22 Oct 2019

6.1



            வில்சன் அண்ணனை ஓர் எழுத்தாளராக அங்கீகரிக்க அவர் அவசியம் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் நிர்பந்திக்கப்பட்டார். நுழைவுத்தேர்வு எழுதாதவர் எழுத்தாளர் இல்லை என பிரகடனபடுத்தப்பட்ட பிறகு ஏற்பட்ட கட்டாயத்திற்கு அவர் உடன்பட வேண்டியதாயிற்று.
            எதை எதையோ எழுதித் தள்ளும் எழுத்தாளருக்கு ஒரு நுழைவுத் தேர்வு எழுதுவதா கடினம் என்று நினைத்த அவர் நுழைவுத்தேர்வு எழுத ராஜஸ்தான் செல்ல வேண்டியதாக இருந்தது.
            வழக்கமாக அரைக்கை சட்டை அணியும் அவர் நுழைவுத் தேர்வுக்காக முக்கால் கை சட்டை அணிய வேண்டும் என்று சொல்லப்பட்டதும் வேட்டியிலிருந்து கொஞ்சம் கிழித்து ஊக்குகளால் குத்தி அரைக்கை சட்டையை முக்கால் கை சட்டையாக ஆக்கிக் கொண்டார். எங்கள் தலைவர் காமராசர் இப்படித்தான் சட்டை அணிந்தார் என்று அதைப் பெருமையாகச் சொல்லிக் கொண்டார்.
            வேட்டி அணிந்து நுழைவுத்தேர்வு எழுத முடியாது என்றதும் மகனின் முழுக்கால் சட்டையை வாங்கிக் கொண்டவர் மகனிடம் வேட்டியைக் கொடுத்து உடுத்திக் கொள்ளச் சொன்னார். அப்பாவின் நுழைவுத் தேர்வுக்காக மகன் முழுக்கால் சட்டையைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது.
            அடிப்படையில் வில்சன் தமிழ் எழுத்தாளர். அவருக்கு லத்தீன் மொழியிலான வினாத்தாள் வழங்கப்பட்டது. தமிழ் எழுத்துகள் ஏன் இப்படி வித்தியாசமாக இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்ததில் நுழைவுத் தேர்வின் ஒன்றரை மணி நேரம் கரைந்து போயிருந்தது.
            தனக்கு வினாத்தாளின் மொழி புரியவில்லை என வில்சன் எடுத்துச் சொன்ன போது, "ஓர் எழுத்தாளர் இப்படி பதில் சொல்லக் கூடாது. எழுத்தாளர் என்பவர் எழுத்துகளுக்கு மத்தியில் பேதம் பார்க்கக் கூடாது. எந்த மொழியின் எழுத்தானாலும் சிநேக பாவத்தோடு அணுக வேண்டும்" என்று தேர்வு கண்காணிப்பாளரால் அறிவுறுத்தப்பட்டார்.
            இப்படியாக முதன் முதலாக எழுதப் போன எழுத்தாளருக்கான நுழைவுத்தேர்வில் மொழி காரணமாக பின்னடைவைச் சந்தித்த வில்சன் இரண்டாவது நுழைவுத் தேர்வின் போது மிகுந்த விழிப்பாக இருந்து, தமிழ்நாட்டிலேயே நுழைவுத் தேர்விற்கான தேர்வு மையத்தைப் பிடித்து, தமிழிலேயே தேர்வு எழுத எப்படியோ உரிய ஆணைகளைப் பெற்று தேர்வு எழுத உட்கார்ந்தார்.
            வில்சன் அண்ணனுக்கு இது இரண்டாவது நுழைவுத் தேர்வு.
            நுழைவுத் தேர்வின் முதல் கேள்வி இப்படி இருந்தது.
            இன்றைய தமிழ்க் குழந்தைகள் அதிகம் பேசும் வாக்கியங்கள் இரண்டு கூறுக.
            வில்சன் இப்படி பதில் எழுதினார்.
            1. டென்ஷன் பண்ணாதீங்க டாட்.
            2. டென்ஷன் பண்ணாதே மம்மி.
மூன்றாவதாகவும் ஒரு வாக்கியத்தை எழுத நினைத்தார். எழுதவில்லை. அது என்ன வாக்கியம் என்று உங்களுக்கும் தெரியும். நாவலாசிரியருக்கும் தெரியும். ஆகவே அது நாவலில் இடம்பெற வேண்டிய அவசியமில்லை.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...