19 Oct 2019

5.1



            ஒரு நாவலாசிரியனுக்கு இவ்வளவு உரிமைகள் கூடாது. அவ்வளவு அதிகாரங்களையும் கையிலெடுத்துக் கொள்ள கூடாது. இந்த நாவலில் வரும் பாத்திரங்களில் சக்தி, சித்தார்த், ஆவணி, பேராசிரியர் ஜே.பி. எல்லாம் நிஜமாக கண்முன்னே இருப்பவர்கள். விகடு ஒருத்தன் மட்டும்தான் நிஜத்திலும், கற்பனையிலுமாக எங்கிருப்பவன் என்று அறியப்படாத ஒருவன். அவர்களின் அனுமதியின்றியே அவர்களைப் பாத்திரங்களாக உலவ விடுவதற்கு அவர்களிடம் எந்த அனுமதியையும் நாவலாசிரியன் வாங்கவில்லை. அவர்களை இஷ்டப்படி வார்ப்பதற்கு ஒரு நாவலாசிரியனுக்கு என்ன உரிமை இருக்கிறது என்பது தெரியவில்லை. ஒரு நாவலுக்கு அது தேவையாக இருக்கிறது, அதாவது இஷ்டப்படி வார்ப்பது. நிறைய கற்பனைகளும், புனைவுகளும் கூட தேவையாக இருக்கின்றன. நாளை அந்தக் கற்பனைகளும், புனைவுகளும் நிஜமாகலாம் என்ற நம்பிக்கையில்தான் நாவலாசிரியன் அதை எழுதுகிறான். இதில் கொடூரங்களும், விபரீதங்களும், கொலைப்பலிகளும் மட்டும் விதிவிலக்காக வேண்டும். எதார்த்தம் மாறி நடந்து விடுவதுண்டு. கொடூரங்கள், விபரீதங்கள், கொலைப்பலிகள் நடந்து, நல்லது நடக்காமல் போய் விடுவதுண்டு. அது எழுத்துக்கு நேரும் துரதிர்ஷ்டம். நாவலாசிரியனுக்கு நேரும் அவப்பெயர்.
            சக்திக்கு சாவு குறித்து நிறைய சிந்தனைகள் உண்டு. மனிதர்கள் சாவதே சக்தியற்று அன்றோ! ஆதாலால் சக்திக்கு சக்தி குறித்த சிந்தனை உண்டு என்று இதனை இலக்கிய சொற்பின்வருநிலையணி அமைத்து ரசிக்கலாம். அது வேறு. மனிதர்கள் ஏன் சாக வேண்டும்? இது ஒரு முக்கியமான கேள்வி. மூப்பால் சாவோர், வியாதியால் சாவோர், அகால மரணமடைவோர், கத்தியால் குத்துப்பட்டு மாள்வோர், துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாவோர், விபத்தால் உயிர் விடுவோர் என்று இதன் வகைபாடு மனவரைபடத்துக்கு எட்டாதது. அண்மை காலமாக ப்ளக்ஸ் விழுந்தும் மனிதர்கள் சாகத் தொடங்கியிருக்கிறார்கள். அதை அப்படித்தான் சொல்ல வேண்டும். ப்ளக்ஸ் விழுந்து இறந்தார் என்று சொல்வதை விட ப்ளக்ஸ் விழுந்து சாகத் தொடங்கியிருக்கிறார்கள் என்ற வாக்கியம் யாருக்கும் எந்த குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தாத வாக்கியம் ஆகும்.
            ஒரு பேனர் உயிர் குடிக்கும். மிகப் பெரிய பேனர் கூட்டத்தை அள்ளிக் குடிக்கும். பேனர்களுக்கு உயிர் என்பது தண்ணீரைப் போன்றது. தாகம் வந்தால் குடித்து விடும். மிகப்பெரிய பேனர் என்பது ஒட்டகத்தைப் போன்றது. ஒரு இழுப்பில் நிறைய உயிர்களை உறிஞ்சி விடும். அப்படி உறிஞ்சி பிரபலம் என்ற திமிலில் வைத்துக் கொள்ளும். விளம்பரத் தட்டிகள், கட் அவுட்டுகள் உயிர் குடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதில் ஒரு கலைஞனின் கலைத்தன்மை இருக்கிறது. காவியத் தன்மையும்தான் இருக்கிறது. உயிர் குடிக்கும் அந்த நொடியை அப்படியே பிரதியெடுத்து ஒரு ப்ளக்ஸ் வைக்கலாம். மிகப் பெரிய ப்ளக்ஸ். ப்ளாக்ஸ் வேண்டாம், ப்ளக்ஸ் விழுந்து மனிதர்கள் மாள்வர் என்று மிகப் பெரிய ப்ளக்ஸ் வைக்கலாம். கேட்டால் இங்கே சைலண்ட் என்பதை சைலண்ட் என்று சத்தம் போட்டுத்தானே சொல்ல வேண்டியிருக்கிறது என்று காரணம் சொல்லிக் கொள்ளலாம். காட்டுப் பறவைகளை விடுவித்து விட்டால் அவை ஏன் ஓரிடத்தில் கீச்சுக் கீச்சுப் போடப் போகின்றன.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...