செய்யு - 241
சாமியாத்தா அது பாட்டுக்கு இருக்குது.
அது பாட்டுக்குப் போகுது. அது இருக்குற இடம் அதுக்கு மட்டும் தெரிஞ்ச அதிசயமா போவுது.
அதோட கொட்டாயி அதுக்குச் சொர்க்கமா தெரியுது. அதால யாருக்கும் சரி, யாராலயும் அதுக்கும்
சரி இப்போ எந்த சின்ன இடைஞ்சலும் இல்ல.
பாஞ்சாலம்மன் கோயிலு வாசலு வழியாக்கா
போனா குமரு மாமா வீடு. அப்படித் திரும்பாம வந்து வேலிப்படலைத் திறந்தா வீயெம் மாமா
வீடு. கொஞ்ச நாளு வரைக்கும் வீயெம் மாமா வூட்டுக்கும், சாமியாத்தாவோட கொட்டாய்க்கும்
அதுதாம் பொது வழியா இருந்துச்சு. அது கொஞ்ச நாள்தான் அப்படி இருந்துச்சு. கொஞ்ச
நாளுக்குள்ளயே சாமியாத்தாவோட கொட்டாயச் சுத்தி வேலி முளைச்சு அதோட கொட்டாய்க்குப்
போறதுக்கு தனிப் பெடலு வெச்சாச்சு. அதெ முளைக்க வெச்சது வீயெம் மாமா, வெதைப் போட்டது
கோகிலா மாமிங்ற சங்கதிய நாம்ம சொல்ல வேண்டியதில்ல. இப்போ மூணு வூட்டுக்கும் மூணு
வாசப்படியா ஆயிப் போச்ச.
சாமியாத்தா தனிக்கொட்டாயிக்கு வந்தப்
பெறவு மாசத்துக்கு ஒரு முறையோ, ரெண்டு முறையோ அது வயித்துல பொறந்த பொண்ணுங்க வந்து
பாக்குறதும், பாக்க வரப்ப உப்பு, புளி, மிளகா, அரிசின்னு வாங்கியாந்து கொடுக்குறதும்,
பாத்துட்டுப் போறப்ப ஐம்பதோ, நூறோ வெச்சிக்கம்மான்னு அதோட கையில திணிச்சிட்டுப்
போறதும் நடக்குது. அது ஒத்தை ஆளா கொட்டாயில இருக்குறதால பொண்ணுங்க கொடுக்குறது போதுமானதா மட்டுமில்ல, அளவுக்கு அதிகமாவே இருக்கு.
ரெண்டு ஆம்பளைப் புள்ளைங்க இருந்தும் தனியா கொட்டாயில கெடக்குதுங்ற கொறையைத் தவிர
வேற எந்தக் கொறையும் இல்ல இப்போ அதுக்கு.
இருக்குற கடைசிக் காலத்துல ஏம் பொண்ணுங்களுக்கு
இப்படிப் பாரமா இருக்கணும்னு ஒரு எண்ணம் சாமியாத்தாவுக்கு வருது. ரேஷன்ல இலவசமா அரிசித்
தர்றாங்க, பருப்பு, எண்ணெய் தர்றாங்க, சீனி, மண்ணெண்ணெய் எல்லாம் தர்றாங்க. அத வாங்கிட்டாவே
போதும். பொண்ணுங்க இப்படி மாசா மாசம் நம்ம சீவனத்துக்குக் கொண்டாந்து கொடுத்து
ஏன் சிரமப்படணும்ங்ற ஒரு நெனைப்பு அதுக்கு வருது. ரேஷன் கடையில இதெல்லாம் வாங்கணும்ன்னா
ரேஷன் கார்டுல் வேணும். அது எங்க அதோட கையில இருக்கு? அதோட பேரு இப்போ யாரு கார்டுல
இருக்குன்னே அதுக்குத் தெரியல. வீயெம் மாமா கல்யாணம் ஆவறதுக்கு முன்னாடி ஒரே ரேஷன்
கார்டுதான். அதிலத்தான் அதோட பேரு இருந்துச்சி. வீயெம் மாமா கல்யாணம் ஆன பெறவு தனிகார்டுக்கு
ஏற்பாடு பண்ணதுல அதோட பேரு இப்போ குமரு மாமா வூட்டு ரேஷன் கார்டுல இருக்கா? வீயெம்
மாமாவோட ரேஷன் கார்டுல இருக்கா?ன்னு அதுக்குப் புரியல. இருந்தாலும் பொதுவா ரெண்டு
பேருகிட்டயும் பேசி தனி கார்டு ஒண்ணுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டா போச்சின்னு அதுக்கு
ஒரு யோசனை.
புள்ளைங்க முகத்தப் பாத்து, அதுகளோட பேசி
அதுக்கு நாளாகிப் போச்சு. தனிக்கொட்டாயிக்கு வந்து அஞ்சாறு மாசம் ஆன பிற்பாடு அது,
அதுங்க முகத்துலயே முழிக்கிறதில்ல. எப்பயாவது வீயெம் மாமா சாப்பாட்டுத் தட்டக் கொண்டாந்தாலும்
அதெ கண்டுக்கிறதில்ல. அது பாட்டுக்கு மூஞ்சைத் திருப்பிகிட்டு உக்காந்துக்கும். இதப்
பாத்துட்டு கொஞ்ச நாள்ல எப்பயாவது கொண்டாந்து கொடுக்குற சாப்பாட்டையும் நிறுத்திக்கிடுச்சி
வீயெம் மாமா. அதுக்குப் பொண்ணுங்க வந்து பாக்குறதும், அதுங்க தட்டுமுட்டுச் சாமான்களைக்
கொண்டாந்து கொடுக்குறதும் தெரிஞ்சதும் நமக்கென்ன நல்லதுன்னு அது பாட்டுக்கு ஒதுங்கிக்கிடுச்சி.
கொட்டாயி தனிக்கொட்டாயின்னு ஆனதுக்குப்
பெறவு ரேஷன் கார்டு மட்டும் எதுக்கு ஒண்ணா? கார்ட தனியா போட்டுக் கொடுங்கடான்னு கேட்டுப்புடுவோம்ங்ற
நெனைப்புல காலங்காத்தாலயே குமரு மாமா பட்டறை வேலைக்குப் போறதுக்கு முன்னாடியே வூட்டு
வாசலுகிட்ட பாஞ்சாலம்மன் கோயிலுக்கு முன்னாடியே நின்னுகிடுச்சி சாமியாத்தா. பட்டறைக்குக்
கிளம்பி வெளியில வந்த குமரு மாமா இதப் பார்த்தும் பாக்காதது போல வேக வேகமா நடையைக்
கட்டுது. அது சாமியாத்தாவுக்கும் நல்லா தெரியுது. அதுக்குல்லாம் யோஜனைப்பட்டா காரியம்
ஆகுமா? "ய்யப்பாடி குமரு!" அப்பிடிங்குது சாமியாத்தா. வார்த்தை வந்து காதுல
விழுந்துட்டதால வேற வழியில்லாம குமரு மாமா நிக்குது. என்னாங்ற மாதிரி கண்ணால ஒரு கேள்விய
கேட்குது.
"ஒண்ணுமில்லடா யப்பாடி! ரேஷன் கார்டு
தனியா போட்டுக் கொடுத்தீன்னா அதுல வார்ற அரிசியல பொங்கித் தின்னுப்பேம்பா! பொட்டக்
கழுதைங்க அதுங்க கொண்டாந்து கொடுக்குற அரிசியலத்தாம்ப பொங்கித் தின்னுகிட்டுக் கெடக்குறேம்!"
அப்பிடிங்குது சாமியாத்தா.
"அரிசி வேணும்ன்னா வூட்டுல வந்து
வாங்கிட்டுப் போ! தனியா ரேஷன் கார்டு போட்டா ஊருல இருக்கிறவேம் நம்மளப் பத்தி ன்னா
பேசுவாம்? ஆயாள தனியா வுட்டுப்புட்டு சோறு போட வக்கில்லாம ரேஷன் கார்ட தனியா போட்டுக்
கொடுத்துட்டான்னு பேச மாட்டாம்! எம்மட மானத்த வாங்கணும்னே கொட்டாயில யோசிச்சுகிட்டுக்
கெடப்பீயா? வயசு ஆவ ஆவ ஒனக்கு கொழுப்பு அதிகமாயிட்டே போவுது. இல்லாததையும் பொல்லாததையும்
கேட்குறே? மவ்வேங்காரம்தாம் வூட்டோட வெச்சிக்கில்லையே! பெறவு ஏம் அவ்வேன் நம்மோட
பேரைச் சேத்துகிட்டு நமக்கு வர்ற சீனி, மண்ணெணெண்ணெய், அரிசி, சாமாம் செட்டையெல்லாம்
அவ்வேம் வாங்கி அனுபவிக்கணும்னு நெனைக்குற போலருக்கு!" அப்பிடிங்குது குமரு மாமா.
"அட யப்பாடி! அப்டில்லாம் நெனைக்கலடாம்பீ
நாம்ம. பொண்ணுங்க கொண்டாந்துப் போடுற அரிசியல பொங்கித் தின்ன ஒரு மாரியா இருந்துச்சுட்டாம்பீ!
செரி அதாங் கேட்டுப் பார்ப்பம்ன்னு. தப்புத்தாம்யா யப்பாடி. தெரியாம கேட்டுப்புட்டோம்யா!
ஒம்மட கார்டுலயே எம்மட பேரு இருக்கட்டும்யா! தனிக் கார்டுல்லாம் வாணாம்யா!" அப்பிடிங்குது
சாமியாத்தா. அதோட கண்ணுலேந்து இப்படிச் சொல்லிப்புட்டு பொல பொலவென கண்ணீரு கொட்டுது.
"நீயி அடங்க மாட்டே! இரு அவ்வேம்
சின்னவங்கிட்ட பேசுனாத்தாம் சரிபட்டு வரும்." அப்பிடின்னு சொல்லிப்புட்டு அது
வீயெம் மாமா வீட்டு வாசலுக்கு முன்னாடிப் போவுது. வாசலுக்கு முன்னாடியே நின்னுகிட்டு,
"டேய் சின்னவனே!" அப்பிடின்னு குரலு கொடுக்குது. இத்தனை நாள்ல ஒரு நாளு
கூட குமரு மாமா வீயெம் மாமா வூட்டு வாசல் பக்கம் காலடி எடுத்து வெச்சது கிடையாது. இப்போ
சாமியாத்தா இப்படிக் கேட்டுப்புட்டுன்னு அங்க காலடி எடுத்து வெச்சு வீட்டுக்குள்ள போவாம
வெளியில தெருவுலயே வாசலுக்கு முன்னாடி நின்னுகிட்டு இப்படி சவுண்டு கொடுக்குது.
இத்தனை நாளும் வந்து கூப்புடாத அண்ணங்காரம்
வந்து கூப்புடுறான்னா ஏதோ முக்கியமான விசயமாத்தான் இருக்கும்ன்னு காலையில இட்டிலியும்
சட்டினியும் சாப்புடுற கையோட எழுந்திரிச்சி ஓடியாருது வீயெம் மாமா.
"யண்ணாடா சொல்லு!" அப்பிடிங்குது
வீயெம் மாமா.
"கெழவிக்கு வர்ற வர்ற எகத்தாளம் அதிகமாயிட்டே
போவுது. கூடப் பொறந்த எளவெடுத்தவளுங்க வந்துட்டுப் போறாளுவோ யில்ல. அவளுங்க இதோட
காதுல ஓதிட்டுப் போயிருக்காளுங்க. அதெ கேட்டுப்புட்டு கெழவி கெடந்துகிட்டு ஆடுது.
அதுக்கு தனியா ரேஷன் கார்டு போட்டு வேணும்மா? அதாங் என்னான்னு நீயும் கேளேம்!"
அப்பிடிங்குது குமரு மாமா.
"யே யம்மா! இஞ்ஞ வா!" அப்பிடிங்குது
வீயெம் மாமா.
சாமியாத்தா குமரு மாமா வூட்டு வாசல்லேந்து
குண்டு குண்டுன்னு ரெண்டாவது மவன் கூப்புடுறானேன்னுட்டு ஓடி வருது. அது வந்து நின்னதும்,
"யேம் ஒனக்கு கிறுக்குப் பிடிச்சிடுச்சா? அந்த கிறுக்கச்சிங்க வந்து சொன்னாளுவோன்னு
தனியா ரேஷன் கார்ட போட்டுக் கேப்பீயா? செத்தீன்னா அள்ளிப் போட்டு பொதைக்க நாம்மத்தான்
வேணும் புரிஞ்சிக்க. பெத்தத் தாயின்னுப் பாக்குறேம். இல்லேன்னா இப்பயே கொன்னுப் போட்டு
பொதைச்சே புடுவேம் பாத்துக்க. ஒனக்கு எதுக்கு தனியா கார்டு? ஒனக்கு ன்னா இனுமே சுடுகாட்டுக்குப்
போற வயசுல கார்டு? சுடுகாட்டுல போயி உக்காந்துகிட்டு ரேஷன் கார்ட வெச்சி அரிசி வாங்கிப்
பொங்கித் தின்ன போறீயா? இருக்குற மருவாதியா இருந்துக்க ஆமா? யில்ல பெத்தத் தாயின்னு
பாக்க மாட்டேம். ஒதைத்தாம் வாங்குவே!" அப்பிடிங்குது வீயெம் மாமா தெருவாசல்ல நின்னுகிட்டு
தெருவுக்கே கேட்குற மாதிரி.
தெருவுக்கே கேட்குற இந்தச் சத்தம் மேகலா
மாமிக்கும், கோகிலா மாமிக்கும்மா கேட்காது. அதுக ரெண்டும் இந்தச் சத்தத்த கேட்டுகிட்டு
அதுங்களும் தெரு வாசலுக்கு ஓடி வருதுங்க.
"நாங்க என்னவோ ஒங்க ஆயாள கொறை சொன்னேம்னு
ரொம்பத்தாம் அலுத்துகிட்டீங்கயில்ல. இப்ப நீங்களே பாருங்க ஒங்க ஆயாளோட லட்சணத்த.
சித்தே ச்சும்மா இருக்காங்க அது. இப்பிடிங்றதுக்குள்ள வஞ்சனையா எதையாச்சிம் பண்ணிப்புட்டு
அமுக்குக் குட்டாம் போல உக்காந்துக்கும். இப்ப தெரிஞ்சதா அத்தோட வண்டவாளம். ஆரு நாம்ம
சொல்றத கேட்குறா? அதது பட்டாத்தாம் தெரியுது." அப்பிடிங்குது மேகலா மாமி.
"ந்நல்லா சொல்லுங்க யக்கா! நாம்ம
சொல்றதுதாம் இதுங்க ரெண்டுக காதுலயும் ஏறவே மாட்டேங்குதே. விஷமக்காரக் கெழவி. குடும்பத்தக்
கிழிச்சி எப்டி ரண்டாக்கணுங்றது இதுக்கு நல்லா தெரியும். இந்த ஊரு சனங்க இதயில்ல தூக்கி
வெச்சித் தலையில கொண்டாடுதுங்க. இந்த ஊரு சனங்க மட்டும் எப்டி இருக்கும்? அது மாரித்தாம்
இதுவும் இருக்குது." அப்பிடின்னு கோகிலா மாமி இத்தனை நாளும் இல்லாம இன்னிக்கு
மேகலா மாமிய அக்கான்னு உறவு கொண்டாடிகிட்டுப் பேசுது.
இதையெல்லாம் பாக்க பாக்க, ஏம்டா இப்படி
யோசிச்சுத் தொலைச்சோம்? அதெ எதுக்குடா இவனுங்ககிட்ட கேட்டுத் தொலைச்சோம்ன்னு சாமியாத்தாவுக்கு தம் மேலயே ஆத்திரம் ஆத்திரமா வருது.
"இத்த இப்டியே வுட்டுடக் கூடாதுங்க.
மொளையிலயே கிள்ளணும். வுட்டீங்கன்னா வெச்சுக்குங்க பொண்ணுங்க ஏத்தோ அஞ்சோ பத்தோ
கொண்டாந்துகொடுக்குற காசுக்கு விசுவாசமா இருக்குறேங்ற பேர்ல இந்த வூட்டுல கொஞ்சம்
கொடு, அந்த வூட்டுல கொஞ்சம் கொடு, அந்த நெலத்துல கொஞ்சம் கொடு, இந்த நெலத்துல
கொஞ்சம் கொடுன்னு இருக்குறதையெல்லாம் பிரிச்சிக் கொண்டு போயி ஒங்க கூடப் பொறந்தவங்க
வூட்டுல கொண்டு போயி போட்டுட்டு வந்துடுவா கெழவி! எல்லாம் யம்மான்னு நீஞ்ஞ கொடுக்குற
எடம்." அப்பிடிங்குது கோகிலா மாமி.
"நீயி சொல்லறதுதாம்டி சரி தங்காச்சி!"
அப்பிடின்னு இதெ கேட்டுப்புட்டு மேகலா மாமியும் கோகிலா மாமி மேல தங்கச்சி ஒறவுமுறைக்
கொண்டாடுது.
ஒரு நல்லது செய்யணும்ன்னா அண்ணம் தம்பி
ரெண்டு பேரும் பிரிஞ்சிக்கிறானுவோளே! கெடுதிப் பண்ணணும்ன்னா இப்டி ரண்டு பேரும் ஒண்ணா
சேர்ந்திருக்கிறானுவோளேன்னு சாமியாத்தாவுக்கு தெகைப்பா போவுது. அதே நேரத்துல இதுக்கு
மேல இதப் பேச வுடறது நல்லதில்லன்னும் அதுக்குத் தோணுது.
"யப்பாடிகளா! தப்பா கேட்டதுக்கு மன்னிப்புக்
கேட்டுக்கிறோம்யா! வெசயத்த இத்தோட வுட்டுக்கலாம். நடுரோட்டுல பேசிக்க வாணாம்ய்யா!"
அப்பிடிங்குது சாமியாத்தா. இப்போ தெரு சனங்களும் ஒண்ணு ரண்டு அங்க கூட ஆரம்பிக்குது.
"எதாச்சிம் பேசுன்னே பல்லத் தட்டிப்புடுவேம்
பாத்துக்க! பண்றதயும் பண்ணிப்புட்டு இப்போ நல்லவெ மாரியா நடிக்குறே?" அப்பிடிங்குது
அதெ கேட்டுகிட்டு வீயெம் மாமா.
"யேய்! இந்தாரு! சாமியாத்தா ஒங்களுக்கு
யம்மாவா இருக்கலாம். பேசுறத மருவாதியா பேசு. இல்ல நல்லா இருக்காது பாத்துக்க!"
அப்பிடின்னு கூடிகிட்டு நிக்குற சனங்க கூட்டத்திலேந்து
குரலு வர வீயெம் மாமாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருது.
"எவம்டா அவ்வேம்? முன்னாடி வந்து
பேசுடா நாயே! எங்க யம்மாவ நாம்ம பேசுறேம். நீயி யாருடா வந்து கேக்குறதுக்கு? நீயி ன்னா
எஞ்ஞ யம்மாவ வெச்சிருக்கீயாடா தேவிடியாப் பயலே!" அப்பிடிங்குது வீயெம் மாமா.
இதைக் கேட்டதும் அப்படியே சொரேர்ன்னு
போகுது சாமியாத்தாவுக்கு. "யய்யோ பொன்னியம்மா! எம் புருஷம் ஒருத்தனுக்குத்தான்னே
முந்தி விரிச்சி இதுகளப் பெத்தேம். இப்ப இதுங்களே இந்த மாரி கேட்க விட்டுட்டுப் பாக்குறீயேடி
பொன்னியம்மா! நாம்ம என்னடிய்யம்மா பாவஞ் செஞ்சேம்!" அப்பிடின்னுகிட்டு ஓடி வந்து
நடுரோட்டுல அப்படியே வீயெம் மாமா, குமரு மாமா ரெண்டு பேரு முன்னாடியும் பொதுக்கடின்னு
அப்படியே காலுல விழுவுது சாமியாத்தா.
"யய்யா! தப்புப் பண்ணிட்டேம்யா! தப்புப்
பண்ணிட்டேம்யா! தாலியறுந்த மூதிய்யா நாம்ம! தப்புப் பண்ணிட்டேம்யா! இந்த கம்முனாட்டிய
மன்னிச்சிடுங்கய்யா! மேக்கொண்டு ஒண்ணும் பேசாம வூட்டுக்குள்ள போயிடுங்கய்யா! பாஞ்சலம்மா
சத்தியம்மா பொன்னியம்மா சத்தியம்மா ஒங்க அப்பனுக்கு முந்தி விரிச்சித்தாம்யா ஒங்களயும்,
எம்மட பொண்ணுங்களயும் பெத்தேம். எம்மட சந்தேகப்படாதீங்கய்யா! வூட்டுக்குள்ள போயிடுங்கய்யா!
போதும்யா பொண்ணா போறந்து நாம்ம பட்டுப்பாடு. நம்மள அழச்சிட்டுப் போவ அந்த யம்மேம்
வர மாட்டேங்றானேய்யா! இந்த ஒடம்பச் சொமந்துகிட்டு கஷ்டமால்லயா இருக்கு. இதயெல்லாம்
பாக்கக் கூடாதுன்னு ஒங்க அப்பம் போயிச் சேந்துட்டான்னேய்யா! நம்மள பாக்கக் கூடாத,
கேக்க கூடாததையெல்லாம் கேக்க வுட்டுப்புட்டான்னய்யா! வுட்டுப்புட்டான்னய்யா! பாவிப்
பயய்யயா ஒங்க அப்பம்! நம்மள இந்த நெலைக்கு வுட்டுப்புட்டு செத்துப் போயிட்டேனய்யா!
அன்னிக்கே நம்மள கழுத்த நெரிச்சி கொன்னுப்புட்டுல்ல அவ்வேம் போயிச் சேந்திருக்கணும்யா!"
அப்பிடின்னு மண்ணு தரையில தலைய தேய்ச்சுகிட்டுத் தேம்பித் தேம்பி அழுவுது சாமியாத்தா.
நடந்துகிட்ட இந்த விசயத்த காத்தோட காத்தா
கேள்விப்பட்டு கோனாரு தாத்தா அங்க வூட்டுலேந்து ஓடி வந்தவரு, குமரு மாமா, வீயெம் மாமா
ரெண்டு பேரையும் மோறைச்சுப் பார்க்குறாரு. த்துப்பூன்னு காறித் துப்புறாரு.
"புள்ளைங்களாட நீங்க? போங்கடா அந்தாண்ட!" அப்பிடின்னுட்டு நின்னுகிட்டு
இருக்குற கூட்டத்த பார்த்து சத்தம் போடுறாரு, "தாயத் தூக்கிட்டுக் கொட்டாயிக்குக்
கொண்டு போங்கடி பொண்டுகளா! என்னாடி பொண்டுகளா வேடிக்க வேண்டிக் கெடக்கு. சீக்கிரம்
தூக்கிட்டுப் போங்கடிப் பொண்டுகளா!" அப்பிடிங்கிறாரு.
கோனாரு தாத்தா பேச்சுக்குச் சுத்தி நிக்குற
பொண்டுகள், சாமியாத்தாவ அப்படியே தூக்கி நிறுத்தி கைத்தாங்கால அழைச்சுகிட்டு படல திறந்துகிட்டுக்
கொட்டாய்க்குக் கொண்டு போவுதுங்க. கொண்டு போயி அங்க கட்டில்ல படுக்கப் போடுதுங்க.
கோனாரு தாத்தா அடுத்து ஒடனே சத்தம் போடுறாரு,
"ஏலேய் எளந்தாரிப் பயலுகளா! எவனாவது இந்த சைக்கிள மிதிச்சுகிட்டுப் போயி ஒரு
ஜோடா வாங்கிட்டு வாங்கியாங்கடா!" அப்பிடிங்றாரு. அவரு யோசித்தது சரித்தாம்.
கட்டில்ல கொண்டு போயி போட்டதும் சாமியாத்தாவுக்கு அப்படியே படபடன்னு வருது. உடம்பெல்லாம்
வேர்க்குது. அப்படியே மயக்கமடிச்சி கெடக்குது.
*****
No comments:
Post a Comment