ஆண்கள் மட்டுமே மது குடிப்பார்கள் என்று
சித்தார்த் கேள்விப்பட்ட உலகில் சித்தார்த் சந்தித்த முதல் குடிகாரி அபிதலோஷினி. ஆண்களுக்கு ஆண் என்னும் திமிர்
இருக்கிறது. ஆண்கள் குடிக்கிறார்கள். பெண்களுக்கு அப்படியென்ன பெண் என்னும் திமிர்?
ஏன் பெண்கள் குடிக்க வேண்டும்? அதுவும் ஏன் பெண்கள் குடித்து விட்டு மேடையேற வேண்டும்?
நாக்குக் குழற பாட்டுப் பாட வேண்டும் மற்றும் பேச வேண்டும்? ஒரு வகையில் இந்தக் கேள்விகளே
அபத்தமானதுதாம் அல்லவா. அதென்ன ஆண்கள் குடிக்கலாம்? பெண்கள் குடிக்கக் கூடாது என்று?
சித்தார்த்தின் மனம் மறுநொடியே இப்படி மாறுகிறது. இப்போது சித்தார்த்தின் மனதில்
இன்னொரு கேள்வி எழுகிறது. பெயர்களில் ஷ, ஸ என்ற எழுத்து வருபவர்கள் குடிப்பார்களோ?
ச்சே என்ன ஒரு மட்ட ரகமான சிந்தனை? தமிழில் சிறப்பு ழகரத்தில் எழுத்துள்ள ஒரு குடிகாரரின்
பெயர் அவரது ஞாபகத்தில் வந்துப் போகிறது. நல்லவேளை மொழிக்கும் மொழிக்கும் சண்டை
மூட்டி விடப் பார்த்தேனே என்று அவரது மனம் கலக்கமுறுகிறது, பிறகு தெளிவுறுகிறது.
சித்தார்த் மரபார்ந்த கிராமத்திலிருந்துப்
பிறந்து ஐ.டி. வேலைக்கு மாநகரம் நோக்கி வந்திருக்கிறார். அவரது மரபார்ந்த கிராமத்தில்
ஆண்கள் குடித்திருக்கிறார்கள். பெண்கள் இன்னும் குடிக்கவில்லை. அதாவது குடிக்க ஆரம்பிக்கவில்லை.
கூடிய விரைவில் குடிக்க ஆரம்பிக்கலாம். அப்போது ஒரு காலத்தில் அவர் கொண்டிருந்த கருத்தும்
இன்னொரு காலத்தில் அவர் கொண்டிருந்த கருத்தும் மாறுபாட்டுக்கு உள்ளாகலாம். அதனால்தான்
நாம் காலத்தை நிராகரிக்கிறோம். காலம் மனிதர்களை முரண்பட்டவர்களாய்க் காட்ட வல்லது.
என்னவோ அது மட்டும் முரண்பாடு இல்லாது போல. நீங்கள் கி.பி.க்குப் பின் முன்னோக்கிச்
செல்லும் காலத்தை கி.மு.க்கு முன் பார்க்க வேண்டும். அது பின்னோக்கிச் செல்லும். இது
காலத்தின் முரண்பாடு இல்லையா. ஒருவேளை இது நம் பார்வைக் கோளாறாகவும் இருக்கலாம். அறிவுக்
கோளாறாகவும் இருக்கலாம்.
சித்தார்த்தின் ஒன்று விட்ட மாமாவுக்கு நாக்குக் குழறியது. பேச நா
எழ மாட்டேன்கிறது. கை, கால்களை அசைக்கலாம் என்று பார்த்தால் ம்ஹூம். பேச முயற்சிப்பதை
விட மோசமாக அது ஒரு பக்கமாக இழுக்கிறது. கட்டிலில் ஊர்ந்து போகலமா எனப் பார்க்கிறார்
மாமா. இதையெல்லாம் கட்டிலுக்கு அருகில் அமர்ந்து சித்தார்த் பார்க்கிறார். மாமாவுக்கு
என்னவோ செய்கிறது என்பது சித்தார்த்துக்குப் புரிகிறது. ஆனால் என்ன செய்கிறது என்று
புரியவில்லை. விசயத்தைச் சுற்றிலும் முற்றிலும் விளக்கிக் காரைக் கொண்டு வருவதற்குள்
ஒன்றரை மணி நேரமாகிறது. எந்த ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்வதென்ற யோசனையில் ஒரு மணி
நேரம் காலியாகிறது. ஒரு வழியாக தஞ்சாவூர் கொண்டு செல்வதென்று முடிவில் கொண்டு சென்றால்
அது மூன்று மணி நேரத்துக்கு மேல் முழுங்கி ஏப்பம் விடுகிறது. மாமா பக்கவாதத்தில் முடங்கிப்
போகிறார். சரியாக நான்கு மணி நேரத்துக்கு முன்பாகக் கொண்டு போயிருந்தால் மாமா இன்று
முடங்காமல் போயிருப்பார். அது என்ன நான்கு மணி நேரம்? ஒரு ஐந்து நிமிடம் தாமத்தை அனுமதிக்காதா
இந்த பக்கவாதம்? காலம் ஏன் வேகமாக ஓடித் தொலைத்தது? காலத்தோடு நாம் ஏன் முரண்படுகிறோம்
என்பது உங்களுக்கு இப்போது புரிகிறதா? காலம் ரொம்ப மோசமானது. காதலிக்கும் போது
வேகமாக ஓடும் ஓட்டப் பந்தய வீரனைப் போல. கல்யாணத்துக்குப் பின் மெதுவாக ஓடும் வயதான
கிழவனைப் போல. மோசமானது காலம்.
சபேஷ் வேலையை விட்ட போது அவருக்கு வயது சரியாக முப்பத்து ஒன்பது முடிந்து
ஏழரை மாதங்கள். சித்தார்த் சந்தித்த மூன்றாவது ஆச்சரியம் சபேஷ். முதலிரண்டு ஆச்சரியமோ
அல்லது அதிர்ச்சியோ அது மேலே சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்
என்று நம்புகிறேன். ஐ.டி. வேலையில் சலித்து சல்லடையாகி இருந்தார் சபேஷ். அவரது கலை
ஆர்வம் அலாதியானது. மலேசியா வாசுதேவனைக் கர்ண கொடூரமாக நகலெடுத்துப் பாடுவார். பி.பி.சீனவாஸைக்
கொன்றே போடுவார். கவுண்டமணி போல அப்பைக்கப்போது ஸ்டாண்ட் அப் காமெடி வேறு. அதற்கு
இடையிடையே பிரகாஷ் ராஜின் வில்லத்தனம் வேறு. போதாதா மனிதருக்கு? வேலையை விட்டு விட்டார்.
சித்தார்த்துக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடும் போலிருந்தது. அவர் வேலையை விட்டதுக்கு
இவருக்கு ஏன் அது வர வேண்டும்? சபேஷ் ஐ.டி. பீல்டில் இருந்து அதிசயமாக ஐந்து பிள்ளைகளுக்குத்
தகப்பனானவர். ஒவ்வொன்றும் இப்போதுதான் படிப்பில் தலையெடுக்க வேண்டிய பருவம். சபேஷ்
திடீரென் ராஜினாமா கடிதம் கொடுத்தார். நிறுவனமே ஆட்குறைப்பில் ஈடுபட்டிருந்த போது
நிறுவனத்துக்கு அப்படி ஓர் அதிர்ச்சி கொடுத்தால் எப்படி? இந்த அதிர்ச்சியும், அதிசயமும்
சித்தார்த்தைக் கணிசமாகவும், பேரளவும் பாதித்தது. இரவுத் தூக்கம் அற்றுப் போனார் சித்தார்த்.
சபேஷ் திரைத்துறையில் பாடகராக ஆகப் போவதாக, இசையமைப்பாளர் ஆகப் போவதாக, காமெடி நடிகராக,
வில்லன் நடிகராக ஆகப் போவதாகச் சொல்லிக் கொண்டு மற்றும் சொல்லிக் கொண்டே போனார். ஒரே மனிதர்
எப்படி இத்தனையுமாக? அப்படிப் போனவர் இத்தனையுமாக ஆகவில்லை. கத்திப்பாரா சந்திப்பில்
பிச்சைக்காரராகப் போனார்.
பெண்கள் ஏன் குடிக்க வேண்டும்? பக்கவாதம்
ஏன் நான்கு மணி நேரத்தில் முடக்க வேண்டும்? ஐ.டி.யில் துளையில் மட்டும் கலை ஆர்வம்
பொங்கி வழிந்து இங்கிருப்பவர்கள் ஏன் திரைத்துறைக்குப் போகிறேன் என்று பிச்சைக்காரர்கள்
ஆக வேண்டும்?
கிட்டதட்ட கெளதம புத்தராக ஆவதற்கு முன்
சித்தார்த்தருக்கு ஏற்பட்ட மூன்று கேள்விகள் போல. மூன்று கேள்விகளும் ஒரு பெர்முடாஸ்
முக்கோணத்தைச் சுழற்ற சித்தார்த் அதற்குள் தொலைந்து போகிறார். மூன்றும் மூன்று பக்கத்திலிருந்தும்
நெருக்குகின்றன. வங்காள விரிகுடாவும், அரபிக் கடலும், இந்தியப் பெருங்கடலும் மூன்று
பக்கங்களிலிருந்து நெருக்கினால் தென்னிந்தியாவே காணாமல் போவது போல சித்தார்த்தும்
காணாமல் போகிறார். பூத உடல் இருக்கிறது. மனம் எங்கோ தொலைந்து போகிறது. சித்தார்த்துக்கு
முதன் முதலாக கடவுளைப் பார்க்க வேண்டும் என்று ஆசை பிறக்கிறது.
மிஸ்டர் God! உங்களைச் சந்திக்க ஒரு அப்பாய்ன்மெண்ட்
தருவீர்களா? தன் பெர்சனல் மெயில் ஐ.டி., மற்றும் அதன் அலுவலக மெயில் ஐ.டி.யிலிருந்து
Mr.God@gmail.com எனும் முகவரிக்கு ஒரு மெயில் தட்டி விடுகிறார். தட்டி விட்ட ரெண்டே
நிமிடங்களில் தாங்கள் குறிப்பிடும் Mr.God என்பவர் இந்து God? கிறித்தவ God? இஸ்லாமிய
God? சீக்கிய God? பெளத்த God? என்று ???????? கேள்விக்குறிகளுடன் டெலிவரி செய்யப்படாத
மெயில் ஒன்று ரிப்ளை ஆகிறது. பிரசவம் ஆக முடியாமல் அவதிப்படும் ஒரு பெண்ணின் நிலைக்கு
ஓர் ஆண் ஆளாகிறார்.
O God! நீங்கள் எந்த சாதி? என்று சத்தமிடுகிறார்
சித்தார்த்.
அது நடுராத்திரி.
கடவுள் போல மனைவி முழித்து விடுகிறார்.
மூன்று கேள்விகளுக்காக நடுராத்திரியில்
வெளியே போக இருந்த சித்தார்த்தரை ரூம் கதவையும், வீட்டின் வெளிக்கதவையும் தாழ்ப்பாள்
போட்டு தடுத்து விடுகிறார் சித்தார்த்தின் மனைவி. முதன் முதலாக வரலாறு ஒருவாறாக திசை
மாறுகிறது. ஜாதகக் கதைகளை மாற்றி எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
*****
No comments:
Post a Comment