உங்களுக்கு
ஜீரோவும், இன்பினிட்டியையும் எழுதிப் பார்க்கும் போது ஜீரோவும் இன்பினிட்டியுமாகத்
தெரியும். எதை எப்படி எழுதுகிறோமோ அது அப்படித்தானே தெரியும். நாவலாசிரியருக்கு அது
ஓ.கே. என்பதாகத் தெரிகிறது. வாசகர்களுக்கு இன்னும் வித்தியாசமாகத் தெரியும். அதுதான்
ஒரு நாவல்.
நீங்கள் மிருதங்க சக்கரவர்த்தி படம் பார்த்திருக்கிறீர்களா?
அதில் மிருதங்கம் வாசித்துக் கொண்டே ரத்தம் கக்கியபடியே சாவாரே சிவாஜி. சாவு குறித்த
பயம் அதிகமானது அந்தக் காட்சியைப் பார்த்த பிறகுதான் சக்திக்கு.
சக்திக்கு இசையைக் கற்றுக் கொள்ள வேண்டும்
ஆசை இளம் பிரயாத்திலிருந்து அதிகமாக இருந்தது. இந்தக் காட்சியைப் பார்த்த பிறகு அதைக்
கற்றுக் கொள்ளக் கூடாது என்ற முடிவு எடுத்ததுடன், முக்கியமாக மிருதங்கத்தைக் கற்றுக்
கொள்ளவே கூடாது என்கின்ற தீர்மானத்தை வகுத்துக் கொண்டார் சக்தி.
சாவு அவ்வளவு சங்கப்பட வேண்டிய விசயமா?
சந்தோஷப்பட வேண்டிய விசயம்.
சாவு!
மனித இம்சைகள் ஒரு முடிவுக்கு வருகின்றன.
இழுத்து இழுத்துக் கொண்டிருக்கும் மூச்சுக்கு
ஓய்வு கிடைக்கிறது.
லபா டபா என்று அடித்துக் கொண்டு கிடக்கும்
இதயத்துக்கு நிம்மதி.
பிறப்பு நிச்சயமோ இல்லையோ! யார் சொல்ல
முடியும்? சாவு சர்வ நிச்சயம். பிறந்தால் சாவைப் போல சர்வ நிச்சயமான ஒன்று இந்தப்
பிரபஞ்சத்தில் வேறேதும் உண்டோ?
சக்தி நிறைய படிக்கக் கூடியவர். நிறைய
என்றால் இளம் பிரயாத்திலேயே மண்டையில் முடி நரைத்துப் போகும் அளவுக்குப் படிக்கக்
கூடியவர்.
அப்போது வாஷிங் பவுடர் நிர்மா பிரபலமான
விளம்பரம். இப்போதும் அவ்வபோது அந்த விளம்பரம் தலைகாட்டுகிறது. அந்த நிர்மாவில் கவுன்
போட்டுக்குக் கொண்டு ஒரு சிறுமி வட்டமடிப்பாள். அந்தச் சிறுமி இறந்து விட்டதாக சேதி
கேள்விபட்டதுதான் தாமதம். அந்த விளம்பரத்தைப் பார்க்கும் போதெல்லாம் பயம் கட்டிக்
கொள்கிறது சக்திக்கு. கவுன் போட்ட சிறுமிகளைப் பார்த்தால் இன்னும் அதீத பயம். வாஷிங்
பவுடர் நிர்மாவை வாங்கிக் கூடாது என்று முடிவெடுத்து, வாஷிங் பவுடரையே வாங்கக் கூடாது
என்று முடிவெடுத்து, இன்று வரை டிடர்ஜெண்டில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது சக்தியின்
சலவைகள்.
நிஜமாகவே வாஷிங் பவுடர் நிர்மா சிறுமி
இறந்து விட்டாளா? நாவலாசிரியருக்குச் சந்தேகம் இருக்கிறது. இதில் சந்தேகம் வேண்டியதில்லை.
இறப்பு சர்வ நிச்சயம். சந்தேகம் என்னவென்றால் சக்தி கேள்விப்பட்ட அந்த நாட்களில் சிறுமி
இறந்துபட்டிருப்பாளா என்பதுதாம்.
காந்தி இருக்கிறாரே! அவர் சுதந்திரப் போராட்டத்தில்
இறந்திருக்கலாம் என்பார் சக்தி. காந்தி இறந்தது சுதந்திர இந்தியாவில் இல்லையா! அவரது
சாவைச் சுதந்திர இந்தியாவில் துப்பாக்கிக் குண்டில் தீர்மானித்திருக்கக் கூடாது, ஆங்கிலேய
இந்தியாவில் ஒரு பீரங்கிக் குண்டில் அல்லவா தீர்மானித்திருக்க வேண்டும் யமன் என்பார்
அவர் அடிக்கடி.
சாவு குறித்த பயங்கள் அதிகம் இருந்தாலும்
சக்திக்குப் பேய் படங்கள் பிடித்தமானவை. பேய்ப் படங்களில் செத்தவர்கள் மனிதர்கள் போல்
அல்லவா உலவுகிறார்கள் என்பார் சக்தி. சாவுக்கு இது பரவாயில்லை என்பது அவரது கருத்து.
சக்திக்கு சுந்தர்.சி. படங்கள் மீது அலாதிப்
பிரியம். அவரது படத்தில் மட்டுந்தாம் பாம் வெடித்து மனிதர்கள் சாக மாட்டார்கள். பிருஷ்டப்
பகுதியில் ஆடை கிழிந்து, சிரசுப் பகுதியில் முடிகள் சுழன்று காமெடி செய்வார்கள். அது
சாவுக்கு எதிரான காமெடி என்பார் சக்தி. நிசந்தாம். அது மட்டுமா? கட்டையால் அடித்தால்
மனிதர்கள் மயக்கமாவார்கள் என்ற மருத்துவ உண்மையையும் பல படங்களில் வெளிப்படுத்தியிருப்பார்
சுந்தர்.சி. நடப்பில் கட்டையில் அடித்து மணமங்கலத்தில் ஒருவரின் உயிர் போன சம்பவம்
சக்திக்கு நன்றாகவே தெரியும். கட்டையால் அடித்து உயிர் போவதை விட மயக்கமாவது எவ்வளவோ
பரவாயில்லை அல்லவா! சுந்தர்.சி. பேய் படங்கள் எடுத்ததை நிரம்பவே கொண்டாடினார் சக்தி,
பேய்களைக் கூப்பிட்டு ஒரு ட்ரீட் வைக்க முடியவில்லையே என்ற ஒரு மனதாங்கலைத் தவிர.
சாவுக்குப் பூச்சாண்டி காட்ட வேண்டும்.
சாவு அல்லவா பூச்சாண்டி காட்டுகிறது!
*****
No comments:
Post a Comment