20 Oct 2019

நார் நாரா கிழிச்சப் பின்னே நரகல்ல வீசு!



செய்யு - 243
            ராத்திரி ஒரு பொழுது சாமியாத்தா கோனாரு தாத்தா வீட்டுல இருந்ததுக்குக் கொட்டாயிக் கெடக்குற கோலத்த பார்க்க சகிக்கல. சுப்பு வாத்தியாரும், வெங்குவும் வீட்டை ரவுண்டு கட்டிப் பேசுனப்ப ஒண்ணுஞ் சொல்லாம குமரு மாமா வூட்டலயும், வீயெம் மாமா வூட்டுலயும் வூட்டுக்குள்ள அடைஞ்ச கிடந்ததுக்கான அத்தனைக் கோபமும் இப்போ கொட்டாயைப் பார்க்கும் போது தெரியுது.
            கொட்டாயி பார்க்கறதுக்கு கலவர பூமி போல இருக்கு. சாமியாத்தாவோட சேலைக எல்லாம் நார் நாரா கிழிஞ்சிக் கெடக்குது. கொட்டாயோட இந்த முக்குல நாலஞ்சு ரணகளமா கெடக்குன்னா, அந்த முக்குல ரெண்டு மூணு அது புடவையா என்னான்னு புரியாத கணக்கா கெடக்கு. ஒரே ஒரு நாளு ராத்திரியில இப்படி சேலைகள எடுத்து நார் நாரா கிழிக்க முடியுமான்னு ஆச்சரியமா இருக்கு. எப்படியும் ஏழேட்டு சேலைக இருக்கும். ஒவ்வொண்ணையும் இப்படி கந்தக் கோலமா கிழிக்கிறதுன்னா அதுக்கே நாலு மணி நேரம் ஆவும். அவ்வளவு நேரம் பொறுமையா இந்த வேலையைச் செய்யறதுன்னா மனசுக்குள்ள எவ்வளவு வஞ்சினம் இருக்கணும்ங்ற நெனைக்குறப்ப அந்த நெனைப்பே பயமா இருக்கு. வெறுமனே சேலைக நார் நாரா கிழிஞ்சிக் கிடந்தா பரவாயில்ல. அது முழுக்க நரகலா இருக்கு. வேலை மெனக்கெட்டு அதை ஒரு பாத்திரத்துல அள்ளியாந்து தெளிச்சது போல அவ்வளவு நரகல்லா இருக்கு. ஓர் அண்டா நெறைய அதை அள்ளி வந்து கொட்டுனாத்தாம் அந்த அளவுக்கு கொட்ட முடியும்னா பாத்துக்குங்களேம்.
            ஒவ்வொரு பொண்ணுங்க, புள்ளைங்க கல்யாணத்தப்பயும் சாமியாத்தா வானத்து நீல நிறத்துல ஒரு பட்டுப்புடவையைக் கட்டிக்கும். அதுதாங் அதோட கல்யாணப் புடவை. முக்கியமான உறவுகளோட கல்யாணம், தேவை, திங்கன்னாலும் அதை எடுத்துதாம் கட்டிக்கும். அந்தப் புடவைய கட்டுனாத்தாம் தேவை திங்க ஒரு கொறையில்லாம நல்ல வெதமா நடக்குங்றது அதோட நம்பிக்கை. அப்படி எந்தக் குறையில்லாம எத்தனை தேவைக நடந்துச்சுன்னு அதுக்குத்தாம் வெளிச்சம்.
            வைத்தி தாத்தா அது கழுத்துல தாலி கட்டுனப்போ கட்டியிருந்த புடவை அது. அந்தப் புடவையை ரொம்ப பத்திரமா வெச்சிருக்கும் சாமியாத்தா. பழைய தகரப் பொட்டித்தாம் அந்தப் பொக்கிஷத்த காத்து வெச்சிருக்கிற ரகசியப் பேழை அதுக்கு. அந்தப் பெட்டிய அதுதாங் திறக்கும். அதுதாம் மூடும். அதுக்கு பூட்டுல்லாம் கிடையாது. ஆனா அதைத் திறக்க யாருக்கும் அனுமதி கொடுக்காது அது. அந்தப் பொட்டியோட மூடி இருக்கற நெலையைப் பார்த்தே அந்தப் பொட்டியை யாரும் திறந்தாங்களா? திறந்து பொடவையப் பாத்தாங்களாங்றத அதால சொல்ல முடியும். அந்த அளவுக்குப் பொட்டியோட உருவமும், நெனைப்பும் அதோட மூளையோட அத்தனை செல்லுகள்ளயும் நெரம்பிக் கிடக்கும்.
            அந்தப் புடவைய சாமியாத்தா யாருக்கும் கட்டிக்க கொடுத்ததில்ல. கிராமத்துல பொதுவா எல்லாருகிட்டயும் பட்டுப் புடவை இருக்காது. அப்படிப்பட்டவங்க ஒரு விஷேசம்னு கிளம்புறப்ப நகைநெட்டு, பட்டுப்புடவைகளை அதுக இருக்கறவங்களாப் பாத்து இரவலா வாங்கிப் போட்டுகிட்டும், கட்டிக்கிட்டும் போய்ட்டு வந்துத் திருப்பிக் கொடுத்துடுவாங்க. அப்படி கிராமத்துல இருந்த எவ்வளவோ பொண்டுக சாமியாத்தாகிட்ட அந்த வானத்து நீல நெறத்துல இருக்குற கல்யாணப் பட்டுப்புடவைய இரவலா கேட்டிருக்குங்க. ஆனா சாமியாத்தா அதெ மட்டும் கொடுத்ததில்ல.  அதோட பொண்ணுங்க ஆசைக்குக் கட்டிப் பார்க்க கேட்ட போதும் அத கொடுத்ததில்ல. அதெ தொடக் கூட யாரையும் அனுமதிக்காது. இன்னிக்கு அந்தப் பட்டுப்புடவெ கட்டிலு மேல சுக்கல் சுக்கலா கிழிஞ்சிக் கிடக்கு. அது மேல அவ்வளவு நரகல்லு. அது மேல கொட்டிக் கிடக்கற நரகல்லு நாத்தமே தாங்கவே முடியலன்னா அதெ கொண்டாந்து கொட்டுனவங்க அதெ எப்படி சேகரம் பண்ணிக் கொண்டாந்து கொட்டுனாங்களோ? இதுக்குன்னே பீக்காடு பீக்காடா தேடி அலைஞ்சிருப்பாங்க போலருக்கு.
            மத்தப் புடவைங்க பாழானதப் பத்தி சாமியாத்தாவுக்குப் பெரிசா எதுவும் தோணல. ஆனா அந்தப் புடவைக் கெடக்கற நிலையப் பார்க்க பார்க்க அதுக்கு ஆற்றாமையா வருது. ஒரு கட்டத்துல அந்த ஆற்றாமையான உணர்வு எப்படிப் போகுதுன்னா... இதெ பண்ணவங்கள கொல பண்ணாக் கூட தப்பு இல்லேங்ற கணக்கா அதுக்குப் போவுது. அந்தப் புடவை அதோட அத்தனை வருஷ வைத்தி தாத்தாவோட வாழ்ந்த வாழ்க்கைக்கு சாட்சியம் இல்லையா! வைத்தித் தாத்தா இல்லாத கொறைய அந்தப் புடவைத்தாம் எப்படியோ இத்தனை நாளா சாமியாத்தாவுக்குத் தீத்துகிட்டு இருக்கு. இப்போ அதுவும் இல்லாம போயிடுச்சு. வாழ்ந்து கெட்ட குடும்பத்த போலல்ல அது கெடக்கு. நாம்ம மட்டும் ன்னா? வாழ்ந்து கெட்ட பொம்பளத்தான்னேன்னு அதோட மனசு அதுக்குச் சொல்லுது.
            காலையில எழுந்திரிச்சதும் உடனே சாமியாத்தா கிளம்பி கொட்டாயிக்கு வந்துடல. அங்க கோனாரு வூட்டுலயே இருந்து, இருக்குற ரெண்டு மூணு பல்லுகள தேய்ச்சுகிட்டு, வாயைத் தண்ணி ஊத்திக் கொப்புளிச்சுகிட்டு அவுங்க வீட்டுல போட்டுத் தந்த டீத்தண்ணிய குடிச்சுபுட்டு, அவங்க சுட்டுப் போட்டு நாலு இட்டிலிகள தின்னுப்புட்டு, அங்க கெடந்த நாலஞ்சு பாத்திரங்கள வெலக்கிப் போட்டுகிட்டு அப்படியே அங்கயே திண்ணையில கொஞ்சம் தலைய சாய்ச்சு படுத்துப்புட்டு சூரியன் நல்லா சுட்டெரிக்குற பத்து மணி வாக்குலதாம் கொட்டாயி பக்கமா வருது.
            சாமியாத்தாவோட கொட்டாயிக்குப் பெருசா பூட்டெல்லாம் கிடையாது. ஒரு சின்ன பூட்டுதான். அதையும் போடாது சாமியாத்தா. ஒரு வளைஞ்ச இரும்புக் கம்பிய தாழ்ப்பாளப் போட்டு அதுல தொங்க வுட்டுப்புட்டுப் போவும். ராத்திரி கோனாரு வூட்டுக்கு வந்தப்பவும் அப்படித்தான் வளைஞ்ச இரும்புக் கம்பிய தொங்கி விட்டுப்புட்டு வந்திடுச்சி. இந்தக் கொட்டாயி வூட்டுல யாரு பூந்து என்னத்த எடுத்துடப் போறாங்கங்ற நெனைப்பு அதுக்கு. அப்படி எடுக்குறதுக்குத்தான் கொட்டாயில என்னா இருக்கு? ஒரு பழைய தகரப் பொட்டி, அதுல பழைய புடவைங்க, அத்தோட உசத்தின்னா இந்தக் கல்யாண புடவை ஒண்ணுத்தாம் இருக்கு. கொஞ்சம் பாத்திரம் பண்டங்க, ஒரு மண்ணெண்ணெய் அடுப்பு அவ்வளவுதானே இருக்கு. இதுக்குல்லாமா பூட்டப் போட்டுட்டுப் போகணும்னு அது நெனைச்சிருந்திருக்கலாம். அத்தோட இத்து சாமியாத்தாவோட கொட்டாயின்னு தெரிஞ்சா யாரு வந்து எடுக்கப் போறாங்ற நெனைப்பு வேற. அது நெனைச்சது சரிதாம். பொருட்கள யாரும் வந்து எடுத்துட்டுப் போயிடல. ஆனா இப்படி அலங்கோலம் ஆக்குறதுக்கு அந்தப் பொருட்கள எடுத்துட்டோ, திருடிட்டோ போயிடுறது கூட நல்லதுதாம்.
            வந்தப் பார்த்த சாமியாத்தாவுக்கு அடிவயிறு அப்படியே பகீர்ங்குது. இது என்னடா கருமம்! ஆயுசுக்கும் பார்க்காத கருமமா இருக்குன்னு தலையிலயும், மாரிலயும் அடிச்சிக்குது. ஆத்திரப்பட்டு ஒண்ணு கெடக்கு ஒண்ணு பேசி அது வேற முன்ன மாதிரி ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடுமோன்னு அதுக்கு அது வேற பயமா இருக்கு. ஒண்ணுஞ் சொல்லாம கொட்டாயிக்கு வெளியில வந்து படலைத் திறக்குது. இது போல கொட்டாயிக்குள்ள வர்றப்ப படலைத் திறக்குறப்ப படலு எல்லாம் நல்லாத்தான் சாத்தியிருந்துச்சு, கதவும் நல்லாத்தான் சாத்தியிருந்துச்சு. ஆக காரியத்த பண்ணவங்க திறந்த மாதிரியே மூடிட்டுக் கச்சிதமா போயிருக்காங்க. அந்த அளவுக்கு தம் மேல யாருக்கு வெறுப்பு இருக்கும்னு அது யோசிச்சுப் பார்க்குது. அதுக்குத் தெரிஞ்சு வடவாதி கிராமத்துலயோ, சுத்துப்பட்டு கிராமங்கள்லயோ அப்படி ஓர் ஆளு கெடையாதுதாம். கிராமத்துல அப்படி யாரும் இல்லாம இருக்கலாம். ஆனா குடும்பத்துக்குள்ளயே அதுக்குன்னு வந்து வாச்சிருக்கே மருமவ்வளுக ரெண்டு. அதுல யாராச்சியும் ஒருத்தி அப்படி செஞ்சியிருந்தாலும் இருக்கலாம். அப்படி இருந்து தொலைச்சி இதைப் போயி வெளியில சொன்னா அது நரகல்ல விடல்ல ரொம்ப நாறித் தொலையும்னு அதெ யோசிக்க யோசிக்க அது வேற வெடவெடன்னு வருது. காதும் காதும் வெச்ச மாதிரி கோனாரு தாத்தாகிட்ட சொன்னாத்தாம் சரிபட்டு வரும்னு அது மறுபடியும் கோனாரு தாத்தா வீட்ட நோக்கிப் போவுது.
            போன வேகத்துல திரும்பி வர்ற சாமியாத்தாவ்வா பாத்து கோனாரு தாத்தா ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரிச்சிகிட்டே கேட்குறாரு, "சித்தே இன்னுங் கொஞ்ச நேரம் இருந்துட்டுத்தாம் போனா என்ன? அஞ்ஞ ன்னா பொன்னும் மணியுமா வெச்சிருக்கீக? வேற பொக்கிஷம் எதாச்சிம் நம்மளுக்குத் தெரியாம வெச்சிருக்கீங்களோ? கோட்டிபயலுக வந்து திருடிட்டுப் போறதுக்கு? விழுந்தடிச்சு ஓடிப் போயிட்டு இப்படி விழுந்தடிச்சு வாரீகளே?" அப்பிடிங்றாரு.
            சாமியாத்தாவுக்கு ஒண்ணுஞ் சொல்ல முடியல. அழுகை பீறிட்டு வருது. அப்படியே அவரு காலடிக்குக் கீழே மடார்னு உட்காருது. வாயைப் பொத்திகிட்டு அழுவுது.
            "யே ஆயி! ன்னா பண்றீங்க? யாச்சி! ன்னா பண்றீங்க? ஏங் இப்பிடி கலங்கிப் போயி உக்காந்து கெடி கலங்கிட்டீங்க?" அப்பிடிங்றாரு. அவரு குரலெல்லாம் தழுதழுக்குது.
            "அஞ்ஞப் போயி கொட்டாய்யப் பாருங்களேம் கோனரய்யா! இப்பிடி செய்ய யாருக்கு மனசு வரும்யா? அஞ்ஞப் போயிப் பாருங்களேம்!" அப்பிடின்னு தழுதழுத்து அழுதபடியே மூஞ்சைப் பொத்திக்கிட்டுச் சொல்லுது சாமியாத்தா.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...