14 Oct 2019

ரெண்டு ஆப்பை! ரெண்டும் கழண்ட ஆப்பை!



செய்யு - 237
            குமரு மாமா ஒண்ணு பட்டறையில இருக்கணும். இல்லேன்னா வூட்டுல இருக்கணும். பட்டறையில இல்லேன்னா நிச்சயம் வூட்டுலதான் இருந்தாகணும். வூடு திறந்து கெடந்தா வூட்டுலப் போயிப் பார்க்கலாம். பூட்டுன வூட்டுல உள்ளேயிருந்து வர்ற குரல வெச்சி உள்ள இல்லேங்றது எப்படி நிச்சயம் பண்ணிக்க முடியும்? நம்ம முன்னவங்க கண்ணால காங்கிறதையே பொய்யும்பாங்க. காதல கேக்குறதை அதை விட பொய்யும்பாங்க. தீர விசாரிக்கிறதைத்தாம் மெய்ம்பாங்க. தீர விசாரிக்கிறதுக்கு ஆளு வேணுமே. யோசிச்சிப் பார்க்குறாரு சுப்பு வாத்தியாரு. முருகு மாமா வூட்டுக்குப் போறதுதாம் சரின்னு படுது அவருக்கு. குமரு மாமாவோட பட்டறையிலிருந்து முருகு மாமா வூட்டுக்குப் போவுது இப்போ அவரோட டிவியெஸ்ஸூ பிப்டி.
            ஆலை வேலையிலிருந்து ரிட்டையர்டு ஆனதுக்குப் பெறவு முருகு மாமா வூட்டை ஒட்டியே ஒரு தடுப்பு தடுத்து விறகு கடை வெச்சிருக்காரு. அதுலயே பாத்திரங்களயும், டேபிளு, சேர்கள வாடகைக்கு வுடுற கடையையும் வெச்சிருக்காரு. தீபாவளி சமயம்ன்னா அதையெல்லாம் தூக்கி அந்தாண்ட வெச்சிப்புட்டு அதெ வெடிக்கடையா மாத்திப் புடுவாரு. வெடிக்காத வெடிகளையும் சாமர்த்தியமா பேசி யாரு தலையிலயாவது கட்டிப்புடுவாரு. வெடி சரியா வெடிக்கலையேன்னு வாங்கிட்டுப் போனவங்க பிராது பண்ணி நின்னா, "ஏம்ப்பா! வாங்கிட்டுப் போற வெடிய கொஞ்சம் காய வெச்சு வெடிக்கிறது இல்லையா? மழை என்னம்மா பேஞ்சிருக்கு. கொஞ்சம் நைப்பு ஏறியிருக்காதா? நாம்ம விக்குற வெடிக எல்லாம் நெதானமான வெடிக. டப்பு டப்புன்னு வெடிக்குற வெடிகள வாங்கியாந்து வெச்சி வித்து, அதெ வாங்கிட்டுப் போறவ்வேம் வெடிக்கத் தெரியாம வெடிச்சு கையி, காலு, கண்ணு, மூக்குப் போவணுங்றீயா?" அப்பிடிம்பாரு. வந்தவன் யோஜனைப் பண்ணிட்டு அடுத்த வார்த்தை பேசுறதுக்குள்ளே, அவங் கையில எதாச்சிம் ரெண்டு வெடிகள கையில திணிச்சி, இதையாவது ந்நல்லா காய வெச்சி வெடிச்சுப் பாரு! எப்படி டப்பு டப்புன்னு வெடிக்குதுங்றதெ வந்துச் சொல்லு!" அப்பிடிம்பாரு. வந்தவன் வந்ததுக்கு ரெண்டு வெடி லாபம்னு நெனைச்சுகிட்டு அதுக்கு மேல பேசாம நகர்ந்து போயிடுவான்.
            வெதைப்புக் காலங்கள்ல அதே கடையை விதை நெல்லு, விதை உளுந்து, விதை பயிறு விக்குற கடையா மாத்திக்குவாரு. வெளையாத, முளைக்கவே முளைக்காத விதைகளையும் வெடிக்காத வெடிகள விக்குறதைப் போல சாமர்த்தியம் பண்ணி வித்துப்புடுவாரு. வெதை வாங்கிட்டுப் போயி வெதைச்சவன் வெளையாம போனா ச்சும்மா இருப்பானா? கடைக்கு வந்துடுவான். அவங்கிட்ட விசாரணையைப் போடுவாரு முருகு மாமா. "என்னிக்கு வெதைச்சே? யார விட்டு வெதைச்சே? வெதைய நல்லா ஊறப் போட்டியா? மூட்டம் சரியா இருந்துச்சா? பவுனு மாரி வெதைக. முறையா பண்ணிருந்தா ஒண்ணுக்கு நூறா வெளையுற வெதைங்க. இந்த மாரி வெதைங்க எஞ்ஞ இருக்கு நாட்டுல?" அப்பிடின்னு ஆயிரத்தெட்டு கேள்விகளைப் போடுவாரு. வெதைச்சவன் எதாச்சிம் ஒரு நாளைச் சொன்னாக்கா, இவரு புடிச்சிப்பாரு. சரியான பாட்டி மொகத்துலயா வெதைக்கிறதும்பாரு. மேல்நோக்கு நாளு, கீழ்நோக்கு நாளுல்லாம் பாக்குறது இல்லையாம்பாரு. வெதைச்சவன் ராசிக்காரின்னு எம் பொண்டாட்டிய வுட்டுத்தாம் வெதைச்சேம்னு சொன்னாக்கா, இவரு அதுக்கும் சேர்த்துப் புடிச்சிப்பாரு. "ஏம்ப்பா! அவ்வே வூட்டுக்கு வெலக்கு ஆயி நாள கணக்குப் பண்ணீயா? இல்லே வூட்டுக்கு வெலக்கு ஆன நாள்லயே வெதைக்க வுட்டுப்புட்டீயா? அப்படிப் பண்ணீன்னா வெத எப்படிக் கெளம்பும்? புழுவா புழுத்துல்ல கெளம்பும்! தப்பையெல்லாம் தப்புல்லாம பண்ணிப்புட்டு இஞ்ஞ வந்து நின்னா நாம்ம ன்னா பண்றத? இனுமே வெதய கொடுக்கறப்பவே இந்த சமாச்சாரங்கள எல்லாத்தியும் சொல்லிப்புட்டுத்தாம் கொடுக்கணும்! பத்து ரூவாய்க்கு வெதய வித்ததுக்கு ஆயிரும் ரூவாய்க்குல்ல பதிலு சொல்ல வேண்டிக் கெடக்கு!" அப்பிடிங்கும் முருகு மாமா. வந்தவன் ஒண்ணுஞ் சொல்ல முடியாம விதியேண்ணு நொந்துகிட்டுப் போவான்.
            இப்போ சுப்பு வாத்தியாரு டிவியெஸ்ஸூலு வந்து நிக்குறதப் பார்த்ததும், "ரொம்ப நாளா ஆள இந்தப் பக்கமே காணுமே! வூடு குடிப் போனதா கேள்விப்பட்டேம். தகவல் ஒண்ணும் இல்லையே!" அப்பிடிங்குது முருகு மாமா.
            "ரொம்ப நெருக்கடியாப் போச்சுங்க. நெலமைய சமாளிக்க முடியல. வூட்டு வேலயும் முடியல. அது வரைக்கும் வாடகைக்கு இருக்கவும் தெம்பில்ல. சரி நாலு சனத்த அழச்சி சாப்பாட்டப் போட்டு குடிப் போயிடலாம்ன்னா அதுக்கும் வழியில்ல. சரின்னுப் பார்த்தேம். யாருக்கும் சொல்லல. ஒரு நல்ல நாளா பார்த்து பால காய்ச்சிக் குடிச்சிட்டு உள்ள போயாச்சி. வேற ஒண்ணும் பண்ண முடியல. வூடு இன்னமும் பூசாமத்தாங் கெடக்குது. அதாங் சங்கதி!" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "கேள்விப்பட்டேம். இருந்தாலும் ஒரு வார்த்த கேக்கணுமில்ல. அதாங் கேட்டேம். பரவாயில்ல. குடிப் போயிட்டுக் கூட மொல்ல பூசிக்கலாம். இப்படிக் குந்துங்க. உள்ள போயி ஒரு வாயி டீத்தண்ணிக்குச் சொல்லிட்டு வார்றேம்!" அப்பிடிங்குது முருகு மாமா.
            "டீத்தண்ணியப் பெறவு பாத்துக்கலாம். ஒரு முக்கியமான சங்கதியா வந்திருக்கேம். கொஞ்சம் அவசரமா பேசணும்."
            "அப்படியென்ன முக்கியமான சங்கதிங்றேம்?"
            "ஒண்ணுமில்லே. ரெண்டு பயலுக கெடக்கானுவோயில்ல. ரெண்டு பயலும் பெத்தத் தாயிக்குச் சோறு போட மாட்டேங்றானுவ்வோ. ஒரே கரைச்சலா கெடக்குது. அவங்க - அத்தை - வூட்டுக்கு வந்து சொல்லிட்டுப் போறாங்க. சரின்னு கெளம்பிப் போயி என்னான்னு கேக்கலாம்னு பார்த்தா மூத்தவன் வூடு உள்ளுக்குள்ளா பூட்டிக் கெடக்கு. சின்னவேம் பொண்டாட்டி வூட்டுல உக்கார முடியாத அளவுக்கு வண்ட வண்டையாப் பேசித் தள்ளுது. அக்கா வூட்டுக்காரங்குற மொறையில மாமங்காரரான நீஞ்ஞ தலையிட்டுப் பேசுனாத்தாம் சரிபட்டு வரும்னு தோணுது அதாங்!"
            "நாமளும் விசயத்த கேள்விப்பட்டேம். அன்னிக்கு இந்தப் பக்கமா வந்த யக்கா இஞ்ஞ வூட்டுக்காரிகிட்ட சொல்லி அழுதுட்டுப் போச்சாம். அன்னிக்கு நாம்ம ஒரு கலியாணத்துக்கு வெளியில போயிட்டேம். மறுக்கா போயி பாக்கணும்னு நெனச்சா சோலி ஒழியல. கெடக்குற வேலயில அது வந்துட்டுப் போனது அப்படியே மறந்துப் போச்சு. இப்போ நீஞ்ஞ வந்து சொல்றப்பத்தாம் ஞாபவத்துக்கு வருது. அவனுங்கப் போக்கே சரியில்ல. வூட்டுலயெல்லாம் போயி விசாரிக்க முடியா. வந்திருக்குற பொண்டுக ரெண்டு சரியில்லே. நம்ம மானம் மருவாதி காத்தோட போயிடும். ரெண்டு பயலுகளயும் இஞ்ஞ வாரச் சொல்லித்தாம் பேசணும். ரெண்டு பயலுகளும் ரெண்டையும் எஞ்ஞப் போயி பிடிச்சானுவுளோ? ஒண்ணு நீஞ்ஞ பாத்துக் கட்டி வெச்சதுல்ல. இன்னொண்ணு சிப்பூருகாரருச் சொல்லி அந்தச் சின்ன பயலா பாத்து புடிச்சாந்ததுன்னு நெனைக்கிறேம். வந்ததுல ஒண்ணாவது உருப்படியா இருக்கா? ரெண்டு ஆப்பை. ரெண்டும் கழண்ட ஆப்பை. எப்படித்தாம் நம்ம வகையறாவுக்குன்னே வந்து சேருதுகளோ? எல்லாம் நேரம்! பஞ்சு மவ்வேன் ஆனந்தங்கிட்டயோ, செந்திலுகிட்டேயோ சொல்லி விட்டா வருவானுங்கோ! பேசுவோம். பேசித்தாம் ஆகணும்!"
            "அத்து வந்து நல்ல பொண்ணுன்னுதாம் பாத்து மூத்தவனுக்குக் கட்டி வெச்சது. குடும்பமும் நல்ல குடும்பம்னுதாம் செஞ்சு வெச்சது. குடும்பமும் நம்ம வகையில அப்படி ஒரு சுத்திச் சுத்தி நமக்கு மொறையில வாரதுதாம். நாம்ம ஒண்ணு நெனைச்சா தெய்வம் ஏதோ நெனைக்குது? நம்ம கையில நம்ம வெரலு, நகங் கூட இல்லேங்றது கடைசியிலத்தாம் புரியுது. வந்ததுல வூட்டுல இருக்குறவங்க எல்லாம் செளகரியமா இருக்காங்காளான்னே கேக்க மறந்துட்டேம் பாருங்க! அஞ்ஞ சித்துவீரன், சுந்தரி வூட்டுல எல்லாம் செளரியந்தானே!"
            "ம்ஹூம்! அதுதாங் கொறைச்சலு! எல்லாம் ஒண்ணு மாரித்தாம் இருக்கு. சொந்தத்துல கட்டுனாலும் அப்படித்தாம் இருக்கு. பெறத்தியில கட்டுனாலும் அப்படித்தாம் இருக்கு. அந்தப் பக்கமாத்தாம் ஒலகநாதேம் கடையில டீத்தண்ணி, பட்சணம்னு போறது. எட்டிக் கூட பாக்குறது இல்லே. மனசு வெறுத்துப் போச்சு. எப்படியோ நமக்குத் தொந்தரவு இல்லாம குடும்பத்த ஓட்டுனா சரித்தாம். விட்டுட்டேம். நமக்குலாம் சரிபெட்டு வராது. நிலம் நீச்செல்லாம் எப்படி இருக்கு?"
            "நாம்ம ஒத்த ஆளா பாக்க வேண்டிக் கெடக்கு. பய தலயெடுத்துட்டாம். போயிப் பார்த்துக் கொஞ்சம் அனுபவப்பட்டா நல்லா இருக்கும். என்னம்மோ வேலக்கிப் போறேன்னு உருப்படாத ஒரு வேலைக்குப் போயிட்டுக் கெடக்காம். வேணாம்னு சொல்லிப் பாத்துட்டேம். கேக்குற மாரி தெரியல. அவனா போயி அடிபட்டு வாரட்டும்னு வுட்டுப்புட்டேம். ஒண்ணுஞ் சொன்னத்த கேக்க மாட்டேங்குது. எல்லாம் அததுப் போக்குத்தாம் போவுது."
            "ஆம்மா பெரிசா நெலத்த வெச்சிருக்குறது போலல்ல அதெப் போயி மவனே பாக்கச் சொல்லிகிட்டு? அஞ்ஞ ஓகையூருல ரண்டு மா, இஞ்ஞ வடவாதியில மூணு மா இருக்குமா? அதெப் பாத்து அவ்வேம் எப்படிப் பொழைப்பாம்? ஆம்மா இப்ப சாவடியில ன்னா லாபம் இருக்கு? ஏத்தோ வூடு தங்காம வேலைக்கிப் போனா சரித்தாம். வூட்டுல கெடந்தானுவோன்னா செட்ட சேத்துகிட்டு ஊரு வம்பல்ல கொண்டுகிட்டு வாரானுங்க. எப்படியோ தொலைஞ்சா சரித்தாம். செரி! அவனுங்கள ராத்திரி இஞ்ஞ வாரச் சொல்லிப்புடுவேம். எட்டுமணி வாக்குல நீஞ்ஞளும் வந்தீங்கன்னா பேசிப்புடலாம். பேச்சு ஒத்து வாரலன்னா யக்காக்காரிதானே நாம்ம அழச்சாந்து வெச்சிக்கிறேம். இல்லே ஒங்க மாமியாக்காரிதானே நீஞ்ஞ கொண்டு வெச்சிக்குங்க. அதாங் கடைசியில வழி. பார்ப்பேம். ராத்திரி என்னா நடக்குதுன்னு!" அப்பிடிங்குது முருகு மாமா. அது அப்படி பேசிட்டு இருக்கும் போதே நீலு அத்தை வருது. "அடேங்கப்பா! யாரு அது? அடையாளமே தெரியலயே. அவங்களுக்கு ன்னா! பணக்காரங்கே! வூடு குடி போறதையே சொல்லாம கொள்ளாம போற ஆளுக." அப்பிடிங்குது நீலு அத்தை சுப்பு வாத்தியாரைப் பார்த்து.
            "நீயி ஒண்ணு! ச்சும்மா கெட! நெலம புரியாம பேசிகிட்டு. போயி ஒரு வாயி டீத்தண்ணி போட்டுட்டு வா!" அப்பிடிங்குது முருகு மாமா.
            "காலையில போட்டது அப்படித்தான்னே கெடக்கு. சூடு பண்ணிக் கொண்டார்ரேம்!" அப்பிடின்னு நீலு அத்தை வெளியே வந்தது இப்போ உள்ளே போவுது.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...