17 Oct 2019

பிள்ளைங்க போனதுக்குப் பெறவு பல்லு போனா என்னா?



செய்யு - 240
            அம்மை போட்டுடுச்சுன்னா சாமியாத்தா பாடுற மாரியம்மன் தாலாட்டுக்கு அந்த மாரியம்மாவே இறங்கி வருவான்னு ஊரே பேசும். பாட்டோ, பேச்சோ அதுக்கு பல்லு முக்கியம். பல்லுப் போச்சுன்னா சொல்லு போச்சுன்னு சொல்லுவாங்களே! சாமியாத்தாவுக்குப் பல்லு ஒண்ணு ஒண்ணா கொட்டுது. பேச்சோ, பாட்டோ முன்ன மாதிரி இல்ல. வாயைத் தொறந்தா புஸ் புஸ்ஸூன்னு காத்தா வருது.
            பல்லு போன வாயில சாப்பாடு எறங்குறது கஷ்டமா போவுது. சாப்பாடு நல்ல கொழைஞ்சு இருந்தா தேவலாம் போலருக்கு. கறி, காயி கூட்டெல்லாம் நல்லா அவிஞ்சி இருந்தாத்தாம் சாப்பிட முடியுது. அது கொழயமா இருந்தா அதெ அப்படியே போட்டு முழுங்குறது செரமமா இருக்கு சாமியாத்தாவுக்கு. ஆனா வைத்தி தாத்தாவுக்கு இப்படி இல்ல. அவரு சாவுற வரைக்கும் ஒரு பல்லு கூட கொட்டல. எல்லா பல்லும் அப்படியே இருந்துச்சு. சாவுறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி வரையும் பட்டாணி கடலைய ஆசை தீர நறுக்கு நறுக்குன்னு கடிச்சித் தின்னுபுட்டுத்தாம் போயிச் சேர்ந்தாரு மனுஷன். அவருக்குப் பட்டாணி கடலை கடிச்சித் திங்கறுதுன்னு அம்புட்டு இஷ்டம். சாயுங்காலம் வேலை விட்டு வந்தா ஒரு பொட்டணம் பட்டாணிக் கடலையோடத்தாம் வருவாரு. வந்ததும் சட்டையைக் கெழட்டிப் போட்டார்ன்னா, கையி காலு மொகமெல்லாம் அலம்பிக்கிட்டு தயாரா இருக்குற டீய அடிச்சுபுட்டு கட்டில்ல உக்காந்துகிட்டு ஒவ்வொரு கடலையா எடுத்து ரசிச்சு ஒரு பார்வை பார்த்துட்டு திம்பாரு. அவரு பட்டாணிக் கடலைய கடிச்சிச் சாப்புடுற சத்தம் நல்லா கேட்கும். கடைசி காலத்துல மட்டும் வீட்டுக்கு எதுத்தாப்புல இருக்குற தண்ணி வராத ஆனா தண்ணி பிடிக்குறதுக்காக கட்டப்பட்டிருந்த பைப்புக் கட்டையில உக்காந்துகிட்டு சாயுங்காலமா ஆனா பட்டாணிய சாப்பிட்டுகிட்டுக் கெடந்தாரு. ஊரே இந்த வயசுலேயும் பட்டாணிக் கடிக்கிறாரேன்னு ஆச்சரியமா பாத்துட்டுப் போவும். பல்லு இருக்குறவரு பட்டாணிச் சாப்புடுறாருன்னு குசும்பு பேச்சு பேசிட்டுப் போவும்.
            தனிக்கொட்டாயி போட்டு வேளா வேளைக்குச் சாப்பாடு கொண்டு தர்றதா சொன்ன மவராசனுங்கோ நெனைப்பு இருந்தா கொண்டாந்து தர்றானுங்கோ. நெனைப்பு இல்லன்னா எனக்கென்னன்னு இருக்கானுவோ. அப்படி மவனுங்க மூலமா வந்தாலும் வரலாம், வராட்டியும் போகலாங்ற சாப்பாட்டுல குழைவ எதிர்பார்க்க முடியுமா? மனுஷங்களே கொழைவா இல்லாதப்போ அவங்க கொண்டு வர்ற சாப்பாட்டுல கொழைவு இருக்குமா? ஏதோ ஒப்புக்கும், பேருக்கும் ஊருல ஒரு சொல்லு வந்துடக் கூடாதுன்னு ஆயைக் காப்பாத்துற மாதிரி வேஷம் போடுறவனுங்ககிட்ட போயி, "பல்லு போச்சுடா மவனே! சாப்பாடு கொஞ்சம் கொழைவா இருந்தா தேவலாம்டா மவனே!" ன்னு எப்பிடிக் கேட்குறது?
            மருமவளுகளேப் பத்தி ஒங்களுக்கு நல்லாவே தெரியும். இதுக்கு பல்லு போன விசயம் தெரிஞ்சி வேணுக்கும்முன்னே இதுக்கு சாப்பாடு கொடுக்குறதுன்னா தனியா சோத்த வெதை வெதையா ஆக்கிக் கொடுக்குறாங்க. இதெ பாத்து பாத்து அனுபவிச்சி அனுபவிச்சி அதுக்கு அலுத்துப் போச்சு.
            இங்க தனிக்கொட்டாயில சும்மாத்தானே கெடக்குறோம். நாமளே சமைச்சிப்போம்னு அது முடிவு பண்ணிகிடுச்சி. தனிக்கொட்டாயின்னாலும் அது சின்னதுன்னாலும் அது ரொம்ப அழகான கொட்டாயி.பெத்து பன்னெண்டு அடி நீளம் இருக்கும். எட்டு ஒம்போது அடி அகலம் இருக்கும். அவ்வளவுதாம் இருக்கும். ஒத்தக்கல்லு சுவரு. சுவரு, தரையெல்லாம் சிமெண்டு போட்டு அம்சமா பூசியிருக்கு. சின்ன வேலைன்னாலும் சிங்காருவேலு கொத்தனாரு மூத்த மவ்வேன் பாத்துக் கொடுத்த வேலைத்தாம்.  முன்னாடி மாட்டுக் கொட்டாய்க்குப் போட்டு, பின்னாடி வீடு கட்டி முடிக்கிற வரைக்கும் தங்கியிருந்த கொட்டாயி ஒண்ணு குமரு மாமாவோட வூட்டுக்குப் பின்னாடி இருக்குல்ல. அதுல மூங்கிங்க பிரிக்காம அப்படியே அது ஒரு பாழடைஞ்ச கொட்டாயி போல இருந்துச்சு. அதில இருந்த மூங்கிங்ககளைப் பிரிச்சி அப்படியே இந்த தனிக்கொட்டாயிக்குப் போட்டாச்சி. கதவையும் அதுல உடைஞ்சுப் போயிருந்த ஒண்ண கொஞ்சம் ஒக்கப் பண்ணி இந்தக் கொட்டாயிக்கு வெச்சாச்சி. அதுக்குள்ள வைத்தித் தாத்தா படுத்துக் கெடக்குற கட்டில பெரிய மனசு பண்ணி குமரு மாமா கொண்டாந்து போட்டிருந்துச்சி. நல்லா பாக்குறதுக்கு வழுவழுன்னு கருப்பா இருக்குற கட்டிலு அது. அந்தக் காலத்துக் கட்டிலு. முழுசும் தேக்கு. அந்தக் கட்டில்லதாம் வைத்தி தாத்தா நெனைப்போடு படுத்துக் கெடக்குது சாமியாத்தா. ரெண்டு புள்ளைங்கள அதுவும் ஆம்பள சிங்கங்கள பெத்துட்டு அதுகளோட வீட்டுல தம்மா துண்டு இடமில்லாம தனியா கொட்டாயிப் போட்டுகிட்டு கெடக்கணும்னு அதுக்கு இருந்திருக்கு. ஒரு அரை மணி நேரத்துக்குக் கட்டில்ல படுத்துக் கெடந்துச்சுன்னா அடுத்த நாலு மணி நேரத்துக்குத் தெருவுல ஒரு சுத்து சுத்தி வந்திடும். எந்த வூட்டுக்குப் போனாலும் சாமியாத்தாவுக்குத் தனி மருவாதித்தாம். அதோட பிள்ளைங்க வூட்டுல மட்டும்ந்தாம் அந்த மருவாதி இல்லாம போயிடுச்சு.
            சாமியாத்தா ஒரு வூட்டுக்குப் போனுச்சுன்னா சும்மா இருக்காது. கொழந்தைககைளைத் தூக்கி வெச்சிக்கும். அந்தக் கொழந்தைகளுக்கு மாசா மாசாம் என்னென்ன மருந்து கொடுக்கணும், எப்பிடிக் கொடுக்கணும், அந்த மருந்த எப்படி தயாரு பண்ணணும்னு புஸ் புஸ்ஸூன்னு காத்தா வர்ற வாயால அது பாட்டுக்குச் சொல்லிகிட்டே இருக்கும். அந்த மருந்துக்கான சாமான கொண்டாந்து வெச்சிட்டா அதுவே அரைச்சியும் கொழந்தைக்குக் கொடுத்தும் விட்டுடும். வீட்டுல யாருக்கும் ஒடம்புக்கு முடியலன்னா கை வைத்தியமா என்ன பண்ணணுங்றத சொல்லும். இலை தழைகளைப் பறிச்சிப் போட்டு என்ன மருந்து தயாரு பண்ணிக் கொடுக்கணுங்றதையும் சொல்லும். அந்த மருந்தை யேய் யாத்தா செஞ்சு கொடுன்னாலும் செஞ்சிக் கொடுக்கும். ஒடம்பு சரியில்லாதவங்களுக்கு விபூதியும் அடிச்சி வுடும். இதெல்லாம் தெரிஞ்ச சங்கதிததான்னே சொல்லுவீங்க. அதால சாமியாத்தாவுக்கு எல்லா வூட்டுலயும், அதோட வூடு தவுர ஏக கிராக்கி இருந்துச்சு.
            இது சித்த நேரம் தனிக்கொட்டாயில படுத்துக் கெடந்தாலும் எதாச்சிம் ஒரு சனம் அதெ தேடிகிட்டு வந்து அதுங்க வூட்டுக்கு இட்டுகிட்டுப் போயிடும். அங்கயே அதுக்கு இப்போல்லாம் சாப்பாடும் ஆயிடுது. ஏதோ ராத்திரிக்கு ஒரு வேளையோ, காலையில ஒரு வேளையோத்தாம் அதுக்குச் சாப்பாடு அதுவே பண்ணிக்கிறதா இருக்கும். முடிஞ்சா அதுவே ஒரு தனி அடுப்ப போட்டு அது சமைச்சிக்குது. முடியலன்னா கோனாரு வூடு இருக்கவே இருக்கு. போயி உக்காந்தா போதும். கோனாரு வூட்டு ஆச்சி நாலு இட்டிலிய சுடச்சுட சுட்டுப் போடும். நாலு இட்டிலிக்கு மேல அது வயித்துக்கு இப்ப எறங்கவும் மாட்டேங்குது. அதுவே அதுக்குப் போதுமானதா இருக்கு. 
            பத்து நாளைக்கு ஒரு மொறையோ, பதினைஞ்சி நாளைக்கு ஒரு முறையோ சுப்பு வாத்தியாரு போயி பாத்துட்டு வருவாரு. வெங்கு அந்தப் பக்கம் அடியெடுத்து வெச்சிப் போயி பாக்குறது கெடையாது. அதுக்கு அதோட தம்பிங்க மேல அவ்வளவு வெறுப்பும் கோபமும் வந்துப் போச்சி. அவனுங்க மொகத்துல முழிக்கவே கூடாதுன்னு அது அந்தப் பக்கம் போறது கெடையாது. அவனுங்க மொகத்துல முழிக்க கூடாதுன்னு அங்க போகக் கூடாதுன்னு ஆனதுல அது அதோட தாயோட மொகத்துலயும் முழிக்க முடியாம ஆயிப் போச்சு.
            சுப்பு வாத்தியாரு போறப்ப ச்சும்மா போவ மாட்டாரு. அங்க போவணும்னு முடிவாச்சின்னா இவரே அரிசிய அடுப்புல போட்டு, எதாச்சும் கறி காயையும் போட்டு கூட்டு மாதிரி ரெண்டையும் நல்லா கொழைவா சமைச்சி ஒரு டப்பாவுல எடுத்துட்டுத்தாம் போவாரு. அப்படி அவரு சமைச்சி எடுத்துட்டுப் போறது வாயில வெச்சாக்கா போதும் அதுவா கரைஞ்சி அதுவா உள்ள போயிடுற கணக்கா இருக்கும். இதுக்காகவே சாமியாத்தா சுப்பு வாத்தியாரு எப்போ வருவாருன்னு பாத்துகிட்டே கெடக்கும். அவரு வாரப்பா கொண்டு வர்ற சாப்பாட்ட அந்த வேளைக்குச் சாப்பிட்டுப்புட்டு மறுமறு வேளைக்கும் அது தீர்ற வரைக்கும் வெச்சிக்கும். இங்க சாமியாத்தாவோட நெலமையைப் பாத்துப்புட்டு போறப்ப கொஞ்சம் அரிசி, மளிகை சாமானுங்களையும் கையோட ஒரு பையில போட்டு கொண்டுகிட்டுப் போவாரு சுப்பு வாத்தியாரு.
            இதப் பாக்குற சனங்க சும்மா இருக்குமா? "யேய் யாத்தா! ஒனக்கு நல்ல மவ்வேங்கத்தாம் கெடைக்கல. நல்ல மருமவ்வேம் கெடைச்சிருக்காரு. பேயாம அவரு வூட்டுல போயிக் கெடந்து தொலையேம்!" அப்பிடிங்கும்.
            "அடிப் போங்கடி! கூறு கெட்டவளுவோளே! மவ்வேம் வூடு இருக்குறப்ப மருமவ்வேம் வூட்டுல போயிக் கெடந்தா ஊரு என்னாடி பேசும்? எம் மவ்வேம் மருவாதி என்னாடி ஆவுறது?" அப்பிடிங்கும் சாமியாத்தா.
            "இப்ப ஒம் மவ்வேங்களுக்கு ஊருல ரொம்பத்தாம் மருவாதி இருக்கு. நீயி ஒம் மவ்வேம் வூட்டுக்குப் பக்கத்துலயே கெடந்து ஒம் மவ்வேம் மருவாதிய காப்பாத்திக்கோ. அது செரி! ஊருங்கறது யாரு? நாஞ்ஞத்தானே. நாஞ்ஞல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டேம்! வேணும்ன்னா நீயி ஒம் மருமவ்வேம் வூட்டுல போயிக் கெடந்துக்கோ!" அப்பிடின்னும் சனங்க அது பேச்சுக்கு எகத்தாளம் பேசும்.
            "அடிப் போங்கடி! போக்கத்தவளுங்களே!" அப்பிடின்னு ஒரு நமுட்டுச் சிரிப்ப உள்ளுக்குள்ள சிரிச்சிக்கிட்டு அதுங்க மேல கோவம் வர்ற மாதிரி ஒரு பார்வை பார்க்கும் பாருங்க சாமியாத்தா. அதுக்குப் பயந்த மாதிரி அந்த சனங்களும் ஒரு ஒதுங்கு ஒதுங்கிப் போகும் பாருங்க. அதுதாங்க இந்த கிராமத்து சனங்களோட மனசு. பெத்த பிள்ளைங்க அதெ கைவிட்டாலும் சனங்க அதெ கைவிட நெனைக்கல. அதோட பேசிகிட்டும், எகத்தாளம் பண்ணிகிட்டும், முடிஞ்ச உதவிய அதுக்குப் பண்ணிகிட்டும் நாங்கல்லாம் ஒண்ணோடத்தாம் இருக்கோங்ற தெம்ப அதுக்குக் கொடுத்துகிட்டு இருந்துச்சுங்க.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...