1 Oct 2019

வெள்ளத்துக்கு வடியுறதத் தவிர வழியில்ல!



செய்யு - 224
            ஆசிரியர்கள் அரசு ஊழியர்களோட ஜாக்டோ - ஜியோ போராட்டம் நடந்தப்போ போராட்டத்துல கலந்துகிட்டவங்க இருந்தாங்க. கலந்துக்குறது போல கலந்துகிட்டு ஊடால போயி கையெழுத்துப் போட்டவங்க இருந்தாங்க. போராட்டத்துல கலந்துக்காம வூட்டுலயே இருந்தவங்க இருந்தாங்க. போராட்டம் பாட்டுக்கு நடக்கட்டும், நாம்ம பாட்டுக்கு நம்ம வேலையப் பார்ப்போம்னு அவங்கவங்க வேலையைப் பார்த்துட்டு இருந்தவங்க இருந்தாங்க. இதுல தியாகராசன் வாத்தியாரு என்ன செஞ்சிருப்பார்னு சொல்ல வேண்டியதில்ல. அவருக்கு அது ரொம்ப வசதியாப் போச்சுது. பள்ளியோடம் நடக்குற நாளுல்லயே இங்க தொண்டாமுத்தூர் கேப்பிட்டல் ஆபீஸ்ல கெடக்குறவருக்கு, போராட்டத்தால பள்ளியோடம் மூடிக் கிடந்தது ரொம்ப வசதியாப் போச்சுது. அவரு ஆபீஸ்லயே குடித்தனம் கெடந்தாருன்னுதான் சொல்லணும்.
            இந்த ஸ்கிரிப்டை வாங்கு, இந்த ஸ்கிரிப்டை வித்து வைன்னு போட்டு பொளந்து தள்ளிட்டாரு. ஷேர் மார்கெட்டுங்றது வெள்ளம் மாதிரி. லாபமோ, நட்டமோ எது வந்தாலும் வெள்ளம் போலத்தான் வரும். கொஞ்ச நஞ்சமா வராது.
            எந்த ஸ்டாக்கை வாங்கி வித்தாலும் லாபங்ற நிலைமை அப்போ. ஷேர் மார்க்கெட்ன்னாவே லாபம்தான்னு ஷேர் மார்க்கெட்டைப் பத்தி தெரியாத ஆளுங்கல்லாம் பேசுன நேரம் அது. அப்போ எதைப் பண்ணாலும் மார்கெட்டுல லாபமாத்தான் இருக்கும். அப்படித்தான் இருந்துச்சு தியாகராசன் வாத்தியாருக்கு. கிணத்துல இருக்குற தண்ணிதான் அப்படியே இருக்குமே தவிர, வெள்ளமா வந்த தண்ணி அப்படியாவா இருக்கும்? அது ஒரு நாளு வடிஞ்சித்தான்னே போவும்.
            சென்செக்ஸ் இருபத்து ரெண்டாயிரத்த நெருங்குது. நிப்டி ஆறாயிரத்து நோக்கி முன்னேறுது. அப்போ அரசாங்கமே பங்குச் சந்தையோட வளர்ச்சியைப் பார்த்துட்டு அரசாங்க ஊழியர்களோட பிராவிடன்ட் பண்ட்ங்ற வருங்கால வைப்புநிதித் தொகையைப் பங்குச் சந்தையில முதலீடு பண்ணணும்னு சொல்லுது. ஆனா தொழிற்சங்கங்க அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்குது. ஜாக்டோ ஜியோ போராட்டத்துல அதுவும் ஒரு கோரிக்கையா பி.எப். தொகையை பங்குச் சந்தையில முதலீடு பண்ணக் கூடாதுன்னு இடம் பெறுது. அப்போ நம்ம தியாகராசன் வாத்தியாரு சொல்றாரு, "இந்தத் தொழில்சங்கங்கலாம் சுத்த வேஸ்ட்டு லெனின். பங்குச் சந்தையோட வளர்ச்சியப் பார்த்தீங்களா? இதுல முதலீடு செஞ்சாத்தான் நல்லது. இப்போ இன்னிக்கு பி.எப்.புக்கு ன்னா வட்டிக் கொடுக்குறாங்றீங்க? எட்டு இல்லன்னா எட்டு புள்ளி அஞ்சு கொடுக்குறாம். இல்ல எட்டுப் புள்ளி ஆறு, எட்டுப் புள்ளி ஏழுன்னு பாய்ண்ட் கணக்குல நகத்துவானுங்க. இதையே பங்குச் சந்தையில முதலீடு பண்ணாக்கா இருபது, இருபத்தஞ்சுன்னு வட்டிக் கொடுக்கலாம் பாத்துக்கோங்க! வெளிநாட்டுக்காரன் ஏன் முன்னேறுறான், நாம்ம ஏன் பின்னேறுறோம்ன்னா இதுதாங் லெனின் காரணம்!" அப்பிடிங்றாரு.
            நேரம் ரொம்ப நல்ல நேரம்னு பேசிப்பாங்களே. அது அந்த நேரந்தான். ஆனா ஒரு விசயம் வாழ்க்கையில கவனீச்சிங்கன்னா உங்களுக்கே புரியும். நல்ல நேரம்ங்றது ரொம்ப நேரத்துக்கு இருக்காது. அதுக்குன்னு ஒரு நேரம் இருக்கு. அதத் தாண்டுனா ராவு காலமோ, எம கண்டமோ வந்திரும் இல்லையா. அப்படித்தான் ஆகுது மார்கெட்டுலயும். சென்செக்ஸ், நிப்டியெல்லாம் தடதடன்னு சரியுது. காரணம் உலக பொருளாதார நிலைமை சரியில்லைன்னு சொல்றாங்க. அமெரிக்காவுல வீட்டுக் கடன்ல்லாம் சரியா வசூலாக மாட்டேங்குதுன்னு பேசிக்கிறாங்க. சென்செக்ஸூம், நிப்டியும் சரியுதுன்னா பங்குகளோட விலை விழுந்துகிட்டு இருக்குன்னு அர்த்தம். ஏன்னா சென்செக்ஸ்ங்ற முக்கியமான முப்பது பங்குகளோட குறியீடு, நிப்டிங்றது அதைப் போல ஐம்பது பங்குகளோட குறியீடு. அதுல நேர்ற மாத்தம்தான் சென்செக்ஸூலும், நிப்டியிலயும் பிரதிபலிக்கும்.
            சென்செக்ஸ்ங்றது முப்பது பங்கு, நிப்டிங்றது ஐம்பது பங்குன்னாலும் அதோட சரிவு மத்த எல்லா பங்குகளுக்கும் ஓர் அபாய அறிகுறி. அதுக சரிய சரிய ஒட்டு மொத்த மார்கெட்டுல இருக்குற எல்லா பங்குகளும் சரிய ஆரம்பிக்கும். ஆனா பாருங்க, பங்குச் சந்தைப் பத்தின நம்பிக்கையான மனநிலை அவ்ளோ சரிவுக்குப் பின்னும் மாறல. இங்க எந்தப் பங்குகளை வாங்கணும், விற்கணும்னு சொல்றதுக்கு ஒரு கூட்டமே வல்லுநர் குழுங்ற பேர்ல இருப்பாங்க. அவங்க அப்போ என்னா சொல்றாங்கன்னா, சரிவைப் பயன்படுத்தி நல்ல பங்குகளா வாங்கிப் போடுங்க, இந்தச் சரிவு தற்காலிகம்தான் அப்பிடின்னு சொல்றாங்க. மார்கெட் திரும்பவும் பெளன்ஸ் பேக் ஆகும்றாங்க. அப்பிடித்தாம் நம்பி பல பேரு சரியுற பங்குகள்ல நல்லா பங்கா பார்த்து வாங்கிப் போடுறாங்க. அவங்க வாங்கிப் போட போட இன்னும் விலை சரிஞ்சிகிட்டேப் போவுது. விலை சரியச் சரிய இன்னும் நல்ல வெலையில பங்குகள் கிடைக்கறதாவும், இந்தச் சரிவை மகத்தான வாய்ப்பா நெனைச்சு வாங்கிப் போடுங்கன்னு பங்குச் சந்தையில திரும்புன பக்கமெல்லாம் குரலுங்க கேட்குது. இது என்ன ஆடித் தள்ளுபடியா? கெடைக்குற விலையில வாங்கிப் போட்டு சந்தோஷப்பட்டுக்கிறது? ஆடிக் காத்துல அம்மியே பறக்கும்பாங்களே! அப்படிப் பறக்குற நெலமையாகிப் போவுது. கையில இருந்த காசுக்கு எல்லாரும் ஷேர்களை வாங்கிப் போட்டாச்சு. அப்படி வாங்கிப் போட்ட பின்னும் பங்குச் சந்தை இறங்கிகிட்டே இருக்கு. கையில இருக்கற காசு ஓய்ஞ்ச பின்னாடி பங்குச் சந்தைக்கு வர்றதையே பல பேரு குறைச்சிக்கிட்டாங்க. இருந்த காசையெல்லாம் இதுல முதலீடு பண்ணிட்டு லாபம் வரும்னு ரெண்டு மூணு மாசம் பொறுத்துப் பார்த்தவங்க, வரலைன்னு தெரிஞ்சதும் கையில வர்ற காசுக்கு வித்துப் போடுங்கன்னு சொல்றாங்க. சென்செக்ஸ் பதினாலாயிரத்துக்கு வந்து நிக்குது. நிப்டி நாலாயிரத்து நானூறுல அல்லாடுது. அந்த நேரத்துலயும் தியாகராசன் வாத்தியாரு செமத்தியா யேவாரம் பண்றாரு. எல்லாரும் அடக்கி வாசிக்கிறாங்கன்னா, இவரு அடங்காம வாசிக்கிறாரு. வழக்கமா நாலு பங்கு வியாபாரம் பண்றவரு பத்து பங்கு, பதினைஞ்சு பங்குன்னு பண்றாரு. மொதல்ல அவரு பண்ணது எல்லாம் லாபம்தான். நஷ்டத்துல போன பங்குச் சந்தையிலயும் லாபம் பார்த்தவங்கற பேரு திருவாரூர்ல அவருக்கு மட்டுந்தாம் கெடைக்குது. அதுல சுர்ருன்னு ஏறுது மனுஷனுக்கு மனக் கிறுக்கு.
            கிணத்துத் தண்ணியத்தான் ஆறு கொண்டுட்டுப் போவ முடியாதும்பாங்க. வெள்ளமா வந்த தண்ணிய என்னைக்கோ ஒரு நாளு ஆறு கொண்டுட்டுப் போயிடும் இல்லையா! வெள்ளம் வடிய ஆரம்பிக்குது தியாகராசன் வாத்தியாருக்கு. அவரு போட்டதெல்லாம் நஷ்டமா ஆனது அப்போதான். அவரு பங்கு வாங்குனா விலை எறங்குது. வித்தா விலை ஏறுது. தாறுமாறா நடக்க ஆரம்பிச்சிடுச்சு. பங்கு யேவாரம் பண்றப்ப லாபத்துல இருந்தா அதை கிரெடிட் என்பாங்க. நஷ்டத்துல இருந்தா டெபிட் அப்பிடிம்பாங்க. டி எய்ட்டான தியாகராசன் வாத்தியாரோட டெபிட் கணக்கு நாற்பதாயிரத்துல மொதல்ல இருந்துச்சு. ஜாக்டோ ஜியோ போராட்டம் முடியுற தறுவாயில அது நாலு லட்சமாச்சு. வீட்டுல எதை எதையோ வித்து, அடகு வெச்சி நஷ்டத்தை அடச்சிகிட்டு இருந்தாரு.
            ஷேர் மார்கெட்டுல நஷ்டம் ஆவுறப்ப மனசுக்குள்ள ஒரு வெறி வரும் பாருங்க. அந்த வெறி தியாகராசன் வாத்தியாருக்கு வந்திடுச்சு. எந்த மார்கெட்டுல நாலு லட்சத்த்த இழந்தேனோ அதே நாலு லட்சத்தை மார்கெட்டுல பிடிக்கிறேம் பாருன்னு எகிடு தகிடா ஷேர்களை வாங்கி விற்க ஆரம்பிச்சாரு. ஐயாயிரம் பத்தாயிரம் ஷேர்னு எண்ணிக்கையில பண்ணிகிட்டு இருந்தவரு இருபதாயிரம், ஐம்பதாயிரம்னு எண்ணிக்கையில பண்ண ஆரம்பிச்சாரு. அடுத்த ஆறு மாசத்துக்குள்ள அவரோட டெபிட் கணக்கு பதினாலு லட்சத்துல வந்து நின்னுச்சி. ஷேர் மார்கெட்டுல ஒரு அளவுக்கு மேல டெபிட் கணக்கை அதிரிக்க அனுமதிக்க மாட்டாங்க. தியாகராசன் வாத்தியாருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிப் போச்சு.
            ஒரே நேரத்துல பதினாலு லட்சம் திரட்டுறதுன்னா... அது மார்கெட்டுலதாம் ஈஸியா இருக்கும். நடைமுறையில ரொம்ப கஷ்டம். கையில பணமா இருந்து செலவழிச்சு, நஷ்டப்பட்டா இவ்ளோ பணம் போகுதுன்னே ஒரு பிரக்ஞை மனசுல ஓடிட்டு இருக்கும். இங்க எல்லாம் கம்ப்யூட்டர்லதான இருக்கு. நீங்க பணத்தைக் கையால பார்க்கவே முடியாது. அதைச் செக் போட்டுக் கொடுத்தாத்தாம் பார்க்கலாம். கண்ணுக்குத் தெரியாத காசுல்ல இதுல விளையாடுது. அதால டெபிட் கணக்கைக் காட்டி செக் போட்டுக் கொடுங்கன்னு கேட்குற வரைக்கும் இங்க யேவாரம் பண்றவங்களுக்கு பணத்தோட மதிப்பு அவ்ளோ சீக்கிரமா அவங்க மனசுக்குப் புரியாது.
            தியாகராசன் வாத்தியாரு தடுமாறி நின்னாரு. அவரு மார்கெட்டுல சம்பாதிச்சு கீழே ஒரு வீடு, மாடி மேலே ரெண்டு வீடுன்னு கட்டியிருந்தாரு. கீழே இருந்த வீட்டுல அவரு குடியிருந்தாரு. மேலே மாடியில ரண்டு வீட்டையும் வாடகைக்கு விட்டு சம்பாதிச்சிட்டு இருந்தாரு. அவரோட மாசச் சம்பளம், வாடகை வருமானம், ஷேர் மார்கெட்டுல சம்பாதிக்கிற வருமானம்னு அவரோட வருமானம் மொத்தம் மூணு. இப்போ அவரோட வருமானத்தை எல்லாம் ஒட்டுமொத்தமா பிடுங்கிக்கிற மாதிரி ஷேர் மார்கெட்டு அவரு முன்னாடி நின்னுச்சு. மனுஷன் என்ன நினைச்சாரோ வூட்டை அடமானம் வெச்சி டெபிட் கணக்கை அடைச்சுபுட்டு வீட்டை விட்டு ஓடிட்டாரு. அவருக்கு மூணு புள்ளைங்க வேற. மூணும் பொம்பளைப் புள்ளைங்க. மூணும் பள்ளியோடத்துல ப்ளஸ்டூ, பத்தாவது, எட்டாவதுன்னு படிச்சிட்டு இருக்குங்க. அவரோட பொண்டாட்டிக்கு எப்படி இருந்திருக்கும்?
            இதுல பண்ண தப்பெல்லாம் தியாகராசன் வாத்தியாரோடதுதான். ஆனா அவரோட பொண்டாட்டி இதுக்குல்லாம் காரணம் தொண்டாமுத்தூரு கேப்பிட்டல்தான்னு நெனைச்சுகிட்டாங்க. நெனைச்சதோட இல்லாம ஆட்டோவ பிடிச்சி ஆபீஸூக்கு முன்னாடி வந்து இறங்குனவங்க, தலைவிரிக் கோலமா மண்ணை வாரி இறைச்சி நாராசமா பேச ஆரம்பிச்சிட்டாங்க. அப்போ அவங்க அப்படி பேசுறப்பதான் விநாயகம் வாத்தியாரும், சுப்பு வாத்தியாரும் விகடு வேலை பார்க்குற அழகைப் பார்க்க வர்றாங்க. அந்தக் கதையைத்தான் நேத்திப் படிச்சிருப்பீங்களே! அழகைப் பார்க்க வந்து அலங்கோலத்தைப் பார்க்குற கதையா ஆயிப் போச்சு!
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...