ஆளுக்கொரு புலனக் குழு (வாட்ஸப் குழு)
ஆரம்பித்தால் என்னாவது? என் தொடர்புப் பட்டியலில் 544 நண்பர்கள் இருக்கிறார்கள்.
544 பேரும் புலனக் குழு (வாட்ஸப் குழு) ஆரம்பித்தால் என்னாவது? நினைத்துப் பார்க்கவே
பயமாக இருக்கிறது. 544 இல் 369 பேர் ஆரம்பித்து விட்டார்கள். சொச்சம் பேர் விரைவில்
ஆரம்பிப்பார்கள்.
கைபேசியின் நினைவகத்தை புலனக்குழுக்கள்
செரித்து ஏப்பம் விடுகின்றன. புனலக்குழுவைத் திறக்க முடியாத அளவுக்கு செய்திகளும்,
படங்களும், காணொலிகளும் குவிகின்றன. பார்க்க வேண்டும் அனுப்பப்பட்ட அத்தனையையும் அழித்து
விட்டுப் பார் என்கிறது கைபேசி. இப்படி உத்தரவிட கைபேசிக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
கைபேசி நிறுவனத்திடம் அழைத்துக் கேட்டால் தற்போதைய புதிய வகை (நியூ மாடல்) வாங்குமாறு
பரிந்துரை செய்கிறார்கள். ஆறு மாதத்துக்கா ஒரு கைபேசி வாங்குவது? என்று கேட்டால் சிரிக்கிறார்கள்.
ஆறு மாதம் வரை ஒரே கைபேசியோடேயே இருக்கிறீர்கள் என்பதற்கான நக்கல் சிரிப்பு அது.
எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் எனும் போது
வாட்ஸப்பை மட்டும் எத்தனை நாட்கள் மாற்றாமல் வைத்திருக்க முடியும் சொல்லுங்கள். வாட்ஸப்பிலிருந்து
அடுத்து டெலிகிராமிற்கு நண்பர்கள் மாறி வருகிறார்கள். டெலிகிராம் பற்றி அனுபவப்பட்டு
பின்புதான் எழுத இயலும் என்பதற்காக வருந்துகிறேன். இந்த நாவலில் அனுபவத்துக்கு அப்பாற்பட்ட
சங்கதிகள் எதுவும் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் கடவுளைச் சந்தித்தது
உட்பட. இப்படிச் சொன்னவுடன் கடவுளைச் சந்திக்கும் ஆசை உங்களுக்கு வந்திருக்குமே! வந்திருக்க
வேண்டும். அதை நோக்கித்தான் நம் நாவலைச் செலுத்தப் போகிறோம். அசலான கடவுளைச் சந்திக்கும்
அனுபவம் இந்நாவலில் சாத்தியம். காத்திருங்கள். சந்திப்போம்.
*****
No comments:
Post a Comment