15 Oct 2019

வெங்கம் பயல்களா!



செய்யு - 238
            ராப்பொழுது எட்டு மணி வாக்குல முருகு மாமா வூட்டுத் திண்ணையில குமரு மாமா, வீயெம் மாமா, சுப்பு வாத்தியாரு எல்லாரும் உக்காந்திருக்காங்க. நீலு அத்தை அஞ்சு மணி வாக்குலேயே எல்லாத்துக்கும் சேர்த்து டீத்தண்ணிய போட்டு வெச்சிடுச்சு. அதோட பழக்கம் அப்படி. காலையில, சாயுங்காலத்துல ரண்டு வேளைத்தான் டீத்தண்ணிய புதுசா போடும். எடையில யாரு வந்தாலும் மீஞ்ச டீத்தண்ணிய சூடு பண்ணித்தாம் தரும். மீஞ்ச டீத்தண்ணிய இப்போ அது சூடு பண்ணிட்டு இருக்கு. அங்க டீத்தண்ணி கொதிச்சிகிட்டு இருக்குறது போல இங்க ஒவ்வொருத்தரு மனசும் கொதிச்சுகிட்டு இருக்கு.
            சித்த நேரம் யாரும் ஒண்ணும் பேசல. எல்லாரும் வேற்றுக் கிரகத்துலேந்து வந்த ஜீவராசிங்க போல உக்காந்து இருக்குதுங்க. என்னத்த பேசுறது? எப்படி ஆரம்பிக்கிறதுங்ற குழப்பம்.
            முருகு மாமா தொண்டையை ஒரு கனைப்பு கனைச்சுக்குது. கனைச்ச பின்னாடியும் அதுக்கு என்னவோ பேச்சு டக்குன்னு வர மாட்டேங்குது. சுப்பு வாத்தியாரு பாத்துட்டு இது வேலைக்கு ஆவாதுன்னு டக்குன்னு, "எஞ்ஞ அத்தைக்கு ஒரு வழிய பண்ணி விடச் சொல்லுங்க! பெத்த தாயை எப்டி நடத்துறதுன்னு தெரியல. பெத்து வளக்குற வரைக்கும் தாயி தேவை. ஆளாக்கி முடிச்ச பின்னாடி பொண்டாட்டியே போதும்னு வெரட்டியடிக்குறது ன்னா ஞாயம்?" ஆரம்பிக்குறாரு.
            "யப்பாடி! என்னங்கடா இது? ஏம்டா இப்டிப் பண்றீங்க? ஒங்களப் பத்தி வர்ற சங்கதிங்க ஒண்ணும் நல்லாயில்லயே!" அப்பிடிங்குது இப்போ முருகு மாமா.
            "நாஞ்ஞ ன்னா சோறு போடலன்னம்மோ? வூட்டு வுட்டு வெளியில போன்னு வெரட்டுனம்மா? ஒங்க அக்கா புத்திக் கெட்டுத் திரிஞ்சா அதுக்கு நாங்க ன்னா பண்றது?" அப்பிடிங்குது வீயெம் மாமா.
            "பல்ல தட்டிப்புடுவேம் பாத்துக்க. ன்னடா எஞ்ஞ அக்கா அது இதுன்னுகிட்டு? ஏம் ஒங்களுக்கு யம்மா இல்லியா? நீஞ்ஞ ன்னா வானத்துலேந்தா பொறந்து வந்துட்டீங்க? என்னடா எஞ்ஞ யக்கா புத்திக் கெட்டு நடக்குது? நீங்கதாம்டா புத்திக் கெட்டு நடக்குறீங்க? நல்லாயில்ல. கெட்டக் கோவம் வர்றது போல நடந்துக்காதீங்க!" அப்பிடிங்குது முருகு மாமா.
            "அத்து இருந்துகிட்டு ரெண்டு பக்கமும் சோலி கொடுத்துட்டு இருக்கு. பேயாம கெடந்தா ரெண்டு புள்ளைக இருக்கேம். ரெண்டு மருமவக இருக்குதுங்க. ராணி மாதிரி பாத்துப்பேம். என்னத்துக்கு கொறச்சலு நம்ம வூடுகள்ல? நீஞ்ஞதாங் யம்மாவ கண்டிச்சு வுடணும்!" அப்பிடிங்குது குமரு மாமா.
            "ஆயாதாம்டா புள்ளைங்கள கண்டிக்கணும். புள்ளைங்களுக்காக ஆயாவ கண்டிக்க முடியாது. இதே நீஞ்ஞ சின்ன புள்ளைங்கன்னு வெச்சுக்க மொகரயிலயே நாலு தட்டு தட்டிச் சொல்லிப்புடுவேம். தோளுக்கு மேல வளந்தாச்சி. கல்யாணமும் ஆயாச்சி. புள்ள குட்டிகளப் பாத்தாச்சி. இனுமே அப்படி இப்படி ஒதைக்கவோ, நாலு சாத்து சாத்தவோ பண்ண முடியாது. அப்படில்லாம் பண்ற அளவுக்கு நடந்துக்காதீங்க. நீஞ்ஞ எப்டி நடந்துக்குறீங்களோ அதெ ஒங்க புள்ளைங்க பாத்துகிட்டு இருக்குதுங்றத மறந்துப்புடாதீங்க. ந்நல்லா இருக்க மாட்டீங்க. பெத்தவ வசுரு எரிஞ்சா வெளங்காம போயிடுவீங்க! தப்புலித் தனமா பேயாதீங்க. அது நல்லதுக்கு யில்ல!" அப்பிடிங்கிறாரு இதெ கேட்டுகிட்டு சுப்பு வாத்தியாரு.
            "அதுக்கும் எஞ்ஞ வூட்டுகாரிகளுக்கும் எந்நேரமும் சண்டையா இருக்கு மாமா! நாஞ்ஞ ன்னா வெச்சுக்க முடியாதுன்னா சொல்றேம்? நாஞ்ஞ ஒண்ணும் எஞ்ஞ அத்தாம் நெனைக்கிற அளவுக்கு படுபாவிங்கல்லாம் யில்லே. அவரு ஏத்தோ அவரா ஒரு கற்பனையில பேசிகிட்டு இருக்காரு. ஆனா அத்த வூட்டுல வெச்சிகிட்டு தெனம் தெனம் சண்டெ வெச்சிகிட்டுக் கெடக்க முடியாது பாருங்க. ச்சும்மா இருக்க மாட்டேங்குது மாமா. அந்த வூட்டுக்குப் போறது. இந்த வூட்டுக்குப் போறது. அஞ்ஞப் போயி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி விட்டுருது. அஞ்ஞயே தின்னுட்டுக் கெடக்குறது. வூட்டுல வந்தா வவுறு சரியில்லன்னு சாப்பாட்ட வேண்டாங்குது. சாப்பாட்ட வேண்டாம்னு சொல்லிப்புட்டு வூட்டுல மருமவ்வே சோறு போடுறதில்லன்னு ஊரெல்லாம் வத்தி வெச்சிட்டு அலயுறதுன்னு அந்தக் கெழவி இல்லாத வேலயெல்லாம் பண்ணிட்டு அலயுது மாமா! வெசாரிச்சுப் பாத்தீங்கன்னா ஒங்களுக்கே தெரியும்!" அப்பிடிங்குது வீயெம் மாமா.
            "இப்போ ன்னா பண்ணலாம்? வூட்டு வுட்டு வெரட்சி அடிச்சிடலாமாடா? ன்னம்மோ நீயி பாட்டுக்குப் பேசிட்டே போறே? ன்னாடா நெனச்சிக்கிட்டு இருக்குற மனசுக்குள்ள? இன்னும் எங்க யக்கா இருக்கப் போறது பத்து வருஷமோ, பாஞ்சு வருஷமோ. அதுக்கு மேல அத்து தாங்கது. அத்து இருக்குற வரைக்கும் நல்ல வெதமா வெச்சிக்கிட்டாத்தாம் நீங்க வெளங்குவீங்கடா!" அப்பிடிங்குது முருகு மாமா.
            "அத்தே வூட்டுல வெச்சிகிட்டுல்லாம் சமாளிக்க முடியாது மாமா!" அப்பிடிங்குது குமரு மாமா.
            "ந்நல்லா இருக்குடா கதெ. பொண்டாட்டி வர்ற வரைக்கும் ஆக்கிப் போடுறதுக்கு, தொவச்சிப் போடறதுக்கு, பேலுறது அந்தாண்ட அள்ளிப் போடறதுக்கும் யம்மா வேணும். பொண்டாட்டி வந்துப்புட்டா அவ்வே ஓடிப் போயிடணும். அப்பிடித்தானே? ஒங்களப் பெத்ததுக்கு எங்க யக்கா இன்னும் பத்துப் பொண்ண பெத்து இருக்கலாம்டா! த்துப்பூ! பொண்டுக ஒண்ணும் என்னம்மா வந்து யம்மா யம்மான்னு உருகுதுங்க. கூட வந்துடு, ந்நல்லா வெச்சிக்கிறேம்னு கெஞ்சுதுங்க! நீஞ்ஞ ரண்டு பேரும் ஆம்பள புள்ளீங்கதாம்டா! வெக்கமாயில்ல ஒங்களுக்கு?" அப்பிடிங்குது முருகு மாமா.
            "அவங்கவுங்க நெலமெ அவங்கவங்களுக்குத்தாம் தெரியும் மாமா!. தல வலியும் காலு வலியும் தனக்கு வந்தாத்தாம் தெரியும் மாமா. எஞ்ஞ ஆத்தாவ நீஞ்ஞ ன்னா பண்ணீங்கங்ற கதெயெல்லாம் எங்களுக்குத் தெரியாதுன்னு நெனச்சிக்கப்படாது. சொன்னா நாறிப்பூடும். மாமாங்ற மருவாதிக்குக் கட்டுபட்டு பேசுறேம். அவ்வளவுதாம் புரிஞ்சுக்குங்க." அப்பிடிங்குது வீயெம் மாமா.
            "ச்சேய்! நாஞ்ஞ மூணு பேருடா ஆம்பளப் புள்ளீங்க யங்க யம்மாவுக்கு. ஒருத்தரு வுட்டாலும் இன்னொருத்தரு காலந்துப் பண்ணோம்டா. ஒங்கள மாதிரியா ரண்டு பேரும் பெத்தவள நட்டாத்துல தூக்கிப் போட்டேம்? பேசுறத யோஜனப் பணணிப் பேசணும்!" அப்பிடிங்குது முருகு மாமா.
            "ச்சும்மா மலுப்பப்படாது. ஒங்களுக்கு ஒரு ஞாயம், ஊருக்கு ஒரு ஞாயம்னு பேசப்படாது. ஒங்க அக்கான்னு இப்போ ரத்தமுஞ் சதையும் ஆடுதுல்ல. அப்படித்தான்னே எஞ்ஞ யாத்தா, அதாங் ஒங்க யம்மா. அதெ அப்போ நீஞ்ஞ வெச்சி காபந்து பண்ணிருக்கணும். நீஞ்ஞதானே அப்பயும் இப்பயும் மூத்தவரு. ஞாயம் பண்றதுக்கு முன்னாடி ஒருக்கா தன்னய திரும்பிப் பாத்துக்கணும். தன்னோட முதுகுல ஒரு வண்டி அழுக்க வெச்சிக்கிட்டு எதிருல இருக்கிறவேம் சட்டையில துளியூண்டு அழுக்கு இருக்குதுன்னு கெக்கலி கொட்டிச் சிரிக்கக் கூடாது!" அப்பிடிங்குது குமரு மாமா.
            "என்னத்தாம்டா சொல்ல வர்றீங்க?" அப்பிடிங்குது முருகு மாமா.
            "வூட்டுல இனுமே வெச்சிக்க முடியாது! நல்ல வேளையா நீஞ்ஞலே கூப்புட்டுப் வுட்டீங்க. நாளைக்கு வெரட்டி வுட்டுட்டேம்னு பேரு வந்திடக் கூடாது பாருங்க! இதுவும் நல்லதாத்தாம் போச்சு!" என்கிறது வீயெம் மாமா.
            "வெரட்டி வுடுறதுன்னே முடிவு பண்ணிட்டீங்களாடா? அந்த மாதிரி எதாச்சிம் ஆச்சுன்னா போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் பண்ணிப் புடுவேம் பாத்துக்க! மச்சாம்னாலும் பாக்க மாட்டேம்!" அப்பிடின்னு கொதிச்சுப் போறாரு சுப்பு வாத்தியாரு.
            "ஆயி ஊயின்னு சண்டெ போட்டுகிட்டு கெடந்து பயலுங்க. இப்போ வெரட்டி வுடுறதுல ன்னா ஒத்துமையா இருக்கீங்க. நீஞ்ஞ சித்தே ச்சும்மா இருங்க வாத்தியாரே! நாம்ம பேசிக்கிறேம். செரி! ரண்டு பேரும் வூட்டுல வெச்சிக்க மாட்டீங்க. எஞ்ஞ யக்காவ கொண்டு போயி சுடுகாட்டுலயா போடுறது? அதுக்கு இன்னும் நாளு இருக்குடா! யாம்டா நாளைக்குச் சாவப் போறத்த இன்னிக்கே கொன்னுப் போட்டுடுவீங்க போலேயிருக்கே! கொல காரப் பாவிகளா?" அப்பிடிங்குது முருகு மாமா. சுப்பு வாத்தியாரு இப்போ பேசாம இருக்குறதா தெரியல.
            "ரண்டு பேரும் வெச்சிக்க முடியாதுன்னா எஞ்ஞ மாமா வாங்கிப் போட்ட எடத்துல ஒருத்தனும் இருக்கக் கூடாது. நெலத்த எல்லாத்தியும் ஒப்புச்சிப்புடணும். அத்தைச் செத்தப் பிற்பாடு அவனவனும் அவனவனும் சொத்த எடுத்துக்கிட்டும். எல்லா பயலயும் வூட்ட வுட்டு வெளியில கெளம்பச் சொல்லிட்டு வூட்டுப் பூட்டிச் சாவிய கொண்டாந்து இஞ்ஞ வைக்கச் சொல்லுங்க! எஞ்ஞ மாமா செத்ததுக்குப் பின்னாடி சொத்த பூராத்தியும் இந்த ரண்டு பேருந்தாங் பங்குப் போட்டுகிட்டானுங்க. பொண்டுகளுக்கு பேருக்குக் கூட ஒத்த பைசா கொடுக்கல. சட்டத்துல பொண்ணுங்களுக்கும் பாகம் இருக்கு. கேஸூ போட்டாக்க இவனுங்க இருக்குற வூட்டப் பூட்டு சீலு வெச்சிப்புடுவாங்க பாத்துக்குங்க. நடுரோட்டுல நிறுத்திப் புடுவேம். ஒழுங்கு மருவாதிய்யா எஞ்ஞ அத்தைக்கு ஒரு வழியப் பண்ணி விடுங்க. யில்ல நடக்குறது ந்நல்லா இருக்காது? பின்னே குத்துதே குடையுதுன்னா அதுக்கு நாம்ம ஜவாப்பு யில்ல. டேய் வெங்கம் பயலுகளா! ஒங்க எஞ்ஞ வெச்சுப் பாக்கணுமோ அஞ்ஞ வெச்சுப் பாக்குறேம்டா!" அப்பிடின்னு வேட்டிய தூக்கிக் கட்டிகிட்டு சுப்பு வாத்தியாரு வெளியில கெளம்ப எழும்புறாரு. அவரு தூக்கிக் கட்டுன வேட்டிக்குக் கீழே லேசா ரெண்டு வெரக்கடை அளவுக்கு அவரோட பட்டாப்பட்டி டிராயரு வேற தெரியுது. அவரு இந்த அளவுக்கு வேட்டிய தூக்கிக் கட்டுற ஆளு இல்லத்தாம். இன்னிக்கு என்னம்மோ தூக்கிக் கட்டுனதுல வேட்டி அந்த அளவுக்கு மேல ஏறிப் போயிடுச்சு.
            சுப்பு வாத்தியாரு இப்படி போலீஸூ, கோர்டு, கேஸூன்னு பேசுவாருன்னு குமரு மாமாவோ, வீயெம் மாமாவோ எதிர்பார்க்கல. ஏம் முருகு மாமா கூட எதிர்பார்க்கல. அந்தப் பேச்சக் கேட்டதும் குமரு மாமாவுக்கும், வீயெம் மாமாவுக்கும் கெடி கலங்குது. தொண்டயெல்லாம் வறண்டுப் போயி உடம்புல ரத்தம், எச்சிலு எல்லாம் வத்திப் போனது போல இருக்கு. நெசமாலுமே சுப்பு வாத்தியாரு அப்படிப் பண்ணிப்புட்டா எடைஞ்சலால்ல போயிடுமேன்னு ரெண்டு பேருக்கும் இப்போ லேசா பயம் வருது.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...