செய்யு - 245
பொன்னியம்மன் கோயில்ல பஞ்சாயத்து.
இந்த சுத்துவட்டத்துக்குப் பொன்னியம்மன்
சக்தி வாய்ந்த தெய்வம். அதோட சக்திக்கு இங்க கட்டுபடாதது எதுவும் இல்லேங்றது சனங்களோட
நம்பிக்கை. எதுவா இருந்தாலும் பொன்னியம்மன் முன்னாடி கற்பூரம் ஏத்தி வேண்டிகிட்டா
போதும், அதெ அவ நிறைவேத்துவான்னு பாக்குற ஆளுங்க எல்லாம் சொல்லும். ஒரு விதத்துல
உக்கிரமான தெய்வமுன்னும் மக்கள் பேசிப்பாங்க.
பொன்னியம்மன் கோயிலு விஷேசங்கள எடுத்துச்
செய்யுறவரு சம்புநாதம். திருவிழான்னா கோயிலே கதின்னு கெடப்பாரு. திருவிசாவுக்கு வரி
வசூல் பண்றதிலேந்து, நன்கொடை வசூலிச்சுட்டு வரேன்னு கிளம்பி, கப்பரை, கிரகம், நாடகம்னு
எல்லா ஏற்பாடுகளையும் முன்னாடி நின்னு செய்யக் கூடிய ஆளு. அதுக்கு இடையில ஒரு நாளைக்கு
பத்து முறையாவது, "பக்த கோடிகளே! அம்பாளின் அடிபொடிகளே! ஆங்காங்கு இருக்கும்
ஆன்மிக அன்பர்களே! அனைவரும் உடனடியாக ஆலயத்துக்கு வந்து அம்பாளின் திருவருளைப் பெறுமாறு
கேட்டுக் கொள்கிறோம்!"ன்னு மைக்கைப் பிடித்து சொல்லலன்னா சம்புநாதத்துக்கு
அன்னைக்குத் தூக்கம் வராது. அவரு அப்படி மைக்கைப் பிடிச்சு ஒரு மாதிரியான கரகர குரல்ல
சொல்றது ரொம்ப விஷேசமா இருக்கும். அவரு அப்படிச் சொல்லுற மாரியே சொல்லிப் பார்த்துகிட்டு,
மைக்கைப் பிடிக்கிறதுக்கு அவருக்கு முன்னாடி ஒரு கூட்டமே நிக்கும்.
தன்னை இயக்குறது, பேச வைக்கிறது, யோசிக்க
வைக்கிறது எல்லாமே அம்பாள்னு நம்புற மனுஷன் சம்புநாதம். அப்படிப்பட்ட மனுஷன் ஒரு தடவெ
திருவிசா வசூல்ல கணக்கச் சரியா ஒப்படைக்காம ஏமாத்துன ஆசாமிங்கள என்ன பண்றதுன்னு மலைச்சுப்
போயி நிக்குறாரு. "யப்பாடி! அம்பாளோட காசுடாம்பிகளா! தெரிஞ்சோ தெரியாமலோ ஒத்த
பைசா இருந்தாலும் எடுத்து வெச்சிடுங்கிடாம்பிகளா! அம்பாளு கண்ண தொறந்தா அவ்வளவுதாம்!
பஸ்பமாயிட வேண்டியத்துதாம்!" அப்பிடிங்கிறாரு. வசூலு பணத்தை ஆட்டைய போட்ட ஆளுங்க
வாயைத் திறக்குறதா தெரியல. சம்புநாதத்துக்குக் கோபம்னா கோபம் அப்படி வந்திடுச்சு.
அந்தக் கோபத்துக்கு வசூல் பணத்தைச் சரியா ஒப்படைக்காத ஆளுங்கள நாலு சாத்து சாத்தியிருந்தா
கூட ஒண்ணும் ஆயிருக்கப் போறதில்ல, யாரும் எதையும் சொல்லியிருக்கப் போறதில்ல. சம்புநாதம்
என்ன பண்ணார்ன்னா, பொன்னியம்மன பார்த்து கோபத்திலயும், ஆவேசத்திலயும், "ஏம்டி
பொன்னியம்மா! ஒம்மட காசையே தின்னு ஏப்பம் வுட்டுகிட்டு ஒம் முன்னாடி நிக்குறானுவோ!
பாத்துட்டு இருக்குறீயேடி? எதுக்குடி ஒங் கழுத்துல தாலி?" அப்பிடின்னு கேட்டுப்புட்டாரு.
தப்புப் பண்ணவங்கள ஆதாரத்தோட நிரூபிச்சு
பணத்தைத் திரும்ப வாங்குறத விட்டுப்புட்டு சம்புநாதம் இப்படிப் பேசிப்புட்டாரேன்னு
கூடி நின்ன கூட்டத்துக்கு அதிர்ச்சியா போவுது. அப்படி யாரு என்னான்னு தெரியாம சந்தேகப்படவும்
சங்கோஜமா இருக்குன்னா எல்லாரையும் பொன்னியம்மன் முன்னாடி நிறுத்தி வசூலு பணத்துல
கையை வைக்கலன்னு கற்பூரத்தை அணைச்சுச் சத்தியம் செய்யுங்கடான்னு சொன்னா விசயம் முடிஞ்சிடுச்சி.
அதுக்கு மேல உள்ளத பொன்னியம்மா பாத்துக்கப் போறா. இதையெல்லாம் வுட்டுப்புட்டு இந்த
ஆளு ஏதுக்கடியம்மா பொன்னியம்மா ஒங் கழுத்துல தாலின்னுல கேட்டுப்புட்டாரேன்னே எல்லாருக்கும்
ஒரு பயந்தாம். ஆம்மாம், பொன்னியம்மன் கழுத்துல எப்பவும் ஒரு தாலிச் சரடு தொங்கிட்டு
இருக்கும். கல்யாணம் ஆவாம தள்ளிப் போற பொண்டுகள் பொன்னியம்மன்கிட்ட வேண்டிகிட்டு
கல்யாணம் ஆன பிற்பாடு அந்தச் சரடுல தாலிக் குண்டோ, மாவடு தொங்கலோ இல்லே்னனா தங்கத்துல
எதாச்சியும் வாங்கிக் கோத்து விடும்ங்க. அதால அந்தத் தாலிச் சரடு ரொம்ப விஷேசம்.
அம்மன் கழுத்துல அது பளபளன்னு நல்லாவே தெரியும். அம்மன்னா அந்தச் சரடடோடத்தான் அவளோட
முகம் இங்க எல்லாருக்கும் நினைவுக்கு வரும். அந்த நெனைப்புலத்தாம் ஆத்திரமும், உக்கிரமும்
தாங்க முடியாம சம்புநாதம் அப்படிக் கேட்டுருக்கணும்.
அவரு சம்புநாதம் அப்படிக் கேட்டு மூணு
மாசத்துல வசூலு பணத்துல ஆட்டையப் போட்ட ஆளுங்க எல்லாம் ஏதோ காய்ச்சல், கழிசல்ன்னு
வந்து ரத்தமா வடிஞ்சி நெசமாவே செத்துப் போயிட்டானுங்கோ. அது டெங்குக் காய்ச்சலோ,
சிக்கன்குன்யா காய்ச்சலோன்னு டாக்கடருக சொன்னாலும் சனங்க நம்புறாப்புல இல்ல. அந்தக்
காய்ச்சலயும், கழிசலயும், ரத்தமா வடிய வெச்சதையும் பண்ணது அம்மன்னுதான்னு நம்புறாங்க
எல்லாரும். "அவளுக்கு வர வேண்டிய காசையே ஆட்டையப் போட்டா அவ சும்மா இருப்பாளா?
அதாங் வேலைய காட்டிப்புட்டா"ன்னு பேசிகிட்டுத் திரிஞ்ச சம்புநாதம் அன்னைக்கு ராத்திரி
மாருல வலிக்குதுன்னு சொன்னவரு அந்த மாரு வலியோடயே போயிச் சேந்துட்டாரு. அவரோட பொண்டாட்டிக்
கழுத்துல இருந்த தாலி எறங்கிப் போயிடுச்சு.
ஊரு இப்போ ரெண்டு வெதமாவும் பேசுது. அவளோட
காச எடுத்தவங்களயும் அவ தண்டிச்சப்புட்டா, ஒங் கழுத்துல எதுக்குடி தாலின்னு கேட்டவரோட
பொஞ்சாதி கழுத்துலேந்தும் தாலிய எறக்கிப்புட்டான்னு. அதாலத்தாம் பொன்னியம்மன்ன இஷ்ட
தெய்வம், துஷ்ட தெய்வம்னு ரெண்டாவும் சொல்லுவாங்க. ரொம்ப சரியா இருந்தா அவளும் ரொம்ப
சரியா இருப்பான்னும், கொஞ்சம் பெசகுனாலும் அவ பொல்லாதவளா மாறிடுவான்னும் பொன்னியம்மங்கிட்ட
எல்லாருக்கும் ஒரு பயம் இருக்கத்தான் செய்யுது.
இப்ப ஒங்களுக்குச் சொல்ல வேண்டியதில்ல,
பொன்னியம்மன் கோயிலு பஞ்சாயத்துன்னா கிராமமே திரண்டு வந்துடும்னு. பஞ்சாயத்துத் தீர்ப்பத்
தாண்டி அதுல பொன்னியம்மனோட தீர்ப்பும் இருக்கும்ங்றது இங்க எல்லாத்தோடயும் ஐதீகம்.
பஞ்சாயத்து தீர்ப்பு விசாரிச்சு முடிஞ்ச ஒடனே வந்துட்டாலும், பின்னாடி ஒரு மூணு மாசத்துலயோ,
ஆறு மாசத்துலயோ அம்பாளோட தீர்ப்பும் வந்துடும்னு பஞ்சாயத்துக்கு வர்ற எல்லாத்துக்கும்
ஒரு நம்பிக்க. இதைத்தாண்டியம்மா அரசம் அன்று கொல்லுவாம், தெய்வம் நின்னு கொல்லும்னு
சொல்லிக்குவாங்கன்னு இந்தச் சனங்க பேசிப்பாங்க.
சாமியாத்தா கொட்டாயி நரகல்லு சம்பந்தமான
பஞ்சாயத்துக்கு திசைக்கு ஒண்ணா இருக்குற சாமியாத்தாவோட பொண்ணுங்க எல்லாமும் பஸ்ஸ
பிடிச்சு வந்திடுச்சுங்க. குமரு மாமா, வீயெம் மாமா வூட்டுலேந்தும் எல்லாமும் வந்திடுச்சு.
பஞ்சாயத்துப் பெரிசுகளும் வந்து உக்காந்திருக்குங்க. இன்னிக்கு நடக்குற பஞ்சாயத்துல
பஞ்சாயத்துப் பெரிசுகள்னா மில்லுகாரரு, டீக்கடை உலகநாதன், சம்புநாதத்தோட மூத்த மவன்,
அதோட கோனாரு தாத்தா இவங்கதாம். கோயிலச் சுத்தி பெருங்கூட்டமா இருக்கு. கோயிலு கேட்டுக்கு
முன்னாடி அரசமரம். நல்லா பெருத்த அரச மரம். நூறு, எரநூறு பேருக்கு பந்தலு போட்ட மாதிரி
அது பம்பல பரப்பிகிட்ட நிக்குறது பஞ்சாயத்துக்கு வசதியா போவுது.
பஞ்சாயத்து ஆரம்பமாவுது.
கோனாரு தாத்தா தொண்டைய ஒரு கனைப்பு கனைச்சுகிட்டு
நடந்ததையெல்லாம் சுருக்கமா சொல்றாரு. சொல்லிப்புட்டு, "ஆரு இந்த காரியத்தச்
செஞ்சாலும் அவங்களா முன்னாடி வந்து சொல்லிப்புட்டு ஆக்கினைகள பண்ணிப்புட்டா போதும்.
வேற ஒண்ணுத்தையும் யாரும் எதிர்பார்க்கல!" அப்பிடிங்கிறாரு.
ஒரு பெரிய மெளனம் அங்க கூடி கட்டிக்கிது.
"அதாங் வெசயத்தப் போட்டு ஒடைச்சாச்சில்ல.
சட்டுபுட்டுன்னு ஒரு முடிவுக்கு வந்துப்புட்டா அவங்கவங்க அடுத்த வேலைய சோலிய பாக்கலாம்!"
அப்பிடிங்கிறாரு டீக்கடை உலகநாதன். அவரு பேச்சுல டீக்கடையை அப்படியே போட்டுப்புட்டு
இதுக்காக ஓடி வந்த தவிப்புத் தெரியுது.
மில்லுகாரரும் தம் பங்குக்குத் தொண்டையை
ஒரு கனைப்பு கனைச்சுபுட்டு சாமியாத்தாவ பார்த்து, "ஏங் யாச்சி ஆரு மேலயாவது ஒங்களுக்கு
ஐயப்பாடா இருக்குதாக்கும்?" அப்பிடிங்கிறாரு.
"நமக்கு ஆருங்க விரோதம்? நாம்ம ஆரு
மேல ஐயப்பாடா இருக்குறது. ஏத்தோ நடந்தது நடந்துப் போச்சி. வுட்டுப்புடுங்க!"
அப்பிடிங்குது சாமியாத்தா. இதெ கேட்டுப்புட்டுக் கூட்டத்துக்கு அப்படியே சப்புன்னு
போவுது. சாமியாத்தாவோட பொண்ணுங்க ஒவ்வொண்ணும் அதெ எரிச்சிப்புடறது போல பாக்குதுங்க.
"லேசுபட்ட கெழவியா இது! புள்ள பாசம் கண்ண மறைக்குது! இதுக்கு இதுவும் வேணும்.
இன்னும் வேணுங்குறது போல!" மனசுக்குள்ள கருவிக்குதுங்க.
"இந்தாருங்க யாச்சி! பஞ்சாயத்த கூப்டாச்சி.
இஞ்ஞ இப்டியெல்லாம் பேசப்படாது. எப்டி மொற செய்யணுமோ அதத்தாம் பேசணும்." அப்பிடின்னு
கோனாரு தாத்தா சொல்லிப்புட்டு கூட்டத்தைப் பார்த்து, "பெத்த புள்ளைங்க மேலத்தாம்
ஐயப்பாடுன்னு எந்தத் தாயீ சொல்லுவா! அதாங் ஆச்சி தடுமாறிப் போவுது. அதாங் உண்மை.
நேரடியா நாமளே வெசயத்துக்கு வர்றேம். நமக்கு ஆச்சியோட ரண்டு புள்ளைங்க அவங்க வூட்டுல
இருக்குறவங்க மேலத்தாம் ஐயப்படா ஆவுது. அதால அவங்கத்தாம் வாயைத் தொறந்து சொல்லணும்.
ஆனது ஆயிப் போச்சி. பரவால்ல. ஆனா பண்ணது ஆருன்னு தெரிஞ்சாவணும். அதுக்காக அவுங்க காலுல
வுழுந்து மன்னிப்புக் கேட்டு ஆக்கினைய பண்ணிப்புடணும்." அப்பிடிங்கிறாரு கோனாரு
தாத்தா.
"யப்பா கொமரு! இந்தாரு வீயெம்மு!
என்னா சொல்ல வர்றீங்க? சட்டுபுட்டுன்னு சொல்லி முடிங்க." அப்பிடிங்கிறாரு சம்புநாதத்தோட
மூத்த மவன்.
"நமக்கும் இதுக்கும் சம்பந்தம்லாம்
இல்ல. பஞ்சாயத்துக்குக் கட்டுபட்டு வந்திருக்கேம். அதாங் விசயம். அந்த மாரி அசிங்கம்
புடிச்ச வேலய எல்லாம் பண்ணணும்னுங்ற அவசியம் எங்களுக்கு இல்ல பாருங்க! உண்ம என்னான்னு
தெரியாம கோனாரய்யா உண்ம அது இதுன்னு எதுவுஞ் பேச வாணாம். எதா இருந்தாலும் வெசாரிச்சுத்தும்
முடிவு பண்ணணும். வெசாரிக்கிறது முன்னாடி யில்ல!" அப்பிடிங்குது குமரு மாமா.
"இத்து எங்களுக்கு ன்னா தலயெழுத்தா?
இப்டி பஞ்சாயத்துல வந்து நிக்கணும்னு!" அப்பிடிங்குது வீயெம் மாமா.
"இந்த மாரில்லாம் பேசாதே! நடந்ததுல
ஒனக்கு பங்கு இருக்கா? இல்லியா? அதெ மட்டும் சொல்லு!" அப்பிடிங்கிறாரு மில்லுகாரரு
கறாராய் ஒரு புடி பிடிச்சி.
"நமக்கும் அதுக்குல்லாம் சம்பந்தமே
யில்ல!" அப்பிடிங்குது வீயெம் மாமா.
"மேக்கொண்டு ன்னா பண்ணணும் கோனாரே?"
அப்பிடிங்கிறாரு மில்லுகாரரு.
"மேக்கொண்டு ன்னா பண்ணுவோமா அதெ
பண்ண வேண்டித்தாம். வில்லைய கொழுத்தச் சொல்லுவோம். பொன்னியம்மா சத்தியமா இல்லன்னு
அணைச்சுட்டுப் போவட்டும்! நாமளுக்குக் கட்டுப்படாத பஞ்சாயத்து பொன்னியம்மாவுக்குக்
கட்டுபட்டுத்தானே ஆவணும்!" அப்பிடிங்கிறாரு கோனாரு தாத்தா.
மில்லுகாரரும், உலகநாதனும் சரிங்கிற மாதிரி
கண்ண காட்டுறாங்க. சம்புநாதத்தோட மூத்த மவன் மெளனமா உக்காந்திருக்காரு.
நாலு கற்பூர வில்லைகள பூட்டி இருக்குற
கோயிலுக்கு முன்னாடி கேட்டுக்கு முன்னால வெச்சி கொழுத்துறாங்க. குமரு மாமா அதோட
பொண்டாட்டி, வீயெம் மாமா அதோட பொண்டாட்டி எல்லாரையும் கிட்டக்கா வரச் சொல்லி,
"சம்பவத்துக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லே!" அப்பிடின்னு சொல்லி எரியுற
வில்லைய அணைக்கச் சொல்லுறாங்க.
நாலும் எரியுற கற்பூர வில்லைக்கு முன்னாடி
வந்து, "இதுக்கும் நமக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல!"ன்னு அணைச்சுச் சத்தியத்த
பண்ணிபுட்டு திரும்பிப் பார்க்காம போயிட்டே இருக்காங்க. முகத்துல ஒரு சலனமோ, பயமோ
இல்ல.
"சத்தியம்னா சர்க்கரைப் பொங்கலுன்னு
நெனைச்சிட்டா பண்ணிட்டுப் போறீங்க? இன்னும் மூணு மசாத்துக்குள்ள தெரியும்டியேய்!"
அப்பிடிங்கிறாரு கோனாரு தாத்தா.
*****
No comments:
Post a Comment