16 Oct 2019

தனிக் கொட்டாயி!



செய்யு - 239
            "மாமா! பேசிட்டு இருக்குறப்பவே இப்டி அத்தாம் எழும்பிச்சா ன்னா அர்த்தம்? அவர்ர உக்காரச் சொல்லுங்க! பேசுறேன்னு வந்துட்டா பேசித்தாம் தீத்துக்கணும். இதுல ஆத்தரப்பட்டா, அவசரப்பட்டா ன்னா பண்றது?"  அப்பிடிங்குது வீயெம் மாமா.
            முருகு மாமா, "சித்தே உக்காருங்க! ன்னத்தாம் சொல்றானுங்கன்னு பார்ப்பேமே! எப்படிப் பேசித் தீர்க்கணும்னு நெனைக்குறானுங்கன்னு நாமளும் பாக்கணும்ல்ல" ங்றார்.
            "ன்னங்க பேசித் தீக்குறது? ரண்டு பேரும் வெச்சிக்க முடியாதுன்னா இதுல ன்னா பேசி நாம்ம தீக்குறதுக்கு இருக்கு? பேசுறதெல்லாம் பேசியாச்சி. இதுக்கு மேல ஒண்ணுமில்ல. எஞ்ஞ போவணுமோ அஞ்ஞ போனாக்கா அவுங்க தீத்து வுடப் போறாங்க!" ங்றார் சுப்பு வாத்தியார்.
            "இந்தாருங்க அத்தாம்! ச்சும்மா பூச்சிக் காட்டிட்டு பூச்சாண்டித்தனம் பண்ணிட்டு மெரட்டாதீங்க! ஒங்களுக்கும் நமக்கும் எந்தப் பகையுமில்ல. நீஞ்ஞ அநாவசியமா இதுல தலையிடுறது நல்லதில்ல. மீறி மூக்க நொழைச்சுகிட்டு இருந்தீங்க உறவு அந்துப் போயிடும் பாத்துக்குங்க!" ங்குது குமரு மாமா.
            "என்னவோ பெரிய ஒறவு இருந்து கிழிக்குற மாரில்ல பேசுறானுங்க! பெத்த தாய நல்ல வெதமா பாத்துக்க முடியாத ஒங்க ஒறவு இருந்தா ன்னா? அத்துப் போனா ன்னா? ரண்டும் ஒண்ணுதாம். ஒறவு அந்துப் போயிடுமாமுல்ல! ன்னா மெரட்டுறீங்களா? பெத்த தாயிக்கே ஒரு வாயி சோறு போட முடியாத நீங்க ன்னடா பிற்காலத்துல நமக்கு ஒண்ணு செய்யப் போறீங்க?" ங்றார் சுப்பு வாத்தியார்.
            "அத்தாம்! நீஞ்ஞ புரிஞ்சுக்க மாட்டேங்றீங்க! வூட்டுல வெச்சா சண்டெ வருது. சண்டெ வருதுன்னு தெரிஞ்சும் வூட்டுல வெச்சிகிட்டு வம்ப வளத்துகிட்டு நிக்கச் சொல்றீங்களா? நெலம புரியாம பேசிகிட்டு? அதுவும் மவ்வேன் வூட்ட வுட்டு பெறத்தியா வூட்டுல இருக்க முடியாதுன்னு அழிச்சாட்டியம் பண்ணிகிட்டு, அமைதியாவும் இருக்க முடியாம அக்கப்போரு பண்ணிகிட்டு கெடக்குக் கெழவி! இந்தாருங்க அத்தாம்! முடிவு இதாம். எம்மட வூட்டுக்குப் பக்கத்துலயே ஒரு கொட்டாயி போட்டுத் தர்றேம்! அஞ்ஞயே கெடக்கட்டும். நேரா நேரத்துக்குச் சாப்பாட்ட அஞ்ஞயே கொண்டு போயி நானே கொடுத்துப்புடறேம்! இத்து யோஜன சரியான்னு நீஞ்ஞளும் மாமாவும்தாம் சொல்லணும்!" அப்பிடிங்குது வீயெம் மாமா.
            சுப்பு வாத்தியாரு ஏத்திக் கட்டுன வேட்டியை எறக்கி விட்டுட்டு எந்த ப்ளாஸ்டிக் நாற்காலியிலேர்ந்து கிளம்புனாரோ அதுலப் போயி உக்காருறாரு. இப்ப அவரும் முருகு மாமாவும் நெத்தியைச் சுருக்கி யோசித்துப் பார்க்குறாங்க. இந்த யோசனை சரிபட்டு வருமா? பின்னாடி இதுல எதுவும் பிரச்சனை வருமா? அப்படி பிரச்சனைன்னு வந்தா அதெ எப்படி எதிர்கொள்ளுறதுன்னு ரெண்டு பேருக்கும் பலவிதமா யோசனை ஓடுது. ஒரு விதத்துல பார்த்தா, ஒட்டாத எடத்துல ஒட்டியிருன்னு சாமியாத்தாகிட்டயும் சொல்ல முடியாது. வெச்சிக்க விருப்பம் இல்லாதவனுங்கிட்ட வெச்சிக்குங்கடான்னு இந்த ரெண்டு பயலுகளையும் கெஞ்சிக்கிட்டு இருக்க முடியாது. இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு சாமியாத்தாவுக்குச் சொல்லிப் புரிய வெச்சி அங்கயிருந்து அழச்சிட்டு வரவும் முடியாது. எந்தப் பக்கம் போனாலும் முட்டிக்கிற ஒரு விசயமால்ல இது இருக்கு. ஒரு விதத்துல ஒண்ணா இருக்க முடியாட்டாலும் இப்போ இருக்குற நிலைமைக்கு இந்த யோசனை கொஞ்சம் சரியாத்தான் படுது முருகு மாமாவுக்கு. அவரு சுப்பு வாத்தியாரு பக்கத்துல வந்து காதோட காதா "இத்தே வுட்டா ரண்டு பயலயும் பிடிக்க முடியாது. ன்னா சொல்றீங்க?" ங்குது. "செரிதாம்! அதாங் வாஸ்தவம்!" அப்பிடிங்றாரு சுப்பு வாத்தியாரு கொஞ்சம் அவரு பங்குக்கு யோசனைப் பண்ணிகிட்டு.  முருகு மாமா சட்டென, "எப்போ கொட்டாயப் போடப் போறே? மறுக்கா கொட்டாயிப் போடுறதுல, கொட்டாயில எதுவும் பெரச்சன வந்துடாதே!" ங்குது.
            "ன்னா நாலு கல்ல வெச்சி சுவத்த எழுப்பி, மூங்கித்தாம் கெடக்கு நம்மகிட்ட, ஒரு கதவ அடிச்சிப் போட்டுட்டா தயாராயிடும். நானும் அவனும் பேர் பாதியா பணத்த போட்டு கொட்டாயிக் கட்டி முடிச்சிப்புடறேம்." ங்குது வீயெம் மாமா.
            "செரி! தெனமும் சாப்பாட்ட நீயே கொடுத்துப்புடுவீயா? யில்ல நீயி ஒரு நாளு, ஒம் அண்ணம் ஒரு நாளுன்னு கொடுக்குறீங்களா?" ங்குது முருகு மாமா.
            "சோறுல்லாம் ஒரு பெரச்சன யில்ல மாமா! யம்மா மருவாதியா இருந்துகிட்டு மருவாதிய தின்னுகிட்டுக் கெடக்க மாட்டேங்குது அதாங் பெரச்சன. நம்ம வூட்டுல மீந்து போற சோத்த வேளைக்கு வளைச்சு கட்டி நாலு நாயி திங்கலாம் மாமா!" அப்பிடிங்குது வீயெம் மாமா.
            "நம்மாள சாப்பாடு பண்ண முடியாது மாமா! அவனெ பண்ணட்டும். சாப்பாட்டுக்குன்னு மாசத்துக்கு முந்நூறு ரூவாய சின்னவங்கிட்ட கொடுத்திடறேம் மாமா!" அப்பிடிங்குது குமரு மாமா.
            "ஒரு நல்லது கெட்டதுன்னா அன்னிக்காவது வூட்டுல கூப்புட்டுச் சோத்தப் போடுங்க! அன்னிக்கும் எடுப்புச் சாப்பாட்டுக் கொண்டு போற கணக்கா கொண்டுட்டுப் போயி நிக்காதீங்க! ஒங்களுக்கு எல்லாத்தையும் வெலா வாரியால்ல சொல்ல வேண்டிக் கெடக்கு! ஒங்க ரெண்டையும் எங்க யக்கா ஆம்பள புள்ளயா பெத்ததுக்கு அத்து ஆம்பளப் புள்ளைங்க இல்லாமலயே இருந்திருக்கலாம்டா! இருக்குற பொம்பள புள்ளைகளாவது நல்ல வெதமா அத்தே வெச்சிக்கும்! என்னவோ ஆம்பள புள்ளங்கத்தாம் கடைசீ வரைக்கும் கஞ்சி ஊத்துவாம்! குடும்பத்துக்கு ஆம்பளப் புள்ள யில்லாம எப்டின்னு பெத்துகிட்டா, அத்து ஒங்கள மாரி அமைஞ்சா ன்னா பண்றது? இதுலயாவது சொன்னத சொன்ன வெதமா பண்ணுங்க. கோட்டித்தனம் பண்ணிட்டு நிக்காதீங்க! நீஞ்ஞ ன்னா வாத்தியார்ரே சொல்றீங்க?" அப்பிடிங்குது முருகு மாமா.
            "அவுங்க அத்தைகிட்டயும் ஒரு வார்த்தைக் கேட்டுக்கிட்டா..." ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "ந்தாருங்க அத்தாம்! ச்சும்மா இப்டி வளவள கொழகொழன்னு போட்டு கொழப்பாதீங்க! அதாம் பேசி முடிச்சாச்சுல்ல. அத்துகிட்டே கேட்டாக்கா அத்து ஒண்ணு சொல்லும். அத்த கேட்டுகிட்டு நீஞ்ஞ ஒண்ணு சொல்லுவீங்க. அத்தெல்லாம் சுத்தப்படாது. நாஞ்ஞ வெச்சுக்க முடியான்னு சொல்லல. இதாங் நெலம. பெறவு இதயும் வுட்டுப்புட்டு அதயும் வுட்டுப்புட்டு பெத்த புள்ளீங்க பாக்கலன்னு ஊருல டமாரு அடிச்சிட்டுக் கெடக்கப்புடாது பாத்துக்குங்க!" அப்பிடிங்குது வீயெம் மாமா.
            "வாத்தியார்ரே! இவனுங்கள இதுக்கு மேல ஒண்ணும் பண்ண முடியாது. இந்த அளவுக்கு எறங்கி வந்ததே பெரிசு. ஆவ வேண்டியதப் பாப்பேம். வேறென்ன பண்றது? ஏத்தோ முடிச்சிட்டுப் போங்க!" அப்பிடிங்குது முருகு மாமா.
            "நானும் பாத்துட்டதாம்டா இருக்கேம். பெத்த தாய வெச்சி கஞ்சி ஊத்த முடியாதுன்னு இப்படி போட்டிக்கு நிக்குறீங்களேடா! நாளைக்கு ஒங்க புள்ளைங்க வளந்து ஒங்கள இத்து மாதிரி பண்ணா ன்னாடா பண்ணுவீங்க?" அப்பிடிங்குது டீத்தண்ணிய டம்பளர்ல ஊத்தி எடுத்துகிட்டு வர்ற நீலு அத்தை. அது இவ்வளவு நேரமா பேசிகிட்டு இருக்கிறதையெல்லாம் டீத்தண்ணிய சூடு பண்ணிகிட்டே கேட்டுகிட்டு இருக்கு.
            "எம்மட புள்ளைங்க இப்டி பண்ற மாரில்லாம் நாஞ்ஞ நடந்துக்க மாட்டேமுங்கோ அத்தே! இத்தே வெச்சி கஞ்சி ஊத்த முடியாதுன்னா சொல்றேம்? இத்து ஒழுங்கு மருவாதியா இருந்து குடிச்சிகிட்டு கெடக்க மாட்டேங்குதுன்னதான முன்னேலேந்து சொல்றேம்! அத்த மட்டும் காதுலயே போட்டுக்க மாட்டடீங்களே! ஒங்களப் பத்தித் தெரியாதா?" அப்பிடிங்குது குமரு மாமா.
            "ன்னடா நம்மளப் பத்தித் தெரியும் ஒனக்கு? நாம்ம பாத்து வளந்தவனுங்க ன்னா பேச்சப் பேசுறானுங்க பாருங்க?" ங்குது நீலு அத்தை.
            "அத்தையெல்லாம் பேசுனா மனசுதாம் ரோதனப்படும். ஒங்க மாமியாவ்வ நீஞ்ஞ பாத்த கதெதாம் ஊருக்கே தெரியுமே. அதயெல்லாம் ஏம் பேசிகிட்டு? ஒங்க டீத்தண்ணியும் வாணாம், ஒரு தண்ணியும் வாணாம். பேயாம போங்க!" அப்பிடிங்குது இப்போ வீயெம் மாமா.
            "இந்தப் பயலுங்களுக்குப் போயி டீத்தண்ணிய வேல மெனக்கெட்டுப் போட்டுட்டு வந்தேம் பாரு! எம் புத்திய செருப்பால அடிச்சுக்கணும். நாளைக்கு ஒம்மட புள்ளைக வளந்து ஒம்மள அந்த கணக்கா பண்ணல, பெறவு பாத்துப்பேம்டா!" அப்பிடிங்குது நீலு அத்தை.
            "அவ்ளதாம் முடிவு. நாஞ்ச கெளம்புறேம். இதுக்கு மேல நீஞ்ஞதாம் பெரச்சன பண்ணாம இருக்கணும்!" அப்பிடிங்குது வீயெம் மாமா.
            "நாஞ்ஞ ன்னடா பெரச்சன பண்றோம்? பண்றதயெல்லாம் பண்ணிபுட்டு ஏம்டா எஞ்ஞ மேல பழியத் தூக்கிப் போடுறீங்க?" அப்பிடிங்குது முருகு மாமா.
            "ஒங்களப் பத்தியும் தெரியும். ஒங்க கொணத்தப் பத்தியும் தெரியும்!" அப்பிடின்னுகிட்டு குமரு மாமாவும், வீயெம் மாமாவும் வேக வேகமா டீத்தண்ணியைக் குடிக்காம வெளியில கெளம்பிப் போவுதுங்க.
            சுப்பு வாத்தியாரு மட்டும் நீலு அத்தை போட்டு வந்த டீத்தண்ணிய ஒரு டம்பளரை வாங்கி ரெண்டு இழுப்பு இழுத்து குடிச்சிட்டுக் கெளம்புறாரு. அவரு கெளம்புறப்ப, "அவ்வளவுதாங் நாம்ம பண்ண முடியும்? வேறென்ன பண்றது சொல்லுங்க!" ங்குது முருகு மாமா.
            அதற்குப் பதில் ஒண்ணும் சொல்லாமலே டிவியெஸ் பிப்டியை ஸ்டார்ட் பண்ணிக் கெளம்புறதுல குறியா இருக்குற சுப்பு வாத்தியாரு நேரா வண்டிய கெளப்பிகிட்டு குமரு மாமா வூட்டுக்குப் பக்கத்துல இருக்குற பாஞ்சாலம்மன் கோயிலு முன்னாடி வந்து நிக்குறாரு. கோயிலுக்கு முன்னாடி முப்பது வாட்ஸ்ல ஒரு பல்பு எரியுது. இவரு வந்து நிக்குறதை அங்க கோனாரு வூட்டுல உக்காந்திருந்த சாமியாத்தா பாக்குது. பாத்துட்டு ஓட்டமும், நடையுமா ஓடி வருது.
            "உள்ள வாங்கன்னு சொல்ல முடியா. கோயிலு மின்னாடி வெச்சு வாங்கன்னு சொல்ல வேண்டிக் கெடக்கே!"ன்னு கண்ணுல தண்ணியா வருது சாமியாத்தாவுக்கு.
            "இம்மாம் நேரம் அஞ்ஞயேவா இருந்தீங்க யத்தே?" ங்றாரு சுப்பு வாத்தியாரு. "சித்தே படுத்துக்குறதுக்குத்தாம் வூட்டுப் பக்கம் தல வெச்சுப் பாக்குறது. மித்தபடி பொழுதெல்லாம் அஞ்ஞதாம் ஓடுது!" ங்குது சாமியாத்தா. "செரி அது கெடக்கட்டும்!" அப்பிடின்னு சொல்லிப்புட்டு சுப்பு வாத்தியாரு நடந்த வெவரத்தை ஒண்ணு ஒண்ணா எடுத்துச் சொல்றாரு.
            "பரவால்ல போங்க! அஞ்ஞ கெடந்து நாறுறதுக்கு, தனியா கொட்டாயில கெடந்து எப்டி வாணாலும் நாறிக் கெடக்கலாம்.  இத்து எவ்ளோ பரவால்ல. ஒங்களுக்குக் கோடி புண்ணியமா போவும்! வாரத்துக்கு ஒரு தடவயாவது வந்துப் பாத்துட்டுப் போங்க. அவ்வே பேத்தி இருந்தா வாரச் சொல்லுங்க. யாரயும் பாக்கமா சமயத்துல மனசு ஒரு வெதமா ஆயிடுது!" அப்பிடிங்குது சாமியாத்தா.
            என்னவோ எல்லாத்துக்கும் தயார் நிலையில இருக்குறது போல சாமியாத்தா இப்போ பேசுறது கொஞ்சம் தெகைப்பாத்தாம் இருக்கு சுப்பு வாத்தியாருக்கு.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...