19 Oct 2019

மவுட்டிப் பயலுகளா!



செய்யு - 242
            காத்துக்குக் காது உண்டு. அது மனுஷங்களோட சேதிகள வாங்கி ஓர் ஊருலேர்ந்து இன்னோர் ஊருக்கு அனுப்பிகிட்டே இருக்கும். சேதிகள்ங்றதே காத்தோட அதிர்வுதானே. சேதிகள சொல்றப்ப காத்துதானே அதிருது. காத்தோட அதிர்வுதானே ஓசை. நாம்ம அதெ நம்மகிட்டேருந்து வரப்ப பேச்சுன்னு சொன்னாலும் அது உண்மையில காத்தோட அதிர்வுதாம் இல்லையா! காத்து எப்போதும் அதிர்ந்துகிட்டே இருக்கு. அந்த அதிர்வுகள்ல சேதிக காத்துல பறந்துகிட்டே இருக்கும்.
            வடவாதியில நடந்த சேதி திட்டைக்கு வாரதுக்கு நாலு பர்லாங் தூரம் கூட இல்லை. அரை மணி நேர வாக்குல அது பாட்டுக்கு வந்திடுச்சு. எந்த வீட்டுப் பக்கம் காலடி எடுத்து வைக்கக் கூடாதுன்னு வெங்கு நெனைச்சுக்கிட்டு இருந்துச்சோ அந்த வீட்டுப்பக்கம் காலடிகள எடுத்து வெச்சு வேக வேகமா நடந்து போய்கிட்டு இருக்கு. சேதியக் கேட்டதிலேர்ந்து மனசெல்லாம் ஆத்திரம் அதுக்கு தாங்க முடியல. இப்படியுமா புள்ளைக இருப்பானுகன்னு அதுக்கு வேதனை தாங்கல.
            ஆம்பளப் புள்ளைங்ற கணக்குல வைத்தி தாத்தா வூட்டுல முதல்ல பொறந்தது குமரு மாமாதான். அதால குமரு மாமாவ்வ யாரும் தரையில எறக்கி விட்டுட முடியாது. அப்படி எறக்கி விட்டா ஏம்டி எறக்கி விட்டீங்கன்னு வைத்தி தாத்தா அடி வெச்சிருக்காரு. அம்மா, அக்கான்னு ஒவ்வொருத்தி இடுப்புலயும் வளர்ந்த பய இப்படி அம்மாவ பேசி, அம்மாவ பேச விட்டுப் பாத்துட்டு இருந்துக்கானேன்னு நெனைக்க நெனைக்க வெங்குவோட நடையில வேகம் கூடுது. அது நடையா ஓட்டமான்னு தெரியாத கணக்குல அது பாட்டுக்கு அதோட கால்கள் போய்கிட்டே இருக்கு.
            சாமியாத்தா கொட்டாயிக்கு வந்து பார்க்கிறப்ப அது மயக்கம் தெளிஞ்சு உக்காந்திருக்கு. சுத்திலும் ரெண்டு மூணு பொம்பள சனங்க உக்காந்திருக்குங்க. வெங்குவைப் பார்த்ததும் சாமியாத்தா, "வந்திட்டியாடி. எங்க இதுக்கும் வாராம போயிடுவீயோன்னு நெனைச்சுகிட்டுக் கெடந்தேன். இப்பவே உசுரு போனா தேவல. போவ மாட்டேங்குதேடி. என்ன பாவத்த செஞ்சோன்னோ? இந்த கதியில கெடக்கேம்!" ன்னு சொல்லிகிட்டே மவள கட்டிப் பிடிச்சுகிட்டு ஓன்னு அழுது.
            "நீயேம் அழுவுற? நீ யிப்படி அழுவ அழுவத்தாம் அவனுங்களுக்குக் கொழுப்பெடுத்துப் போயிக் கெடக்கு. வெளக்கமத்த எடுத்து நாலு சாத்தி சாத்தியிருந்தீன்னா ஒழுங்கா இருந்திருப்பானுங்க. எங்க இருக்கானுங்க அந்தப் பயலுக?" அப்பிடிங்குது வெங்கு.
            "அதே ஏம் ஆச்சி கேக்குறீங்க? யம்மா இப்பிடிக் கெடக்குதுன்னே ஒரு பய கூட வந்து பாக்கல. வூட்டப் பூட்டிகிட்டு வூட்டுல அப்பிடி என்னத்தாம் பண்ணுவானுகளோ? இதுக்குத்தாம் சாமியம்மா அவனுங்கள பெத்துச்சா? பெத்த தாயிங்றதுக்காகப் பெருசா ஒண்ணும் தாங்க வாணாம். ஒரு ஆத்துர அவசரத்துக்காவது வந்துப் பாக்கலன்னா பெறவு ன்னா புள்ளைங்க. இதுங்க புள்ளைகளே இல்ல. யமனுங்க." அப்பிடிங்குது சுத்தியிருக்குற சனங்கள்ல ஒண்ணு.
            "அடி ஏம்டி நீஞ்ஞ வேற அவள உசுப்பேத்தி வுட்டுகிட்டு நிக்குறீங்க? பேயாம கெடங்கடி. காலு கடுக்க கெடந்து ஓடியாந்திருக்கா. சித்தே உக்காந்துட்டுக் கெளம்புட்டும். ஒரு டீத்தண்ணிய வெச்சுக் குடுக்கக் கூட வக்கில்லாம போயிடுச்சு நமக்கு." அப்பிடிங்குது சாமியாத்தா.
            "ஏம் அந்தப் பயலுகள நாக்கப் புடுங்குற மாரி நாலு வார்த்தைக கேட்டாக்க ன்னா? கொறஞ்சா போயிடுவானுங்க? ஒருத்தரும் ஒண்ணும் கேக்கலன்னா துளிரு வுட்டுப் போயிடும்! கொஞ்ச நஞ்ச ஆட்டமாவா ஆடுறானுவோ? அவனுவ்வோ ஆடுற ஆட்டத்துக்கு என்ன கதிக்கு போகப் போறானுவளோ?" அப்பிடிங்குது வெங்கு.
            "அடி ஏம் ராசாத்தீ! நீயி வேற சத்தம் போட்டு புதுசா பெரச்சனைய கெளப்பி வுட்டுட்டுப் போயிடாதடியம்மா!" அப்பிடிங்குது சாமியாத்தா.
            "அடச் சே! ச்சும்மா கெட!" அப்பிடின்னுகிட்டு வெளியில கிளம்பி பாஞ்சாலம்மன் கோயிலு பக்கமா வருது வெங்கு.
            "ஏட்டிகளா! அவள பிடிச்சு உள்ளார கொண்டாங்கடி! நல்ல நாளுல்லய நல்ல வெதமா பேசத் தெரியாது அவளுக்கு!" அப்பிடிங்குது சாமியாத்தா.
            "ச்சும்மா கெடங்க பெரியாச்சி! ரண்டு வார்த்தையாவது பேசட்டும். அதுவாவது ஒரைக்குதான்னு பார்ப்பேம்!" அப்பிடிங்குதுங்க சனங்க.
            பாஞ்சாலம்மன் கோயிலுக்கு முன்னாடி நின்னுகிட்டு குமரு மாமா, வீயெம் மாமா என ரெண்டு வூட்டக்கும் சத்தம் கேட்குற மாதிரி வெங்கு பேச ஆரம்பிக்குது.
            "ஏம்டா ஒங்களப் பெத்த பாவத்துக்கு பெத்த தாய்ய ஒங்க காலுல வுழ வெச்சி அதெப் போக்கிக்கிறீங்களாடா? ஏலே எச்சிப் பாலு குடிச்சப் பயலுகளா வெளியில வாங்கடா! இப்ப வந்துப் பேசுங்கடா பாப்பேம்! கேட்க ஆளு இல்லேன்னு நெனைச்சகிட்டு இருக்கீங்களாடா? பொண்டாட்டிப் பக்கத்துல இருந்தா வீரம் அப்டியே பொத்துகிட்டு வருதோ? வாங்கடா இப்ப பாக்கலாம். வந்து வெளியில ஒங்க வீரத்தக் காட்டுங்க. கதவ தெறந்துகிட்டு வெளியில வாங்கடா மவுட்டிப் பயலுகளா! ஒங்களயெல்லாம் பொறந்தப்பவே வாயில நெல்ல ஒரே அடியா அடிச்சிக் கொன்னு போட்டுருக்கணும்டா. ஆம்பளப் புள்ளைங்களா பொறந்துட்டீங்கன்னு எங்கப்பன் கொடுத்த செல்லம்டா, ஒங்கள இந்த ஆட்டம் போட வைக்குது. ஒரு பயலாவது ஆம்பளங்க்ற யோக்கியதையோட இருக்கீங்களாடா? ஆம்பளன்னா பெத்த தாயிக்காவது சோறு போடணும். பெத்த தாயிக்குக் கூட சோறு போட வக்கில்லாத பயலுவோ என்னடா ஆம்பளைங்க! அட வுட்டேன் வுட்டேன், நாம்ம பாட்டுக்குப் பேசிட்டே இருக்கேம். ஒரு பயலாவது வெளியில வர்றான்னுவோளா? அஞ்ஞ என்னடா பொண்டாட்டிக்கு எடுப்பு தூக்கிட்டு நிக்குறீங்களாடா? வாங்கடா ஒஞ்ஞ அக்காத்தான்னே பேசுறேம். வந்துப் பதிலு சொல்லுங்கடா சோரணைக் கெட்டப் பயலுங்களா? வெட்கங் கெட்ட மூதிகளா வாங்கடி! நீஞ்ஞலாவது வந்து பேசுங்கடி இப்ப பாக்கலாம்! அப்படியே கொடல உருவி பாஞ்சலம்மன்னுக்கு மாலாயப் போட்டுட்டுப் போயிட்டே இருப்பேம். ஒப்புரட்டி இம்மாம் பேச்சுப் பேசுறேம். கதவ தெறந்துகிட்டு ஒரு பயலாவது வெளியில வரானுவளா? ஒரு சிறுக்கியாவது வெளியில வந்து பாக்கறாளா? கேக்குறதுக்கு ஆளு இல்லன்னு நெனச்சிகிட்டு இருக்கீங்களா? இப்பவே எம் மவன கொண்டாந்தான்னா வவுந்துப்புட்டு வந்துடுவாம் பாத்துக்க. எம்மட அக்கா தங்கச்சி அத்தினிப் பேருக்கும் சேதி போச்சுன்னா ஒடம்புல ஒரு சொட்டு ரத்தம் இருக்காது, தக்கினியோண்டு கொழுப்பு ஒடம்புல தங்காது பாத்துக்கோ. அப்டியே உறிஞ்சி எடுத்துப்புடுவாளுவோ. இருக்குறத இனிமேலாவது ஒழுங்கு மருவாதியா இருந்துக்குங்க. யில்ல நடக்குறதே வேற! த்துப்பூ! இம்மாம் பேச்சுப் பேசுறேம். வெளியில ஒண்ணாவது வருதா? வெக்கங் கெட்ட நாயீங்க! இதுங்களாம் சோத்தத் தின்னுதா? என்னத்த தின்னுதுன்னே தெரியல!"ன்னு மறுபடியும் மறுபடியும் காறித் துப்பிகிட்டு அப்டியே சாமியாத்தா வூட்டுக்கு முன்னாடி வருது வெங்கு.
            "நீயி இப்டியே இருந்துக்க. ந்நல்லா தலையில மெளாக அரச்சி, ஒன்னய அப்டியே உப்புக் கண்டம் போட்டுத் துன்னட்டும். நமக்குப் பின்னாடி பொறந்து பயலுகளுக்கே இம்மாம் இருக்குன்னா, நாம்ம குடிச்ச எச்சப் பால்ல குடிச்சப் பயலுகளுக்கே இம்மாம் இருக்குன்னா, நமக்கு எம்மாம் இருக்கும். ஒம் புள்ளைகள்னு பாக்க மாட்டேம். சங்க அறுத்துப் படையலு போட்டுப்புடுவேம் பாத்துக்க. இனுமே இஞ்ஞ கெடந்தீன்னா வெச்சுக்க நாமளே ஒன்னய கழுத்த நெரிச்சிக் கொன்னுப்புடுவேம். போயி எம்மட வூட்டுக்காரர வரச் சொல்றேம்! ஒழுங்கு மருவாதியா வண்டியில வந்துச் சேரு!" அப்பிடின்னுட்டு வெங்கு அதுக்கு மேல உள்ள போயி சாமியாத்தவ பார்க்காம அது பாட்டுக்குக் கெளம்பி வந்துகிட்டு இருக்கே.
            "இவ்வே ஒருத்தி! வந்து என்னய ந்நல்லா கூட பார்க்காம அவனுங்கள திட்டிகிட்டு அவ்வே பாட்டுக்குப் போயிட்டு இருக்கா. நாம்ம பெத்தது ஒவ்வொண்ணும் ஒவ்வொரு தினுசாத்தாம் இருக்கு. நமக்குத்தாம் ன்னா பண்றதுன்னே தெரியல!" அப்பிடிங்குது சாமியாத்தா.
            விசயம் சுப்பு வாத்தியாருக்குத் தெரிஞ்சு அவரு வந்து என்ன ஆட்டம் ஆடப் போறார்னு நெனைக்குறப்ப அது வேற யோசனையா இருக்கு சாமியாத்தாவுக்கு. அப்படியே விசயம் ஒவ்வொரு பொண்ணுகளுக்கும் தெரிஞ்சா ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வெதாமல்ல சாமியாடும்னு நெனைக்க நெனைக்க சாமியாத்தாவுக்கு அது வேற நெஞ்செல்லாம் படபடன்னு ஆவுது. ஆளாளுக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு பேசி அதால இந்தப் பயலுக ஒண்ணு கெடக்க ஒண்ணு பண்ணிகிட்டா என்னாவுறதுன்ன சாமியாத்தாவுக்கு அந்த நெலமையிலும் புள்ளைங்க மேல பாசம் வுட்டுப் போகாம வந்துட்டுப் போவுது.
            அது நெனைச்ச மாதிரியே சாயுங்கால வாக்குல சுப்பு வாத்தியாரு டிவியெஸ்ஸூ பிப்டியில வந்து இறங்குறாரு. எந்நேரமும் ரெண்டு சனங்க வேற சாமியாத்தாவோட வூட்டுல இருக்குதுங்க. வண்டியில வந்து இறங்குன சுப்பு வாத்தியாரு நேரா குமரு மாமா வூட்டுக்குப் போறாரு. வெளியில கிரிலு கேட்டுக் கதவு உள்ளுக்குள்ள பூட்டிக் கெடக்கு.
            "எவம்டா அது வூட்டுல? கதவத் தெறடா மொதல்ல!" அப்பிடிங்றாரு. வூட்டுக்குள்ளேயிருந்து ஒரு சத்தமும் வரல. அப்படியே அந்த கிரில் கேட்ட கையால பிடிச்சு தட தடன்னு ஆட்டப் பாக்குறாரு. அது அவரு இழுப்புக்கு ச்சம்மா லேசாத்தாம் ஆடுது. பூட்டு மட்டும் இவரு ஆட்டத்துக்கு மரியாத கொடுக்குற மாதிரி லேசா தடக் தடக்குன்னு ஆடுது. நம்ம இழுப்புக்கு வேகமாக ஆடலயேன்னு, அது வேறக் கோவமா போவுது அவருக்கு. "வாடா வெளியில. கதவத் தொறந்துகிட்டு வாங்கடா!" அப்பிடிங்கிறாரு. இவரு என்னத்தாம் சத்தம் போட்டாலும் உள்ளயிருந்து வெளியில வந்துடக் கூடாதுங்கறதுல வூட்டுக்குள்ள இருக்குறவங்க உறுதியா இருக்குற மாதிரி தெரியுது.
            இது சரிபட்டு வராதுன்னு வீயெம் மாமா வூட்டு படல தெறந்துகிட்டு அங்க உள்ள போயி நிலைக்கதவ படாரு படாருன்ன அடிக்கிறாரு சுப்பு வாத்தியாரு. "யாருடா வூட்டுல? வாடா வெளியில!" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு. கதவு தொறக்குற பாடா தெரியல. இது சரிபட்டு வராது கொல்லப் பக்கமா கதவு தொறந்துகிட்டுத்தாம் இருக்கும். அத தொறந்துகிட்டாவது இன்னிக்கு வூட்டக்குள்ள போயி நாலு கேள்வி நறுக்குன்னு கேட்டாத்தாம் சரிபட்டு வரும்னு நெனைச்சுகிட்டு கொல்லைப் பக்கம் போனாக்கா அதுவும் அதே மாதிரியே உள்ள தாழ்ப்பாளு போட்டு மூடிக் கெடக்கு. அந்தக் கதவையும் ஆத்திரம் தீர நாலு தட்டு தட்டி, ரெண்டு ஒதை ஒதைக்குறாரு சுப்பு வாத்தியாரு. கதவுல்லலாம் திருட்டுப்பயலுவோ, கொள்ளைக்காரப் பயலுவோ உள்ள உடைச்சிப் பூந்துடக் கூடாதுங்ற அளவுக்கு உறுதியால்ல போட்டுருக்கு. அதால சுப்பு வாத்தியாரோட தட்டுக்கும், ஒதைக்கும்லாம் அது அசைஞ்சு கொடுக்க மாட்டேங்குது. அவருக்கு உள்ளுக்குள்ள ஆத்திரம் கனன்டுகிட்டுக் கெடந்தாலும் அவரை அறியாம அவருக்கே இதெப் பாக்குறப்ப சிரிப்பு வேற வந்து தொலைக்குது. இது என்னடா இந்த நேரத்துல சிரிப்பு வேற வந்துத் தொலைக்குதுன்னு சிரிச்சுகிறாரு. அவரோட நெலையப் பாக்குறப்ப அவருக்கே விசித்திரமா இருக்குது. இதுக்கு மேலன்னா கோடரியா எடுத்தாந்துத்தாம் கதவப் போட்டுப் பொளக்கணும்னு நெனைச்சகிட்டு சாமியாத்தா கொட்டாயிக்கு முன்னாடி இருக்குற படல தெறந்துகிட்டு உள்ளப் போறாரு.
            கட்டில்ல படுத்துக் கெடக்குற சாமியாத்தா மருமவனப் பாத்ததும் எழுந்திரிச்சி நிக்க நெனைக்குது. அதால எழுந்திரிச்சு உக்காரக் கூட முடியல. ஒடம்பெல்லாம் யாரோ அடிச்சிப் போட்ட மாதிரி இருக்கு அதுக்கு.
            "பேயாம படுங்க. எழுந்திரிக்க வாணாம்!" அப்பிடிங்றாரு சுப்பு வாத்தியாரு. பக்கத்துல உக்காந்திருக்குற ரெண்டு சனங்களும் அதையே சொல்லுது. "யாரு ஒங்க மருமவ்வேம்தான்னே. ஒடம்புக்கு முடியாம்மத்தான்னே படுத்துக் கெடக்கீங்க. ச்சும்மா கெடங்க." அப்பிடிங்குதுங்க அந்த சனங்க.
            "இதுக்கு மேலயும் இஞ்ஞத்தாம் கெடக்குணும்மா? கெளம்புங்க யத்தே வூட்டுக்குப் போவலாம்! இவனுங்கள திருத்த முடியாது யத்தே! இவனுங்கள நம்பவும் முடியாது. இந்தக் கொட்டாயில கெடந்தீங்க, அப்டியே கொட்டாய்ய கொழுத்தி விட்டு ஒங்களயும் கொன்னுப்புடுவானுங்க. கொலகார பாவிங்க. எல்லாத்தியும் உதுத்த பயலுகளா இருப்பானுங்க போலருக்கு!" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "ஆம்மா போங்க! ஊருல எந்தப் புள்ளை ஒழுங்கா இருக்கு? எல்லாம் இப்பிடித்தாம் இருக்கு! நாம்ம வாங்கயாந்த வரம் யப்படி! இன்னும் யத்தினி நாளோ? இஞ்ஞயே கெடந்து இஞ்ஞயே செத்தாத் தேவலாம்!" அப்பிடிங்குது சாமியாத்தா.
            "அதெல்லாம் பெறவு பேசிக்கலாம். வூட்டுக்குக் கெளம்பி வாங்க மொதல்ல யத்தே!" அப்பிடிங்றாரு சுப்பு வாத்தியாரு மறுபடியும்.
            "இன்னிக்கு வாண்டாம். இன்னொரு நாளு வாரேன். இன்னிக்கு வந்தா சரிபெட்டு வாராது. பெரச்சனைங்ற மாரில்ல ஆயிடும்! ஊருக்குள்ள அசிங்கமா போயிடும்!" அப்பிடிங்குது சாமியாத்தா.
            "ம்ஹூம்! இதுக்கு மேல ன்னா அசிங்கம்மா போவணும்மோ? இதுக்கு மேல ன்னா பெரச்சனையா ஆவணும்மோ? இப்டில்லாம் இருந்தா ன்னா பண்றது?" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "இன்னிக்கு ஒரு நாளு போவட்டும்மே. அதாங் நீங்கள்லாம் வந்து சத்தம் போட்டிருக்கீங்க. இனுமே சரியாயிடுவானுவ்வோ. அத்து வெங்கு வேற வந்து மானாங்காணியா சத்தம் போட்டுச்சு. போதும் போங்க. வுடுங்க அத்தோட. ஏத்தோ நடந்தது நடந்துப் போச்சி. அத்தோட போவட்டும். மேல மேல போட்டு நோண்டிட்டு இருக்கப்படாது." அப்பிடிங்குது சாமியாத்தா.
            "நீஞ்ஞ அஞ்ஞயே இருக்க வாணாம். வந்து ரண்டு நாளைக்கு இருந்துட்டு வந்துடலாம் வாங்க யத்தே!" அப்பிடிங்றாரு மறுபடியும் மறுபடியும் சுப்பு வாத்தியாரு.
            "அது இப்போ சுத்தப்பட்டு வாராது. கொஞ்சம் பொறுங்க. எல்லாஞ் சரியாயிடும். வெவரம் தெரியாம பண்ணுறானுவ்வோ. வெவரம் தெரிஞ்ச நாமளும் தெரியாத்தனம்மா பண்ணா ன்னா அர்த்தம்? நீஞ்ஞளே சொல்லுங்க!" அப்பிடிங்குது சாமியாத்தா.
            "என்னத்தாம் சொல்ல வாரீங்க யத்தே?" அப்பிடிங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "இதயெல்லாம் மவ்வேம், மவ்வேகிட்ட சொல்லிட்டு இருக்காதீங்க. இனுமே பெரச்சன வாராதுன்னு நெனைக்கிறேம். இத்த இத்தோட வுட்டுப்புட்டா எல்லாஞ் சரியாயிடும்னு நெனைக்கிறேம்! நீஞ்ஞ கெளம்புங்க. அவனுங்க ஒண்ணு கெடக்க ஒண்ணு கற்பனெ பண்ணிகிட்டுக் கெடக்கப் போறாய்ங்க!" அப்பிடிங்குது சாமியாத்தா.
            சுப்பு வாத்தியாரு அதுக்கு மேல ஒண்ணும் பேசல. வண்டிய கெளப்பிகிட்டு வடவாதி சின்னோன்டு இட்டிலிக் கடையில ராத்திரிக்கு அஞ்சு இட்டிலிய சாமியாத்தா கொட்டாயில கொண்டு போயி கொடுக்கச் சொல்லிட்டுக் கெளம்புறாரு.
            அவரு சொல்லி வுட்ட மாதிரி ராத்திரி இட்டிலி போவுது. அதே நேரத்துல கோனாரு வூட்டுல இருந்தும் சாப்புடச் சொல்லி அழைப்பு வருது. இங்க வந்து கெடக்குற இட்டிலியையும் தூக்கிக்கிட்டு, கொட்டாயச் சாத்திகிட்டு சாமியாத்தா கோனாரு வூட்டுக்குப் போவுது. அங்க கோனாரு வூட்டுல சுட்டுப் போட்ட இட்டிலிகள்ல ரெண்டு வாங்கிகிட்டு இதுல ரெண்டு எடுத்துக்கிட்டு நாலு இட்டிலிய கொஞ்சம் மல்லுகட்டித் தின்னு முடிக்கிது சாமியாத்தா. மிச்சம் இருக்குற மூணு இட்டிலிகள்ல அவங்ககிட்ட கொடுத்து சாப்பிட்டு முடிச்சிடுங்கன்னு சொல்லிட்டுத் திரும்ப  கொட்டாயிக்குக் கெளம்புது சாமியாத்தா. அந்த நேரம் பார்த்து கோனாரு தாத்தா சொல்றாரு, "ஏம் அஞ்ஞ போயித் தனியா குறுகுறுன்னு கெடந்துகிட்டு. இன்னிக்கு ஒரு நாளு இஞ்ஞயே நம்ம வூட்டுப் பொண்டுகளோட பேசிகிட்டு கெடக்குறது?" அப்பிடின்னு.
            "யில்லே! நாம்ம கெளம்புறேம்!" அப்பிடிங்குது சாமியாத்தா.
            "ஆயி! சொல்றேம்ல. பேயாம கெடங்க." அப்பிடின்னு ஒரு அதட்டல்ல போடுறாரு கோனாரு தாத்தா. அத மீறிட்டுப் போனா கோனாரு தாத்தாவுக்குக் கெட்ட கோவம் வந்துப்புடும்ங்றது புரியுது சாமியாத்தாவுக்கு. அது அப்படியே அங்கயே உட்காருது.
            "ஏம் ஆயி! ஒம் மவளும் மருமவனும் வந்து அந்தப் பேச்சப் பேசுறாங்க. நீ பெத்தீயே புள்ளீங்க ரண்டும் வெளியல வந்து ஒரு வார்த்தைச் சொல்ல வாணாம்? இப்பிடிய்யா ரண்ட பெத்துப் போடுவே? எல்லாம் ஒம் தலயெழுத்து! இப்டி ஆவணும்னு கெடக்கு. இஞ்ஞயாவது சித்தே ஆறுதல படு போ!" அப்பிடிங்கிறாரு கோனாரு தாத்தா.
            அது சரி! இம்மாம் நடக்குதே! இம்மாம் பேச்சு ஆவுதே! வூட்டுப் பூட்டிகிட்டு வூட்டக்குள்ளார இருக்குறவங்களுக்கு அது ஒண்ணுத்தியுமா செய்யாம இருந்திருக்கும்?
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...