5.2
மற்றவர்கள் தவறாகப் பேசும் போதெல்லாம்
நீங்கள் சரியாகப் பேசுங்கள். அது மற்றவர்களின் தவறுகளைத் திருத்துவதற்கல்ல. அது நாம்
தவறாகப் பேசவில்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள மற்றும் ஒருவேளை சரியாகப் பேச நினைத்து
தவறாகப் பேசியிருந்தால் அடுத்த முறை அது போன்ற தவறான பேச்சை நிகழ்த்தி விடாமல் இருக்க.
*****
மேலே இருப்பதற்கும்,
கீழே இருப்பதற்கும் சம்பந்தம் இல்லாமல் போவதற்காக ஒரு நாவலாசிரியர் என்ற முறையில்
வருந்துகிறேன்.
தலைப்பில்லாமல் நீண்ட காலம் எழுத முடியாது.
இந்த நாவலுக்குச் சிறந்த தலைப்பை எழுதித் தருபவர்களுக்கு பரிசுப் போட்டி நடத்தலாம்
என்று இருக்கிறேன். சிறந்த தலைப்பை எழுதுபவர்களில் முதல் பரிசாக நூறு பவுன் தங்கச்
சங்கிலி தரலாம். இரண்டாவதாக சிறந்த தலைப்பை எழுதுபவர்களுக்கு அம்பது பவுன் தங்க மோதிரம்
தரலாம். மூன்றாவதாக சிறந்த தலைப்பை எழுதுபர்களுக்கு இருபத்தைந்து பவுனில் பிரெஸ்லெட்
தரலாம். அடுத்துச் சிறந்த பத்து தலைப்புகளை எழுதுபவர்களுக்கு தலா தலை ஒன்றுக்கு வீதம்
பத்து பவுன் தங்க நாணயங்கள் ஆறுதல் பரிசு.
ஒரு நாவலுக்கு எத்தனை தலைப்பிட முடியும்?
பரிசுப் போட்டிக் கணக்குப்படி பார்த்தால் பதின்மூன்று தலைப்புகள். ஒரு நாவல் பதின்மூன்று
தலைப்புகளைத் தாங்குமா? பதின்மூன்று தலைப்புகளை அட்டையிலிட்டால் முதல் பக்கமே நாவல்
ஆரம்பித்து விட்டது போல் அல்லவா இருக்கும்! அதுவும் இல்லாமல் நாவலாசிரியனான எனது பெயரை
எழுத அட்டையில் இடம் இருக்குமோ என்னவோ! அந்தப் பிரச்சனையை ஒதுக்கி வைப்போம். இந்தப்
பரிசுப் போட்டிக்கான ஸ்பான்சர்களை நான் எங்கே போய் தேடுவது? நான் என்ற அகந்தை வந்து
விட்டது பாருங்கள்! ஸ்பான்சர்களுக்காக மிகப்பெரிய அளவில் மெனக்கெட வேண்டியிருக்கும்.
அதனாலேயே இந்த முயற்சியைக் கைவிடுவதுதாம் சரியானதாக இருக்கும்.
வாசகர்களுக்கும், ஸ்பான்சர்களுக்கும் தொந்தரவு
இருக்கக் கூடாது என்பதற்காக நாவலாசிரியனே ஒரு பெயரைச் சூட்டி விடுவதுதாம் சரி. இது
வாசக ஜனநாயத்தில் குறுக்கிடுவதாக நீங்கள் நினைத்து விடக் கூடாது. அப்படி நினைத்தால்
உங்கள் அனைவரது ஏகோபித்த ஆதரவோடு ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தால் நாவலாசிரியரின்
தலைப்போடு அதையும் ஒரு தலைப்பாக அல்லது என்பதை இடையில் சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.
அதாவது இது அல்லது அது என்பதாகவோ அது அல்லது இது என்பதாகவோ.
நாவல் ஆரம்பித்து இருபது பக்கங்கள் கடந்த
நிலையில்தான் நாவலாசிரியர் தலைப்பை வெளியிடுகிறார் என்றால் அதைப் புத்தகமாக பிரிசுரிப்பவரின்
நிலை என்ன? இருபது பக்கங்கள் கடந்த நிலையில் புத்தகத்தின் அட்டையை வைத்தால் நன்றாகவா
இருக்கும்? சக்திதான் முடிவு செய்ய வேண்டும் இந்த விசயத்தைப் பொருத்தவரையில். இந்த
முதல் நாவலை வெளியிடுவதாக சக்தி உறுதி அளித்துள்ளார். ஆகவே இது அவரது பிரச்சனை. எழுதுவது
மட்டுந்தாம் நாவலாசிரியரின் பிரச்சனை. அதே நேரத்தில் புத்தக வெளியீட்டு உலகில் இது
போன்ற அதிசயம் நிகழ்ந்ததில்லை.
நாவலாசிரியர் இந்த நாவலுக்கு சுழியம் முதல் முடிவிலி வரை என்ற தலைப்பை
இட விரும்புகிறார்.
சுழியம் என்பது தீபாவளிக்குச் சுடும் சுழியமாகவோ
அல்லது கணிதத்தில் வரும் பூச்சியம் என்பதாகவோ இருக்கலாம். முடிவிலி என்பது கணிதத்தில்
வரும் இன்பினிட்டி என்பதாகவோ, ஆன்மீக ரீதியாக அர்த்தம் செய்து கொள்ளப்படும் கடவுளாகவோ
இருக்கலாம். யாருக்குத் தெரியும்? நாவாசிரியர் ஒரு பொருளில் எழுதுகிறார். வாசகர்கள்
பல பொருள்களைக் கொள்கிறார்கள். அந்த விசயத்தில் நாவலாசிரியர் ஒரு பல்பொருள் கடை
நடத்துகிறார். வாசகர்களை அதில் விற்கிறார், வாங்குகிறார். வியாபாரம் நன்றாகப் போகிறது.
*****
No comments:
Post a Comment