21 Oct 2019

மேக்கரிச்ச பேச்சா பேசுறீங்க?



செய்யு - 244
            கொட்டாயை வந்து கோனாரு தாத்தா பார்த்த பின்னாடி இனுமே சாமியாத்தாவைக் கொட்டாயில தங்க வைக்கிறதுல அர்த்தமில்லன்னு நினைக்குறாரு. இது இந்தப் பக்கம் ஒண்ணாவும், அந்த பக்கம் ஒண்ணாவும் இருக்குற பிள்ளைக வூட்டுலேந்துதாம் யாரோ பண்ணிருக்கணும்ங்றது அவருக்குத் தெரியும். எந்தப் பிள்ளையோட வூட்டுலேந்து யாரு இந்த வேலையைச் செஞ்சதுங்றதுதாம் அவருக்குப் புடிபடல. இதுலேந்து சாமியாத்தா இந்தக் கொட்டாயில இருக்குறது கூட பிள்ளைகளுக்குப் பிடிக்கலங்றது அவருக்குத் தெரியுது.
            "என்னடா புள்ளீக இவனுங்க? வூட்டலயும் கூட வெச்சிக்க மாட்டேங்றானுங்க. பக்கத்துல ஒரு கொட்டாயிலயும் இருக்க வுட மாட்டேங்றானுங்கோ! நமக்குத்தாம் மூணு புள்ளைக! நாமல்ல கல்யாணத்தப் பண்ணி அவனுங்கள வூட்ட வுட்டு வெளியில வெரட்டி அடிச்சேம்! பின்னாடி வந்து ஒட்டிக்கிட்டானுங்க! சேர்தாம் போன்னு நாம்ம சேத்துக்கிட்டேம்! புள்ளைங்கன்னா கல்யாணத்த பண்ணி வெச்ச அன்னிக்கே கோழிங்க குஞ்சுகள கொத்தித் தொரத்தி வுட்டுற மாரி வெரட்டி விட்டுப்புடணும் போலருக்கு." அப்பிடின்னு மனசுக்குள்ள முணுமுணுத்துக்கிறாரு.
            இனுமேலும் இந்தக் கொட்டாயில தங்கா வைக்காம சாமியாத்தாவுக்கு வேற எடத்துல தங்க வைக்குறதுக்கு ஏற்பாடு பண்ணணும்னு அவரு மனசுக்குள்ள ஒரு முடிவையும் பண்ணிக்கிறாரு. அதுக்கு முன்னாடி குமரு மாமா, வீயெம் மாமான்னு ரெண்டு பேரோட வூட்டுலயும் கூப்புட்டுக் காட்டி விசாரிச்சுப்புடறதுன்னு முடிவு பண்றாரு. மொதல்ல குமரு மாமா வூட்டுப்பக்கம் போயி அதோட வூட்டைத் திறக்க வெச்சி அதெ வெளியில கொண்டாரதுக்குள்ள படாதபாடு பட்டுப் போறாரு. "ஏலே தம்பீ! ஏலே கொமரு! கோனாரய்யா வந்தருக்கேம்டா! கதவெ தெறடா! முக்கியமான சோலியாச்சுடா! வாடா வெளியில!" அவரு போடுற சத்தம் வடவாதியைத் தாண்டியும் கேக்கும் போலருக்கு. ஆனா வூட்டுக்குள்ள கேட்ட பாடு இல்ல. அஞ்சு நிமிஷமோ, பத்து நிமிஷமோ கழிஞ்ச பிற்பாடுதாம் மேகலா மாமி கதவெ திறந்துகிட்டு வந்து, "ன்னா விசயம்? ஏம் இப்பிடி சத்தம் போடுறீங்க?" அப்பிடிங்குது.
            "வூட்டுக்காரேம் இல்லையா?" அப்பிடிங்கிறாரு கோனாரு.
            "ம்ஹூம்! உள்ளத்தாம் இருக்காரு!" அப்பிடிங்குது மேகலா மாமி.
            "இன்னும் பட்டறைக்குக் கிளம்புலயா? சித்தே நாம்ம வாரச் சொன்னேம்னு பக்கத்துல வரச் சொல்லு கொட்டாயிக்கு. நீயும் வா!" அப்பிடின்னுட்டு விடுவிடுன்னு வீயெம் மாமா வூட்டுப்பக்கம் போறாரு.
            அங்க போயி, "ஏலே யம்பீ! மணியா!"ன்னு ஒரு குரலுதாம். வீயெம் மாமா வெளியில வந்து நிக்குது.
            "ஏம்டாம்பீ! இன்னிக்கு வேலைக்குப் போகலீயா?" அப்பிடிங்கிறாரு கோனாரு தாத்தா. "கெளம்பணும். கெளம்பிகிட்டு இருக்கேம்!" அப்பிடிங்குது வீயெம் மாமா.
            கோனாரு தாத்தாவுக்குப் பொறி தட்டுனது போல இருக்கு. காரியத்த இவனுங்களோ, இவனுங்க கட்டுனதுகளோத்தாம் பண்ணிருக்கணும்னு அவருக்குத் தோணுது. அப்படிப் பண்ணதாலத்தாம் வேலைக்குக் கூட போகாம ஏதாச்சிம் பிரச்சனைன்னா அதெ சமாளிக்கணும்னு இன்னும் வூட்டுலயே அடைஞ்சிக் கெடக்குறானுவோன்னு புரியுது.
            "யே யம்பீ! பக்கத்துல கொட்டாயிக்குக் கொஞ்சம் வாயேம். ஒம் பொஞ்சாதியயும் கூட்டிட்டு வா!" அப்பிடின்னு கொட்டாயிப் பக்கம் போறாரு. பின்னாடியே அவரு சொன்னபடியே வீயெம் மாமாவும், கோகிலா மாமியும் வருது. அவரு கொட்டாயிக்குப் போயி நிக்க, குமரு மாமாவும், மேகலா மாமியும் வருது.
            கொட்டாயைத் திறந்து நாலு பேருகிட்டயும், "யென்னடாம்பீ இதல்லாம்?" அப்பிடிங்றாரு கோனாரு தாத்தா. அவரு கொட்டாயைத் திறந்து காட்டுனதும், "ச்சீய்! இதென்ன அசிங்கம்? இதெக் காட்டத்தாம், இந்தக் கருமத்தப் பாக்கத்தாம் நம்மள கூட்டியாந்திகளாக்கும்?"னு ரெண்டு மாமிகளும் சொல்லி வெச்சது போல ஒரே குரல்ல சொல்லி மூக்கைப் பொத்திக்குதுங்க.
            "மூக்கல்லாம் பொத்திக்கக் கூடாது ஆம்மா! நடந்த சங்கதி என்னான்னு தெரியணும்?" அப்பிடிங்றாரு கோனாரு தாத்தா காத்திரமா.
            "கெழவிக்கு எழுந்திரிச்சிப் போயி பேளுறதுக்குக் கூட முடியல போலருக்கு. கொட்டாயில பேண்டு வெச்சிருக்கு!" அப்பிடிங்குது கோகிலா மாமி.
            "என்னவோ பெரிய மனுஷன் கூப்புடுறாரேன்னு வந்து பாத்தா... இப்டியா சின்ன புள்ள தனமா இதெப் போயிக் காட்டுவாங்க? நாமளும் என்னவோ ஊரு ஒலகம் பாக்காத அதிசயத்தாம் காட்ட கூட்டியாறாரோன்னு நெனச்சிக்கிட்டேம்?" அப்பிடிங்குது மேகலா மாமி.
            "பல்ல தட்டிப் புடுவேம் பாத்துக்கோ! ன்னா எகத்தாளமா பண்றீங்க? பண்றத பண்ணிப்புட்டு நையாண்டி வேறயா? சரிபெட்டு வராது. யாருன்னு மருவாதியா சொன்னாக்க விசயத்த இத்தோட முடிச்சிக்கலாம். இல்லன்னா நடக்குறதே வேறத்தாம்!" அப்பிடிங்கிறாரு கோனாரு தாத்தா.
            "யோவ் என்னாச்சுய்யா ஒனக்கு? ஏத்தோ பெரிய மனுஷன்னு மருவாதி கொடுத்து கூப்பிட்டதுக்கு வந்தா, காலங்காத்தாலே இந்தக் கருமத்தக் காட்டி என்னென்னவோ கேட்குறே?" அப்பிடிங்குது வீயெம் மாமா.
            "எலே வயசுக்கு மருவாதிய கொடு! சின்னபட்டுப் போயிடுவே ஆம்மா! வாங்கருவா, வெட்டருவா எல்லா தயாரத்தாம் இருக்கு. எடுத்தாந்து போட்டுப் பொளக்கறதுக்கு நேரம் ஆவாது பாத்துக்கோ! உண்ம தெரிஞ்சாகணும். இல்லே மனுஷனா இருக்க மாட்டேம்!" அப்பிடிங்கிறாரு கோனாரு தாத்தா உக்கிரமாக.
            "ன்னா நீங்க? நம்ம யப்பா காலத்து ஆளு! அவரோட இருந்தவரு, பழகுனவருன்னு மருவாதிய கொடுத்தா இஷ்டத்துக்கு, வாயிக்கு வந்தத பேசுறீயளே? இப்போ ன்னா நடந்துப் போச்சி? எங்களுக்கு ஒண்ணும் தெரியல. நீஞ்ஞத்தாம் சொல்லணும்!" அப்பிடிங்குது குமரு மாமா.
            "எலேய் நம்மள வெடைக்குறீங்களடா? அடித்தடத்த பாத்து அத்து எந்த வூட்டு ஆடு, எந்த வூட்டு மாடுன்னு சொல்றவம்டா நாம்ம! எங்கிட்டயே சாலுசாப்பு பண்றீங்களா? இத்து சரிபட்டு வாராதுடா! மானம் மருவாதியோட பேசித் தீத்துப்புடலாம்னு பாத்தா மேக்கரிச்ச மாரியா பேசுறீயோ? நாளைக்கு ராத்திரி ஊரு பஞ்சாயத்துடா! பொன்னியம்மம் கோயிலுல்ல வெச்சிப் பேசிப்புடுவோம்டா! அஞ்ஞ வெச்சி கற்பூரத்த அணைச்சி இத்த நாங்க யாரும் பண்ணலன்னு சத்தியம் பண்ணுங்கடா நாம்ம நம்பறேம்! இப்ப கெளம்புங்கடா! மயிலே மயிலே எறகு போடுண்ணா எந்த மயிலுடா எறகப் போடும்? போட வைக்கிறேம்டா! வடவாதி கோனாருன்னா யாருன்னு காட்டுறேம்டா! வாங்கடா இப்ப வாங்க!" அப்பிடின்னு தோள்ல கெடந்த செவப்பு காசித் துண்ட தோளுலேந்து எடுத்து ஒரு ஒதறு ஒதறி மறுபடியும் தோளுல போட்டுக்கிறாரு.
            குட்டையான உருவம் கோனாரு. இடுப்புல கொஞ்சம் அழுக்கான வேட்டித்தாம் கட்டிருக்காரு. நல்ல உருட்டையான உடம்பு. தொப்பையோ, தொங்கு சதையோ எதுவுங் கிடையாது. தெரண்ட தேகம். கை, காலுல்லாம் கர்ண கர்ணையாத்தாம் இருக்கு இந்த வயசுலயும். சோத்தாங் கையில முழங்கைக்கு மேல தோளுபட்டைக்குக் கீழே ஒரு செவப்புக் கயித்த ஒரு சின்ன தாயத்தோடு முடிஞ்சிக் கட்டிருக்கிறாரு. அந்தத் தாயத்த எடது கைய கொடுத்து ஒரு தடவு தடவிக்கிறாரு. பெறவு பஞ்சு பஞ்சா இருக்குற வெள்ளைத் தலைமுடிய ஒரு தடவு தடவிக்கிறாரு. "பாப்பம்டா வாங்க!"ன்னு பல்ல கடிச்சிகிட்டு அழுத்தமா சொல்றாரு. ஆவேசமா படலத் தொறந்துகிட்டு வூட்டு நோக்கி நடக்க ஆரம்பிச்சவரு நடுத்‍தெருவுல நின்னுகிட்டு, "எவ்வேம் பேண்ட பீங்ற வரைக்கும் பஞ்சாயத்துல சொல்றேம்டா!" அப்பிடிங்றாரு. எப்படியும் உண்மை வெளிவந்திடுங்ற ஆவேசத்துலத்தாம் அவரு பேசுறாரு. ஆனா அதுங்க மொகத்துல அதுக்கான அறிகுறி எதுவும் தெரியல. என்னவோ அதுக்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாத மாதிரில்ல நிக்குதுங்க.
            அதோட மட்டுமில்லாம எந்த பஞ்சாயத்த வெச்சாலும் அதப் பாக்க நாங்க தயார்ங்ற மாரி ஒரு பார்வைப் பார்க்குது பாருங்க. அதெ கோனாரு தாத்தாவுல தாங்கிக்க முடியல. "நாம்ம கறந்து கொடுக்குற பாலு மேல சத்தியமா சொல்றேம்டா! வெளங்காம போயிடுவீங்கடா! மண்ணா கூட போவ மாட்டீங்கடா! சாணியில புழுபுழுத்துப் போவுற கணக்கா புழுபுழுத்துப் போவீங்கடா! பெத்தவ வவுறு எரிஞ்சா என்னாவும்னு பாரு!" அப்பிடிங்றாரு கோனாரு தாத்தா. அவரு என்னவோ ஜோக்கு சொன்னது போல அதெ கேட்டுட்டு பல்ல இளிச்சுச் சிரிக்குதுங்க மாமிங்க ரெண்டும். "யேய் பொட்டச்சிகள சிரிக்க வுட்டுட்டா பாத்துட்டு நிக்குறீங்க? நாளிக்கு பஞ்சாயத்துல சிரிக்க அடிச்சிப்புடறேம்டா! சிரிப்பா சிரிக்க வைக்குறேன்னா இல்லையான்னு பாருங்கடா!"ங்றாரு கோனாரு தாத்தா. அவரு நெஞ்செல்லாம் ஒரு துடிப்பு துடிச்சு எறங்குது. இப்போ துண்டைத் தூக்கித் தலைக்கு மேல நாலு சுத்து சுத்தி தோளுல்ல போட்டுக்கிறாரு. விடுவிடுன்னு நடக்குறாரு வூட்டைப் பாத்து.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...