட்டின் வரலாற்றில் பாதி இல்லை. வளமாக எழுத்தில் பதிவாகும், எழுத்தாளர்களால் சோபிக்கப்படும் தமிழகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
            செய்தித்தாள்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டே இருக்கும். அவை வெளிவருவதற்கான கெட்ட விசயங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் நடந்து கொண்டே இருக்கும்.
            சுருங்கச் சொன்னால் மனித சமூகம் அழிந்து போவதுதான் சொர்க்கம். அங்கு இயக்கம் கிடையாது.
            மனித சமூகம் அழியக் கூடாது என்றால் நரகம் தேவை. நரகம்தான் மனிதர்களை இயக்குகிறது, இயக்கிக் கொண்டே இருக்கிறது.
            மனிதர்கள் நரகங்களையோ, நகரங்களையோ உருவாக்கிக் கொண்டு இருக்கும் வரையில் நாவலாசிரியர்கள் இருப்பார்கள். நாவல்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். நாம் தெரியாத்தனமாக இந்நாவலை ஆரம்பித்து விட்டோம். இந்த நாவலை நிறுத்த முடியாது என்பது இந்நேரம் உங்களுக்குப் புரிந்து போயிருக்கும். என்ன செய்வது? நம் தலைவிதி அப்படி இருக்கிறது. நாவலின் தலைவிதி, வாசகர்களின் தலைவிதி இரண்டும்தான்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...